SHARE

அவளது சிறு முடியாமைக்கும்

உள் மனதெங்கும்

முகாமிட்டுள்ள

இந்த கலக்கத்திற்கு

அர்த்தம் தேடி

களைத்து பின்

காதல் உச்சம் என உணர்கிறேன்

“சிவா… எழுந்திரு சிவா… உனக்கு பிரியாணி ரெடியாகிடுச்சு… வெறும் வயித்தோட எவ்வளவு நேரம் இருப்ப?” புகழ் எழுப்பவும், மெல்ல எழுந்து அமர்ந்தவள், அவனிடம் எதுவும் பேசாமல், எழுந்து டைனிங் டேபிளில் அமர, அவன் செய்த பிரியாணியின் மணம் அவளது நாசியை துளைத்தது.

“பயபுள்ளைக்கு நல்லாவே சமைக்கத் தெரியுது.. வாசனையே இப்படி ஆளைத் தூக்குதே… டேஸ்ட் எப்…ப்..படி இருக்கும்?” என்று நினைத்து, மனதினில் சப்பு கொட்டிக் கொண்டவள், அவனைக் கண்டு கொள்ளாமல், தனக்கு மட்டும் தட்டை வைத்துக் கொண்டு வேகமாக உண்ணத் துவங்க, புகழ் அவளைப் பார்த்துக் கொண்டு அருகினில் அமர்ந்தான்.

அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், அவள் உண்டு முடித்ததும், “என் மேல என்ன கோபம்?” என்று கேட்க,

“எனக்கு என்ன கோபம்? நீங்களாச்சு உங்க அம்மாவாச்சு… நாளைக்கு காலையில நான் போய் அத்தையை பார்த்துட்டு வரேன்… உங்களுக்கு எப்போ ஃப்ரீ ஆகுதோ அப்போ போய் பாருங்க…” என்றவள், எழுந்து சென்று டிவியை போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

அவளது சிறு பிள்ளைத் தனமான கோபத்தை ரசித்துக் கொண்டே புகழ், தனது தட்டில் உணவை போட்டுக் கொண்டு அவள் அருகில் சென்று அமர, அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தவளுக்கு திடீரென்று நியாபகம் வர,

“அத்தை கிட்ட வர மாட்டேன்னு போன் செய்தாவது சொன்னீங்களா? இல்ல அதுவும் நான் தான் சொல்லனுமா?” என்று கேட்கவும்,

“நீ தூங்கிட்டு இருக்கும் போதே நான் சொல்லிட்டேன் வணி… நாம கிளம்பிட்ட விஷயத்தை போன் செய்து சொன்ன பிறகு,சமைக்கலாம்ன்னு இருந்தாங்களாம்..” என்று அவன் சொன்னது தான் தாமதம்,

“உங்களைப் பத்தி அத்தைக்கு தெரியாதா என்ன?” என்று நொடித்துக் கொண்டவள், மீண்டும் டிவியின் பக்கம் பார்வையை ஓட்ட,

“நீ கோபத்துல கூட அழகா தான் இருக்க…” என்று முணுமுணுத்தவன், தனது உணவில் கவனமாக, ஷிவானிக்கு கடுப்பாக இருந்தது.

“இங்க ஒருத்தி கோவிச்சுக்கிட்டு இருக்காளே… அவள எப்படியாவது சமாதானம் செய்து பேசுவோம்ன்னு இருக்கா பாரு… நல்லா ரசிச்சு சாப்பிட்டுக்கிட்டு மட்டும் இருக்காரு” என்று நினைத்துக் கொண்டவளுக்கு உறக்கம் மீண்டும் தழுவ,

“எப்போப் பாரு இந்த தூக்கம் வேற…” என்று நினைத்துக் கொண்டு, படுக்கை அறைக்குச் சென்று, மீண்டும் தனது உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

சில மணித்துளிகள் கழித்து, தன் மேல் பாரம் அழுத்தவும், “எனக்கு இப்போ எதுக்கும் இஷ்டமில்ல இனியன்…” என்று முனகிக் கொண்டே அவள் திரும்பிப் படுக்க முயல, அது முடியாமல், முகத்தை மட்டும் திருப்பிப் பார்த்தவள், தன்னை இறுக அணைத்துக் கொண்டு உறங்கும் புகழைக் கண்டு கோபம் குறைந்து,   

“இவர் எப்போ வந்து படுத்தார்… இவருக்கு மதியம் தூங்கற பழக்கமே இல்லையே…” என்று நினைத்துக் கொண்டவள், அவனது கைகளை மெல்ல தளர்த்தி, அவனைப் பார்த்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவனது சுருங்கிய நெற்றியை மெல்ல நீவி விட்டுக் கொண்டே, “ஏன் இனியன் இப்படி பண்ணறீங்க? எப்போ பாரு வேலை வேலைன்னு எந்த ஒரு ரிலாக்க்ஷேஷனும் இல்லாம இருக்கீங்க? உங்களுக்குன்னு ஒரு ஆசையும் இல்லையா?

என் மேல அன்பாவது இருக்கா இல்லையா? என் கூட நேரத்தை செலவு பண்ணனும்ன்னு உங்களுக்கு தோணவே தோணாதா? வேலை செய்யணும் தான்… அதுக்காக எப்போப் பாரு கடையையே கட்டிக்கிட்டு இருந்தா… பெண்டாட்டின்னு ஒருத்தி இருக்காளே.. அவ தனியா இருக்காளே… அவளை எங்கயாவது கூட்டிட்டு போகணும்.. அட கூட்டிட்டு போகாட்டி கூட பரவால்ல… அவ கூட நிறைய பேசணும்னு கூடவா தோணாது?

எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கே இனியன்.. எல்லாத்தையும் சரி… சரின்னு தள்ளிட்டு எத்தனை நாள் தான் போறது? இப்போ எல்லாம் எனக்கு ரொம்ப கோபம் வருது.. சும்மா.. என் கூட ராத்திரியில சந்தோஷமா இருக்கற நேரம் மட்டும் வாய்க்கு வாய் வணின்னு கொஞ்சினா போதுமா? ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூட உங்களுக்குத் தோணலையா?” என்று அவனது மீசையைப் பிடித்து திருகிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தவளை, மீண்டும் புகழ் தன்னருகில் இழுக்க, வயிற்றில் ஏற்பட்ட ஏதோ சிரமம் காரணமாக அதற்கு மேல் படுக்க முடியாமல், ஷிவானி எழுந்தமர்ந்தாள்.

“என்னாச்சு சிவா…” அவள் பட்டென்று எழவும் புகழ் கண் விழித்து கேட்க,

“ஒண்ணும் இல்ல… வயிறு ஒரு மாதிரி இருக்கு…” என்றவள், எழுந்து தண்ணீரைக் குடித்துவிட்டு, ஹாலிற்கு வர, அவளோடு புகழும் பின்னோடு வந்தான்.

“சாப்பிட்ட உடனே படுத்ததனாலயா இருக்கும் சிவா… பிரியாணி கொஞ்சம் ஹெவி தானே” என்றவன், மீண்டும் அவளுக்கு தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அதை குடித்தவளுக்கு குமட்டிக் கொண்டு வரவும், செய்வதறியாது திகைத்து நின்றான்.

“என்ன சிவா… சாப்பாடு நல்லா தானே இருந்துச்சு…” என்று அவன் சந்தேகமாக இழுக்க,

“ஆமா… என்ன போட்டீங்களோ… எனக்கு இப்படி வயித்தைப் பிரட்டுது…” என்றவள், டீயை போட்டு அவனுக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டு அமர்ந்தாள்.

சிறிது நேரம் அவள் அமைதியாக இருக்கவும், “இப்போ ஒண்ணும் பண்ணலையா?” புகழ் மெல்லக் கேட்க, இல்லை என்பது போல மண்டையை உருட்டியவள்,

“நான் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.. கொஞ்சம் நடக்கணும் போல இருக்கு… நாளைக்கு ராத்திரி அவங்களுக்கு பிளைட்…” என்று அவள் அறிவிக்க, பிடி கொடுக்காமல் பேசும் அவளையே புகழ், பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“உங்களுக்கு ஏதாவது வேலை இருக்குமே…” அவள் துடுக்காக கேட்க,

“ஹ்ம்ம்… இருக்கு… கொஞ்சம் கணக்கு பார்க்கணும்…” என்று அவன் தயங்க, அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“நானே போயிட்டு வரேன்…” என்று கிளம்ப, அவளது கையைப் பிடித்து புகழ் தடுத்து,

“ராத்திரியில நீ தனியா நடந்து வர வேண்டாம்… கிளம்பும் போது போன் பண்ணு… நான் வந்து அத்தை மாமாவைப் பார்த்துட்டு அப்படியே கூட்டிட்டு வரேன்…” என்று புகழ் சொல்லவும், எதுவோ ஏமாற்றம் தோன்ற,  சட்டென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது… அதை மறைத்துக் கொண்டு ஷிவானி கிளம்பி, சசியைப் பார்க்கச் சென்றாள்.

அவள் முகம் கலங்கி இருப்பதைப் பார்த்த சசி, எதையும் கண்டுக் கொள்ளாமல், “மாப்பிள்ளை வரலையாடி…” என்று மட்டும் கேட்க,

“அவருக்கு கடை வேலை இருக்காம்மா… கொஞ்ச நேரம் கழிச்சு வருவார்…” என்று சொன்னவள், சசி எதுவோ பேசிக் கொண்டிருந்தாலும், அதில் கவனம் பதியாமல், அமைதியாக ‘ம்ம்’ கொட்டிக் கொண்டிருந்தவள்,

“சரிம்மா… நான் நாளைக்கு சாயந்திரம் வரேன்.. நீங்க எல்லாம் எடுத்து வைங்க…” என்றவள், புகழுக்கு மிஸ்ட் கால் கொடுக்க எண்ணி போன் பட்டனைத் தட்ட,

“வாங்க மாப்பிள்ளை…” என்ற பாஸ்கரின் குரல் கேட்டு, ஷிவானி ஆச்சரியத்தில் எழுந்து நின்றாள்.

புன்னகைத்துக் கொண்டே வந்த புகழின் கண்கள் ஷிவானியிடமே இருக்க, அதைக் கண்ட சசி, “இருங்க மாப்பிள்ளை.. குடிக்க காபி எடுத்துட்டு வரேன்…” என்று உள்ளே செல்ல,

“அதெல்லாம் வேண்டாம் அத்தை… நான் உங்களைப் பார்த்துட்டு சிவாவை கூட்டிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்.. அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல…” என்று புகழ் சொல்லத் தொடங்கவும்,

“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா… நான் நல்லா தான் இருக்கேன்…” என்று ஷிவானியும் மல்லுக்கு நிற்க, பாஸ்கர் இருவரையும் கவலையுடன் பார்த்தார்.

“என்ன ஆச்சு சிவா? உனக்கு என்ன உடம்புக்கு?” அவர்களது சண்டையைக் கண்டுக் கொள்ளாமல், சசி கேட்க,

“ஒண்ணும் இல்லம்மா.. மதியம் சாப்பிட்டது எல்லாம் வாந்தி எடுத்துட்டேன்… அதைத் தான் சொல்றார்… வயிறு ஒரு மாதிரியா இருக்கும்மா.. பிரட்டிட்டே இருக்கு” என்று புகழை முறைத்துக் கொண்டே அவள் சொல்ல, புகழோ அவளது முறைப்பின் காரணம் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“என்ன சாப்பிட்ட?” சசியின் கேள்விக்கு,

“இவர் பிரியாணி செய்தார்… அதுல கொஞ்சம் எண்ணை அதிகமா இருந்தது… அதனால ஜீரணம் ஆகலம்மா… அதுவும் தவிர, சாப்பிட்ட உடனே படுத்துட்டேன்…” என்று அவள் விளக்கிக் கொண்டிருக்க, சசி அவளது முகத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

பாஸ்கர் இருவரையும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, “அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா… இப்போ எனக்கு ஒண்ணும் இல்ல…” என்று அவள் சொல்ல, சசியின் மனமோ வேறு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

“சரிங்க மாமா… பார்த்து போயிட்டு வாங்க… போயிட்டு போன் செய்ங்க… நாளைக்கு நான் வந்து உங்களை ஏர்போர்ட்ல டிராப் பண்றேன் மாமா..” என்று பாஸ்கரிடம் சொன்னவன், சசியைப் பார்க்க, சசியின் முகமோ, தீவிர யோசனையைக் காட்டிக் கொண்டிருந்தது.

“எல்லாம் எடுத்து வச்சிட்டீங்க இல்ல அத்தை.. ஏதாவது வாங்கித் தரணுமா?” புகழ், அவரது யோசனை படிந்த முகத்தைப் பார்த்து, கேட்க,

“இல்ல… ராத்திரிக்கு உங்களுக்கு இட்லி சுட்டுத் தரேன்… கொஞ்ச நேரம் இருங்க…” என்ற சசி, வேகமாக அடுப்பங்கரைக்குச் சென்று,

“சிவா…” என்று அழைக்க,

“எனக்கே ரொம்ப டயர்டா இருக்கும்மா…” என்றவள், சலித்துக் கொண்டே உள்ளே செல்ல, புகழ் அமைதியாக அமர்ந்தான்.

“புகழ்… அவளை பத்திரமா பார்த்துக்கோங்க… கொஞ்சம் இளைச்சா மாதிரி இருக்கா..” என்று பாஸ்கர் சொல்லவும், புகழுக்கு என்ன சொல்வது என்ற குழப்பத்தில், மனதினில் ஹையோ என்றிருந்தது.

“நான் பார்த்துக்கறேன் மாமா..” என்று சொல்லிவிட்டு அவன் அமைதியாக இருக்க, அதற்கு மேல் என்ன கேட்பது என்று புரியாத பாஸ்கரும், அவனது புதிய கடையைப் பற்றி பேசத் துவங்கினார்.

இரு ஆண்களின் உரையாடல்களும் கடையைப் பற்றிச் செல்ல, உள்ளே சசி, தீவிரமாக அவளது வாந்திக்கான காரணத்தை ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

“அய்யோ கேள்வி கேட்டது போதும்மா… ஏதோ இன்னைக்கு வாந்தி வந்திருச்சு அவ்வளவு தான்… அதுக்கு அப்பறம் டீ குடிச்சு இருக்கேன்… நீ கொடுத்த ஜூஸ் குடிச்சு இருக்கேன்… எனக்கு ஒண்ணும் இல்லம்மா…” ஷிவானி சொல்லிக் கொண்டிருக்க,

“நீ தலைக்கு குளிச்சும் நாளாகுது ஷிவா… நாளைக்கு காலையில போய் டாக்டரைப் பார்த்துட்டு வரலாமா? நான் அப்பாவை ட்ரிப் கேன்சல் செய்யச் சொல்லிடறேன்…” சசி சந்தோஷமாகத் திட்டமிட, ஷிவானியின் முகத்தில், அப்படித் தானோ என்ற எண்ணம் கொடுத்த மின்னல்களும், பூரிப்பும் சேர்ந்து ஜொலிக்க,

“அப்படி இருக்குமாம்மா… ஒரு மாதிரி தூக்கம் தூக்கமா வருது… எப்போப் பாரு டயர்ட்டா இருக்கு…” என்று ஆர்வமுடன் அவள் கேட்கவும்,

“இருக்கும் சிவா… நான் அப்பாகிட்ட போய் விஷயத்தை சொல்லி, ட்ரிப் கேன்சல் பண்ணச் சொல்லிடறேன்…” என்று சசி அவசரமாக நகர,

“இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லயாம்மா… அப்படியே இருந்தாலும்… இனியன் என்னை கையில வச்சு தாங்குவாரு… நீ கவலைப்படாம ஊருக்கு போயிட்டு வா.. நானும் என்னைப் பார்த்துக்கறேன்… இப்போ நீ ஊருக்கு கிளம்பினதுக்கு அப்பறம் இந்த விஷயம் தெரிஞ்சதுன்னா என்னம்மா செய்திருப்ப?” குறும்பாகக் கேட்க,

“ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டு வந்திருப்பேன்…” அதே வேகத்தில் சசியின் பதிலும் வந்தது.

“அம்மா… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… நாளைக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வந்த அப்பறம் நீ ஊருக்கு கிளம்பு… இனியன் என்னைப் பார்த்துப்பாரு… அவருக்கும் எப்போ தான் பொறுப்பு வர்ரது…” என்று கேட்டவள்,

“இருடி… நான் போய் அவங்ககிட்ட விஷயத்தை சொல்லிட்டு வரேன்…” சசி பரபரக்க,   

“அம்மா…மா…மா.. கொஞ்சம் நான் சொல்றதை காது கொடுத்துக் கேளு… இந்த விஷயத்தை நான் தான்ம்மா அவர்கிட்ட சொல்லணும்… நீ இப்போ அவசரப்படாதே… காலையில டாக்டர்கிட்ட அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிடு… அவர்கிட்ட எனக்கு வேற மாதிரி சொல்லணும்… இந்த விஷயத்தை சொல்லறதுக்கு எனக்கு ஆயிரம் கற்பனை இருக்கும்மா…” நாணத்துடன் கூறி, சசியின் தோளில் முகம் பதித்துக் கொண்டாள்.

“சரிடி… ஆனா… உன்னை விட்டு நான் எப்படி போறது? உங்க அத்தையும் ஊர்ல இல்ல…” மீண்டும் சசி அதிலேயே நிற்க,

“எத்தனை தடவ நான் சொல்றேன்… நீ கிளம்பும்மா… எனக்காக நீ இந்த வீட்டையே சுத்தி சுத்தி வந்தது போதும்மா… என்னைப் பத்தி கவலைப்படாதே… நீ நாளைக்கு ஊருக்கு கிளம்பறதா இருந்தா தான் நான் டாக்டர்கிட்ட வருவேன்” என்று உறுதியாகக் கூற, சசியும் அவளிடம் வாதாடிப் பார்த்து, அவளது பிடிவாதத்தின் முன் தோற்றவராய்,  

“உனக்கு என்ன லூசாடி பிடிச்சிருக்கு… உனக்கு இருக்கற வீம்பைப் பாரு…” என்று சலித்துக் கொண்டு அரை மனதாக ஊருக்கு கிளம்ப சம்மதித்தார்.

“உன்னோட அடத்துக்கு வர வர அளவில்லாம போச்சு… இப்போ அந்த ஊர் என்ன ஓடியாப் போகப் போகுது… அதை அடுத்த வருஷம் போய் பார்த்துக்கிட்டாத் தான் என்ன?” என்று புலம்பிக் கொண்டே, இட்லியை வேக வைத்து எடுத்தவர், அதற்குள் சட்னியும் செய்து, ஒரு டப்பாவில் போட்டு அவளிடம் நீட்டி,

“காலையில ரெடியா இரு… டாக்டர்கிட்ட போகலாம்…” என்று மீண்டும் அவளிடம் சொல்லவும், சந்தோஷத்துடன் தலையசைத்த ஷிவானி, புகழிடம் சென்று உற்சாகமாக நின்று,

“போகலாமா இனியன்…” என்று கேட்கவும், அதுவரை முறைத்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது உற்சாகமே உருவாக நிற்கவும், யோசனையூடே தலையசைத்தவன், மீண்டும் பாஸ்கரிடமும், சசியிடமும் விடைப்பெற்றுக் கொண்டு வெளியில் வர, ஷிவானி வண்டியைத் தேடி நின்றாள்.

“நடந்து தான் வந்தேன்… வா… போகலாம்… அந்த பையை என்கிட்ட கொடு…” என்று அவளிடம் இருந்து வாங்கியவன், அவளது கையோடு கை கோர்த்துக் கொண்டு, தன்னருகே இழுத்துக் கொள்ள, மனதில் இருந்த உற்சாகத்தில், ஷிவானி அவனை ஒட்டி நடக்க, அந்த நெருக்கத்தைப் பார்த்து, வழியனுப்ப வந்த அவளின் பெற்றவர்களின் கண்கள் நிறைந்தது.

வீட்டிற்கு வந்ததும், எப்படி புகழிடம் சொல்வது என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி… “தக்காளிச் சட்னி புளிப்பாக இருக்கவும், அதை ரசித்து ருசித்து உண்ண,

“நல்ல புளிப்பா அத்தை செய்திருக்காங்க… இவ என்னடான்னா… இந்த புளிப்பை இப்படி சப்பு கொட்டி திங்கறாளே… ஒருவேளை வயித்துப் பிரட்டலுக்கு நல்லா இருக்கும்ன்னு செய்திருப்பாங்களோ?” மனதினில் நினைத்துக் கொண்டவன்,

“ரொம்ப புளிப்பை சாப்பிடாதே சிவா… பித்தம் தூக்கிடப் போகுது…” என்று அறிவுறுத்த,

“ஹையோ அறிவு ஜீவி” என்று மனதினில் நினைத்தவள்….

“அதெல்லாம் தூக்காது… வாய்க்கு நல்லா இருக்கு…” என்று சொல்லி, அவனைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க, புகழ் அதற்கு மேல் அவள் சப்பு கொட்டி, கண்களை சுறுக்கி செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இரவு உணவை முடித்த கையோடு, சமையலறையை ஒதுக்கி வைக்க உதவத் துவங்க,

அவனது தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்டு, “எனக்கு தூக்கமா வருது இனியன்… கால் எல்லாம் வலிக்குது… நீங்க இந்த வேலை எல்லாம் முடிச்சிட்டு வாங்க…” என்று கூறிவிட்டு, நகர்ந்தவள், மறக்காமல், புகழின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டுச் செல்ல, அதற்கு மேல் வேலை ஓடாமல், அவளைப் பிடித்து அருகில் நிறுத்திக் கொண்டவன்,

“ஒரு ரெண்டு நிமிஷம்… வேலை ஆச்சுடி செல்லம்…” என்று கூறிக்கொண்டே, ஒதுக்கி வைத்து, ஷிவானியைப் பின் தொடர்ந்தவன், அவளை இறுக தழுவிக் கொண்டான்.

அவனது மார்பில் முகம் அழுந்தினாலும், கண்களை நிமிர்த்தி அவனை நோக்கி, “இப்படி நசுக்கினா… எனக்கு மட்டும் இல்ல… இன்னொருத்தருக்கும் மூச்சு முட்டும்..” ஷிவானி அவனிடம் சொல்ல,

“இங்க நாம ரெண்டு பேர் தானே இருக்கோம்…” என்று முணுமுணுத்துக் கொண்டே, அவளது இதழ் நோக்கி குனிந்தவனின் உதடுகளை கை கொண்டு தடுத்தவள்,

“இதுவும் இனிமே ரொம்ப முடியாது…” என்று குறும்பாகச் சொல்ல,

“அதெல்லாம் முடியாது..” என்று அவன் மேலும் நெருங்க,

“உங்க பிள்ளைக்கு மூச்சு முட்டினா பரவால்லையா?” குறும்பாக அவள் கேட்ட விதத்தில், அவளது கன்னத்தில் இதழ் பதித்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் அதே இடத்தில் நிற்க, கை தானாக அவளை இறுகி இருந்ததை விடுவித்தது.

“என்ன சொல்ற?” புகழ் புரியாமல் விழிக்க,

“இனிமே இப்படி முரட்டுத்தனமா நடந்தா… உங்க பிள்ளைக்கு மூச்சு முட்டும்ன்னு சொல்றேன்…” அவனது மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே கூறியவள்,

“உங்க பையனோ பொண்ணோ என் வயித்துல உட்கார்ந்துக்கிட்டு, அப்பா செய்யற பிரியாணிய நான் தான் சாப்பிடுவேன்னு சொல்லி அடம் பிடிச்சு.. என்னை சாப்பிட விடாம செய்யறாங்க போல..” மதியம் குமட்டிக் கொண்டு வந்த காரணத்தை அவனுக்கு விளக்க, அவள் சொல்ல வருவது புரிந்து, பேச்சு வராமல், தடுமாறிக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சார்… இப்போவும் சைலென்ட் தானா?” ஷிவானியின் குறும்பிற்கு,

கண்கள் நிறைய, “நிஜமாவா சொல்ற? எப்படி? எப்போ தெரியும்? நான் அப்பா ஆகப் போறேனா?” அவள் அன்னை வீட்டுக்குத் தானே சென்றாள்? இடையில் இது என்ன? என்ற குழப்பத்தோடு புகழ் அவளைப் பார்க்க, சசிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை அவள் கூறவும், தான் தந்தையாகப் போகும் சந்தோசம் தாளாமல், புகழ் அவளை அணைத்துக் கொள்ள,

“நாளைக்கு காலையில அம்மா வந்துடறேன்னு சொல்லி இருக்காங்க.. டாக்டர்கிட்ட போகணும்… நீங்க வருவீங்களா?” ஷிவானி ஏக்கமாகக் கேட்க, அதற்கு பதில் சொல்லாமல், புகழ் அவளை தரையில் விடாமல் கைகளில் ஏந்திக் கொண்டு, மெல்ல பூ போல அவளை படுக்கையில் கிடத்தினான்.

அவளது நெற்றியில் இதழ் ஒற்றியவன், அவளை மெல்ல அணைத்துக் கொண்டு, “நிஜமா தான் சொல்லறியா சிவா? அம்மாவுக்கு எப்படித் தெரியும்? வாமிட் வேற எதுனாலயாவயது வந்து இருந்தா?”  புகழ் இன்னமும் நம்ப முடியாமல், சந்தேகமாக இழுக்க,

“நாளைக்கு காலையில டாக்டரைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது… ஏன் கவலைப்படனும்?” என்ற ஷிவானி, அவனது தோளில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு,

“நம்ம குழந்தை உறுதியாகற நேரம், நீங்களும் என் கூட இருக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு இனியன்… வருவீங்களா?” மீண்டும் ஏக்கமாக கேட்க,

“ஹ்ம்ம்… நான் வராமையா?” என்று கூறியவன், அவளது தலையில் இதழ் ஒற்றி, இதமாக வருடிக் கொடுக்க, ஷிவானி சீக்கிரமே கண்ணயர்ந்து போக, மனதினில் எழுந்த ஒருவித பயம் புகழை உறங்க விடாமல் தடுத்தது.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவன், அனைத்து வேலைகளையும் ஷிவானி எழுவதற்கு முன்பே செய்து வைத்துவிட்டு, கடைக்கு போன் செய்து விடுப்பையும் சொல்லிவிட்டு, பதட்டமாகவே சசியின் வரவுக்காக காத்திருக்க, சசி வந்ததும்,

“கிளம்பலாமா அத்தை… நேரமாகுது… டாக்டர் அப்பறம் எங்கயாவது போயிடப் போறாங்க…” என்று அவசரமாக காரை எடுத்துக் கொண்டு வந்து நின்றான்.

அதனைப் பார்த்த சசிக்கு சிரிப்பு பொங்க, “மாப்பிள்ளைக்கு உடனே பிள்ளையைப் பத்தி தெரிஞ்சிக்கணும் போல இருக்கு…” என்று கிண்டல் செய்துக் கொண்டே, காரில் ஏற,

“சிவா… மெதுவா வண்டியை ஓட்டறேன்… உனக்கு கஷ்டமா இருந்த சொல்லு… இன்னும் மெதுவா ஓட்டறேன்…” என்று கூறியவன், மாட்டு வண்டியே முந்திச் செல்லும் வேகத்திற்கு வண்டியை ஓட்ட,

“ஸ்..ஸ்..சப்பா… இப்போவே கண்ண கட்டுதே ஷிவா” என்று நினைத்துக் கொண்டாள்… மூவரும் ஒருவழியாக மருத்துவமனைக்குச் செல்ல, புகழின் முகத்தில் இருந்த பதட்டமும், சோர்வும், ஷிவானிக்கு கவலையைக் கொடுத்தது. 

9 COMMENTS

  1. Nice epi sis… Really vani got conceived??? Very happy kutty vani or kutty pugazh vara poranga.. Jolly jolly.. Pugazh yen ipavum amaithiyave strange reaction koduthutu irukaru very bad…

  2. Hey read all chapters.Vani is so cute and to some extent the men I have seen in life had clearly depicted Pughazhs character.So I dont find any great disappointments there.May be the way Vani has brought up would have hurt ger more than anything.Do update more.

    Love
    Cg.

    • thanks ma … thank u so much … yes … most are the same in real life … shivani’s love expect more from him… what to do… let us see in upcoming episodes

LEAVE A REPLY