SHARE

தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆகா
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில

 தூவானம் தூவ தூவ
மழை துளிகளில் உன்னை கண்டேன்

குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்த புகழைப் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அதை விட கோபம் கண்களை மறைக்க, இருந்த கடுப்பில் தொப்பென்று அவனை எழுப்பிவிடும் நோக்கத்தோடு படுக்கையின் மேல் விழ, அந்த அசைவிற்கும், ‘மெல்லம்மா’ என்று கூறிவிட்டு, திரும்பிப் படுத்தானே ஒழிய, கண்களைக் கூடத் திறக்காமல் இருக்கவும், அவனது கையை நறுக்கென்று கிள்ளினாள்.

“சிவா… எனக்கு தூக்கம் வருது… ரொம்ப டயர்ட்டா இருக்கு…” என்று அவளது கிள்ளளையும், கொசுக் கடித்தது போல சாதாரணமாகச் சொன்னவன், தனது உறக்கத்தைத் தொடர, பல்லைக் கடித்துக் கொண்டு ஷிவானி உறங்க முயற்சித்தாள்.

“நல்ல குறட்டை விட்டு தூங்கறதைப் பாரு.. இங்க ஒருத்தி இருக்காளே… அம்மா இல்லாம தனியா என்ன செய்தான்னு கேட்க தோணுதா? வந்து நல்லா கொட்டிக்கிட்டு தூங்குது பாரு… மனுஷன் மௌன சாமியாரா போயிருக்க வேண்டியவர்… இப்படி புகழா வந்து என் மனசைக் கெடுத்து, இப்படி அர்த்த ராத்திரியில புலம்ப விட்டுட்டு இருக்காரே… இது அந்த பேய்க்கே அடுக்குமா?” என்று புலம்பிக் கொண்டே அவள் கண்களை மூடிக்கொண்டாள்.   

காரில் வரும் போது உறங்கி இருந்தாலும், அலைச்சலும், மனஅலைபுருதலும் அவளை உறக்கத்தில் ஆழ்த்த, ஷிவானி உறங்கியும் போனாள்.              

அதிகாலை சுகமான கனவில் இருந்தவளின் மீது புகழின் கைகள் படர்ந்து, அவளைத் தழுவ, கனவு தான் போலும் என்று நினைத்துக் கொண்டவள், அவனது ஆசைத் தழுவலை ரசிக்கத் தொடங்க, புகழின் இதழ்கள் அவள் மேனியில் ஊர்ந்தது. அப்பொழுதும் கனவு என்று எண்ணி கண் மூடிக் கிடந்தவள், புகழ் முழுதாக அவளை எடுத்துக் கொண்ட பிறகே, அது கனவல்ல நிஜம் என்பதை உணர முயன்று கண்களைத் திறந்துப் பார்க்க முயல, அதற்கும் முடியாமல், அதிகாலை உறக்கம் அவளை தன்னுள் இழுத்துக் கொள்ளத் துவங்கியது.

“புகழ்.. தூக்கம் வருது…” உறக்கத்தில் இருந்தவள் முணுமுணுக்க, எதுவும் பேசாமல், அவளது தலையை தன் மார்பில் எடுத்து வைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் இதழ்களைப் பதித்து, தலையில் மெல்ல தட்டிக் கொடுக்க, ஷிவானியும் நன்கு உறங்கிப் போனாள்.

ஷிவானி உறங்கினாலும், புகழுக்கு உறக்கம் வர மறுத்தது. அவளை அணைத்துக் கொண்டே சிறிது நேரம் படுத்திருந்தவன், அவள் மீண்டும் நன்றாக உறங்கத் துவங்கவும், மெல்ல அவளது தலையை தலையணையில் கிடத்தி விட்டு, எழுந்து குளித்துவிட்டு, வேலைகளைப் பார்க்கத் துவங்கினான்.

பாலை காய்ச்சி, காலை உணவையும் தயார் செய்து வைத்தவன், ஷிவானியின் அருகே சென்று அவளது கன்னத்தில் இதழ் பதிக்க,

“ராத்திரியில இருந்து உங்களுக்கு இதே வேலையாப் போச்சு… எனக்கு தூக்கம் வருது… தூங்கணும்… மணி ஆறு தானே ஆகுது…” என்று அவள் திரும்பிப் படுக்கவும்,

“சரி… தூங்கு… டிபன் செய்து வச்சிருக்கேன்… எழுந்த உடனே அதை சாப்பிட்டுட்டு காபி குடி… நான் கடைக்குக் கிளம்பறேன்…” என்று அவளிடம் சொல்லிக் கொண்டே, பீரோவில் இருந்து உடையை எடுத்துக் கொண்டிருக்க,       

“காலங்க்கார்த்தால உங்களுக்கு எந்த கஸ்டமர் வந்து உட்கார்ந்து இருக்கப் போறாங்க… அதுவும் ஆறு மணிக்கே… உங்களோட சின்சியாரிட்டிக்கு அளவே இல்லாம போச்சு…” என்று அவள் முணுமுணுக்க, அவளைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன்,

“மணி எட்டரை ஆகுது… அதாவது உன்னோட விடியற்காலை… முடிஞ்சா.. ஒரு ஒன்பது மணிக்கா எழுந்துக்க ட்ரை பண்ணு… எனக்கு விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு… நான் கடைக்குக் கிளம்பறேன்…” என்று சொல்லிவிட்டு, அவன் கிளம்பிக் கொண்டிருக்க, ‘என்னது?’ என்று அதிர்ச்சியுடன் ஷிவானி எழுந்துக் கொண்டாள்.

அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்த புகழுக்கு சிரிப்பாக வந்தது. அவளைப் பார்க்காமல் திரும்பி நின்றுக் கொண்டவன், முகம் பார்க்கும் கண்ணாடியில், அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, என்னவோ யோசிப்பதும், புகழைப் பார்ப்பதுமாக இருந்தவள்,

“நீங்க என் தலையை எடுத்து தட்டிக் கொடுத்தீங்க தானே.. அதுக்கு முன்னாடி…” எப்படி கேட்பது என்று புரியாமல், மென்று விழுங்கிக் கொண்டு அவள் கேட்க,

“ஹ்ம்ம் ஆமா.. அப்போவே மணி ஆறரை இருக்குமே…” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்லவும், ‘ஓ…’ என்று வாய் பிளந்தவள், மெல்ல எழுந்து, தனது உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள, புகழ் கிளம்பி, அவள் வரவுக்காக காத்திருந்தான்.

இன்னமும் ஏதோ யோசனையுடன் வந்தவளைப் பார்த்து, “உனக்கு தனியா இருக்க பயமா இருந்தா… உங்க அம்மா வீட்ல கொண்டு விடறேன்… அங்க இருந்துட்டு சாயந்திரமா வரியா?” என்று அவன் கேட்கவும்,

“ஆமா… அது தான் பெஸ்ட்…” என்று மனதில் நினைத்துக் கொண்டு,

“உங்களுக்கு டைம் ஆச்சுன்னு சொன்னீங்களே.. நீங்க கிளம்புங்க… நான் போய்க்கறேன்…” அவள் பதில் சொல்ல,

“சரி… பார்த்து ஜாக்கிரதையா பூட்டிட்டு போ… மதியம் நான் கடையிலயே சாப்பிட்டுக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அவன் வாசல் கதவு வரைச் செல்ல, அப்பொழுது ஷிவானியின் போன் அலற, அதை அசட்டை செய்து, புகழை வழியனுப்ப அவனுடன் நடந்தவளை தடுத்து,

“போன் அடிச்சா… என்னன்னு பார்க்கணும்… போய் பாரு…” என்று புகழ் அவளை அனுப்பி வைக்க,

“இந்த சட்டம் எல்லாம் எங்களுக்குத் தான் போல…” என்று முணுமுணுத்துக் கொண்டே, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவள், ‘என்னது’ என்று அதிர, வாசலுக்குச் சென்ற புகழ் அவளது அதிர்ச்சியைப் பார்த்துவிட்டு உள்ளே வந்தான்.          

“என்ன ஆச்சு? என்ன?” என்று அவன் கேட்க,

“எக்ஸாம் ரிசல்ட் வந்துடுச்சாம்…” என்று முழித்துக் கொண்டு சொன்னவளைப் பார்த்த புகழ்,

“சரி.. லேப்டாப்பை எடுத்து பாரேன்… அதுக்கு ஏன் இப்படி நிக்கற? உனக்கு பயமா இருந்தா… நான் வேணா பார்த்துச் சொல்றேன்…” என்று அவன் சொல்லவும்,

“என் பிரெண்ட்டே பார்த்துட்டாளாம்…” என்று மென்று விழுங்கியவள், புகழைப் பார்த்து இன்னமும் விழித்துக் கொண்டிருக்க, அந்த முழி, அவளது பரிட்சை ரிசல்ட் சரி இல்லை என்பதை சொல்லாமல் சொல்ல, புகழ் சோபாவில் மீண்டும் அமர்ந்தான்.

“சரி… இரு உன் நம்பர் சொல்லு… நான் பார்க்கறேன்… மோசமா எல்லாம் வந்திருக்காது…” கூறிக் கொண்டே, தனது லேப்டாப்பை திறக்க,

“ஆமா… ஆமா… எனக்கும் டவுட் தான்… சீக்கிரம் ஓபன் பண்ணுங்க….” என்று அவள் ஆர்வம் காட்டவும், புகழும், அவசரமாக ஓபன் செய்தான்.

“நம்பர் போடுங்க… நம்பர் போடுங்க…” என்று அவள் அவசரப்படுத்தவும், நம்பரைக் கேட்டு போட்டுப் பார்த்தவன், அவள் அனைத்திலும் தேர்ச்சிப் பெற்றிருக்கவும், குழப்பமாக அவளைத் திரும்பிப் பார்க்க,

“ஹையோ… என்ன கொடுமை சரவணா… இப்படி எல்லாத்துலையும் பாஸ் பண்ணிட்டேனே… சசிக்கு ஷாக்ல பேச்சே வராதே….” என்று அவள் புலம்பவும், புகழ் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“நம்ம கல்யாணத்தப்போ நீ என்ன எக்ஸாம் எழுதின?” அன்று அவள் செய்த அலும்புகளை மனதில் மீண்டும் ஓட்டிப் பார்த்து ரசித்துக் கொண்டே கேட்டவனுக்கு,

“இனியன்… அது தான் கொடுமையே… அதுல 90 மார்க் வாங்கி இருக்கேன்…” திகைப்பு விலகாமல் ஷிவானி சொல்லவும், புகழ் அவளது கன்னத்தில் இதழ் பதித்தான்.

“ஹான்…” என்று அவள் விழி விரித்துப் பார்க்க, புன்னகையுடன் கிளம்பிச் சென்றவன், வாயிலில் பைக்கை எடுத்து விட்டு, அவளுக்கு கை அசைத்து விட்டுச் சென்றான்.

“ஹையோ… மாம்ஸ் செம மூட்ல இருப்பார் போலயே… டிபன் எல்லாம் செய்து அசத்தி இருக்கார்” என்று நினைத்துக் கொண்டவள்,

“சரி… இப்போ நாம சசிக்கு போய் ஷாக் கொடுப்போம்…” என்ற ஐடியாவில், உடனே வேகமாக புகழ் செய்து வைத்திருந்த டிபனை விழுங்கிவிட்டு, செல்லையும் பர்சையும் எடுத்துக் கொண்டு, தனது வீட்டை நோக்கி நடந்தாள்.

“ஆனாலும் இந்த மனுஷன் ஊமை குசும்பு போல, ஓவர் ரொமாண்டிக்கா தான் இருக்கார்… அந்த இதோட ஒரு வாழ்த்தை சொல்லி இருந்தா நல்லா இருக்கும்… இல்ல நான் இன்னைக்கு கடைக்கு போகலம்மா… வா உன்னை வெளிய கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கும்… ஹ்ம்ம்… இப்படி புலம்ப விட்டுட்டியே புகழ்இனியா…” என்று புலம்பிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், கதவைத் தள்ளித் திறந்துக் கொண்டு,

“ஆத்தா… நான் பாஸ் ஆகிட்டேன்…” என்று ஸ்லோ மோஷனின் ஓட, சமையல் அறையில் இருந்த சசி வெளியில் வந்து, அவளுக்கென வாங்கி வைத்திருந்த முந்திரிக் கேக்கை அவள் வாயில் திணிக்க, அதை விழுங்கிக் கொண்டே,

“உனக்கு எப்படித் தெரியும்?” என்று அவள் சைகையில் கேட்க, பாஸ்கர் சிரித்துக் கொண்டே தனது மொபைலை எடுத்துக் காட்டினார்.

“ஆனாலும் இதெல்லாம் ஓவர்… நேத்து நைட்டே ரிசல்ட் வந்துடுச்சுன்னு அந்த சுகு சொன்னா…” என்று அவள் சொல்லவும்,

“நாங்க இன்னைக்கு தான் பார்த்தோம்… சரி எப்படியும் நீ ஓடி வருவேன்னு தெரியும்… அது தான் அப்பா ஸ்வீட் வாங்கிட்டு வந்து வச்சிருந்தார்…” என்று சசி சொல்லிவிட்டு,

“மாப்பிள்ளை கொண்டு வந்து விட்டுட்டு போனாராம்மா…” என்று கேட்க, ஷிவானி மறுப்பாக தலையசைத்து, இன்னொரு முந்திரிக் கேக்கை வாயில் போட்டுக் கொள்ள,

“அவருக்கு ரிசல்ட் வந்தது தெரியுமா?” என்று பாஸ்கர் கேட்கவும்,

“தெரியும்ப்பா… அவரும் இருந்து பார்த்துட்டு தான் போனார்…” அவனது இதழ்கள் சொன்ன வாழ்த்தை நினைத்து கன்னம் சிவந்தவள், இப்பொழுதும் காலையில் புகழ் அணைத்தது கனவோ என்ற யோசனைக்குச் செல்ல, அவளது முகத்தைப் பார்த்த சசி, வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு,

“வீட்ல நீ என்ன சமையல் செய்த?” என்ற கேள்வியை எழுப்ப,

“அதுவா… இனியன் தான் காலையில டிபன் செய்தார்… நான் நல்லா தூங்கிட்டேன்…” அசடு வழிய சொன்னவளைப் பார்த்த பாஸ்கர், நாகரீகமாக நகர்ந்து சென்றார். 

“இதெல்லாம் ரொம்ப அநியாயம்டி…” என்ற சசி,

“மதியம் மட்டன் பிரியாணி செய்யலாம்ன்னு இருக்கேன்… மாப்பிள்ளையை இங்க சாப்பிட வரச் சொல்லு… உனக்கு வேற என்ன வேணும்?” என்று கேட்கவும்,

“வேணா அப்பாவை விட்டு அவரைக் கூப்பிடச் சொல்லும்மா… ஆனா… அவர் வருவாராங்கறது சந்தேகம் தான்… வரேன்னுட்டு வராம இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு… அதனால நீ அதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கக் கூடாது…” என்று எச்சரிக்கை செய்ய, அந்த எச்சரிக்கையில் ஒளிந்திருந்த ஏமாற்றம் சசிக்கு புரியவே செய்தது.    

“என்னம்மா… மாப்பிள்ளை வராம இருக்கறது உனக்கு கஷ்டமா இருக்கா?” என்று சசி கேட்க,

“இல்லம்மா… அவர் அப்படித் தான்… எனக்கு பழக்கம் தானே… உனக்காகத் தான் சொல்றேன்..” என்று ஷிவானி புன்னகையுடன் சொல்ல, பாஸ்கரை அழைத்த சசி, புகழுக்கு போன் செய்து அழைக்கச் சொல்ல, பாஸ்கரும் அப்படியே செய்தார்.

“வரேன்னு சொல்லிருக்கார் சசி… நல்லா சமையல் செய்.. ஒரு ரெண்டு வகை ஸ்வீட் செய்துடு… நான் ஒரு மணிக்கு கரெக்ட்டா வந்துடறேன்…” என்று கூறியவர்,

“பைடா சிவா… அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு…” என்றுவிட்டு கிளம்பிச் செல்ல, பேசிக் கொண்டே ஷிவானியும் சசியும் வேலைகளை முடித்தனர்.

“அத்தைக்கு நீ பாஸ் ஆன விஷயத்தை போன் செய்து சொல்லிட்டியா?” என்று சசி கேட்க, அப்பொழுது தான் நினைவு வந்தவளாக,

“இன்னும் சொல்லவே இல்லம்மா…” என்றவள், “ஆமா… அவங்க ஊருக்கு போயிருக்கறது உனக்கு எப்படித் தெsரியும்?” என்று கேட்க,

“ஹ்ம்ம் ஊருக்கு போறதுக்கு முன்ன அவங்க சொல்லிட்டு தான் போனாங்க… நீ தான் சொல்லவே இல்ல…” குறைப்பட்டுக் கொண்டவர்,

“போய் பேசிட்டு வா..” என்று அனுப்பி வைக்க, ஷிவானியும் அவருடன் பேசிவிட்டு வரும்போது, புகழ் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைய, ஷிவானி ஆச்சரியத்தில் விழி விரித்து நின்றாள்.

“என்ன இன்னைக்கு எல்லாமே கனவுல நடக்கற மாதிரியே இருக்கே?” என்று அவள் நினைத்துக் கொண்டு நிற்க, அவள் அருகே வந்தவன், அவள் அவனை அதிசயமாக பார்த்துக் கொண்டு நிற்பதை கவனித்து,

“இன்னைக்கு நடந்தது எதுவுமே கனவு இல்ல வணி… உள்ள போகலாமா?” என்று கேட்க, அவனை அழைத்துக் கொண்டு ஷிவானி உள்ளே வரவும், சசி, அவனை உபசரிக்கத் தொடங்கினார்.

“என்ன இன்னைக்கு அதிசயமா சாப்பிட சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று ஷிவானி கேட்கவும், பதில் எதுவும் சொல்லாமல் அவளிடம் ஒரு கவரை எடுத்து புகழ் நீட்ட, அதை வாங்கி பிரித்துப் பார்த்த ஷிவானியின் கண்கள் சாசர் வடிவில் விரிய, அதைப் பார்த்த சசி,

“ரொம்ப நல்லா இருக்கு மாப்பிள்ளை..” என்று அவனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க,

“என்ன அதிசயம் இனியன்? என்ன இது இப்படி சர்ப்ரைசா வாங்கிட்டு வந்திருக்கீங்க? எதுக்கு இது?” என்று ஷிவானி கேட்கவும்,

“நீ பாஸ் பண்ணினதுக்கு தான் சிவா… விக்ரம்கிட்ட விஷயத்தை சொன்னேனா… அவன் ‘என்ன கிஃப்ட் கொடுத்த’ன்னு கேட்டான்… அப்போ தான் எனக்கு என்ன கிஃப்ட் வாங்கறதுன்னு யோசனை வந்துச்சு… அது தான் நேரா கடைக்கு போய் வாங்கிட்டு வந்தேன்…” என்று அவன் சொல்லவும், ஷிவானி, அவனை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, அந்த புடவையை வருடினாள்.

“இந்த மரமண்டைக்கு யாராவது சொன்னா தான் புரியுமா? ஆனாலும் ஏதோ புடவை வாங்கணும்னு தோணி எடுத்துட்டு வந்திருக்காரே… அதுவே பெருசு… புடவை ரொம்ப அழகா இருக்கு…” என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருக்கவும், இன்னொரு பெட்டியை எடுத்து அவள் கையில் வைக்க, ஷிவானிக்கு திகைப்பில் பேச்சு மறந்து போனது.

“இது என்ன?” அவள் கேட்க, அந்த பெட்டியைப் பிரித்து காட்டியவன்,

“அன்னைக்கு கோவிலுக்கு போக ரெடியா இருந்த போது, இது போல செட் நகை போட்டுட்டு இருந்தியா? அது தான் இந்த புடவைக்கு நல்லா இருக்கும்ன்னு வாங்கினேன்… அப்பறமா கோல்ட்ல வாங்கித் தரேன்…” என்று புகழ் நீண்ட விளக்கம் சொல்லவும், இது புகழ் தானா என்று சில நிமிடங்கள் யோசித்த ஷிவானி, அவனது ட்ரேட்மார்க் புன்னகை முகத்தைப் பார்த்து, ‘அவரே தான்’ என்ற முடிவுக்கு வந்தவளாக, 

“ஹே சூப்பரா இருக்கு இனியன்… நீங்களேவா வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்று அதிசயித்து, மனதினில்,

“இதையும் வேற யாராவது சொல்லி இருக்க போறாங்க” என்று நினைத்துக் கொண்டிருக்க,

“சாயந்திரம் கோவிலுக்கு போகலாம்…” அடுத்த அதிர்ச்சியை புகழ் கொடுக்கவும்,

“திரும்பவும் மொதல்ல இருந்தா?” என்று ஷிவானி மனதினில் நொந்துக் கொண்டாள்.

“நீங்க வந்ததுமே நான் கிளம்பிக்கறேன்… உங்க கடை வேலை என்னவோ எப்படியோ…” என்று சொன்னவள்,

“சூடா பிரியாணி சாப்பிடலாம் வாங்க..” என்று அழைக்க,

“இரு மாமா வரட்டும்… சேர்ந்தே சாப்பிடறேன்…” என்றவன், பாஸ்கரின் வருகைக்காக காத்திருந்தான்.

பாஸ்கர் வரவும், அவரை சிறிதும் பேச விடாமல், உணவறைக்கு அழைத்துக் கொண்டு சென்று, இருவருக்கும் உணவை ஷிவானி பார்த்துப் பார்த்து பரிமாறவும், சசி ஷிவானியை நினைத்து நிம்மதி கொண்டார்.

இங்கிருந்த வரை எப்படி இருந்தாலும், புகுந்த வீட்டிற்குச் சென்று அவள் பொறுப்பாகவும், பொறுமையாகவும் நடந்துக் கொள்வதைப் பார்த்தவர், அவளையும் அமர வைத்து உணவு பரிமாறினார்.

“நீ இங்கயே ரெடியா இரு சிவா… நான் நேரா இங்க வந்து கூட்டிட்டு போறேன்..” என்று சொல்லிவிட்டு, புகழ் கடைக்குக் கிளம்பவும், ஷிவானி பொதுவாக தலையாட்டி வைத்தாள்.

மாலை ஐந்து மணியானதும், “சிவா… நீ ரெடியா இரு… மாப்பிள்ளை வாங்கிட்டு வந்த புடவையை கட்டிக்கோ..” என்று சசி தனது பாட்டைத் தொடங்க,

“அவர் வரட்டும்மா… சும்மா எல்லாம் ரெடி ஆகிட்டு இருக்க முடியாது…” என்று அன்று ஏமாந்தது போல இன்றும் ஏமாறக் கூடாது என்ற எண்ணத்துடன் அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, புகழ் கேட்டைத் திறக்க, அதைப் பார்த்து மயக்கம் போடாத குறையாக, நின்றிருந்த ஷிவானி,

“ஹையோ அம்மா… நிஜமாவே உன் மாப்பிள்ளை வந்துட்டாரும்மா… நான் ரூம்ல போய் ரெடியாகறேன்… நீ அவருக்கு காபி கொடுத்து சமாளி…” என்று சொல்லிவிட்டு, தனது அறைக்கு ஓட்டமெடுக்க,

“சிவா… அப்படியே குளிடா… அவர் வந்தாலும் ஒரு குளியலைப் போடச் சொல்லு… அசைவம் சாப்பிட்டு இருக்கீங்க…” என்று அவர் கத்துவதைக் கேட்டு திரும்பிப் பார்த்தவள், ‘சரி…’ என்று தலையசைத்து விட்டு அறைக்குள் செல்ல, சசியும், அவள் சொன்னது போலவே செய்தார்.

“அத்தை… சிவா எங்க?” காபியை குடித்துக் கொண்டே புகழ் கேட்கவும்,

“அவ ரெடி ஆகிட்டு இருக்கா மாப்பிள்ளை…” என்று சசி சொல்லவும், பையில் இருந்த ஒரு பூ கவரை எடுத்து சசியிடம் கொடுத்தவன், “ஷிவாவை வச்சிக்க சொல்லுங்க…” என்று சொல்ல, புன்னகையுடன் வாங்கிக் கொண்டவர்,

“இதை நீங்களே அவகிட்ட கொடுத்திருங்க…” என்று பாதியை கிள்ளி அவனிடம் கொடுத்து,

“அப்படியே நீங்களும் பிரெஷ் ஆகிட்டு வாங்க” என்று அனுப்பி வைக்க, புகழ் ஷிவானியின் அறைக்குச் சென்று, கதவைத் தட்டிவிட்டு நின்றான்.

கதவைத் திறந்தவளைப் பார்த்தவன், அதிசயித்து நிற்க, அதை விட அவன் கையில் இருந்த பூவைப் பார்த்து ஷிவானி வாயடைத்துப் போயிருக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க,

“சிவா… இருட்டறதுக்கு முன்ன கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போங்க… இப்போ சீக்கிரம் ரெடி ஆகுங்க…” சசி குரல் கொடுக்க, உள்ளே நகர்ந்து அவனுக்கு வழி விட்டவள்,

“போய் ஒரு குளியலைப் போட்டுட்டு வாங்க… சீக்கிரம் கிளம்பலாம்… இல்ல அதுக்கும் சேர்த்து சசி என்னைத் திட்டுவாங்க…” என்று சொன்னவள், மீண்டும் கண்ணாடியின் முன்பு நிற்க, அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டே புகழ் குளித்துவிட்டு வந்து, தயாராகி புறப்பட, ஷிவானி சந்தோஷமாக புறப்பட்டு போனாள்.

பைக்கின் பயணம் இருவருக்குமே உள்ளத்தில் மகிழ்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்க, அதைவிட, ஷிவானி அமர்ந்து அவனது இடுப்பில் கை போட்டு பிடித்துக் கொள்ளவும், அந்த ஸ்பரிசம் புகழுக்கு இனிமையைக் கொடுத்தது. கோவிலுக்கு சென்ற பின் அடுத்து என்ன என்பது போல ஷிவானி பார்க்க, புகழ் அமைதியாக வண்டியை எடுக்கவும்,

“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…” என்று நினைத்துக் கொண்டவள், வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

 

7 COMMENTS

 1. தூவானம் தூவ தூவ
  மழை துளிகளில் உன்னை கண்டேன்
  என் மேலே ஈரம் ஆகா
  உயிர் கரைவதை நானே கண்டேன்
  கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
  அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
  வேறு என்ன வேண்டும் வாழ்வில
  தூவானம் தூவ தூவ
  மழை துளிகளில் உன்னை கண்டேன்

  Very nice update sister

 2. hi ramya,
  pugazhal asathurane,shiva vin aasaigal niraiverikonde irukirathu padipatharku
  thirupthiyaga irugirathu.kavithai superrrrrrrrrrrrrrr.keep rocking.

  with love
  geet.

LEAVE A REPLY