SHARE
அலுத்துப் போகாத உன்
நினைவுகளுடன்
இந்த நேரங்கள்
இனிமையாக கழிந்தாலும்
நீ அருகில் இல்லாத
சுவாரசியம் இல்லாத
அந்தக் குறை
எப்போதும் உண்டு தான்

 

வண்டியில் ஏறி அமர்ந்ததில் இருந்து, புகழின் அமைதி ஷிவானிக்கு எரிச்சலைக் கொடுக்க, “இப்போ எங்க போகப் போறோம்ன்னு சொல்லுங்க… மணி ஆறரை தான் ஆகுது… இந்த நேரத்துல எங்க?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, வண்டி செல்லும் வழியைப் பார்த்தவள்,

“என்னங்க? நாம எங்க போகப் போறோம்? இந்த நேரத்துல… இந்த ரோட்ல எதுக்கு கூட்டிட்டு போறீங்க?” ஷிவானி கேட்க,

“உன்னால கொஞ்ச நேரம் கூட வாயை சும்மாவே வச்சிட்டு வர முடியாதா?” என்று புகழ் கேட்கவும், அவள் பழிப்புக் காட்டி விட்டு, முகத்தைத் திருப்பிக் கொள்ள, அதை பக்கக் கண்ணாடி வழியாகப் பார்த்தவன், புன்னகையுடன், அவளை அங்கிருந்த ஒரு புகழ்பெற்ற ஒரு மாலிற்கு அழைத்துச் சென்றான்.

“அய்யோ… என்னங்க? இப்போ இந்த மாலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று ஷிவானி கேட்கவும்,

“ஆமா… இங்க தான் ஒரு படம் புக் பண்ணி இருக்கேன்… அதைப் பார்த்துட்டு, அப்படியே இங்கயே சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்…” என்று சொல்லிக் கொண்டே, புகழ் வண்டியை உள்ளே செலுத்தவும்,

“இந்தப் புடவையிலா?” என்று ஷிவானி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அங்கு மாலிற்குள் சென்றுக் கொண்டு இருந்தவர்கள், ஷிவானியைத் திரும்பி அதிசயப்பிறவியைப் போல பார்க்க, ஷிவானி தலையில் அடித்துக் கொண்டாள்.

“போற வரவங்க எல்லாம் என்னைப் பட்டிக்காடுன்னு நினைக்கப் போறாங்க… இதை முன்னாலயே சொல்லி இருந்தா… நான் அதுக்குத் தகுந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு வந்திருப்பேன் இல்ல… ஏன் இப்படி? சோளகொல்ல பொம்மை மாதிரி, பூ, நகை வேற…” என்று அவள் புலம்பிக் கொண்டே வர, வண்டியை நிறுத்திவிட்டு, புகழ் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“பட்டுப்புடவையோட யாராவது மாலுக்கு போவாங்களா?” ஷிவானி கேட்க,

“இதுவும் ஒரு டிரஸ் தானே… புடவை கட்டினா உள்ள வரக் கூடாதுன்னு யாரும் போர்ட் போடலையே…” என்று புகழ் பட்டென்று கேட்டு,

“உனக்கு சங்கடமா இருந்தா… வா… திரும்பிப் போயிடலாம்…” என்று சொல்லிவிட்டுத் திரும்ப, ஷிவானி திகைத்து விழித்தாள்.

“சீக்கிரம் சொல்லு…” என்று புகழ் நிற்கவும்,

“உள்ள போகலாம் வாங்க… ஏதோ… ஜீன்ஸ்சும்.. ஃப்ரீ ஹேருமா இந்த இடத்தை சுத்தி இருக்கேனே… இப்போ இப்படி ஓவர் ட்ரெடிஷனலா வந்திருக்கோமேன்னு தானே கேட்டேன்… இங்க வரோம்ன்னு தெரிஞ்சிருந்தா மேக்கப்பை கொஞ்சம் குறைச்சு இருப்பேன்… எல்லாரும் என்னையே பார்த்துட்டு போற ஃபீல்” என்று சிறு குழந்தை போல சொல்லிவிட்டு,

‘எத்தனைப் பேரை கலாய்ச்சு இருப்போம் இன்னைக்கு நமக்கே திரும்ப அடிக்குதே’ என மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருந்தவளை, கையை பிடித்து அழுத்தியவன், அவளுடன் கையைக் கோர்த்துக் கொண்டு, அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

“உனக்கு என்ன வேணும் வணி… எது வேணா கேளு… வாங்கித் தரேன்…” என்று சொன்னவன், மெல்ல அவளுடன் கையைக் கோர்த்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்க,

“எத்தனை மணிக்கு சினிமாவுக்கு புக் பண்ணி இருக்கீங்க? இப்படி மெல்ல நடந்துட்டு இருக்கோமே?” ஷிவானி சந்தேகமாகக் கேட்க,

“அது எட்டு மணிக்குத் தான்… இப்போ கொஞ்சம் சுத்தலாம்…” என்றவன், ஒரு கடையினுள் அவளை அழைத்துச் செல்ல, அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்த ஷிவானி..

“எனக்கு புக்ஸ் வாங்கித் தரீங்களா?” என்று கேட்க, அதைக் கேட்ட புகழ் நக்கலாகச் அவளைப் பார்த்து சிரித்தான்.  

“உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு புரியுது… ஆனாலும் என்னோட மார்க்கைப் பார்த்த அன்னிக்கே இப்படி சிரிக்கக் கூடாது… நாங்க எல்லாம் பாட புக்கை தான் தொட மாட்டோம்… இந்த கதை புக்கை எல்லாம் நல்லாவே படிப்போம்… வீட்ல அத்தை இல்லாம போர் அடிக்குது.. நான் கொஞ்சம் புக் வாங்கிக்கறேன்…” என்றவள், அவன் தலையசைக்கவும், சில புத்தகங்களை வாங்கிவிட்டு, மேலும் நகர, புகழும் அமைதியாக அவளுடன் நடந்தான்.

அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு கீ செயினைப் பார்த்துவிட்டு, அதை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்றாள். இதய வடிவில் இருந்த வீட்டின் வாயிலில், ஒரு பெண் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு காத்திருப்பது போல இருந்தது அந்த கீ செயின். அதைப் பார்த்தவளுக்கு அதை வாங்கி புகழுக்கு கொடுக்கும் எண்ணம் எழ, புகழைத் திரும்பிப் பார்த்தாள். அவன் வேறெதுவோ சிடிகளை பார்த்துக் கொண்டிருக்கவும், அதை அவனுக்குத் தெரியாமல், கையில் வைத்துக் கொண்டவள், வாங்கிய புத்தங்களை பில் போட்டுக் கொண்டு சிறிது தூரம் வெளியே சென்றவள்,

“ஹி ஹி… நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க வரேன்…” என்று கூறவும், புகழ் அவளை சந்தேகமாகப் பார்க்க, அதைக் கண்டு கொள்ளாமல், அவள் வாங்கிய கீ செயினை பில் போட்டுக் கொண்டு, புகழின் அருகில் வர, ‘என்ன’ என்பது போல புகழ் அவளைப் பார்த்தான்.

“உங்க பைக் கீயைக் கொடுங்களேன்…” ஷிவானி சொல்லவும், அவள் பில் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல், தனது பைக் கீயை எடுத்து நீட்ட, அதை வாங்கியவள், தான் வாங்கிய கீ செயினுடன் அதை இணைத்து, அவன் கையில் கொடுத்து,

“இந்த பொம்மை நான் தான்… புரியுதா?” என்று கேட்கவும், அதை வாங்கி தன் கையில் புதைத்துக் கொண்டவன்,

“ரொம்ப அழகா இருக்கு… நான் பத்திரமா வச்சிக்கறேன்…” என்று கூறிவிட்டு, தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்ள, தான் சொல்ல வருவது புரிந்ததா? புரியவில்லையா? என்ற குழப்பத்துடன் ஷிவானி நடக்க, புகழின் கை பாக்கெட்டினுள் அந்த பொம்மையை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது.

சிறிது தூரம் நடந்து, திரையரங்கம் வந்ததும், “உனக்கு பசிக்குதா… சாப்பிட்டே போகலாமா?” புகழ் கேட்க,

“இல்ல… சாப்பிட்டுட்டுப் போனா… பாப்கார்ன் எல்லாம் யார் சாப்பிடறது? அதெல்லாம் முடிச்சிட்டு மிச்சம் உள்ள வயித்துக்கு ஹோட்டல்ல சாப்ட்டுக்கலாம்…” என்று கூறியவள், நேராக சென்று பாப்கார்ன், பஃப்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் என்று ஆர்டர் கொடுக்க, புகழ், தனது பாக்கெட்டில் இருந்த பர்சை அப்படியே எடுத்து அவளிடம் நீட்டினான்.

“ஹையோ… நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே… இப்படித் தான் எல்லா இடத்துலயும் உங்க பர்சை எடுத்துக் கொடுப்பீங்களா?” என்றவள்,

“உங்களுக்கு என்ன வேணும்?” என்ற கேள்வியை கேட்க, அவள் கூறிய பொருட்களின் பட்டியலைக் கேட்டிருந்தவன்,

“தனியா எனக்கு எதுவுமே வேண்டாம் வணி… நீ வாங்கினதுலையே நான் ஷேர் பண்ணிக்கறேன்..” என்று அவன் சொல்லவும்,

“ஷேரிங்கா” என்று வாயை பிளந்தவள், “அது எல்லாம் முடியாது…உங்களுக்கு வேற வாங்கறேன்…” என்று இன்னொரு பாப்கார்னை வாங்க வாயைத் திறக்க,

“படம் போட்டுட்டாங்க போல இருக்கு… சீக்கிரம் வா…” என்று அவன் சொல்லவும், தான் வாங்கிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு அவனுடன் நடந்தாள்.   

உள்ளே சென்று அமர்ந்தவளின் வாயும், கைகளும், கண்களும் வேலை செய்ய, அதை ரசித்துக் கொண்டே, படம் பார்த்துக் கொண்டிருந்த புகழின் மனம் ஷிவானியிடம் என்ன என்னவோ கதைகளைப் பேசத் தூண்ட, அதை பேசத் தான் முடியாமல், வார்த்தைகள் தொண்டைக் குழியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

அவளது கையில் இருக்கும் திண்பண்டங்களை அவளுடன் சேர்ந்து உண்பதே சுவாரஸ்யமானதாக இருக்க, அதையும் அனுபவித்துக் கொண்டிருந்தவன், படம் முடிந்து வெளியில் வரவும், “சிவா… நேரா வீட்டுக்கு போயிடலாமா?” என்று அப்பாவியாகக் கேட்கவும்,

“என்னது? வீட்டுக்கா? அப்போ ஹோட்டல் போகலாம்ன்னு சொன்னது? அதனால தானே நான் எல்லாத்தையும் கம்மியா வாங்கினேன்…” என்று ஷிவானி சொல்லவும், அதைக் கேட்ட புகழ் புருவத்தை உயர்த்த,

“இப்போ சாப்பிட்டு இருக்கறதுக்கு வீட்டுக்கு போன உடனேயே பசி எடுத்திடும் இனியன்… இங்க நாம சாப்பிட்டு போயிடலாம்… இங்க பாவ்பாஜி நல்லா இருக்கும்…” என்று சொல்லி, அந்த கடைக்கு அவனை அழைத்துச் செல்ல, அவள் கேட்ட அழகில் தன்னைத் தொலைத்தவன், அவனை மறந்து தலை அசைத்து, அவள் கூறிய கடைக்கு சென்று அவள் கேட்டதை இரண்டாக ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தான்.

புகழின் முகத்தை இரண்டு நிமிடங்கள் பார்த்தவள், அவன் எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும், “நீங்க இங்க ஏற்கனவே வந்திருக்கீங்களா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்… இல்ல.. வந்ததில்ல… சும்மா இங்க வந்து சுத்தறதுல என்ன இருக்கு? டைம் தான் வேஸ்ட்… இன்னைக்கு விக்ரம் தான் இங்க உன்னை கூட்டிட்டு போய் சுத்திட்டு வான்னு சொன்னான்… சரி நாமளும் வந்ததில்லையா? அது தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்.. நீ நிறைய தடவ வந்திருக்கியா?” புகழ் சொல்லி விட்டு, பதில் கேள்வி கேட்க, ஷிவானிக்கு சிறிது கடுப்பாக இருந்தது.

“நான் எல்லாம் நிறைய தடவை வந்திருக்கேன்… சும்மா சுத்தணும்னு சொன்னாளே நாங்க இங்க தான் வருவோம்… இந்த கடையில பாவ்பாஜி சாப்பிடாம போனா என்ன ஆகறது?” என்று எடக்காக பதில் சொன்னவள்,

“நான் ஒண்ணு கேட்கறேன்… உங்களை அது ஹர்ட் பண்ணினா சாரி.. ஆனா.. எனக்கு கேட்டே ஆகணும்…” ஒரு மாதிரி துடுக்காக அவள் கேட்க,

“நீ என்னை என்ன ஹர்ட் பண்ணப் போற? கேளு வணி…” என்று புகழ் ஊக்கவும், அவனது சொற்களில் சில வினாடிகள் மௌனம் காத்தவள்,

“இல்ல… தெரியாம தான் கேட்கறேன்… உங்க பிரெண்ட்ஸ் எல்லாரும்… குறிப்பா உங்க டியர் பிரெண்ட் விக்ரம் அண்ணா கூட இங்க வந்திருப்பாங்க போல… எல்லாரும் நல்லா சோஷியலா இருக்காங்க… அவங்க குரூப்ல நீங்க மட்டும் எப்படிங்க இப்படி? உங்களை மாத்தணும்னு அவங்க முயற்சி பண்ணலையா..

இல்ல நீங்க மாறவே மாட்டேன்னு இப்படியே இருக்கீங்களா? இதை நான் ஏன் கேட்கறேன்னா… உங்க பெண்டாட்டிக்கு கிஃப்ட் வாங்கறதுக்கு… ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறதுக்கு கூட, வேற ஒருத்தர் சொல்லி சஜ்ஜெஸ்ட் பண்ண வேண்டி இருக்கே… அதனால கேட்டேன்…” என்று ஷிவானி கேட்டுவிட்டு, அவனது முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க, அத்தனை நேரம் அவன் முகத்தில் இருந்த இதம் மாறி, ஒரு இறுக்கம் வந்து குடி கொள்ள, புகழ் அமைதியாகிப் போனான்.

“ஆமா… உடனே சீன் சேன்ஜ் ஆகறது போல இவர் முகம் சேன்ஜ் ஆகிடும்.. இவரை இப்படியே விடக் கூடாது… கொஞ்சமாவது இவரும் யோசிக்கணும்…” என்று மனதினில் சொல்லிக் கொண்டவள், அவனது முகத்தைப் பார்க்க,

“எங்க அப்பாக்கு அப்பறம் எனக்கு எங்கயுமே வெளிய போகப் பிடிக்கல.. இங்க எல்லாம் வந்தா என் மனசும் மாறிப் போயிரும்…… குடும்பத்துக்கு பணம் சேர்க்க முடியாதுன்னு நானே வர மாட்டேன்… இங்க வந்து அனாவசியமா சுத்தற நேரத்துக்கு ஒரு வீட்ல போய் சிஸ்டம் சர்வீஸ் செய்தா… பணமாவது சம்பாதிக்கலாம்… இங்க வந்தா அந்த பணம் தான் வீணாப் போகும்… அதனால தான்…” பதில் சொன்னவன், அவள் எதற்கோ வாயைத் திறக்க எத்தனிக்க,

“இப்போ என் பெண்டாட்டி கூட நேரம் ஒதுக்கணும்னு தோணிச்சு… அவளுக்கு பிடிச்சதை கூட இருந்து வாங்கித் தரணும்னு ஆசையா இருந்தது… அதனால அவன் கிட்ட எங்க கூட்டிட்டு போகலாம்ன்னு சஜெஷன் கேட்டேன்.. அவன் இங்க போகச் சொன்னான்…” பட்டென்று கூறியவன், அவர்களது ஆர்டர் நம்பர் வரவும், எழுந்து செல்ல, ஷிவானி தன்னையே நொந்துக் கொண்டாள்.

“உன் அவசர புத்தியை சவுக்கால அடிக்கணும்… எத்தனை தடவ சொல்லி இருக்கு… இப்படி பேசக் கூடாதுன்னு… கொஞ்சமாவது அறிவிருக்கா?” தன்னையே திட்டிக் கொண்டவள், புகழ் வந்து அமரவும், அவனது கைகளைப் பற்றிக் கொண்டு,

“சாரிங்க… எனக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகமா ஆகிப் போச்சு… அதனால தான் அப்படி பேசிட்டேன்.. என் செல்ல இனியன் இல்ல… ப்ளீஸ்… உங்க ட்ரேட் மார்க் ஸ்மைல் ப்ளீஸ்…” என்று கெஞ்ச,

“ஏற்கனவே லேட் ஆச்சு சிவா… சீக்கிரம் சாப்பிடு… வண்டியில போகும் போது பேசிக்கலாம்… நான் ஒரு முட்டாள்… நைட் லேட் ஆகும்ன்னு யோசிக்கமா… காரை எடுத்துட்டு வராம இருக்கேனே…” என்று அவளிடம் சொல்லிவிட்டு, சற்று சத்தமாகவே புலம்ப,

“ப்ளீஸ்… சிரிங்க… நான் அப்போ தான் சாப்பிடுவேன்…” என்று ஷிவானி அடம் பிடிக்கத் தொடங்கினாள்.

“டைம் ஆச்சு சிவா…” புகழ் தனது பிடியில் நிற்க,

“ஸ்மைல் ப்ளீஸ்…” அவளும் அதிலேயே நிற்க,

“திடீர்னு எல்லாம் சிரிக்க முடியாது… நான் சிரிக்க தோணினா சிரிக்கறேன்…” புகழ் விடாப் பிடியாக நிற்க,                

“நீங்க சிரிச்சா தான் சாப்பிடுவேன்…” ஷிவானியும் அதிலேயே நிற்க, பெயருக்கு புன்னகைத்து வைத்தவன்,

“இப்போ சாப்பிட்டுக் கிளம்பு… இல்ல எழுந்து வா… நேரமாகுது…” என்று புகழ் தன்னுடைய பாவ்பாஜியை வேகமாக முழுங்க, ரோஷம் பொங்க, அதை அப்படியே வைத்து விடலாமா என்று எண்ணிய ஷிவானி… மறுநிமிடமே, கம கம என்று அடித்த வாசனையால் இழுக்கப்பட்டு, அதை வாயில் திணிக்கத் தொடங்கினாள்.

அங்கிருந்து கிளம்பிய புகழ், எவ்வளவு வேகமாகவும், கவனமாகவும் ஓட்ட முடியுமோ அவ்வளவு கவனமாக வண்டியைச் செலுத்தத் தொடங்கினான்.

“என் மேல கோபமா?” ஷிவானி மெல்ல பேச்செடுக்க,

“எனக்கு என்ன கோபம் இருக்கப் போகுது சிவா… ஒரு கோபமும் இல்ல… இனிமே நானே ப்ளான் பண்ண முயற்சி பண்றேன்…” என்றவன், வண்டியை செலுத்த, ஷிவானி அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள,

“உனக்கு தூக்கம் வருதா? இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடலாம்…” என்றவன், வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக பூட்டைத் திறந்தான்.

“நான் உங்களுக்கு பால் காய்ச்சி வைக்கிறேன்… டிரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க…” என்றவள், வேகமாக சமையல் அறையை நோக்கிச் செல்ல,

அவளைப் பிடித்து இழுத்தவன், “ஹ்ம்ம்… அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… வயிறு ஃபுல்லா இருக்கு… டயர்ட்டாவும் இருக்கு… தூங்க போகலாம்…” என்றவன், லுங்கிக்கு மாறி படுத்துவிட, ஷிவானியும் வேற உடைக்கு மாறி, அவன் மார்பில் தலை வைத்து படுத்துக் கொள்ள, அவளது தலையை வருடிக் கொண்டிருந்த புகழ், உறங்கி விட, ஷிவானி தூக்கம் வராமல், புரண்டுக் கொண்டிருந்தாள்.

அவளது ஒவ்வொரு அசைவும் புகழின் உறக்கத்தை கலைக்க, கண்களை திறந்துப் பார்த்தவன், அவள் மீண்டும் திரும்பிப் படுக்கவும், தனக்கு அவள் மேல் கோபம் என்பதால் உறக்கம் வராமல் தவிக்கிறாள் என்பது புரிய, அவளை இழுத்து அணைத்தவன், அவளது கழுத்து வளைவில் முகம் பதித்து,

“தூங்கு வணி… நேரம் ஆகுது… அப்பறம் அதிகாலை ஒன்பது மணிக்கு எழுந்திருக்கக் கூடாது… எனக்கு நாளைக்கு சீக்கிரமே கடைக்குப் போகணும்…” என்று சொல்லிவிட்டு, மேலும் இரண்டு முத்தத்தைப் பதிக்க,

“போதும் விடுங்க… எனக்கு தூக்கம் வருது…” என்றவள், அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு,

“என் மேல கோபம் இல்ல தானே…” என்று மீண்டும் கேட்கவும்,

“இல்லடா செல்லம்… உன் மேல கோபமே இல்ல… அப்படி உன் மேல கோபம் வரவும் வராது…” என்று மனதினில் சொல்லிக் கொண்டவன், பதில் ஏதும் சொல்லாமல், அவளது நெற்றியில் இதழ் பதித்து, தன்னோடு அணைத்துக் கொண்டு, அவளை உறங்கவும் வைக்க, ஷிவானி நிம்மதியாக உறங்கியதை உறுதிப் படுத்திக் கொண்டு, புகழும் உறக்கத்திற்கு சென்றான்.

மல்லிகா ஊருக்குச் சென்று ஒருவாரமும் ஓடி இருந்தது… பகலில் சில நேரங்கள் வீட்டிலும், சில நேரங்கள் தாய் வீட்டிலும் பொழுதை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்த ஷிவானிக்கு, சினிமா சென்று வந்த அடுத்த நாள் காலையிலேயே புகழ் தனது வழக்கத்திற்கு மாறி விடவும், முந்தய தினம் நடந்தது அனைத்தும் கனவோ என்று யோசிக்கத் தொடங்கி இருந்தாள்.

வாங்கிக் கொண்டு வந்திருந்த புத்தகங்கள் நல்ல துணையாக மாற, சதா சர்வ காலமும், பாட்டும், புத்தகமுமாக அவளது பொழுதுகள் கழியத் தொடங்கியது.

பெரிய முள், ஒன்பதைக் காட்டி, அடுத்த நிமிடம் நகர்வதற்குள், கடைக்கு கிளம்பிவிடும், புகழுக்கும், கடையின் வியாபாரம் முழு வேகத்தில் தொடங்கியதில், வேலை சரியாக போய்க் கொண்டிருந்தது.

சில நேரங்கள், கடையிலேயே மதிய உணவையும் உண்டு, இரவு ஒன்பதைத் தாண்டியே, சில நேரங்கள் வீட்டிற்கு வருபவன், இவ்வாறாக அவனது பொறுப்பை ஆற்றிக் கொண்டிருந்தான்.

வாங்கி வந்த புத்தகங்கள் அந்த ஒரு வாரத்திலேயே படித்து முடித்தாகி விட, அடுத்து என்ன செய்வதென்று புரியாத ஷிவானி, வீட்டு வேலைகள் போக மீதி நேரங்கள் அனைத்தும், உறக்கத்தில் கழிக்கத் தொடங்கி இருந்தாள்.

“ச்சே… இதென்ன எப்போப் பாரு தூங்கிட்டே இருக்கோம்… கொஞ்ச நேரம் சசியை போய் படுத்திட்டு வரலாம்…” என்று அங்கு செல்ல, அங்கும் ஏதோ காரசார விவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

“என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?” என்று உள்ளே நுழைந்தவளிடம்,

“வாம்மா… ஒண்ணும் சத்தம் இல்ல.. நம்ம சங்கத்துல இருந்து எல்லாரும் டூர் போகலாம்ன்னு ஒரு பிளான்… பத்து நாளைக்கு, வட இந்தியா முழுசும் சுத்திட்டு வரலாம்ன்னு சொல்றாங்க… அது தான்… இவ வர மாட்டேங்கிறா… பேசிட்டு இருக்கோம்…” பாஸ்கர் சொல்லவும்,

“ஹை சூப்பர்… பத்து நாளைக்கு தானே போயிட்டு வாங்க…” ஷிவானி சாதாரணமாகச் சொல்லவும்,

“என்னடி என்னவோ உளறிக்கிட்டே இருக்க? உங்க அப்பா தான் கொஞ்சம் கூட யோசனை இல்லாம பேசறார்ன்னா நீயும் கூட சேர்ந்துக்கிட்டு… நீ இங்க தனியா இருக்க… உன்னை விட்டுட்டு நான் எங்கடி போறது?” சசி கவலையாகச் சொல்ல,

“ஆமா உனக்கு ஊருக்கு போக சோம்பேறித்தனம்ன்னு சொல்லு… அதெல்லாம் ஒண்ணும் இல்ல… இங்க தான் இனியன் இருக்காரேம்மா… அவர் என்னைப் பார்த்துப்பாரு… நீங்க தைரியமா கிளம்புங்க…” என்று தைரியம் சொன்ன ஷிவானி, பாஸ்கரைப் பார்க்க,

“அதே தான் நானும் சொல்றேன்… இவ கேட்டா தானே… உனக்கு கஷ்டமா இல்ல… இவ தான் பாரு…” என்று சலித்துக் கொள்ள, ஷிவானி, சசியின் அருகே சென்றாள்.

“அம்மா… நான் என்ன சின்னக் குழந்தையா? எனக்கு என்னையே பார்த்துக்கத் தெரியும்மா… இப்போ நானே வெளியூருல இருந்தா நீங்க போயிருப்பீங்க தானே… அது போல நினைச்சிக்கோ… ஜாலியா போயிட்டு வாம்மா… இத்தனை நாளா தான் என் ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்ன்னு எங்கயுமே போனது இல்ல… இப்போ தான் என்னை கட்டி மேய்க்க இனியன் இருக்காரே.. அவர் பார்த்துப்பாரு…” என்று அவள் கிண்டலாகச் சொல்லவும், சசி அரை மனதாக கிளம்ப சம்மதித்தார்.

“எப்போ கிளம்பணும்…” என்று அவள் கேட்க,

“அடுத்த வாரம்டா… இன்னும் பத்து நாள் இருக்கு… இன்னைக்கு ராத்திரி பிளைட் டிக்கெட் புக் பண்றாங்க… அப்பறம் அங்க ஒரு டிராவல்ஸ்ல சொல்லி பஸ்ல போறோம்…” பாஸ்கர் தங்களது திட்டத்தைச் சொல்லவும், ஷிவானி தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.

கடந்த சில வருடங்களாக, அவளது படிப்பை ஒட்டி, சசி எங்கும் செல்லாமல் இருந்தார். இப்பொழுதும், அதே போல அவளை சாக்கு வைத்து அவர் சொல்லவும், ஷிவானிக்கு ஒரு மாதிரி ஆகியது. இவர்கள் இருப்பதால் தானே புகழும் இரவில் அவ்வளவு நேரம் கழித்து வருகிறார் என்ற எண்ணமும் கூடவே எழ, அவனை வர வைப்பதற்கு இது ஒரு சாக்கு என்று அதிலும் ஒரு நல்லதைக் கண்டு கொண்டவள், அவர்களை கிளப்ப முயன்றாள்.

வீட்டிற்கு வந்து புகழுக்காக காத்திருந்தவள், அவன் வரவும், அவனுக்கு உணவை பரிமாறிக் கொண்டே, “அம்மாவும் அப்பாவும், டூர் போறாங்களாம்… அடுத்த வாரம் கிளம்புவாங்க போல…” ஷிவானி அறிவிக்க,

“ஓ… போயிட்டு வரட்டும் சிவா… எனக்குத் தெரிஞ்சு மாமாவும் கடையை விட்டு கிளம்பினதே இல்ல…” என்று புகழ் சொல்லவும்,

“ஆமா.. அப்படியே மாமனார் வாரிசு.. ஒரு ஹனிமூனாவது உண்டா.. அந்த நினைப்பே இல்லாம இருக்கார் பாரு… எப்படியும் ஃபர்ஸ்ட் ஆனிவர்சரிக்கு கண்டிப்பா எங்கயாவது போயே ஆகணும்…” என்று மனதினில் நினைத்துக் கொண்டவள்,

“ஆமா… அதனால தான் போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டேன்…” என்று பதில் சொல்லவும், புகழ் புன்னகைத்து,

“உனக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்..” என்று சொன்னவன்,

“சூப்பரா சமைக்க கத்துக்கிட்ட வணி… சட்னி ரொம்ப நல்லா இருக்கு..” என்று அவளை தன்னருகில் இழுத்து, அவளுக்கு உணவை ஊட்ட, அவன் லேட்டாக வந்ததில் இருந்த சிறு வருத்தமும் போய், அவன் கொடுத்ததை வாங்கிக் கொள்ள, அவளுக்கும் உணவை ஊட்டி முடித்தவன், அவளது தோளில் கையைப் போட்டுக் கொண்டு, சமையல் அறைக்குச் சென்று, அவளுக்கு உதவத் துவங்கினான்.

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், “நான் என்னவோ ரொம்ப கும்பகர்ணி ஆகிட்ட ஃபீல்… எப்போ படுத்தாலும் தூங்கிடறேன் இனியன்…” என்று சொல்லவும்,

“அம்மாவும் இல்ல… அது தான்.. வேலைக்கு எங்கயாவது போறியா? பக்கத்துல ஸ்கூல் மாதிரி எங்கயாவது… ஆனா…” என்று அவளைக் கொஞ்சியவன், அவளது காதில் சரசம் பேச,

“உங்களுக்கு இதே வேலையாப் போச்சு.. போங்க…” என்று அவனைத் தள்ளியவள்,

“இந்த சண்டே கடை லீவ் தானே… நாம போய் அத்தையைப் பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்கவும்,

“நானும் அதையே தான் சொல்ல நினைச்சேன் வணி… போய்ட்டு வரலாம்…” என்று அவளது நெற்றியில் முட்டியவன், வேலைகள் முடித்ததும், அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

அந்த வார இறுதியும் வந்தது… காலையில் பதினோரு மணிக்கு போகலாம்ன்னு என்று சொல்லிவிட்டு ஒரு அவசர வேலையாக கிளம்பிச் சென்றவன், வரும்பொழுதே மதியத்தை எட்டி இருந்தது. அங்கு போய் மதிய உணவை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று அவன் சொல்லி இருந்ததால், சமையலும் செய்யாமல் அவனுக்காக காத்திருந்தவள், ஒரு மணிக்கு அவன் வரவும், ஷிவானி அவனை முறைக்க,

“அடுத்த வாரம் அம்மாவைப் பார்க்க போய்க்கலாம்.. சாதம் வச்சிடு… தயிர் போட்டு சாப்பிட்டுக்கலாம்…” என்று அவன் சொல்லவும், ஷிவானி எதுவும் பேசாமல் ஷிவானி படுத்துக் கொள்ள,

“பசிக்குது சிவா…” புகழ் உடையை மாற்றிக் கொண்டே சொல்லவும்,

“எனக்கும் தான் பசிக்குது… ஆனா… என்னால சமைக்க முடியாது… வெளிய போய் வாங்கிட்டு வாங்க… இல்ல.. இப்போவே அத்தையை பார்க்க கிளம்பலாம்…” அவள் சொன்னதைக் கேட்டவன்,

“ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இருக்காது…” என்று சொல்லவும்,

“அதைத் தானே நீங்க சாப்பிடறீங்க… எனக்கும் இன்னைக்கு வாங்கிட்டு வாங்க.. எனக்கு பிரியாணி போதும்… உங்களுக்கு என்ன வேணுமோ பார்த்து நீங்களே வாங்கிட்டு வாங்க… இதுக்கும் மேல என்னால சமைக்க முடியாது…” என்று சொல்லிவிட்டு, சோபாவிலேயே படுத்து கண்களை மூடிக் கொண்டவளை பார்த்துவிட்டு, கிட்சன் சென்றவன், காய்களை வெட்டி, பிரியாணி செய்யத் துவங்க, அவன் சமைக்க  தொடங்குவதைப் பார்த்துவிட்டு, தோள்களை குலுக்கிக்கொண்டு கொண்டு, திரும்பிப் படுத்து கண்களை மூடிக் கொண்டவள், உறங்கியும் போனாள்.

7 COMMENTS

  1. hi ramya,
    yenakku pugazh character romba pidichirukku,vazhaiku thevaiyana padathai intha
    kadhaiyin mulam puriyavaipatharku nandri.nice ud.

    with love
    geet.

LEAVE A REPLY