SHARE

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

மருத்துவமனைக்குச் சென்று, அங்கு அவர்கள் முறைக்காக காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும், புகழின் பதட்டம் ஷிவானிக்கு புதுமையாக இருந்தது.

“என்ன ஆச்சுன்னு இப்போ இவர் இப்படி டென்ஷன்ல சுத்தறார்? இந்த அம்மாவுக்கும் ஊருக்கு கிளம்பற அவசரம்… இல்லன்னா வீட்லயே மெடிக்கல் கிட் வாங்கி பார்த்துட்டு வந்திருக்கலாம்…” என்று நினைத்துக் கொண்டவள்,

“ஹுக்கும்… அது இப்போ தோணுது… அப்போ தோணவே இல்லையே…” என்று ஷிவானி தன்னையே திட்டிக் கொண்டு, புகழைப் பார்க்க, அவனோ டென்ஷனில் உச்சத்தில் அமர்ந்திருந்தான்.

“ஹ்ம்ம்… கடையை விட்டுட்டு வந்திருக்காரே.. கஸ்டமர் போயிடுவாங்கன்னு கவலைப்படராறோ?” என்று அவனை மனதினில் கேலி செய்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், அவளது முறை வரவும், எழுந்துக் கொள்ள,

“சீக்கிரம் வா… டாக்டர் கிட்ட கேட்க வேண்டியது நிறைய இருக்கு…” என்று அவளை முந்திக் கொண்டு அவன் செல்ல, சசி சிரித்துக் கொண்டே அவர்களைப் பின் தொடர, ஷிவானி, அவனுக்கு கடைக்கு கிளம்பும் அவசரம் என்று நினைத்துக் கொண்டாள்.

டாக்டர் அவளைப் பரிசோதித்து, கர்ப்பத்தை உறுதி செய்யவும், “நிஜமாவா டாக்டர்?” என்று கண்களில் கண்ணீர் கோர்க்க கேட்ட புகழ், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,               

“தேங்க்ஸ் டாக்டர்… தேங்க் யூ சோ மச்…” அவருக்கு நன்றி தெரிவித்து, தனது அருகில் இருந்த ஷிவானியின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.

“அவங்களுக்கு வாமிட் வந்தாலும் பரவால்லன்னு சாப்பிடக் கொடுங்க… அப்போ தான் கொஞ்சமாவது சக்தி இருக்கும்…” டாக்டர் தொடங்கவும்,

“இவ நேத்திக்கே வாந்தி எடுத்தா… ரொம்ப குடலே வெளிய வர அளவுக்கு இருந்தது… அந்த மாதிரி வந்தா கஷ்டமில்ல… அப்படி வராம இருக்க என்ன செய்யணும்?” புகழ் இடைப் புகுந்துக் கேட்க, டாக்டர், அவனது சிறு பிள்ளை தனமான கேள்வியில் ஷிவானியைப் பார்த்து சிரித்துவிட்டு,

“அதெல்லாம் அப்படித்தான் இருக்கும்… எதுக்கும் நான் ஒரு மாத்திரை எழுதித் தரேன்… ரொம்ப முடியாத அளவுக்கு வாந்தி எடுத்தாங்கன்னா… அவங்க போட்டுக்கட்டும்… இல்லன்னா… இதெல்லாம் நார்மல் தான்…” என்று டாக்டர் சாதாரணமாகக் கூறிவிட, புகழின் முகம் யோசனையைக் காட்டியது.

“இந்த சமயத்துல வாந்தி வர்றது சகஜம் தானே.. அவங்களுக்கு பிடிச்ச உணவா செய்து கொடுங்க… கொஞ்ச நாளைக்கு காரமாவும், ஸ்பைசியாவும், எதையும் சாப்பிட வேண்டாம்.. நிறைய காய்கள், பழங்கள் எல்லாம் சாப்பிடலாம்.. ஜூஸ் நிறைய குடிக்கலாம்…” என்று அவளுக்கான உணவுகளை டாக்டர் மேலும் பட்டியலிட, புகழ் கவனமாக கேட்டுக் கொண்டு,   

“சரிங்க டாக்டர்.. உங்க போன் நம்பர் கிடைக்குமா? ஏதாவதுன்னா உங்களுக்கு போன் செய்து சந்தேகம் கேட்க?” அவன் கேட்கவும், ஷிவானி “என்ன இது?” என்பது போல அவனைப் பார்த்து கண்களால் கேட்க, சசியோ அவனைப் பார்த்து சிரிப்பை அடக்குவதிலேயே மும்முரமாக இருந்தார்.

அவன் உள்ளே வரும் போது அவன் முகத்தில் இருந்த பயம் போய், இப்பொழுது அவன் முகத்தில் தெரிந்த நிறைவையும், ஆர்வமும், கடமையையும் கவனித்துக் கொண்டே வந்த மருத்துவரும், அவனுக்கு தனது நம்பரைக் கொடுத்து, “ரொம்ப அவசியம்ன்னா கால் பண்ணுங்க…” என்று அழுத்தமாக குறிப்பிட, அதை புகழ் வாங்குவதற்கு முன் வாங்கிக் கொண்ட ஷிவானி,

“தேங்க்ஸ் டாக்டர்…” என்று நன்றி உரைக்கவும்,

“ஸ்கான் எடுக்க… இன்னும் ஒரு மாசம் போகட்டும் பார்த்துக்கலாம்… இப்போ பேபி நல்லா இருக்கு… அதனால நான் இதுல எழுதி இருக்கற தேதில பார்த்தாப் போதும்…” என்று கூறி, டாக்டர் அவர்களுக்கு விடைக் கொடுக்க, இருக்கையில் இருந்து பட்டென்று எழுந்த ஷிவானியை முறைத்த புகழ்,

“இவளை இப்படி எல்லாம் எழுந்துக்க வேண்டாம்ன்னு சொல்லுங்க டாக்டர்…” என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட ஷிவானி,

“இனிமே மெல்லவே எழுந்துக்கறேன்… தேங்க்ஸ் டாக்டர்…” என்று டாக்டரிடம் கூறிவிட்டு, மெல்ல நடந்து, வெளியில் செல்ல, புகழ் இன்னமும் எதையோ யோசித்துக் கொண்டு வந்தான்.

இவர்கள் அடித்த கூத்தை பார்த்த சசி அதுக்கு மேலும் டாக்டரிடம் ஏதும் கேட்டு அவரை நொந்து நூடில்ஸ் ஆக்காமல் வெளியில் வந்தார்.

அவனது யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்தவள் “அய்யா சாமி… எனக்கு இப்போ ரொம்ப பசிக்குது… வீட்டுக்கு போய் சாப்பிடணும்… மொதல்ல அத்தைக்கிட்ட பேசணும்…” என்று அவன் மீண்டும் ஏதாவது கேட்கிறேன் என்று டாக்டரிடம் சென்று விடுவானோ என்ற பயத்தில் ஷிவானி சொல்ல,

“இல்ல சிவா… நைட் பூரா நிறைய கேட்கணும்ன்னு யோசிச்சு வச்சிருந்தேன்… எல்லாம் கேட்டுட்டேனான்னு தான் யோசிச்சேன்… உனக்கு பசிக்குதா… நேரா வீட்டுக்குப் போயிடலாம்… காலையிலயே சாதமும், புளி குழம்பும் வச்சிட்டு தான் வந்தேன்.. நீ டிரஸ் மாத்திட்டு வரதுக்குள்ள சூடு செய்து தரேன்…” புகழ் சொல்லவும், அவனது அன்பைக் கண்ட சசிக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

“உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை…” ஷிவானி துடுக்காகத் தொடங்க,

“வளவளன்னு பேசாதே… நான் போய் கார் எடுத்துட்டு வரேன்… வீட்டுக்குப்  போய் சாப்பிட்டுத் தூங்கு… நான் கடைக்கு போயிட்டு வரேன்…” என்று புகழ் சொல்லவும், ஷிவானிக்கு சொத்தென்று ஆகியது.

“எங்கடா… கடையைப் பத்தி இன்னும் பேசலையேன்னு நினைச்சேன்.. வந்துடுச்சா… இவரை எல்லாம் திருத்த முடியாது..” என்று மனதினில் அவனைத் திட்டிக் கொண்டே வந்தவள், வீட்டிற்கு வந்து சேரவும், சசி கிளம்ப எத்தனிக்க,

“இப்போவே எங்க கிளம்பறீங்க அத்தை… இங்க என் சமையல் எப்படி இருக்குன்னு சாப்பிட்டுப் பாருங்க… நீங்களும் வர்ரீங்கன்னு சேர்த்து தான் சாதம் வச்சேன்… மாமாவையும் இங்க வரச் சொல்லிடறேன்..” என்று சொல்லி முடிக்கும் முன்பே, பாஸ்கர் இனிப்புகளுடன் வந்து சேர்ந்தார்.

“என் ராஜாத்தி…” என்று ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்தவர், அவளது வாயில் இனிப்பை பிரித்து திணிக்க, அதை வாங்கிக் கொண்டவள், அவரது தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்டு, அவரைப் பார்க்க, அவளது நெற்றியில் வாஞ்சையாக இதழ் ஒற்றி,

“ரொம்ப சந்தோஷமா இருக்குடா… உன்னையே இப்போ தான் குழந்தையா பார்த்த மாதிரி இருக்கு…” நெகிழ்ச்சியாக அவர் சொல்ல, அவரைப் பார்த்துக் கொண்டே, அவர் அருகில் வந்த புகழ், ‘வாங்க மாமா…’ என்று அழைத்தான்.

“ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.. வாழ்த்துக்கள்..” என்று அவனுக்கு கையைக் கொடுத்து வாழ்த்திவிட்டு, ஸ்வீட்டை அவன் வாயில் திணித்து, அவனது தோளை அழுத்த, புகழ் புன்னகைத்து,

“தேங்க்ஸ் மாமா..” பதில் சொல்லிவிட்டு,  

“வாங்க சாப்பிடலாம்… அவ அப்போவே பசிக்குதுன்னு சொன்னா..” என்று கூறவும்,

“நீங்களும் உட்காருங்க மாப்பிள்ளை… நான் உங்களுக்கு எல்லாம் பரிமாரறேன்..” என்று சசி சொல்லவும், புகழ் சரியென்று தலையசைக்க, ஷிவானி, வேகமாகச் சென்று, அவர்களுக்கு தட்டை எடுத்துக் கொடுத்தாள்.

“நீ குனிஞ்சு நிமிர்ந்து ஒண்ணும் செய்ய வேண்டாம்… பேசாம இரு..” புகழ் அதட்ட,

“அதெல்லாம் கொஞ்சமாவது செய்யணும் மாப்பிள்ளை… இல்லன்னா டெலிவரி ரொம்ப கஷ்டம்…” சசி சொன்னதுமே, புகழின் முகம் மாறியது.

“ரொம்ப கஷ்டமா?” அவன் ஒருமாதிரிக் குரலில் கேட்க, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்,

“எனக்கு பசிக்குது இனியன்… இன்னும் நாம அத்தை கிட்ட விஷயத்தை சொல்லவே இல்ல… உங்களுக்கு அது நியாபகம் இருக்கா?” என்று ஷிவானி கேட்கவும்,

“நீ சாப்பிடு… நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்… நீ சாப்பிட்டு முடிச்சுட்டு பேசு..” என்றவன், தனது செல்லை எடுத்துக் கொண்டு, தான் தந்தையாகப் போகும் இனிய செய்தியைக் கூறச் செல்ல, ஷிவானி அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“மாப்பிள்ளையை எல்லா வேலையையும் செய்ய விட்டுட்டு உட்கார்ந்து இருக்காதே சிவா… கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும்… நீ செய்தா தான் உனக்கும் நல்லது.. இல்லன்னா சும்மா சோம்பலாவே இருக்கும்… மாப்பிள்ளை இந்த கவனி கவனிக்கும் போது எனக்கு கவலையே இல்ல… நான் நிம்மதியா ஊருக்கு போயிட்டு வரேன்… நீ நேரா நேரத்துக்கு மருந்தை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு…” என்று சசி அறிவுரை சொல்ல, ஷிவானி தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.

“ஆமாம்மா… இன்னைக்கு காலையில டாக்டரை பார்த்துட்டு வந்தோம்…” … “இல்லம்மா.. ரொம்ப வாந்தி எல்லாம் இல்ல..” என்று புகழ் சொல்லிக் கொண்டிருப்பது ஷிவானியின் காதுகளில் விழ, புகழுக்கு கூட இந்த அளவு சத்தமாக பேசத் தெரியுமா என்று அவளது மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

“அவ சாப்பிட்டுட்டு இருக்கா… வந்த உடனே பேசச் சொல்றேன்…” என்று சொல்லிக் கொண்டே வந்தவன்,

“சாப்பிட்டுட்டு அம்மாவுக்கு பேசிடு.. உன்னை பார்த்துக்க இங்க வர முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க… அக்காவுக்கு ரொம்ப வாந்தியாம்.. ஹாஸ்பிடல்ல ட்ரிப்ஸ் போட்டுட்டு வந்திருக்காங்க… என்ன கஷ்டம் சிவா..” என்று சொல்லிக் கொண்டே, உண்ண அமர்ந்தவன், ஷிவானியின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்து,

“சாப்பாடு நல்லா இருக்கா? வாய்க்கு பிடிச்சு இருக்கா?” என்று கேட்க, ஷிவானி அவனை எதில் சேர்ப்பது என்றே புரியாமல், தலையசைக்க,

“ரொம்ப அருமையா இருக்கு மாப்பிள்ளை… இவங்க அம்மாவை விட நல்லா செய்திருக்கீங்க…” என்று சேர்த்துச் சொன்ன பாஸ்கரை முறைத்த சசி,

“இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்… வீட்டுக்குத் தான் வந்தாகணும்..” என்று நொடிக்க,

“என்னப்பா.. தினமும் மாப்பிள்ளை செய்வாருன்னு உங்களுக்கு நினைப்பா… அதெல்லாம் நடக்காது.. அம்மா தான் உங்களுக்கு சமைச்சு போடணும்னு விதி இருக்கு… இப்படி எல்லாம் பேசி கெடுத்துக்காதிங்க…….” ஷிவானி இடைப்புக, மூவரும் வழக்கம் போல கலகலத்துக் கொண்டு உணவை உண்ண, புகழ் அந்த இடத்தில் ஒட்ட முடியாமல் அமர்ந்திருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அந்த இல்லத்தில் அவ்வளவு கலகலப்பான உணவு நேரம் கழிந்தது கிடையாது. தந்தை இருந்த போதும், அவருக்கு பின்பும், உண்பது என்பது, வயிற்றை நிரப்பும் ஒரு செயல்… அவ்வளவே..

ஷிவானி வந்த பிறகு ஓரளவு கலகலப்பாகக் கழியும் நேரம் தான்.. ஆனாலும், அனைவருடனும் சேர்ந்து உண்ணும் இந்த சுகம் அவனுக்கு பிடித்தே இருந்தது. தனது மகனோ, மகளோ வந்த பிறகு, தானும் ஷிவானியும் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற முடிவு எடுத்துக் கொண்டு, உண்டு முடித்தவன்,

“சாப்பிட்டு அம்மாகிட்ட பேசிடு சிவா… அவங்களுக்கு சந்தோஷத்துல தலையும் புரியல… காலும் புரியல… நான் கடைக்கு போயிட்டு வரேன்…” என்று ஷிவானியிடம் சொன்னவன்,

“நான் சரியா ஆறு மணிக்கு வந்துடறேன் மாமா… ரெடியா இருங்க… கடையை கொஞ்சம் பார்த்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு, அவன் கிளம்பிச் செல்ல, ஷிவானி உண்டு முடித்து, மல்லிகாவிடம் பேசி விட்டு வந்தாள்.

“நாங்களும் கிளம்பறோம் சிவா… பத்திரமா இரு… நீ ஏர்போர்ட்க்கு வந்து அலைய வேண்டாம்… அடிக்கடி போன் செய்து உன்கிட்ட பேசிக்கறோம்… சரியா… ஜாக்கிரதை…” என்று சசி பலமுறை சொல்லிவிட்டு, மனமே இல்லாமல் கிளம்பிச் செல்ல, ஷிவானிக்கு அழுகை வரும் போல் இருந்தது.

முன்தினம் அவ்வளவு உறுதியாக பேசிவிட்டு, இப்பொழுது அழுதால், சசி பயந்துவிடுவார் என்று எண்ணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், அவர்கள் கிளம்பியதும், கதவைத் தாழிட்டுக் கொண்டு, அறைக்குச் சென்று படுத்துக் கொண்டவளுக்கு புகழ் ஒரு வார்த்தை கூட தன்னை தனியாக அழைத்து பேசவில்லை என்ற குறையும் சேர்ந்துக்கொண்டது… இருந்தாலும் அவளின் களைப்பு அவளை விரைவிலேயே  உறக்கத்தில் ஆழ்த்தியது.

மாலை ஆறு மணிக்கு கிளம்ப ஏதுவாக சீக்கிரமே வீட்டிற்கு வந்த புகழ், தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே வர, ஷிவானி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்து, எந்த சத்தமும் இல்லாமல், இரவு வேலைகளை முடித்து விட்டு, டீயையும் போட்டு வைத்து ஷிவானியை எழுப்ப,

“என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க?” என்று ஷிவானி கேட்க, அவளை தழுவிக் கொண்டவன், அவளது கன்னத்தில் முத்தமிடத் துவங்கினான்.

“என்னங்க? என்னாச்சு?” ஷிவானி கேட்க,

“நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று மட்டும் கேட்டு, மீண்டும் அவளது தலையை நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டவன்,

“என்னோட வாழ்க்கைல சந்தோஷத்தை மட்டுமே அள்ளித் தர வந்த என் தேவதைடா குட்டி நீ…” என்று மனதினில் கொஞ்சிக் கொண்டே, மீண்டும் முத்தங்களை வாரி இறைத்தவன்,

“டீ போட்டு வச்சிருக்கேன்… முகம் கழுவிக்கிட்டு வந்து குடி… நைட் டிபன் செய்துட்டேன்.. நீ வீட்ல பத்திரமா இருக்கியா… நான் மட்டும் போய் மாமாவையும் அத்தையையும் விட்டுட்டு வந்திடறேன்…” என்று அவன் கேட்க, வாயிலில் லாரி சத்தம் கேட்க, இருவரும் வெளியில் எட்டிப் பார்த்தனர்.

காலியாக இருந்த எதிர் வீட்டிற்கு புதிதாய் குடி வந்திருகிறார்கள் போலும்… சாமான்கள் வந்து இறங்கிக் கொண்டிருக்க, அதைப் பார்த்த ஷிவானி, “ரொம்ப நாளா ஆளே வராம இருந்த வீடுன்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க… பரவால்ல ஆள் வந்திருச்சு…” என்று டீயை எடுத்துக் கொண்டு வந்து, வேடிக்கைப் பார்க்கத் தொடங்க,

“நீ உள்ள போய் உட்காரு சிவா.. சும்மா இங்க தூசியில நிக்காதே… போய் உட்காரு…” உள்ளே தள்ளாத குறையாக தள்ளிக் கொண்டு சென்றவன், அவள் அமர்ந்த பிறகே அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.

“வெளிய நிக்கக் கூடாதுன்னா.. எனக்கு வேடிக்கைப் பார்க்கப் பிடிக்குமே… என்ன செய்யறது?” என்று எண்ணிக் கொண்டவள், புகழ் அறைக்குச்  செல்லும் வரை காத்திருந்து, அவன் உள்ளே நுழைந்ததும், ஜன்னல் அருகே, ஒரு சேரை தள்ளிக் கொண்டு போய் போட்டுக் கொண்டு, அவர்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

“யார் வரப் போறாங்க? வயசானவங்களா? இல்ல… நம்ம ஏஜ்லயா?” என்று அவளது ஆவல் அதிகமாக, சாமான் இறங்கி முடித்ததும், உள்ளிருந்து வந்த இளம் ஜோடியைக் கண்டு,

“ஹை… நம்ம ஏஜ் தான் இருக்கும்… என்ன இன்னும் கொஞ்சம் கூட இருக்கும்… பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சது..” என்று அவள் நினைத்துக் கொண்டு, கிட்செனில் சென்று புகழ் என்ன செய்திருக்கிறான் என்று பார்க்கும் எண்ணத்துடன் உள்ளே செல்ல, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, ஹாலிற்கு வந்தவள்,

“இதோ வந்துட்டேங்க…” குரல் கொடுத்துக் கொண்டே கதவைத் திறக்க, வெளியில், எதிர் வீட்டிற்கு புதிதாய் குடி வந்த பெண் நின்றிருந்தாள்.

“வாங்க… உள்ள வாங்க…” ஷிவானி வரவேற்க,

“நான் புதுசா எதிர் வீட்டுக்கு குடி வந்திருக்கேன்.. என் பேர் ரஞ்சிதா.. நாளைக்கு காலையில பால் காய்ச்சறோம்… நீங்களும் வந்தா நல்லா இருக்கும்… அது தான் கூப்பிட வந்தேன்” என்று அந்த பெண் தன்னை அறிமுகம் செய்துக் கொள்ளவும்,

“ஹாய்… நான் ஷிவானி… கண்டிப்பா வரேங்க…” என்று அந்தப் பெண் நீட்டிய குங்குமத்தை வாங்கிக் கொண்டவள், அவளை உள்ளே அமரச் சொன்னாள்.

“இருக்கட்டும் ஷிவானி… கொஞ்சம் வேலை இருக்கு… அதை முடிச்சிட்டு பழைய வீட்டுக்கு போகணும்… நேரம் சரியா இருக்கும்… நான் ஹவுஸ் வைஃப் தான்… நீங்க வேலைக்கு போறீங்களா?” என்று அவளும் தோழமையுடன் கேட்க,

“இல்ல… நானும் வீட்ல தான் இருக்கேன்…” என்று பதில் சொன்னவளிடம்,

“அப்போ ரொம்ப நல்லதுங்க… எனக்கும் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சுப் போச்சு… ரொம்ப சந்தோஷமா இருக்கு… நாளைக்கு காலையில மறக்காம வந்துடுங்க…” என்றபடி விடைப்பெற்றுச் செல்ல, ஷிவானி பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில், மனதினில் துள்ளிக் குதித்தாள்.

புகழிடம் அந்தப் பெண் வந்து கூப்பிட்டதை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் நகர்ந்தவளின் போன் அடிக்க, அதில் தெரிந்த பெயரைப் பார்த்தவள்,

“இவங்க இன்னும் கிளம்பாம என்ன செய்யறாங்க?” என்ற யோசனையுடன் போனை காதிற்குக் கொடுத்து,  

“சொல்லும்மா…” என்று கேட்கவும்,

“எப்போப் பாரு தூங்காதேடி… நாங்க ஊருக்கு கிளம்ப நேரமாச்சு… என்ன மாப்பிள்ளை செய்யறதை சாப்பிட்டு நல்லா சொகுசா தூங்கலாம்ன்னு பிளானா…” என்று சசி சத்தமிட,

“ஆமா… அப்படித் தான்… என் புருஷன் செய்யறார்… நான் சாப்பிடறேன்… உனக்கு என்ன வந்தது?” என்றவள்,

“இனியன் வந்தாச்சும்மா… இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வருவார்” என்று சொல்ல,

“இல்லடி… கடையில இருந்து கிளம்பிட்டேன்னு அப்போவே போன் செய்து சொன்னார்… அது தான் நாங்க இப்போ அங்க கிளம்பி வந்துடலாம்ன்னு இருக்கோம்… உன்னைப் பார்த்துட்டு கிளம்பினது போல இருக்கும்…” என்று சொன்னவர்,

“ஒழுங்கா சுறு சுறுப்பா இரு” என்று கொட்டு வைத்து போனை வைக்க,

“கடவுளே… இந்த அம்மாங்க எல்லாம் ஏன் தான் இப்படி ஸ்ட்ரிக்ட் ஆபிசரா இருக்காங்களோ?” என்று புலம்பிக் கொண்டே, முகம் கழுவி, தனது பெற்றோர்கள் வரவிற்காக காத்திருந்தாள்.

சிறிது நேரத்திலேயே அவர்கள் வந்துவிட, வந்ததும் வராததுமாக, எதிர் வீட்டில் வந்திருக்கும் பெண்ணைப் பற்றி கூறத் தொடங்க, அதனை கேட்டுக் கொண்ட சசி,

“நைட்க்கு என்ன டிபன் செய்யப் போற? அதுக்கு என்னன்னு பார்த்தியா?” புகழை செய்ய விடக் கூடாது.. என்ற எண்ணத்துடன் சசி பரபரக்க,

“அதெல்லாம் அவர் ஏற்கனவே செய்து வச்சாச்சு… இரு.. காபி போடறேன்… அவரு குளிச்சிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்” என்றவள், அவருடன் பேசிக் கொண்டே, அடுப்பில் பாலை ஏற்ற, புகழ் போன் பேசும் சத்தம் கேட்டு,

“எங்கடா இவ்வளவு நேரமா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன்… உள்ள வேலை தான் பார்த்துட்டு இருக்காறா?” என்று சலித்துக் கொண்டவள்,

“கொஞ்சம் பாலைப் பார்த்துக்கோ… நான் வரேன்…” என்று சசியிடம் கூறிவிட்டு, புகழைத் தேடிச் செல்ல, போன் பேசிக் கொண்டிருந்தவன், அவளது கன்னத்தை தட்டிவிட்டு மீண்டும் பேச்சினில் கவனம் பதித்தான்.

பேசி முடித்து வந்தவன், அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவானியிடம் “எனக்கு இன்னொரு காபி கொடு… நான் போய் அம்மா அப்பாவை டிராப் பண்ணிட்டு வரேன்…” என்றவன், ஹாலிற்கு செல்ல, அதற்குள் பாலைக் காய்ச்சி, சசி அவனுக்கு காபியை எடுத்துக் கொண்டு வந்தார்.

“நீங்களே இங்க வந்துட்டீங்களா அத்தை… பெட்டியை எல்லாம் எப்படி தூக்கிட்டு வந்தீங்க?” என்று கேட்டு, அங்கிருந்த பாஸ்கரைப் பார்த்து,

“நானே வந்திருப்பேன் இல்ல மாமா…” என்று கேட்க,

“சிவாவைப் பார்த்துட்டு அப்படியே போகலாம்ன்னு தான்…” பாஸ்கர் இழுக்க, இருவரையும் பார்த்தவன், அதற்கு மேல் கேள்வி கேட்காமல்,    ஷிவானியை அருகினில் அமர்த்திக் கொள்ள, ரஞ்சிதா வந்து அழைத்ததை ஷிவானி தெரிவித்தாள்.

அவன் போகச் சொல்வான்… என்று ஆவலே வடிவாக அவன் முகம் பார்க்க, அதை ஒரு செய்தி போல கேட்டவன், அதற்கு பதில் சொல்லாமல், காபி அருந்துவதிலேயே குறியாக இருந்தான்.

“வாயைத் திறக்கறாரா பாரு?” ஷிவானி நொடித்துக் கொள்ள,

“நேரமாகுது மாப்பிள்ளை… ட்ராபிக் இருந்தா அப்பறம் லேட் ஆகிடும்…” என்ற பாஸ்கர்,

“சிவா… சமத்தா இரு… ஜாக்கிரதையா உடம்பைப் பார்த்துக்கோ…” என்று சொல்லிவிட்டு, பெட்டியை எடுத்து வைக்க, புகழ் அவருக்கு உதவச் சென்றான்.

ஷிவானியின் அருகே வந்த சசி, “கண்ணா… உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ.. மாப்பிள்ளை எல்லா வேலையும் செய்யறார் தான்… அதுக்காக நீ எதுவுமே செய்யாம இருக்காதே… ஒழுங்கா வேளாவேளைக்கு சாப்பிடு… மாத்திரைப் போடு…” என்று பல அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்க,

“நீ பிளைட்டை மிஸ் பண்ண இப்படி ஒரு வழி வச்சிருக்கியா?” என்று ஷிவானி கேட்க, அவளது தலையில் செல்லமாக கொட்டியவர்,

“போயிட்டு வரேண்டி வாயாடி… பத்திரம்…” என்று மனமே இல்லாமல், கிளம்பிச் சென்றார்.

அவர்கள் கிளம்பிச் சென்றதும், ஷிவானிக்கு ஒரு மாதிரி இருந்தது. அந்த தனிமையைப் போக்க, பல நாட்களுக்குப் பிறகு தன்னுடைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அதில் கேம் விளையாடத் துவங்கினாள்.

சிறிது நேரம் கூட அமர முடியாமல், தலை சுற்றுவது போல இருக்கவும், அதை மூடி வைத்தவள், தலைகாணி உறைகளை மாற்றிவிட்டு, புகழுக்காக காத்திருக்க, நேரம் போய்க் கொண்டே இந்தது.

“இத்தனை நேரம் அம்மா அப்பா பிளைட்லையே ஏறி இருப்பாங்களே…” என்று நினைத்துக் கொண்டவள், சசிக்கு அழைக்க,

“பிளைட்ல ஏறத் தான் காத்துட்டு இருக்கோம் சிவா… மாப்பிள்ளை அப்போவே கிளம்பிட்டார்..” என்று சொல்லவும், அவரிடம் பேசி முடித்தவள், மேலும் சிறுது நேரம் காத்திருக்க எண்ணி, sடிவியை ஓட விட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

மணியும் ஓடிக் கொண்டே இருந்தது.. “என்னாச்சு இவருக்கு… ஆளையே காணோம்…” என்று அவனுக்கு அழைக்க,

“சிவா… இங்க ஒரு கஸ்டமர் கால் பண்ணினாங்க… நேரா அங்க வந்துட்டேன்… நீ டைம் வேஸ்ட் பண்ணாம சாப்பிடு…” என்று புகழ் சொல்ல, ஷிவானி கடுப்புடன் போனை அமர்த்தினாள்.

அவன் வரும் வரை உண்பதில்லை என்று அவனது வரவுக்காக காத்திருக்க, பல நிமிடங்கள் கடந்து வந்த புகழ், அவள் உண்டிருப்பாள் என்ற நினைப்பில், தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு அமர, ஷிவானியும் அவனுடன் அமரவும்,

“உன்னை என்ன செய்யறது? அப்போவே சாப்பிடுன்னு சொன்னேன் இல்ல…” என்று புகழ் சத்தமிட, ஷிவானியின் கண்கள் கலங்கத் துவங்கியது. 

6 COMMENTS

  1. HI RAMYA,
    super ud pa,siva pugazh kitta roba yethirparkiral,ethir vetugu vera oru pen vanthiruka ini enna nadakka pogutho,waiting,waiting,waiting for the nxt ud.

  2. hi ramya nalla pogudhu kadhai.pugazh manadhil ninaippadhai shiva vidam velippadaya sollalam edhir veettukku oru pudhu jodi yaa partu pa edhavadhu edagudama agida pogudhu shiva virkku nalla badiya kuzhandhai pirakkanum

  3. Hai ramya story is too good,very good narration.oruthavanga character mathavangala yeppudi kashtapaduthmnu ithula puriyuthu.if they are couples don’t ask it is the biggest reason for the problems.waiting eagerly for the next episode.one req I don’t get ur mails plz consider

LEAVE A REPLY