SHARE

மறக்க முடியாத

தருணங்களில்

எல்லாம்

உன்னை பற்றிய

ஏதோ ஒரு நினைவு

கொசுறாக

புகழ் போனை வைக்கவும், ஷிவானி மீண்டும் அவனுக்கு அழைக்க, “சிவா… கஸ்டமர்கிட்ட பேசிட்டு இருக்கேன்…” புகழ் பொறுமையாகவே பதில் கூறி போனை அணைக்க,

“என்னை விட கஸ்டமர் முக்கியமா போயிட்டாங்களா?” என்று சிறுபிள்ளை போல பிடிவாதத்துடன் நினைத்துக் கொண்டவள், அவனுக்கு மீண்டும் அழைத்தாள்.

“சிவா… என்னம்மா? ஏதாவது உடம்புக்கு முடியலையா?” புகழ் கேட்க,

“எனக்கு உங்க கூட பேசணும் போல இருக்கு… ஒரு ரெண்டு நிமிஷம் பேசுங்களேன்…” தொண்டையடைக்க அவள் கேட்கவும், புகழிடம் சிறு அமைதி நிலவியது.

“ஒரு அஞ்சு நிமிஷத்துல கால் பண்ணறேன்..” என்று அவன் போனை அணைக்க, ஷிவானி போனை கையில் வைத்துக் கொண்டு அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள்.

சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடங்களில் புகழ் போன் செய்ய, போனை எடுத்த ஷிவானி, “லவ் யூ இனியன்…” என்று கூறி, அவனுக்கு முத்த மழை பொழியத் தொடங்கினாள். அவளது செயலில் புகழ் குழம்பிப்  போய் இருக்க, அவளிடம் பேச வந்த மல்லிகா, அவளது செயலைப் பார்த்து, சிரித்துக் கொண்டே, வந்த தடம் தெரியாமல் திரும்பினார்.

“என்ன வணி? இதைச் சொல்லத் தான் கால் செய்தியா? அது தான் எனக்குத் தெரியுமே.. நான் என்னவோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்…” தன் மனைவி தன் மேல் வைத்திருக்கும் காதலைக் கண்ட புகழ் சிரிப்புடன் கேட்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல… உங்க கூட ரொம்ப பேசணும் போல இருந்தது… அது தான்… ஹ்ம்ம்… ஏதாவது கொஞ்ச நேரம் பேசுங்களேன்…” அவனும் தன்னிடம் காதலைத் திரும்பச் சொல்வான் என்று நினைத்த ஷிவானி அவ்வாறு கேட்கவும்,

“என்ன பேசறது? அதுவும் வேலை நேரத்துல?” புகழின் பதிலில், ஷிவானிக்கு எரிச்சலாக வந்தது.

“மதியம் லஞ்சுக்கு வருவீங்க தானே… நான் உங்களுக்காக சாப்பிடாம காத்துட்டு இருப்பேன்.. அதைச் சொல்லத் தான் கூப்பிட்டேன்… இப்போ போனை வைக்கவா?” ஷிவானியின் குரலில் தெரிந்த அடம் புதிதாக இருக்க,

“எனக்கு நேரமிருந்தா வரேன் சிவா… எனக்கு எவ்வளவு வேலை இருக்குன்னு தான் உன்கிட்ட சொல்லி இருக்கேனே” என்று புகழ் அவளை சமாதானப்படுத்த முனைய,

“இல்ல.. நான் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்… உங்களுக்கு பிடிச்சதை செய்யப் போறேன்… சாப்பிட நீங்க வந்துத் தான் ஆகணும்” என்றபடி, போனை வைத்தவள், சமையலறையை நோக்கிச் சென்றாள்.

“என்ன இவ இப்படி அடம் பண்ணிட்டு இருக்கா?” என்று நினைத்துக் கொண்ட புகழ், எங்காவது அவள் உண்ணாமல் இருந்துவிடப் போகிறாள் என்ற பயத்தில், சரியாக ஒரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு கிளம்பினான்.

புகழின் பைக் வாயிலில் நிற்கும் சத்தம் கேட்டதுமே ஷிவானி, துள்ளாத குறையாக வாயிலுக்கு விரைய, “சிவா… அவன் உள்ள தான் வருவான்… மெதுவா போயேன்..” என்று மல்லிகா கத்துவதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கதவைத் திறந்தவள்,

“என்னோட இனியன்னா இனியன் தான்… இப்படி சொன்ன நேரத்துக்கு வந்துட்டீங்களே…” என்று அவனது கையை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“சிவா.. என்ன இன்னைக்கு லஞ்ச்க்கு வர சொல்லி இப்படி அடம் பண்ணற? கடையை அப்படியே விட்டுட்டு வர முடியுமா? கடையில இருக்க பையனும் புதுசு… இப்போ உன்னால அவனை சாப்பிட அனுப்பிட்டு, கடையை மூடிட்டு வந்தேன்…” என்றவன்,

“சீக்கிரம் தட்டை வைங்கம்மா… கடைக்கு போகணும்.. நேரமாகுது…” மல்லிகாவிடம் கூறவும், மல்லிகா, இருவருக்கும் தட்டை வைத்து பரிமாறினார்.

“அத்தை… நீங்களும் சேர்ந்து சாப்பிடுங்க…” ஷிவானி அழைக்கவும்,

“ஆமாம்மா… சேர்ந்தே சாப்பிடலாம்…” அன்று சசி, பாஸ்கருடன் சேர்ந்து சாப்பிட்ட நினைவில், புகழ் சொல்ல, மல்லிகாவும் உணவுண்ண அமர, அதற்கு மேல் sஎன்ன பேசுவது என்று புரியாத புகழ், அமைதியாகவே உண்டு முடித்தான்.

தான் கேட்டதும் அவன் வீட்டிற்கு வந்ததே திருப்தியாக ஷிவானி வயிறார உண்டு முடிக்கும் போதே, கொட்டாவி ஒன்று அவள் அனுமதியின்றியே வெளி வர,

“உனக்கு ஜாலி தான் சிவா.. இப்போ ரெஸ்ட் எடுக்க பாப்பா கூப்பிடுது… உடனே படுக்காம கொஞ்சம் நேரம் கழிச்சு தூங்கு… நான் கடைக்கு கிளம்பறேன்…” என்ற புகழ், அவள் பதில் சொல்லும் முன்பே, கைகளை கழுவிக் கொண்டு, வண்டி சாவியை எடுக்க, அவசரமாக ஷிவானியும், கையை கழுவிக் கொண்டு, அவன் பின்னோடு ஓடினாள்.

“என்னடா சிவா… எதுக்கு இப்போ இப்படி ஓடிட்டு இருக்க?” புகழ் நின்றுக் கேட்கவும்,

“நைட்டும் சீக்கிரம் வருவீங்களா?” ஷிவானியின் கேள்வியில் அவளை முறைத்தவன்,

“நான் நேத்தே சொன்னேன் இல்ல சிவா… உங்க அப்பாவும் பிசினஸ் தானே செய்யறார்… உங்க அப்பாவைப் பார்த்து, அதுல எவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு உனக்கு ஏற்கனவே தெரியும் தானே… ஒரு லெவல் வர வரைக்கும் இப்படி தான் சிவா இருக்க முடியும்… நான் ஒண்ணும் பரம்பரை பணக்காரன் கிடையாது… கையை ஊணி கரணம் போட்டு, இந்த அளவுக்கு வளர்ந்திருக்கேன்… இன்னும் நான் நல்லா வளரணும்… நான் பெரிய ஆளா வருவேங்கற நம்பிக்கைல தான் உங்க அப்பா எனக்கு உன்னை கொடுத்திருக்கார்… நான் அதை காப்பாத்தணும்…” புகழ் பொறுமையாக விளக்கிக் கொண்டிருக்க,

“அப்போ நான் சாப்பிட மாட்டேன்…” அவன் சொன்னதற்கு சம்பந்தமே இல்லாமல் ஷிவானி அறிவித்தாள்.

அவள் கூறியதை கேட்டவனுக்கு கோபம் உச்ச கட்டத்தில் வந்தது… கண்ணை இறுக மூடி கோபத்தைக் கட்டுப் படுத்தியவன் அமைதியாகவே… “நீ சாப்பிடாம மட்டும் இரு… உன்னை கொண்டு போய் டாக்டர்கிட்ட நிறுத்தி ஊசி போடச் சொல்றேன்… அப்போ தான் நீ சரிபட்டு வருவ… நீ எனக்காக சாப்பிடல… நம்ம குழந்தைக்காக சாப்பிடற… அது நியாபகம் இருக்கட்டும்… அப்பறம் உன் இஷ்டம்..” புகழ் மிரட்டவும், ஷிவானி பேந்த விழித்துக் கொண்டிருக்க, அந்த இடைவெளியில் அவளது கன்னத்தைத் தட்டி விட்டு, புகழ் பைக்கில் ஏறிக் கிளம்பினான்.

“ச்சே…” என்று கையை உதறிக் கொண்டவள், நேராக சென்று டைனிங் டேபிளை சுத்தம் செய்துவிட்டு,

“எனக்கு தூக்கம் வருது அத்தை… நீங்களும் ரெஸ்ட் எடுங்க…” என்று சொல்லிவிட்டு, உறங்கச் சென்றவள், வெகுநேரம் நன்றாக உறங்கி எழுந்து வர, அவளுக்காக மல்லிகா சூடாக மாலை சிற்றுண்டியை செய்து வைத்திருந்தார்.

மல்லிகா இருந்த இரண்டு நாட்களும், ஷிவானிக்கு வகை வகையாக சத்துள்ள ஆகாரத்தை செய்து கொடுத்து, நன்றாக பார்த்துக் கொண்டவர், மூன்றாம் நாள் காலையில், மனமே இன்றி, சித்ராவின் வீட்டிற்கு கிளம்பத் தயாரானார்.

ஷிவானியின் முகம் சோர்ந்துத் தெரியவும், “இன்னும் கொஞ்ச நாள் சிவா… அவளை ட்ரேவல் பண்ணலாம்ன்னு டாக்டர் சொல்லிட்டாங்கன்னா நான் அவளையும் இங்க கூட்டிட்டு வந்துடறேன்… நான் தான் அங்க போறேனே தவிர, எனக்கு மனசெல்லாம் இங்கயேத் தான் இருக்கும்… உன்னை தனியா விட்டுட்டு போறேனேன்னு தவிப்பா தான் இருக்கு…” சொல்லி முடிக்கும் போதே மல்லிகாவின் குரல் தழுதழுக்க,

“ஹையோ அத்தை… நீங்க என்ன இப்படி வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்க? எனக்கு பரவால்ல அத்தை… சித்ரா அண்ணிக்கு இப்படி படுத்தும்போது, அவங்களைத் தான் பார்க்கணும்… என்னை இனியன் நல்லா பார்த்துப்பார்.. கவலைப்படாம போயிட்டு வாங்க…” என்று அவருக்கு தைரியம் கூறினாள்.

“பெரிய மனுஷி சொல்லிட்டாங்கம்மா… நான் பார்த்துக்கறேன்… நீங்க வாங்க.. உங்களை விட்டுட்டு நான் திரும்ப கடைக்கு வரணும்…” புகழ் இடையில் புக,

“கடைக்கு போணும்… கஸ்டமர் போயிடுவாங்கன்னு… பதினாறு வயதினிலே கமலஹாசன் மாதிரியே சொல்லிட்டு இருக்காரே… இவரை என்ன செய்யலாம்…” மனதினில் சலித்துக் கொண்டவள், புகழ், கமலைப் போல் சொல்லிக் கொண்டே, நடந்து வருவதை நினைத்துப் பார்த்து, சிரித்துவிட, புகழும், மல்லிகாவும் அவளை கேள்வியாகப் பார்த்தனர்.

“ஒண்ணும் இல்ல.. உலகத்தை நினைச்சேன்… சிரிச்சேன்…” ஷிவானி குறும்பாக பதில் சொல்லவும்,

“ரொம்ப நினைக்காதே… அப்பறம் மூளை சூடாகப் போகுது…” என்று கிண்டலாகச் சொன்ன புகழ், காரை எடுப்பதற்காக கிளம்ப,

“பார்த்துக்கோடா..” என்றபடி மல்லிகாவும் சென்று காரில் ஏறினார்.

அன்றைய சமையலை அதிகாலையிலேயே செய்து வைத்து விட்டு, மல்லிகா கிளம்பி இருக்கவும், ஷிவானி வேலை எதுவும் இன்றி, டிவியை போட்டுக் கொண்டு, சிறிது நேரம் பொழுதை நெட்டித் தள்ளியவள், சோபாவிலேயே படுத்து உறங்கியும் போனாள்.

உறக்கத்தின் பிடியில் சுகமாக கட்டுண்டு கிடந்தவள், கதவு தட்டும் சத்தத்தில் கண் விழித்துப் பார்க்க, கடிகார முட்கள் மதியம் என்பதைக் குறிக்க, மணி இரண்டை தொட்டுக் கொண்டு நின்றது.

“இவ்வளவு நேரமாவா தூங்கி இருக்கோம்?” மனதினில் நினைத்தவள், மீண்டும் கதவு தட்டப்படும் ஒலியைக் கேட்டு,

“இனியன் தான் சாப்பிட வந்திருப்பாரு…” மனதினில் எழுந்த உற்சாகத்தில்,

“இதோ வந்துட்டேன் இனியன்..” என்று குரலில் உற்சாகத்துடன் கதவைத் திறக்க, வாயிலில் ரஞ்சிதா நின்றிருந்தாள்.   

“ஓ… நீங்களா? வாங்க…” குரலில் உற்சாகம் வடிய, ஷிவானி அவளை உள்ளே அழைக்கவும்,

“உங்க அவர் வர நேரத்துல நான் வந்து தொல்லை கொடுத்துட்டேனா?” என்று ரஞ்சிதா சிரித்துக் கொண்டே கேட்கவும், ஷிவானி, மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்படி எல்லாம் இல்லைங்க.. அவர் சில நாளைக்கு தான் வருவார். கடையில ஆள் இல்லாததுனால விட்டுட்டு வர முடியாது..” ஷிவானி சொல்ல,

“அப்போ கையில எடுத்துட்டு போயிடுவாரா?” ரஞ்சிதா கேட்க, அதற்கும் இல்லையென்று ஷிவானி தலையசைத்தாள்.

“ஒரு ரெண்டு நிமிஷம்… பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்… காலையில அத்தை கிளம்பவும் நல்ல தூக்கம்… இப்போ தான் விழிச்சேன்…” என்று சொன்னவள், ரஞ்சிதா ‘சரி’ என்று சொல்லவும், உள்ளே சென்று முகம் கழுவிக் கொண்டு வர, ஹாலில் மாட்டப்பட்டிருந்த புகழ் ஷிவானியின் திருமண புகைப்படத்தை ரஞ்சிதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… அவரும் ரொம்ப மேன்லியா இருக்கார்.. நல்ல ஜோடிப் பொருத்தம் தான்… லவ் மேரேஜா…” ரஞ்சிதாவின் கேள்விக்கு, ஷிவானி புன்னகையுடன் ‘ஆம்’ என்று தலையசைத்து,

“நான் அவரை லவ் பண்ணினேன்… அவர் எங்க வீட்டுக்கு வந்தாலும் என்னை பார்த்தது கூட இல்ல.. ரொம்ப நல்ல பிள்ள…” கேலி செய்துக் கொண்டே புகழின் நினைவில் மூழ்கியவளின் கண்களில் காதலின் மயக்கம்.

“உங்களுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் போல இருக்கே..” ரஞ்சிதா கேலி செய்ய,

“பின்ன.. என் இனியன் சர்க்கரை கட்டி…” ரஞ்சிதாவிடம் ஷிவானி பெருமை பீற்றத் தொடங்க,

“ஓ.. உங்க அவர் பேர் இனியனா? அவரைப் போலவே பேரும் நல்லா இருக்குங்க…” ரஞ்சிதா வெளிப்படையாக சொல்லவும், ஷிவானிக்கு சுருக்கென்று கோபம் எட்டிப் பார்த்தது.

“அவங்க இயல்பா சொல்றாங்க… விடு..” தன்னையே அடக்கிக் கொண்டவள்,

“நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேள்வி கேட்க,

“ஹ்ம்ம்… ஆச்சுங்க… காலையிலேயே ஒருமுறை வந்து கதவைத் தட்டினேன்… நீங்க திறக்கல.. அது தான் மறுபடியும் வந்து பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.” ரஞ்சிதா விளக்கம் சொல்லவும், ‘நான் தூங்கிட்டேன்…’ ஷிவானி பதில் கூறினாள்.

பசி ஒருபுறம் வயிற்றைக் கிள்ள, அதனால், ரஞ்சிதாவிடம் பேசும் சுவாரஸ்யம் குறைந்து ஷிவானி அமர்ந்திருந்த வேளையில், புகழின் கார் வீட்டின் வாயிலில் நிற்கவும்,

“அவர் வந்துட்டார் போல இருக்கு.. இருங்க நான் வந்துடறேன்..” என்று பரபரத்தவள், வேகமாக வாயிலுக்குச் சென்றாள்.

“சிவா.. உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே..” புகழ் கவலையாகக் கேட்க,

“இல்லையே… ஏன்? என்னாச்சு?” சாவுகாசமா அவள் கேட்கவும்,

“உன் போன் எங்க?” என்ற அடுத்த கேள்வி புகழிடம் இருந்து வந்தது.

“அது சைலன்ட்ல போட்டுட்டு தூங்கிட்டேன்… நல்ல தூக்கம்… இப்போ தான் எழுந்தேன்..” அவளது பதிலைக் கேட்டவன், அவளை முறைத்து,

“எவ்வளவு தடவ உங்க அம்மா கூப்பிட்டு இருக்காங்க தெரியுமா? நீ போனை எடுக்கலைன்னு எனக்கு போன் செய்தாங்க… நானும் ரெண்டு தடவ கால் செய்து பார்த்துட்டு, நேர்ல பார்க்கலாம்ன்னு வந்தேன்… சைலன்ட்ல எல்லாம் இனிமே போடாதே..” சொல்லிக்கொண்டே அவளோடு உள்ளே நுழைந்தவன், ஹாலில் அமர்ந்திருந்த ரஞ்சிதாவைப் பார்த்து ஒரு சில வினாடிகள் தயங்கி நிற்க,

“இனியன்… இவங்க தான் எதிர் வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கறவங்க..” ஷிவானி சொல்லவும், ‘வாங்க’ என்பது போல தலையசைத்து விட்டு, வேகமாக அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

“அவர் எப்பவுமே அப்படித் தான்.. என்னையே கல்யாணத்துக்கு முன்ன நிமிர்ந்து பார்த்தது இல்ல.. ஒரு நிமிஷம் வந்துடறேன்…” பெருமையாக சொல்லிக் கொண்டவள், புகழின் பின்னோடு அறைக்குள் நுழைந்தாள்.

“சாப்பிடலாமா?” ஷிவானி கேட்க,

“நான் அக்கா வீட்லேயே சாப்பிட்டேன் சிவா… உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்… சரி… நீ வந்து சாப்பிடு… நீ சாப்பிட்டதும் நான் கடைக்கு கிளம்பறேன்.. மணியாகுது..” அவளை விரட்டுவதிலேயே புகழ் இருக்க, ஷிவானி அவனை முறைத்துவிட்டு ஹாலிற்கு சென்றாள்.

“நீங்களும் வாங்களேன் சாப்பிடலாம்…” முறைமைக்காக ஷிவானி ரஞ்சிதாவை அழைக்க,

“நான் இப்போ தான் சாப்பிட்டேன்.. நீங்க சாப்பிடுங்க.. நான் வெயிட் பண்றேன்..” என்றவள், ஓடிக் கொண்டிருந்த டிவியைப் பார்க்கத் தொடங்க, ஷிவானி, உணவை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாகவே அமர்ந்து, செல்லில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த புகழ், அவள் உண்டு முடித்து எழவும், “நைட்டும் நான் வர வரைக்கும் சாப்பிடாம இருக்காதே.. நான் கிளம்பறேன்…” என்று கூறிவிட்டு, கிளம்ப நினைத்தவன்,

“ஒரு டீ போட்டுத் தாயேன்..” என்று கேட்க, ஷிவானியும் டீ போடுவதற்கு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் அவள் பின்னோடு சென்றவன் அவளை இறுக அணைத்து விடுவித்து, “போன சைலென்ட்ல இருந்து மாத்து… இனிமே இப்படி எல்லாம் போட்டு வைக்காதே” என்று சொல்லவும், சரி என்ற தலையசைப்புடன், புகழுக்கு டீயை நீட்ட, அதை வாங்கிக் குடித்தவன், ‘பை’ என்றபடி, ஷிவானியிடம் விடைப்பெற்று, வேகமாக வெளியில் சென்றான்.

ஹாலில் அமர்ந்திருந்த ரஞ்சிதாவைத் திரும்பிப் பார்க்கவோ, அவளிடம் சம்ப்ரதாயத்திற்காக விடைபெறவோ செய்யாமல் சென்ற புகழைப் பார்த்த ஷிவானி, புன்னகையுடன் ரஞ்சிதாவின் அருகே வந்தமர்ந்தாள்.

“அவர் சாப்பிடலையா?” மீண்டும் புகழைப் பற்றியே ரஞ்சிதா கேட்க,

“இல்ல.. அவங்க அக்கா வீட்டுக்கு போயிருந்தாங்க… அங்கேயே சாப்பிட்டுட்டாங்களாம். அதனால டீ குடிச்சிட்டு போறாங்க…” என்று சொன்ன ஷிவானியை விசித்திரமாக பார்த்த ரஞ்சிதா,

“எப்படிங்க அப்படியே போன்னு விட்டீங்க? என் கூட ஹரீஷ் ஒரு வாயாவது சாப்பிடலைன்னா எனக்கு சாப்பாடே இறங்காது. அதுவும் அவர் கையால ஒரு வாய் எனக்கு ஊட்டி விட்டே ஆகணும்.. அது நாங்க கல்யாணம் ஆன அன்னைக்கு இருந்தே தொடர்ந்து வச்சிருக்கற ஒரு சட்டம் மாதிரி… அவருக்கும் நான் ஒரு வாய் ஊட்டி விடுவேன்… அப்போ தான் அவருக்கு திருப்தியா இருக்கும்…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்,

“ஆமா… நீங்க ஹனிமூன் எங்கப் போனீங்க? நாங்க ஒரு வாரம் கேரளா பக்கம் சுத்திட்டு தான் வந்தோம்…” என்பதில் வந்து முடிக்க, ஷிவானி பதில் சொல்ல சிறிது திணறினாள்.

அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்து, “எங்கயுமே போகலையா?” ரஞ்சிதா தொடர,

“ஹ்ம்ம்… அப்போ அவருக்கு நிறைய வேலை இருந்தது… அதனால எங்கயுமே போகல…” ஷிவானி புன்னகையுடனே சமாளித்தாள்.

“ரொம்ப வேலை வேலைன்னு ஓடிட்டே இருப்பாரோ? இப்போ கூட வந்தாரு… நீங்க சாப்பிட்ட உடனே கிளம்பிப் போயிட்டார்… ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு தான் வருவார் போல… தனியா உங்களுக்கு போர் அடிக்கும்ன்னு போன் செய்து பேசுவாரா?” ஷிவானி புகழ் எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாளோ, அந்த ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்துவது போல ரஞ்சிதா கேட்க, ஷிவானி மனதினில், புகழின் அருகாமைக்காக ஏங்கத் தொடங்கி இருந்தாள்.

“அவர் அப்படி எல்லாம் போன் செய்து பேச டைம் இருக்காது… கடைக்கு போயிட்டா ரொம்ப பிஸியா இருப்பாங்க” ஷிவானி மெல்லிய குரலில் சொல்லவும்,

“இவங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்ன நல்லா பேசுவாங்க.. அப்பறம் நம்மளை கண்டுக்கவே மாட்டாங்க…” சமயம் தெரியாமல், ரஞ்சிதா நீட்டி முழக்க, ஷிவானிக்கு சோர்வாக இருந்தது.

“அவர் எப்பவுமே பேசினது கிடையாது. அவர் ரொம்ப பேசவும் மாட்டார்.. ரொம்ப அமைதி.. எப்பவுமே நான் தான் ஏதாவது லொடலொடன்னு பேசிட்டே இருப்பேன்..” அதோடு புகழின் பேச்சு போதும் என்பது போல ஷிவானி சற்று அழுத்தமாகச் சொல்ல, ‘என்னது?’ ரஞ்சிதா காட்டிய அதிர்ச்சியில், ஷிவானி குழம்பிப் போனாள்.

“என் ஹரீஷ் இருக்கார் இல்ல.. கல்யாணத்துக்கு முன்ன போன் செய்தார்ன்னா வைக்கவே மாட்டார்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிட்டே இருப்பார்.. கல்யாணத்துக்கு முன்ன எங்க போன் பில்லைப் பார்த்து எங்க அம்மா அப்பா… சீதனம் தரவா வேண்டாமான்னு கேட்டாங்கன்னா பாருங்களேன்… அப்பறம் ஜோடி சிம் கார்ட் வாங்கி பேசிட்டு இருந்தோம்… அதுவும் போக.. ஏதாவது ஒரு சாக்கு சொல்லி, வாரத்துல நாலு நாள் என்னை பார்க்க வந்துடுவார்.. அப்படியே வெளிய கூட்டிட்டு போவார்.. நிறைய கிஃப்ட் வேற வாங்கித் தருவார்… இப்போவும், அவருக்கு தோணிச்சுன்னா… ஏதாவது ஒரு கிஃப்ட் வரும்… எங்காவது வெளிய போகணும்..” என்று தொடங்கி, ஹரீஷின் புராணத்தை ரஞ்சிதா சொல்லத் தொடங்க, ஷிவானியின் மனதில், தான் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்த போதும், தனக்கு பரிசு கொடுக்க, விக்ரம் தானே சொல்ல வேண்டி இருந்தது.. என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியாமல், தடுமாறிக் கொண்டிருக்க, ஷிவானிக்கு தலை வலிப்பது போல இருந்தது.

அவள் முகம் சுருங்கி அமைதியாகவும், “உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? நான் ஹெல்ப் பண்ணவா?” ரஞ்சிதா கேட்க,

“இல்ல… தலை சுத்தறா மாதிரி இருக்கு…” ஷிவானி சொல்லவும், உரிமையாக டைனிங் டேபிளின் மீது வைத்திருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்து தந்தவள், அவள் தண்ணீர் பருகியதும்,

“சொல்ல மறந்துட்டேன் பாருங்க… சாயந்திரம் நான் ஹரீஷ்க்காக கட்லெட் செய்யலாம்ன்னு இருக்கேன்… உங்களையும் சாப்பிடக் கூப்பிடத் தான் வந்தேன்.. உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்… வாய்க்கு நல்லா இருக்கும்…” என்று ரஞ்சிதா அழைக்க, ஷிவானி தயக்கத்துடன் அவளைப் பார்த்தாள்.

“உங்களுக்கு என்ன தனியாவா செய்யப் போறேன்.. சேர்த்து தானே செய்யறேன்.. நீங்களும் நாள் பூரா தனியா இருக்கீங்க… அங்க வாங்க.. பேசிட்டு இருக்கலாம்..” என்று ரஞ்சிதா அழைக்கவும், ஷிவானியும் ஒப்புக் கொண்டாள்.

“கண்டிப்பா வாங்க… இப்போ முடியலைன்னு சொல்றீங்களே… கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. அப்பறம் நீங்க என்ன படிச்சு இருக்கீங்க? எப்போ முடிச்சீங்க?” என்ற விபரங்களை ரஞ்சிதா கேட்கத் தொடங்கவும், ஷிவானி சொன்ன பதிலைக் கேட்டவள், கண்களை விரித்து,

“ஹையோ… ஷிவானி… நீங்க இவ்வளவு சின்னப் பொண்ணா.. இப்போ தான் படிப்பு முடிச்சு இருக்கீங்களா? கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு… ஜாலியா லைஃப்பை என்ஜாய் பண்ணாம… என்னங்க இது?” குறைப்பட்டவள், மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப, ஷிவானிக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது. 

புயல் அடித்து ஓய்ந்து போன அமைதி வீட்டினில் நிலவினாலும், ஷிவானியின் மனதில் புயல் அடிக்கத் தொடங்கி இருந்தது என்பது உண்மை தான். தனது கல்லூரி நாட்களில், வழக்கமாக எல்லா பெண்களுக்கும் உள்ள எதிர்பார்ப்பு, கனவு போல அவள் கண் முன்னே விரிந்தது.

திருமணத்திற்கு புகழ் வந்து பெண் பார்த்து சென்ற பிறகு, ஷிவானி சிறகு இல்லாமலே பறந்துக் கொண்டிருந்த சமயம், அவளது தோழிகளும் அவளை கிண்டல் செய்ய, வெளியில் மிரட்டி சிணுங்கினாலும், உள்ளூர அவளது மனம் அதை ரசித்து விரும்பவே செய்தது.

புகழ் போனில் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவன் பேசாதது முதலில் ஏமாற்றமாக இருந்தாலும், பின்பு தன் படிப்பு கெடக் கூடாது என்று அவன் போன் செய்யவில்லை என்று நினைத்து தன்னை தேற்றிக் கொண்டாள்.

பின்பும், திருமணத்திற்கு பின்பு, அவனுடன் எப்படி ஒவ்வொரு நாளும் கடக்கும் என்ற கற்பனைகள் சிறகு விரித்து பறந்தது. கதைகளில் படிக்கும் ஹீரோக்களைப் போல, நிறைய பரிசுகள், திடீரென ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, தன்னையே சுற்றி வந்து, சமையல் அறையில் செய்யும் சரசங்கள், சிணுங்கல்கள், நாணச் சிவப்புகள் அத்தனையும் கனவாகிப் போனதே என்று மனதில் எழுந்த எண்ணங்கள் மொத்தமும், அவளை தன்னுள் சுருட்டிக் கொள்ளத் துவங்கி இருந்தது.

பரிசுகள் வாங்கித் தந்தான் தான்… அதுவும் விக்ரம் சொல்லி… சினிமாவிற்கு அழைத்துச் சென்றான் தான்… அதுவும் விக்ரமின் உதவியுடன்… எதுவுமே புரியாமல் ஜடமாக இருக்கும் அவனை என்ற எரிச்சலும் சேர்ந்துக் கொள்ள, மனதினில் அனைத்தையும் போட்டு குழம்பி, ரஞ்சிதா கூறிய ஹரீஷின் பெருமைகளுடன், புகழை ஒப்பிட்டு பார்த்து, புகழ் ஏன் அவ்வாறு இல்லை… தன்மேல் காதல் இல்லையோ அதனால் தான் தனது கனவுகள் மொத்தத்தையும் சிதைக்கிறானே என்ற எண்ணம் வலுப்பெற, ஷிவானி ஏக்கத்தில் சிக்கி மறுகத் தொடங்கினாள்.

யதார்த்தமான வாழ்க்கையில், ரஞ்சிதா, ஹரீஷைப் பற்றி கூறுவது போல, அல்லது கதைகளில் வரும் ஹீரோக்களைப் போல, ஒரு கணவன் இருப்பதென்பது வெகு வெகு அரிதே.. ஹோட்டல் செல்வது, திடீர் பரிசுகள் கொடுப்பது என்பதெல்லாம் வெகு அரிதான ஒன்று. இயல்பான வாழ்க்கையில், அதெல்லாம் அனைவரின் வீட்டிலும் நடக்குமா? ஏன் தனது தந்தை அவ்வாறு அன்னைக்கு வாங்கித் தந்திருக்கிறாரா? என்பதை எல்லாம் ஷிவானி யோசிக்க தவறினாள்.

அடுத்தவர்களைப் பார்த்து, அவ்வாறு நாம் இல்லையே என்று ஏங்கி, நமது நிம்மதியையும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை அவள் யோசிக்க மறந்திருந்தாள். புகழ் முன்பிருந்தே அப்படித் தானே இருக்கிறான்.. அவன் தன்மேல் வைத்திருக்கும் காதல் எத்தகையது என்பதையும் அவள் யோசிக்காமல் விட்ட காரணத்தினால், மனதில் அமைதியின்றி ஏக்கங்களுடன் நிம்மதியை குலைத்துக் கொள்ள துவங்கினாள்.  

மாலை, ரஞ்சிதா ஷிவானியை மீண்டும் அழைக்க, மனதின் புயல் சுவாரஸ்யத்தை குறைக்க, ஷிவானி அவளது  வீட்டிற்குச் சென்றாள். இப்பொழுது கட்லெட்டை கையில் கொடுத்தவள், தங்களுடைய புகைப்படங்களை காட்ட, அதில் அவர்களின் நெருக்கத்தைப் பார்த்த ஷிவானி அதற்கு மேல் அமர முடியாமல்,

“எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு ரஞ்சிதா… நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்…” என்று கிளம்ப,

“சரிங்க… தூங்காத நேரத்துல என்னை கூப்பிடுங்க… நானே வரேன்… கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்… பொழுதும் போகும்..” என்று கூறியவள், ஷிவானிக்கு விடை கொடுக்க, மனதினில் தன்னையே நொந்துக் கொண்டு ஷிவானி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

இரவு வீட்டிற்கு வந்த புகழ், ‘சாப்ட்டியா’ என்று கேட்டுவிட்டு, தனது வேலையைத் தொடர்ந்தான். ஷிவானி அவனிடம் எதுவும் பேசும் நிலையிலும் இல்லை… அதைக் கூட உணராமல், புகழ் தனது வேலையில் கவனம் செலுத்தினான்.  

நாட்கள் அதன் ஓட்டத்தில் ஓடத் துவங்கியது. அவள் உண்பதை உறுதி செய்துக் கொண்டு, அவளுக்கு எந்த வகையிலும் சிரமத்தை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன், அவள் எழும் முன்பே வீட்டின் வேலைகளை முடித்து, உணவு தயாரித்து, வீட்டை சுத்தம் செய்ய வேலைக்கு ஒருவரையும் அமர்த்தி, மதியம் உணவு நேரத்திற்கு சரியாக வீட்டில் இருப்பவன், ஷிவானி உண்டு முடித்ததும், தானும் உண்டு முடித்து கடைக்குக் கிளம்பி, இரவு அவளை அருகில் அமர்த்திக் கொண்டு, உணவு உண்டு முடித்து, சுத்தம் செய்ய உதவிவிட்டு, மீண்டும் தனது வேலையைத் தொடர, ஷிவானியின் கலகலப்பு குறைந்ததோ, அவன் கேட்பதற்கு மட்டுமே வாயைத் திறந்து அவள் பதில் சொல்வதையோ அவன் உணராமல், அவளது மசக்கையின் விளைவே இந்த சோர்வு என்று முகத்தைப் பார்த்து முடிவு செய்துக் கொண்டு, அவளுக்கான வேலைகளைக் குறைத்தான்.

ஷிவானியோ புகழின் குணம் அது தான் என்பது போல இதுவரை விட்டுக் கொடுத்துக் கொண்டு வந்தவள், அவள் எதிர்பார்த்து ஏமாந்த அளவின் ஏக்கத்தின் அளவு அதிகமாயிருக்க, அதில் இருந்து மீள முடியாமல், ஏதோ யோசனையாகவே தனது நாட்களை கடத்தத் துவங்கி இருந்தாள்.

இடையிடையே.. ரஞ்சிதா அவளிடம் பேச வந்து, ஹரீஷின் புகழ் பாடிவிட்டு செல்ல, ஷிவானிக்கு அவளைக் கண்டாலே, தலைச் சுற்றலும், தலைவலியும் சேர்ந்து வந்து தாக்காத் துவங்கி இருந்தது.

ஒருவாரத்தில், சசியும், பாஸ்கரும் தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு, ஊருக்கு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்த சசி ஷிவானியின் முகத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்.  

10 COMMENTS

 1. hi ramya,
  arumaiyana pathivu,
  happada shivavin amma vanthu vittargala
  konjam nimmathiya irukkalam,ennapa
  atharkum vetuvaithu vituvirgala.

  with love
  geet

 2. Rams
  Updates ithuvarai padichittaen, .Superb ma,. enna thaan Pugazhu ethaarthamaanavanaa irunthaalum, Shivani ethirpaarkkirathil thappillai, paavam chellam romba feel pannuthu…pugazh !grrrr konjamaavathu think pannupaa…. aanaalum neighbours naala ippadilaam problems vanthaal enna pannurathu!!!!!…
  adutha update eppo maa????

LEAVE A REPLY