SHARE

மௌனம் – 2  

வாழ்க்கை

சில நேரங்கள் நம்மால் வாழப்படும்

பல நேரங்கள் நம்மை இழுத்து செல்லும்,

ஒவ்வொருவரது கடிகார முட்களும்

நேரத்தை மட்டும் சரியாய் காட்டிக்கொண்டு

ஒவ்வொன்றும் ஒரு திசையில் !!

 

நிச்சயப் பத்திரிக்கையை வாசித்தவுடன், ஸ்வப்னா வசந்தின் அருகில் வர, வசந்த் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“என்ன வசந்த்… என்னாச்சு இப்படி உட்கார்ந்து இருக்க?” ஸ்வப்னா கேட்கவும்,

“ம்ப்ச்… ஒண்ணும் இல்ல… ரொம்ப தலைவலியா இருக்கு… நீங்க எல்லாம் கோவிலுக்கு போயிட்டு வாங்க… நான் ரெஸ்ட் எடுக்கறேன்..” என்றபடி அவன் தனது அறைக்குச் செல்லத் திரும்பினான்.                           

“என்ன வசந்த் இது? இப்போ தான் நிச்சயம் ஆகி இருக்கு. உடனே தலைவலி அது இதுன்னு சொல்லிட்டு போற… ஒரு மாத்திரை போட்டுக்கோ சரியா போகும்.. இப்போ கோவிலுக்கு கிளம்பு… சொல்றதை செய்” கண்டிப்பான, வற்புறுத்தும் குரலில் லதா கூறவும், 

“இருங்க வரேன்… மனுஷன் தலைவலின்னு சொன்னா கூட உங்களுக்கு உங்க வேலை தான் நடக்கணும்…” முதல் வரியை சத்தமாகச் சொன்னவன், அடுத்த வரியை முணுமுணுப்புடன் சொல்லிக் கொண்டே, தனது அறைக்குள் புகுந்துக் கொண்டான்..

———————————————————————————————————————————————

“மித்ரா ரெடியா?” உஷா குரல் கொடுக்க,

“இதோ சித்தி வந்துட்டேன்…” என்றபடி, அழகான சிவப்பு நிறப் புடவையில், தலையில் மல்லிகையைச் சூடி, உஷா எடுத்து வைத்திருந்த நகைகளை அணிந்தவள், தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். கண்ணாடியில் தெரிந்த உருவம் நிறைவாய் இருக்கவும், மெதுவாக வெளியே வந்தவள், அங்கு அவளைப் பார்க்க ஆவலாக நின்றிருந்த உஷாவை நெருங்கினாள்.

 “எப்படி இருக்கு சித்தி?” அவளை வியப்பாய் பார்த்திருந்த உஷாவிடம் கேட்டு,

“கண்ணாடியை அடிக்கடி
பார்ப்பதை குறைத்துக் கொள்
அதுவும் கூட வெட்கத்தில்
திகைத்து போய்
எல்லோரிடமும்
உன் முகத்தையே காட்டுகிறது”

 

 

“ஹாய் அண்ணி… குட்டி எப்படி இருக்கான்?” உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மனோவின் மனைவி, ரோகிணியிடம் ஓடினாள்.

“என்ன சித்தி… அண்ணி இப்படி கோவிச்சிட்டு உட்கார்ந்து இருக்காங்க?” உஷாவின் காதை அவள் கடிக்கவும்,

“நீ வந்த உடனே அவளை எழுப்பலையாம்.. அதுக்குத் தான் இவ்வளவு கோபம்… போய் பேசு…”  உஷா சொல்லவும், 

“அதெல்லாம் சரி… மொதல்ல நான் எப்படி இருக்கேன்? சொல்லுங்க” விடாமல் அதிலேயே நின்றாள்.

“ரொம்ப அழகா இருக்க மித்ரா… என் கண்ணே பட்டுடும்…” என்றபடி அவள் நெற்றியில் முத்தமிட்டவர்,

“சீக்கிரம் அண்ணிக்கிட்ட பேசிட்டு, கீழ கூட்டிட்டு வா… பாட்டியும் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…” என்றபடி கீழே சென்றார்.

“நீங்க அசந்து தூங்கறீங்கன்னு தான் அண்ணி எழுப்பலை… நான் தான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்….” மித்ரா அவளை சமாதானம் செய்ய,

“பெரிய மனுஷி… போடி…” என்று சொன்னவளை, ஒரு வழியாக சமாதானம் செய்து கீழே அழைத்துக் கொண்டு சென்றாள்.  

“ஹே அமுக்குணி… ரெண்டு வருஷத்துல செமையா ஆகிட்டப் போ… ஹ்ம்ம்… இனி எங்களுக்கு எல்லாம் உன்னை பாதுகாக்கறதே வேலையா இருக்கப் போகுது…” சந்தோஷ் அவளை கிண்டல் செய்ய,

“அண்ணாவா இருந்துட்டு இது கூட செய்யலைன்னா என்ன பிரயோஜனம்? அப்படி தானே மித்ரா…” என்று ரோகிணி சந்தோஷை வம்பு செய்ய, “அதானே…” என்று மித்ரா இழுக்கவும், அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்ட ருக்மணியும், மற்றவர்களும், கலகலப்பாக காரில் கிளம்பி கோவிலுக்குச் சென்றனர்.

மூன்று கார்கள் வரிசையாக வந்து நிற்கவும், கோவிலின் அறங்காவலர் பரபரப்பாக வெளியில் ஓடி வந்தார். அவரைப் பார்த்து தலையசைத்து புன்னகைத்த ருக்மணி, “எல்லாம் ரெடியா இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே, கோவிலினுள் நுழைந்தார். அவரைப் பின்தொடர்ந்து, மற்றவர்களும் உள்ளே நுழைய, அபிஷேகமும் தொடங்கியது. அலங்காரம் செய்வதற்கு திரைப் போடவும்,

“நான் போய் கோவில சுத்திட்டு வரேன்…” என்றபடி, மித்ரா மெதுவாக கோவிலைச் சுற்றத் தொடங்கினாள். அவளது யோசனை எங்கோ அலை பாய்ந்துக்கொண்டிருக்க, பார்வைஎங்கேயோ நிலை குத்தி இருக்க, இலக்கற்று நடந்துக் கொண்டிருந்தவளின் அருகே சந்தோஷும் ஓசை படாமல் நடந்துக் கொண்டிருந்தான்.

கோவிலின் ஒரு திருப்பத்தில், சுவற்றில் சாய்ந்து நின்றவளை, “என்னாச்சு… கால் வலிக்குதா?” என்று சந்தோஷ் கேட்கவும், அதிர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவள்,

“கொஞ்சம் டயர்ட்டா இருக்கு…”  ஒருவழியாக சமாளித்துக் கொண்டு, பதில் கூறினாள்.

“ம்ம்… அதுஉன்னைப் பார்த்தாலே நல்லா தெரியுது… ஆனா நீ எதுவோ மறைக்கிற மாதிரி இருக்கு மித்ரா… என்னாச்சு?” சந்தோஷ் அன்பாகக் கேட்கவும்,

“நான் எதுவுமே மறைக்கலையே… ஏன்.. ஏன்.. கேட்கற?” அவள் கண்கள் அலைப்பாய்ந்த விதத்தில், அவன் மனம் யோசனைக்குச் சென்றது. அதே நேரம், “சந்தோஷ்… அவங்க எல்லாம் வந்துட்டாங்க… சீக்கிரம் அவளை கூட்டிட்டு வா…” திவாகர் சொல்லவும், அவன் பின்னோடு உஷாவும் ஓடி வந்தார்.   

“என்ன திவாண்ணா? யார் வந்து இருக்காங்க?” மித்ரா கேட்கவும்,         

“உன்னை பெண் பார்க்க வந்திருக்காங்க மித்ரா…” திவா சொல்லி முடிப்பதற்குள்,

“என்ன?” என்று அதிர்ந்தவள், அவன் பின்னோடு ஓடி வந்து, மூச்சிறைக்க நின்றிருந்த உஷாவைப் பார்த்து, “என்ன சித்தி? என்ன சொல்றாங்க இவங்க?” என்று கேட்கவும்,

“மித்ரா… இவங்க உங்க அம்மாவோட தூரத்து சொந்தம்… உங்க மாமா மூலமா  நாம வரன் பார்க்கறது தெரிஞ்சு வந்திருந்தாங்க… உங்க மாமா  சொன்னதுனால எங்களால தட்டி பேசவும் முடியல… எப்படியும் உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கணும்… சரின்னு பார்த்தோம்…

எங்களுக்கும் பையன, அவங்க குடும்பத்த ரொம்ப பிடிச்சு இருந்தது… திருப்தியாவும் இருந்து, ஜாதகமும் பொருந்தி வரவும் சரின்னு இன்னைக்கு வர சொல்லிட்டோம் மித்ரா… நீ எப்பவும் நாங்க சொல்றத கேட்ப இல்ல… அந்த தைரியத்துல…” உஷா இழுக்கவும், மித்ரா அதிர்ச்சி விலகி, அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

“சித்தி… இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போகலாமே… என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம்… சரி விடுங்க பரவால்ல…” என்று இயல்பாகக் கூறியவள், உஷா விட்ட நிம்மதி பெருமூச்சில், மேலும் புன்னகைத்து,

“இந்த ராங்கி ரங்கம்மாவ நீங்க எதிர்ப்பார்கல இல்ல… அதுனால தானே இப்படி இழுக்கறீங்க… சரி வாங்க போகலாம்…” என்று அவரின் கையைப் பிடிக்கவும்,

“இரு… இரு… நாம இப்படி சுத்திப் போகலாம்… திவா நீ போய் பாட்டி கிட்ட, மித்ரா சரின்னு சொன்ன விஷயத்தை சொல்லிடு…” என்று திவாகரை அனுப்பியவர், அவர்களை முறைத்துக் கொண்டு நின்றிருந்த சந்தோஷைப் பார்த்து குழம்பினார்.

“நீ ஏண்டா இப்படி உர்ர்ருன்னு இருக்க?” உஷா கேட்கவும்,

“பாட்டிக்கு வந்திருக்கறது மைல்ட் அட்டாக் தான்… அதுக்கே நீங்க இந்த பில்ட் அப் விட்டு சுத்திட்டு இருக்கீங்க… கொஞ்சம் வெயிட் பண்ணலாம் இல்ல… எனக்கு அந்த பையன சுத்தமாபிடிக்கவே இல்ல.. அவனுக்கும் நம்ம மித்ராவுக்கும் பொருந்துமா?” என்று உஷாவிடம் கேட்டவன்,

“மித்ரா… அவன் உன் போட்டோவைப் பார்த்தே லிட்டர் கணக்குல ஜொள்ளு விட்டான் மித்ரா… அவனோட பார்வையே சரி இல்ல… அண்ணிய பார்த்த பார்வையும் ஒரு மாதிரிதான் இருந்தது….” என்று அவன் பொரியவும், அதை அனைத்தையும் காற்றில் பறக்க விட்டவள்,

“பாட்டிக்கு என்னாச்சு?” என்று அதிர்ந்தாள்.

“அது ஒண்ணும் இல்லடா மித்ரா… உங்க அப்பாவோட திதி அன்னிக்கு காலையில, நாங்க வீட்ல திதி கொடுக்க ரெடி செய்துட்டு இருந்தோம்… ரொம்ப நேரமாகியும் பாட்டி எழவே இல்ல… நானும் பெரியம்மாவும் எழுப்ப போனோம்… உனக்கு என்னவோ ஆபத்து வந்த  மாதிரி கனவு கண்டுக்கிட்டு இருந்தாங்க போல… ‘வேதா… அவளை காப்பாத்து… அவளுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது வேதா’ன்னு புலம்பிகிட்டே இருந்தவங்க, திடீர்ன்னு வியர்வை சொட்ட எழுந்து உட்கார்ந்து, அப்படியே நெஞ்சை பிடிச்சுக்கிட்டு வலில துடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அவங்க பிழைச்சு வரதுக்குள்ள…” உஷா சொல்லிக்கொண்டே நடக்க,

“அச்சோ…” என்று அதிர்ந்தவள், “என்னிக்கு?” என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவர் சொன்ன தேதியைக் கேட்டவள், உறைந்து போய் நின்றாள். அவளது விரல்கள் நெஞ்சில் பதிய,  

அவளின் அதிர்ந்த தோற்றமும், நெஞ்சில் பதிந்த விரல்களையும் பார்த்த சந்தோஷ், “என்னாச்சு மித்ரா?” என்று கேட்டு, அவள் “ஒண்ணும் இல்லை” என்று முணுமுணுக்கவும்,

“அப்போலேர்ந்து உன்னோட கல்யாணத்த உடனே செய்துடணும்னு பாட்டி ஒரே புலம்பல்… இவங்களும் அதுக்கு தகுந்த மாதிரி ஆடிட்டு இருக்காங்க…” அவன் அங்கலாய்க்க, மித்ரா அவன் தோளைத் தட்டினாள்.

“அவங்க பயம் கரெக்ட் தானே சந்தோஷ்… சரி நாம போகலாம் வா…” என்றவள்,

“சித்தி… நீங்க அவங்களை போய் கவனிங்க… நானும் சந்தோஷும் சுத்திட்டு வரோம்…” என்று உஷாவை ஒரு வழியாக அனுப்பி வைத்தாள்.

“ஹே… நீ கல்யாணத்துக்கு ரெடியா?” சந்தோஷ் வியப்புடன் கேட்க,

“இன்னும் என் மைன்ட் அதுக்கு எல்லாம் செட் ஆகலை சந்தோஷ்… எனக்கு இப்போ அதுல எல்லாம் இஷ்டம் இல்ல… நான் இன்னும் ரெண்டு வருஷம் வேலை பார்க்கணும்… அப்பறம் தான் எதைப் பத்தியும் யோசிக்க முடியும்…” மித்ரா சொல்லிக் கொண்டே வர,

“ஹே… அப்டின்னா… இப்போ என்ன செய்ய போற?” அவன் அதிர்ச்சியுடன் அதே இடத்திலேயே நின்றான்.

“ஒண்ணும் இல்ல… அந்தப் பையன் கிட்ட உண்மைய சொல்லப் போறேன்… அப்பறம் அவன் இஷ்டம்.. இப்போ போகலாம் வா..” என்றவள், அவனையும் இழுத்துக் கொண்டு நடந்தாள்.

“என்னவோ போ… ஊர்லேர்ந்து திரும்பி வந்ததுல இருந்து ஒரு மார்கமா தான் இருக்க… ஒரு மார்கமா பேசற… என்னவோ மறைக்கிற…” என்று அடுக்கிக் கொண்டே வந்த சந்தோஷ்,

“மித்ரா… அங்கப் பாரு… அவன் உன் கூட படிச்சவன் இல்ல…” என்று வாசலை கைக் காட்டினான்.

அவன் காட்டிய திசையில், கோவிலின் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த வசந்தையும், ஸ்வப்னாவையும் பார்த்தவள், சிலையென நின்றாள். “ஹே… என்ன அவனைப் பார்த்து இப்படி ஷாக் ஆகிட்ட… அவன் தானே இவன்?” சந்தோஷ் அவளைப் பிடித்து உலுக்கவும்,

“ம்ம்… ஆமா..” என்று ஒருவழியாக வார்த்தையை உதிர்த்தவள்,

“எனக்கு இவனைக் கண்டாலும் பிடிக்கவே பிடிக்காது… எப்பப் பாரு, காலேஜ்ல ஸ்டைல் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருப்பான்… கூட யாரோ கல்யாண பொண்ணு மாதிரி இருக்கு… ஒருவேளை அவனுக்கு கல்யாணமோ? பாவம் அந்த பொண்ணு…” என்று சந்தோஷ் பேசிக் கொண்டே போகவும், அவனை மித்ரா ஆயாசமாகப் பார்த்தாள்.   

“என்னாச்சு மித்ரா? ஓ.. உன் கிளாஸ்மேட்டை குறை சொல்லிட்டேன்னு உனக்கு கோபமா?”

“இல்ல.. அதெல்லாம் இல்ல…” என்றவள், “அவனுக்கும் அப்படியே தோணிச்சுன்னா?” என்று கேட்க,

“எப்படி?”

“நீ அவனைப் பத்தி சொன்னியே… அப்படி… உன்னைப்பத்தி” என்று சொல்லி சிரித்தவள், “சரி… எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க, போகலாம்… எனக்கும் மாப்பிள்ளைய பார்க்கணுமே…” என்று அவர்கள் குடும்பம் இருக்கும் இடத்திற்கு நகர்ந்தாள்.

“இவ நிஜமாவே ஒரு மாதிரியா தான் இருக்கா… கொஞ்சம் கவனிக்கணும்…” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அவளுடன் நடந்தான்.

ருக்மணியின் அருகே சென்று பதவிசாக நின்றவள், கண்களை மூடி அங்கு வீற்றிருந்த முருகனை பிரார்த்திக்கத் துவங்கினாள். அவள் கண்களைத் திறந்த பொழுது அவளின் எதிரே, வசந்தும், அவன் அருகே ஸ்வப்னாவும், அவனது பெற்றோர்களும் நின்றிருந்தனர்.

எதிரே நின்றிருந்த வசந்தை பார்த்த மித்ராவிற்கு மூச்சடைத்தது…. அவன் கைகளில் இருந்த புது ப்ரேஸ்லெட்டும், கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கனத்த தங்கச் சங்கிலியும், அவனது திருமண உறுதியைச் சொல்லாமல் சொல்ல, அவன் முகத்தைப் பார்த்தவள், அடுத்த நொடி, பார்வையை திருப்பிக் கொண்டாள்.

வசந்தின் பார்வையும் அவள் மீதே படிந்திருந்தது…. அவனது பார்வையைக் கண்டுகொண்ட சந்தோஷ், “இப்போ எதுக்கு அவன் உன்னை இப்படி பார்த்து கண்ணு வைக்கிறான்..” என்று அவள் காதில் கடுப்படிக்க, சந்தோஷைப் பார்த்து புன்னகைத்தவள்,

“எனக்கு என்ன தெரியும்?” என்றபடி, மீண்டும் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

அப்பொழுது வசந்தின் அருகே வந்து நின்ற ஒரு குடும்பத்தைப் பார்த்த ருக்மணியும், அவரது மகன்களும், அவர்களை வரவேற்கும் விதமாகப்  புன்னகைக்க, அந்த இளைஞனின் பார்வை மித்ராவின் மீது ஒட்டிக்கொண்டது.

அதைப் பார்த்த சந்தோஷ் மேலும் கடுப்பாக, “பார்க்கறான் பாரு… சொன்னேன் இல்ல…” என்று அவள் காதைக் கடிக்க, ரோகிணி, மெதுவாக மித்ராவின் அருகில் வந்தாள்.

“மித்ரா… அதோ அந்த ப்ளு கலர் ஷர்ட் போட்டு இருக்கறது தான் உனக்கு பார்த்து இருக்கற பையன்… பேர் ஜெகன்… பிடிச்சு இருக்கான்னு சொல்லு…” என்று கேட்கவும், மித்ரா, ஜெகனைப் பார்த்து புன்னகைத்தாள்.

கோவிலில் நுழைந்ததில் இருந்தே வசந்தின் கண்கள் அவளிடம் மட்டுமே இருக்க, அவள் பார்த்து புன்னகைத்த நபர் யாரென்று, அவனும் தன் பார்வையைத் திருப்பிப் பார்த்தான். தன் அருகில் நின்றுக் கொண்டு, அவளை மட்டுமே பார்வையில் நிரப்பிக் கொண்டிருந்த ஜெகனைப் பார்த்தவன், பல்லைக் கடித்தான்.

அதற்கு தகுந்தார் போல், “அண்ணா… அண்ணி சூப்பரா இருக்காங்க இல்ல… போட்டோல பார்த்ததைவிட நேர்ல ரொம்ப அழகு….” என்று அந்த ஜெகனின் தங்கை சொல்லவும், வசந்த் மித்ராவை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… அடுத்த வாரம் வரை நிச்சயத்த தள்ளிப் போடணுமா என்ன? இப்போவே வச்சுட்டா கூட நல்லா தான் இருக்கும்… நிச்சயத்துக்கு பார்த்திருக்கற தேதில கல்யாணத்த வச்சிடலாம்… சிம்பிள்…” என்றவன், அவளைப் பார்க்கும் பணியை விட்டான் இல்லை.

“கல்யாணமா?” வசந்த் மனதினில் பொரும,

“மித்ரா…. இவனை வேண்டாம்ன்னு எப்படி சொல்லப் போற… ஓவரா ஜொள்ளு விடறான்…” சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க,

“மித்ரா…” என்று ருக்மணி அழைத்தார். அவர் அழைத்ததும், அவள் வேகமாக அவரிடம் பேச வசதியாக குனிய, “அந்தப் பையன உனக்கு பிடிச்சிருக்கு தானே… உன் கல்யாணத்தை சீக்கிரமா பார்த்துட்டேனா… கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கும்…” என்று ருக்மணி சொல்ல, ஒப்புதல் போல மண்டையை ஆட்டியவளை திருப்தியுடன் பார்த்து, கன்னம் வழித்தவர், ஜெகனின் அன்னை, தந்தையை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அனைவருக்கும் புன்னகையை பதிலாகத் தந்தவள், என்ன செய்வதென்று புரியாமல் தலை குனிந்து நிற்க, சுவாமிக்கு அலங்காரம் முடிந்து, திரையும் விலக்கப்பட்டது. தீபாராதனை தொடங்கவும், மித்ரா கண் மூடி பிரார்த்திக்கத் தொடங்கினாள்.

அப்பொழுதும் வசந்தின் பார்வை அவள் மீதே இருக்க, “வசந்த்… என்ன எங்கயோ வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க… சாமி கும்பிடு… சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்… எனக்கு இந்தப் புடவைய கட்டிக் கிட்டு ஒரே கசகசன்னு இருக்கு… யாரு தான் இந்த புடவைய கண்டு பிடிச்சாங்களோ என்னவோ? ஜீன்ஸ்ல நிச்சயம் பண்ணிக்கிட்டா, யாராவது வேண்டாம்ன்னு சொல்லப் போறாங்களா என்ன?” என்று கடுப்புடன் ஸ்வப்னா கேட்க, மீண்டும் வசந்தின் பார்வை மித்ராவின் மீது படிந்தது.

யதார்த்தமாக, அதிகமான ஜரிகையுடன் நெய்த புடவை, மற்றும் நகைகளுடன், அந்த இடத்தில் நின்றிருந்தவளைப் பார்த்து, “கொஞ்சம் கூட வருத்தமே படாம நின்னுட்டு இருக்காப் பாரு… அதுவும் என் முன்னாடியே இப்படி அலங்காரம் செய்துட்டு நிக்கறா…” அவன் பொருமல், மித்ராவை எட்டியதோ? கண்களைத் திறந்து, வசந்தை வெட்டும் பார்வை பார்த்தவள், கற்பூர ஆரத்தியை எடுத்துக் கொண்டு, விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.

இருவரின் பார்வைப் பரிமாற்றம், மனோவின் கண்களில் பட்டது… வசந்த் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதும், மித்ரா அவ்வப்பொழுது அவனைப் பார்த்து விட்டு, பார்வையைத் திருப்பிக் கொள்வதும், அவன் மனதை நெருடியது.

“ஜெகன் மித்ரா கூட தனியா பேசணுமாம்…” ஜெகனின் தாயார், ருக்மணியிடம் தயக்கத்துடன் இழுக்க,

“அதுக்கு என்ன… போய் பேசிட்டு வரட்டும்… ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும் இல்லையா?” என்று ருக்மணியும் அனுமதி வழங்கி, மித்ராவைப் பார்த்தார்.

“அப்படியே கோவில சுத்திட்டு, பேசிட்டு வாங்க…” என்றபடி, அவர்களை அனுப்பி வைக்க, முள்ளின் மீது நிற்பவனைப் போல வசந்த் நிற்கத் தொடங்கினான்.

அவர்கள் என்ன பேசுவார்கள் என்று கேட்கப் பரபரத்த மனதை அடக்க வழியை யோசிக்காமல், அது அநாகரீகம் என்றும் பாராமல், அவர்கள் நகர்ந்த அடுத்த நிமிடம், வேகமாக, பிராகாரத்தை சுற்றும் சாக்கில் அவன் நகர, ஸ்வப்னா அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

“நீ எதுக்கு இப்போ என் கூட வர?” வசந்த் கடுப்புடன் கேட்கவும்,

“அத்தை தான் கூட போக சொன்னாங்க… இல்லன்னா நான் ஏன் கோவிலை சுத்தப் போறேன்…” எகத்தாளமாக சொல்லிவிட்டு, அவனுடன் நடந்தாள்.

மித்ரா ஜெகனுடன் சிரித்துப் பேசிக்கொண்டே ஓரிடத்தில் நிற்க, அவர்கள் அருகே செல்லும் முன், வசந்தின் அன்னை லதா, அவன் அருகில் வந்திருந்தார்.

“வசந்த்… இன்னும் யாருமே சாப்பிடல… சீக்கிரம் சுத்திட்டு வீட்டுக்கு கிளம்பு போகலாம்… சும்மா என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க” என்று ஆழ்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே சொல்லவும், வேறு வழியின்றி, அவனும் வேகமாக நடக்க, அவர்களைக் கடந்து செல்லும் வேளையில், அவன் காதுகள் பல மடங்கு கூர்மைப் பெற, “எனக்குப் பிடிச்சிருக்கு…” என்ற மித்ராவின் வார்த்தைகள், அவனை எரிதணலில் தள்ளியது.

மௌனங்கள் தொடரும்…

 

 

LEAVE A REPLY