SHARE

சொல்லாத எண்ணங்கள்,

பொல்லாத ஆசைகள்,

உன்னாலே சேருதே,

பாரம் கூடுதே….

தேடாத தேடல்கள்,

காணாத காட்சிகள்,

உன்னோடு காண்பதில் நேரம் போகுதே..

தலையை குனிந்துக் கொண்டவள், தட்டில் இருந்த உணவை அளைந்துக் கொண்டிருக்க, அவள் மனம் வருந்துவது தெரிந்தாலும், தான் இளகினால், அவள் இதையே சாக்காய் வைத்து ஒழுங்காய் உண்ண மாட்டாள் என்று நினைத்துக் கொண்டவன், தனது உணவை வேகமாக உண்ணத் துவங்கினான்.

அவன் சாப்பிடுவதை கீழ்க் கண்ணால் பார்த்தவளுக்கு, கண்ணீர் இருந்த இடத்தில் கோபம் நிறைத்தது. மனதினில் அவனைத் திட்டிக் கொண்டே, தனது குழந்தைக்காகவேனும் ரோஷப் படாமல், உணவை உண்டு முடிக்கும் எண்ணத்தில், வேகமாக அவளும் உணவை வாயில் போட்டுக் கொள்ள, அது அவளது தொண்டைக் குழியில் சிக்கி, உமட்டத் துவங்கியது.

“மெதுவா சாப்பிடேன்… நான் என்ன பிடுங்கிக்கவா போறேன்? இப்போப் பாரு… உள்ள போனதும் வெளிய வரப் போகுது..” என்று அவளை அதட்டுவதாக நினைத்து, மென்மையாக சொல்லிக் கொண்டே, அவளுக்கு உதவத் துவங்க, அவனிடம் எதுவும் பேசாமல், ஷிவானி சோபாவில் சென்றமர்ந்தாள்.

“என்னாச்சு? இங்க சோபாவுல வந்து உட்கார்ந்துட்ட… சாப்பிட வா…” புகழ் அழைக்க,  

“இல்ல… வேணாம்… வாய்க்கு எல்லாமே சப்பு சப்புன்னு இருக்கு… பிடிக்கவே இல்ல…” என்று அவள் சொல்லவும், சிறிது நேரம் அவளுக்கு இடைவெளி கொடுத்து, தன்னுடைய தட்டில் இருந்த உணவை உண்டு முடித்து விட்டு, அவளுடைய தட்டை எடுத்துக் கொண்டு, அவள் அருகில் சென்றான்.

சாப்பாட்டைப் பார்த்ததும், ஷிவானி அவனை கெஞ்சலாகப் பார்க்க,  “வாயைத் திற சிவா.. இதுக்குத் தான் நேரத்துல சாப்பிடுன்னு சொன்னது. டாக்டர், லேட்டா சாப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க இல்ல. ஜீரணம் ஆகாதும்மா…” என்று அவளிடம் தன்மையாக பேசிக் கொண்டே, அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன், அவளது தலையை தோளில் சாய்த்துக் கொண்டு, அவளுக்கு ஊட்டத் தொடங்க, அந்த கரிசனையும் ஷிவானிக்கு பிடித்திருக்க, அவன் கொடுப்பதை வாயில் வாங்கிக் கொண்டு, உண்டு முடித்தாள்.

அவன் கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு, “நீங்க இருங்க… நான் வேலையை முடிச்சுட்டு வரேன்…” என்று சொன்னவள், சமையல் அறைக்குச் சென்று, பாத்திரம் கழுவத் தொடங்க, அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன், அவளது கழுத்து, கன்னம் என்று இதழ்களை பதித்துக் கொண்டே வந்து, அவளது காதில், “தேங்க்யூ வணி…” என்று சொல்லவும், அவனது நன்றியில், ஷிவானி குழம்பிப் போனாள்.

“எதுக்கு?” அவன் பக்கம் திரும்பி கேட்டவளின் இதழ்களை மென்மையாக சிறை செய்தவன், அவளை அணைத்துக்கொண்டு நின்றான்.

“இப்போ எதுக்கு தேங்க்ஸ் சொன்னாரு… எதுக்கு இப்படி கட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கறாரு? ஒண்ணுமே புரியல சிவா… பேசாம நீ மைன்ட் ரீடிங் படிக்க கத்துக்கிட்டு இருந்தா… இப்போ இவர் மனசை படிக்க ரொம்ப வசதியா இருந்திருக்கும்…” என்று தனக்குள்ளேயே சலித்துக் கொண்டவள், அவனது அணைப்பினில் அசைவின்றி நின்றாள்.

புகழோ அவளது குழப்பத்திற்கு நேர் மாறாக, நிம்மதி, சந்தோசம், நிறைவு என்ற உணர்வுக் குவியல்களில் சிக்கி திண்டாடிக் கொண்டிருந்தான். தனக்கு அனைத்தையும் கொடுக்கும் ஷிவானிக்கு தான் நிறைய செய்ய வேண்டும்… என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், மெல்ல அவளிடம் இருந்து விலகி,

“உன்னை சும்மாவும் உட்கார்த்தி வைக்கக் கூடாதுன்னு உங்க அம்மா ஆர்டர் போட்டு இருக்காங்க… அதனால… இந்த நாலு பாத்திரம் தானே… சீக்கிரம் கழுவிட்டு வா… நேரமாகுது… தூங்கப் போகணும்..” என்று அவளிடம் சொல்லிவிட்டு, அவள் அருகிலேயே நிற்கவும், எதுவும் பதில் சொல்லாமல், இப்பொழுது ‘எதற்கு அணைத்தான்.. எதற்கு விடுவித்தான்…’ என்ற யோசனையுடன் செய்து முடித்துவிட்டு, அவளையேப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த புகழை நோக்கி கைகளை நீட்டினாள்.

“என்ன?” புரியாமல் புகழ் கேட்க,  

“எனக்கு நின்னு நின்னு கால் வலிக்குது…” செல்லமாக அவள் சிணுங்கவும், அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குச் சென்றவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்றிவிட்டு, படுக்கையில் கிடத்தினான்.

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நீ தூங்கு…” என்று அவளிடம் சொல்ல, ஷிவானிக்கு ஏமாற்றமாக இருந்தது.

இப்படி தூக்கிச் செல்லும் நாட்களில், அவளிடம் அவன் காட்டும் நெருக்கம் இன்று குறைவது போல இருக்க, சிறிது நேரம் கண்களை மூடி உறங்க முயன்றவள், அவன் வேலை செய்வதைப் பார்த்து, “எனக்கு தூக்கம் வரல…” என்று எழுந்து அமர,

“ஹ்ம்ம்.. மதியம் நல்லா தூங்கின இல்ல… அதனாலயா இருக்கும்…” சொல்லிக் கொண்டே, தனது பையில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்து அவளிடம் நீட்டி,

“இந்தா… கிருஷ்ண லீலா புக்கும், கிருஷ்ணரோட பாட்டு புக்கும் இருக்கு… தூங்காம இருக்கற நேரத்துல… இதைப் படி… நம்ம குழந்தையும் கிருஷ்ணர் போலவே இருக்கும்…” என்றபடி, அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.  

“ஏன் ஆண் குழந்தை தான் பிடிக்குமா? பொண்ணா இருந்தா என்ன செய்வீங்க?” வெடுக்கென்று அவள் கேட்க, அவளை நெருங்கி அமர்ந்தவன்,

“எந்த குழந்தையா இருந்தா என்ன சிவா… எனக்கு உன்னை போல தான் துறு துறுன்னு வேணும்… இது படிச்சா ரொம்ப நல்லதுன்னு அம்மா வாங்கித் தரச் சொன்னாங்க… அது தான் வர வழியில வாங்கிட்டு வந்தேன்” அவன் சொல்லவும், அவனது முகம் பார்த்தவள், அதில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகையைக் கண்டு, அந்த புத்தகத்தை வாங்கி பிரித்துப் பார்த்தாள்.

அழகான குழந்தைக் கிருஷ்ணன், தனது சிவந்த அதரங்கள் விரிய புன்னகைத்து, தனது தாய் யசோதையை அதில் சிக்குண்டு கிடக்க வைத்திருந்த காட்சியே அட்டைப் படமாக அச்சிடப் பட்டிருக்கவும், அதைக் கண்ட ஷிவானிக்கு, புகழைப் போல ஒரு குழந்தை சிரித்துக் கொண்டிருப்பது போல மனதினில் விரிய,

வேகமாக தலையை ஆட்டிக் கொண்டவள், “ஹையோ… என்னைப் போலவே இருக்கட்டும்… அப்பறம் அதுவும் வாயைத் திறந்து பேசாம, சிரிச்சே நம்மளை கவுத்துடும்…” என்று நினைத்து சிரித்துக் கொண்டு, அந்த புக்கை படிக்கத் தொடங்கியதும், மீண்டும் புகழ் தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

“நிறைய வேலை இருக்கு சிவா… இன்னும் ஒரு மூணு நாலு கடைக்கு வெப்சைட்டும், அவங்க கடைக்கு பில் போட ஈசியா ப்ராஜெக்ட்டும் பண்ணித் தரேன்னு சொல்லி இருக்கேன்… நம்ம குழந்தைக்கு எந்த குறையும் இல்லாம வளர்க்கணும்…” புகழ் யதார்த்தமாக சொல்லிக் கொண்டிருக்கவும், அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,

“அப்போ தினமும் லேட் ஆகுமா?” என்ற கேள்வியைக் கேட்க,

“இல்ல… லேட் ஆகாது… ஆனா… கஸ்டமர் ஆபீஸ்ல இருந்து வந்த பிறகு அவங்க வீட்டுக்கு சிஸ்டம் பார்க்க வாங்கன்னு சொன்னா… போகாம இருக்கவும் முடியாது… அந்த சமயங்கள்ல லேட் ஆகும்… கடையும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா சேல்ஸ் அதிகமாகுது…

அதனால.. அதையும் பார்க்கணும்… பசங்களும், இப்போ ஒரு பெரிய பில்டிங் காண்டிராக்ட்டை பிடிச்சு இருக்காங்க… அதை நல்ல படியா முடிச்சுக் கொடுக்கணும்..

விக்ரம் கிட்ட, ‘நான் காலையில கடைக்கு வர லேட் ஆகும்… நீங்க கடையை பார்த்துக்கோங்க’ன்னு சொல்லி இருக்கேன்… ராத்திரி அதனால என்னால சீக்கிரம் கிளம்பி வர முடியாது… எல்லாரும் சேர்ந்து தான் ப்ளான் பண்ணி செய்யணும்.. அப்போ தான் எல்லா இடத்துலயும் நல்ல பேர் வாங்க முடியும்… இப்போ கடைக்கு வேலைக்கு ரெண்டு ஆள் கேட்டு இருக்கு… அவங்களும் பழகணும்… அவங்க பழகினா தான் எங்களுக்கு கொஞ்சம் வொர்க் லோட் குறையும்…” புகழ் சொல்லிக் கொண்டே வரவும், எதுவும் பேசாமல், ஷிவானி, தலையை மட்டும் அசைத்து கேட்டுக் கொண்டாள்.  

“இவர பாரு…. சீக்கிரம் வர முடியாதுன்னு ஒரே வார்த்தையில சொல்ல வேண்டியதை… எப்படி சுத்தி வளைச்சு சொல்லறாருன்னு… இதுக்கு மட்டும் தான் நல்லா பேச வரும்… வேற ஏதாவது கேளு… ஒரு வார்த்தையில தான் பதில் வரும்…” என்று நொடித்துக் கொண்டவள், புத்தகத்தில் கண்களைத் திருப்ப, சிறிது நேரத்திலேயே அவள் கண்ணயர்ந்தாள்.

அவள் உறங்கியதைப் பார்த்ததும், அவளது கையில் இருந்த புத்தகத்தை எடுத்து, டேபிளின் மீது வைத்தவன், அவளை நேராக படுக்க வைத்து, அவளது நெற்றியில் இதழ் ஒற்றி, அவளது வயிற்றிலும் இதழை பதித்து, “செல்ல குட்டி… நீங்களும் உங்க அம்மா மாதிரி எனக்கு சந்தோஷத்தை தரப் போறீங்களா? அப்பா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… நீங்க எப்படி இருப்பீங்கன்னு பார்க்க ஆசையா இருக்கேன்…” என்று அதனிடம் பேசிவிட்டு, மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தான்.

நன்றாக உறங்கியது போல் இருந்த அந்த சில மணித் துளிகளுக்குப் பிறகு, லைட் எரிந்துக் கொண்டிருக்கும் வெளிச்சத்தில், கண் விழித்துப் பார்த்த ஷிவானி, புகழ் அப்பொழுதும் மிகவும் தீவிரமாக வேலை செய்வதைப் பார்த்து,

“நீங்க தூங்கலையா?” என்று கேட்க,

“இல்ல சிவா… இன்னும் கொஞ்சம் இருக்கு… இன்னைக்கு அந்த வேலையை முடிச்சாத் தான் சரியா இருக்கும்… நீ தூங்கு…” என்று கூறிவிட்டு, தனது வேலையைத் தொடர, இந்த சந்தோஷ நாளில் கூட  தன்னுடன் சேர்ந்து உறங்காமல் வேலை பார்க்கும் புகழைப் பார்த்தவள்…..  மனதில் எழுந்த ஒரு வித சலிப்புடன், மீண்டும் உறங்கத் துவங்கினாள்.

மறுநாள் விடிந்து அவள் எழும் பொழுதே, மல்லிகாவின் குரல் கேட்டு வேகமாக ஓடி வந்தவள், “அத்தை… நீங்க எப்போ வந்தீங்க?” என்று மகிழ்ச்சியுடன் கேட்க,

“இப்போ தண்டா வந்தேன்… நீ எப்படி இருக்க? ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஷிவானி… இரு… உனக்கு பிடிச்சதை சமைக்கலாம்ன்னு இவன்கிட்ட சாமான் வாங்க சொல்லிட்டு இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு புகழிடம் திரும்பி பட்டியலைக் கொடுக்கத் தொடங்கினார்.       

“வந்ததும் வராததுமா என்ன அத்தை சமையல் ரூமுக்குள்ள புகுந்துக்கிட்டீங்க?” அவள் குறைப்பட,

“நீ எப்படி இருக்கன்னு மொதல்ல சொல்லுடா… உடம்பு மெலிஞ்சா மாதிரி இருக்கு… என்ன இவன் உன்னை ஒழுங்கா கவனிக்கிறது இல்லையா?” என்று அவர் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் அத்தை… அதெல்லாம் நல்லா தான் கவனிக்கிறார் அத்தை… என்னவோ சாப்பிடவே பிடிக்கலை…” அவள் சொல்லி முடிக்க, அவளது கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

“நான் ரெண்டு நாள் இங்க உன் கூட இருந்துட்டு தான் போவேன்… உனக்கு வாய்க்கு பிடிச்சதா செய்து தரேன்…” என்று சொல்லவும், ஷவானிக்கு குதூகலம் தொற்றிக் கொண்டது.

“அப்போ சூப்பர் அத்தை… இருங்க குளிச்சிட்டு வந்துடறேன்…” என்றவள், திரும்பும் பொழுது தான் எதிர் வீடு கண்ணில் பட,

“ஹையோ அத்தை… அவங்க இன்னைக்கு பால் காச்சறேன்னு கூப்பிட்டாங்க. நான் போகவே இல்ல. இவர் ஆபீஸ்க்கு கிளம்பிப் போனதும் போயிட்டு வரேன்..” என்று மல்லிகாவிடம் சொல்லிவிட்டு, அவள் குளிக்கச் செல்ல, புகழ் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா என் மருமகளை அப்படி பார்த்துட்டு இருக்க.. போடா… போய் இதெல்லாம் வாங்கிட்டு வா…” என்று அவனிடம் வேலையை ஏவ, புகழ் தலையசைத்து விட்டு, அவற்றை வாங்க கிளம்பிச் சென்றான்.

அவன் மீண்டும் உள்ளே வரும்பொழுது, ஷிவானியின் சலசலப்புச் சத்தம் அந்த வீட்டை நிறைக்க, புகழுக்கு எதுவோ மனதில் நெருட, அதை உடனே புறம் தள்ளுவது போல, “அத்தை… உங்க சமையல் சூப்பர் அத்தை… அவரும் என்னை விட நல்லாவே சமைக்கிறார்… நான் தான் அவர்கிட்ட கத்துக்கணும் போல…” என்று பேசிக் கொண்டே அவருக்கு உதவிக் கொண்டிருக்க, அவளை கிண்டலாக பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்து, சாமானை அவளிடம் கொடுத்து விட்டு,

“அங்க மாமாவே சமாளிச்சுக்குவாராம்மா… அவளுக்கு இந்த அளவுக்கு சாப்பாடே வயித்துல நிக்க மாட்டேங்குதுன்னு சொல்லறீங்களே…” கவலையாக அவன் கேட்க,

“ஆமாண்டா… இந்த ரெண்டு நாள் சமாளிச்சுக்கறேன்னு சொல்லி இருக்கார்… அவரும் லீவ் போட்டு இருக்கார்… அவரே கொண்டு விடறேன்னு சொன்னார். அவளை தனியா விட்டுட்டு வர வேண்டாமேன்னு தான்… நானே பஸ் பிடிச்சு வந்துட்டேன்…” என்று அவனுக்கு சமாதானம் கூறினார்.

புகழ் அமைதியாக இருக்கவும், “சிவா உண்டானது தெரிஞ்சும் என்னால அங்க இருக்க முடியல புகழ்.  சசி வேற.. ஊருக்கு கிளம்பும் போது ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டே போனாங்க… இன்னும் ஒரு வாரம் தானே… அவங்க வந்து பார்த்துப்பாங்க… எனக்கும் இங்க இவ தனியா இல்லைங்கற நிம்மதி இருக்கும்…” என்று சொல்ல, புகழ் ஆமோதிப்பாக தலையசைத்தான்.

“இப்போவாவது வேலை வேலைன்னு ஓடாம கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வாயேன் புகழ்… அவளும் தனியா என்ன பண்ணுவா?” என்று மல்லிகா சொல்லவும், புகழ் தலையசைக்க,

“வாயைத் திறந்து சரின்னு சொன்னா என்ன? நல்லா வாயில கொழுக்கட்டய வச்சிட்டு சுத்திட்டு இருக்கார்…” என்று ஷிவானி அவனை திட்டிக் கொண்டிருக்க,

“எனக்கு வேலைக்கு போக நேரமாகுதும்மா… நிறைய வேலை இருக்கு…” என்ற புகழ், தயாராகச் செல்லவும், ஷிவானி, மல்லிகாவின் கைப் பக்குவத்தை ருசிக்கத் தொடங்கினாள்.

அவள் உண்பதைப் பார்த்தவன், “இவளை நேரத்துக்கு சாப்பிடணும்னு சொல்லுங்கம்மா… நான் வர வரை சாப்பிடாம உட்கார்ந்து இருக்கா…” என்று அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“அவ எப்பவுமே உனக்காக வெயிட் பண்ணுவா புகழ்… நான் தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பேன்… இப்போ தனியாவும் இருக்கா இல்ல… அதுக்காக அவளை நீ திட்டுவியா? வீட்டுக்கு வந்த உடனே அனுசரணையா, சாப்ட்டியான்னு கேட்கற பழக்கம் இல்லையா? இது வரை இல்ல… இப்போ கத்துக்கோ…” என்று கண்டிக்க, அருகில் இருந்த ஷிவானி, அவனைப் பார்த்து பழிப்புக் காட்டினாள்.   

“இனிமே கேட்கறேன்… ஆனா… அவ மட்டும் சாப்பிடாம இருந்தா திட்டத் தான் செய்வேன்…” மல்லிகாவிடம் கூறியவன்,  

“ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு…” என்றும் சேர்த்துக் கூற, மல்லிகா, ஷிவானியின் முகம் போன போக்கைப் பார்த்து சிரித்துக் கொண்டே,

“ரொம்ப அதட்டாத… சாப்பிட்டுக் கிளம்பு…” என்று சொல்லவும், புகழும், அதை அப்படியே செய்து முடித்து, கடைக்கு கிளம்பிச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில், “அத்தை… நான் எதிர் வீட்டுக்கு போயிட்டு வரேன்… அவங்க பால் காய்ச்சற பங்க்ஷனுக்கே கூப்பிட்டாங்க… அப்போ நான் எழுந்துக்கவே இல்லையே… இப்போ கொஞ்சம் தலைய காட்டிட்டு வரேன்…” ஷிவானி அனுமதி கேட்க,

“போயிட்டு வா சிவா… சின்ன பொண்ணுன்னு வேற சொல்ற… அக்கம் பக்கம் பழக்கம் வச்சுக்கிட்டா உனக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்றவர், அவளை அனுப்பி வைத்தார்.

எதிர் வீட்டிற்குச் சென்ற ஷிவானியை வரவேற்றது, எந்த அரவமும் இல்லாத வீடே.. “என்ன இது? யாரையும் காணோமே…” என்று அவள் நினைத்துக் கொண்டு, “ரஞ்சிதா…” என்று அழைக்க,

“ஒரு நிமிஷம்…” என்ற குரலைத் தொடர்ந்து, ரஞ்சிதா வெளியில் வர, அவளைத் தொடர்ந்து, அவளது கணவனும் வர, ஷிவானிக்கு தயக்கம் ஒட்டிக் கொண்டது.

“வாங்க ஷிவானி… நீங்க காலையில வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்…” ரஞ்சிதா அழைக்க,

“இல்ல… நல்லா தூங்கிட்டேன்… லேட்டா தான் எழுந்தேன்…” என்று ஷிவானி சொல்லவும், அவளது கணவன் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் ஹரீஷ்..” ரஞ்சிதா, தனது கணவனை அறிமுகப்படுத்தி,

“இவங்க தான் எதிர் வீட்ல இருக்காங்க… ஷிவானி…” என்று இருவருக்கும் அறிமுகப்படுத்த, இருவரும் தலையசைத்து, புன்னகையுடன், அறிமுகத்தை ஏற்றுக் கொண்டனர்.

“அப்போ சரி… நீ இவங்க கூட பேசிட்டு இரு… நான் கடைக்கு போய் காய் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்…” என்று சொன்ன ஹரீஷ், உள்ளே செல்ல,

“நீங்க உள்ள வாங்க ஷிவானி…” என்று அழைத்துச் சென்றவள், அங்கிருந்த நாற்காலியைக் காட்டி, அவளை அமரச் செய்ய, ஷிவானி அமர்ந்துக் கொண்டு, வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

“இன்னும் செட் பண்ணி முடிக்கல… இப்போ தான் அடுக்கி வச்சிட்டே இருந்தோம்…” என்று சொன்னவள், ‘அம்முசெல்லம்…’ என்ற விளிப்பில், ஷிவானியைப் பார்த்து,

“இதோ அவருக்கு பையை எடுத்து கொடுத்துட்டு வந்துடறேன்…” என்றபடி ரஞ்சிதா உள்ளே ஓட, ஹரீஷ் அழைக்கும் போது குரலில் இருந்த பாசத்தில், முதல் முறையாக, புகழுடன் அவனை ஒப்பிடத் தோன்றியது.

புகழ் ‘வணி’ என்று அழைப்பான் தான்… ஆனால், அவனது குரலில் இந்த அளவிற்கு குழைவோ, அன்போ இருக்குமா? ஷிவானி யோசிக்கத் தொடங்க, அதற்குள்,

“கடைக்குத் தானே போறீங்க? போயிட்டு பத்து நிமிஷத்துல வரதுக்கு என்னால நீங்க கேட்கறதை எல்லாம் தர முடியாது…” என்று ரஞ்சிதாவின் சிணுங்கலும்,

“ப…த்…த்…து நிமிஷம் உன்னை விட்டுட்டு கடைக்குப் போறேன்… எனக்கு வேணும்…” அங்கொருத்தி அமர்ந்திருப்பதையே மறந்து, தாங்கள் எப்பொழுதும் இருக்கும் தனிமையில் பேசுவது போல அவர்கள் பேசிக் கொண்டிருக்க, அவர்களது சிணுங்களைக் கேட்டவளுக்கு, உள்ளத்தில் எதுவோ பிடித்துக் கொண்டதை போல ஒரு உணர்வு எழுந்தது.

அதை சமாளிக்க அவள் முயன்றுக் கொண்டிருக்கையிலேயே, “நான் வரேன் சிஸ்டர்… நீங்க பேசிட்டு இருங்க” என்றபடி ஹரீஷ் வெளியில் சென்று விட, ஷிவானியின் அருகே வந்து அமர்ந்த ரஞ்சிதா,

“அவருக்கு என்னோட பேரே எப்பவும் மறந்துடும்… எங்க எப்போ போனாலும்… அவர் கூப்பிடற இந்தப் பேர் தான் நியாபகம் வருது… ஒருதடவ ஏதோ அப்ளிகேஷன்ல கூட இந்த பேரை ஃபில் பண்ணி… வீணா போச்சு…” என்று பெருமை பேசத் தொடங்க, ஷிவானிக்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

“நான் இப்போ ஏதாவது கேட்டனா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், அவளது விளக்கத்திற்கு பதில் போல புன்னகைத்து விட்டு,

“காலையில ரொம்ப அசதியில தூங்கிட்டு இருக்கேன்னு அவர் எழுப்பாம விட்டுட்டார்… அதனால தான் இப்போ வந்தேன்… எங்க அத்தை ஊர்ல இருந்து என்னைப் பார்க்க வந்திருக்காங்க… நான் கிளம்பறேன்…” என்று சிறு பெண்ணின் போட்டி மனப்பான்மையில் ஷிவானியும் பதிலுக்கு பெருமை பேசத் தொடங்கினாள்.  

“என்ன ஷிவானி… ஏதாவது விசேஷமா?” ரஞ்சிதா பேச்சை வளர்க்க, ஷிவானியும் பெருமிதத்துடன் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“ஓ… கங்க்ராட்ஸ்… உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு?” ரஞ்சிதா உற்சாகத்துடன் கேட்க,

“வருஷமா? எங்களுக்கு கல்யாணம் ஆகி… மூணு மாசம் தான் ஆச்சு…” ஷிவானி, குரலில் சந்தோஷத் துள்ளலுடன் சொல்ல, ராஞ்சிதாவின் முகம் போன போக்கில், குழப்பத்துடன் ஷிவானி அவளைப் பார்த்தாள்.

“அதுக்குள்ளயா? எங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது… கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணிட்டு அப்பறம் குழந்தையை பத்தி யோசிக்கலாம்ன்னு இருக்கோம்… நீங்க அப்படி எதுவும் பிளான் பண்ணலையா?” சர்வ சாதாரணமாக ரஞ்சிதா கேட்க,

“இல்லைங்க… ரெண்டு வருஷம் கழிச்சுன்னு பிளான் பண்ணினாலும் இதே தானங்க… அதுக்கு எதுக்கு பிளான் பண்ணனும்…” ஷிவானி பட்டென்று சொல்லிவிட, ரஞ்சிதா கடகடவென்று சிரித்தாள்.

“இதுல சிரிக்க என்ன இருக்கு?” சிறிது கடுப்புடன் ஷிவானி கேட்க,

“இப்போ நாம என்ஜாய் பண்றது போல அப்பறம் வருமா என்ன? நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு… ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு குழந்தை வந்தா.. ரெண்டு பேருமே ரொம்ப சந்தோஷமா அதை பார்த்துப்போம்… ஆனா… புரிதல் இல்லாம, கொஞ்சம் கருத்து வேறுபாடு இருந்தாலும்… அவ்வளவு தாங்க…” தனது தரப்பு நியாயத்தை ரஞ்சிதா சொல்ல, ஷிவானி அவளை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு,

“சரிங்க… அத்தை நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவாங்க… நான் போய் பேசிட்டு இருக்கேன்…” என்றபடி ஷிவானி எழுந்து கொள்ள, குங்குமம் கொடுத்து, ரஞ்சிதா அவளை வழியனுப்பி வைத்தாள்.

அவள் வெளியில் வரும் பொழுது, எதிர்ப்பட்ட ஹரீஷிடம் தலையசைத்து விடைப்பெற்றவளுக்கு, அவனது கொஞ்சலும், குரலுமே மனதினில் மோத, வீட்டிற்குச் சென்றவள், முதல் வேலையாக புகழுக்கு அழைத்தாள்.

போனை எடுத்தவன், “என்ன சிவா… என்ன இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?” என்று அரக்கபரக்க கேட்க,

“இல்ல… சும்மா தான்… உங்க கூட பேசலாமேன்னு…” ஷிவானி சொல்லவும்,

“ராத்திரி நான் வீட்டுக்கு வரும் போது நீ தூங்காம இரு… நிறைய நேரம் கதை பேசலாம்… இப்போ எனக்கு வேலை இருக்கு…” தன் மனைவி தன்னிடம் என்ன பேச நினைக்கிறாள் என்று கூட கேட்காமல், வேலையில் மூழ்கி இருந்தவன், போனை வைக்கவும், என்றும் இல்லாமல், புதிதாக புகழ் தன்னிடம் போனில் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஷிவானிக்கு அதிகமாகத் தாக்கியது.

 

6 COMMENTS

  1. enakku ennavo shivan adhigama fdhir pakkara nnu thonudhu ivlo naal nalla ponna irundhadhu polave inemelum irukkanum.hmm enga edhir veetula kalagam vandhu irukkudhu nnu ninaikkiren parpom.novel nalla pogudhu ramya

  2. hi ramya,
    enna pa ippadi dhik dhik enu heart beat yegura vaikiringa.pugazh paavam pa avanukku romba kashtatha koduthidathinga.ok jokes apart. kadhai superaa poitu irukku kalayana puthithil yerpadu manaviyin aasaigalai thuliyamaga sollivitirgal.shiva ippo ulla ella pengalin representative vaga irukiral.enna than shiva pesi manathirkul countor koduthalum en vottu pugazhuku than. karuthukalai sollaamal solli puriyavaithu viduvathu ungal specality,shiva & pugazh avaravar pakka thavarai purinthu kolvatharkkul ennena kalatta seiya pokirirgalo avaargalai vaithu.avargalukku thindattam engalukku kondattam.most eagerly waiting for ur nxt ud.

    with love
    geet

  3. puzhal manasullla ullathai sollidu. pavam shiva athu pruiyama eaetho thing panni loosu velai seiyapoguthunu nanikiren. eagerly waiting for next update.nice flow ramya

LEAVE A REPLY