SHARE

உள்ளம் கொள்ளை போகுதடா..
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா..

தூறல் போலே காதல் தீண்ட
நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்..

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா…

கடை திறப்பு விழா முடிந்து, மதியம் போல வீட்டிற்கு வந்த ஷிவானியும் மல்லிகாவும், கடையை பார்த்து மிகவும் திருப்தியாகவும், பெருமையாகவும் உணர்ந்தனர். 

“கடை திறப்பு விழா நல்லா நடந்தது இல்ல?” மல்லிகா புகழின் வளர்ச்சியைக் கண்டு நிறைவாகச் சொல்ல,

“ஆமா அத்தை… ரொம்ப ஹாப்பியா இருக்கு…” என்று அவரது சந்தோஷத்தில் பங்கு கொண்டவள்,

“அவருக்கு ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் கொடுக்கணும் அத்தை… அவருக்கு இத்தனை நாளா ரொம்ப அலைச்சல்… டயர்ட்டா இருக்கற மாதிரி இருக்கு… பேசாம அவரை வீட்ல ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, நான் போய் அங்க கடையை செட் பண்றதை பார்த்துக்கறேன்… சும்மா அவங்க சரியா டெலிவரி செய்திருக்காங்களான்னு செக் பண்ணினா போதுமே…” புகழின் சோர்ந்த முகத்தையும், அதையும் மீறி, ஒரு நிம்மதியும் தெரிந்த முகத்தை மனதினில் கொண்டு வந்தவள், மல்லிகாவிடம் கூறிக் கொண்டிருக்க, ‘புகழ் இதற்கு சம்மதிப்பானா?’ என்ற யோசனைக்கு மல்லிகா சென்றார்.

“என்ன அத்தை… நான் இவ்வளவு கேட்கறேன்… நீங்க அமைதியா இருக்கீங்க? நான் கடைக்கு போறது உங்களுக்கு பிடிக்கலையா?” இயல்பாக அவள் கேட்க,

“இல்லம்மா.. புகழ் சம்மதிப்பானான்னு யோசிச்சிட்டு இருந்தேன்… எதுக்கும் நான் சாயந்திரம் சொல்றேனே…” என்று அவர் அப்போதைக்கு பேச்சை முடித்துவிட, ஷிவானியும் அமைதியாகிப் போனாள்.

மீண்டும் மாலையில் டீயைக் குடித்துக் கொண்டே அவள் அந்த பேச்சையேத் தொடங்கவும், அந்த நேரம் புகழ் வீட்டின் உள்ளே நுழைந்தான். அவனின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவள்,

“என்னங்க? காபி கொண்டு வரவா?” ஷிவானி படபடக்க,

“கொஞ்சம் சூடா வேணும் சிவா… ரொம்ப தலை வலிக்குது…” என்று அவன் சொன்னது தான் தாமதம், வேகமாக சென்று பாலை சுட வைத்து, அவனுக்கு காபியைக் கொண்டு வந்து, அவனிடம் கொடுத்துவிட்டு, வேகமாச் சென்று தைலத்தை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“எங்க ஓடறா இவ?” புகழ் முணுமுணுத்துக் கொண்டு, காபியைப் பருக, தைலத்தை கொண்டு வந்து, அவனது நெற்றியில் தடவியவள், அவனுக்கு பதமாக பிடித்து விட,

“ரொம்ப தேங்க்ஸ் சிவா… இப்போ கொஞ்சம்பரவால்லாமா இருக்கு…” என்று சொன்னவன், முகம் கழுவிக் கொண்டு வர, ஷிவானி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“இப்போ கொஞ்சம் பிரெஷ்ஷா இருக்கு ஷிவா…” அவன் சொல்லவும்,

“நீங்க ரொம்ப டயர்ட்டா இருக்கீங்க… அது தான் இப்படி தலைவலி…” என்று தொடங்கியவள்,

“நான் ஒண்ணு சொல்றேன்… நீங்க கேட்பீங்களா?” என்று பீடிகைப் போட,

“என்ன பீடிகை ஓவரா இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே, புகழ் அவள் புறம் திரும்பி அமர, எப்படி அவனிடம் சொல்வது என்ற யோசனையில் ஒரு சில வினாடிகள் ஷிவானி அமைதியானாள்.

“சொல்லு சிவா… என்னவோ சொல்ல வந்தியே…” என்று புகழ் மீண்டும் கேட்கவும்,

“இல்ல… பெருசா ஒண்ணும் இல்ல.. நீங்க ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுங்களேன்…” என்று சொல்லவும்,

“கடையில பொருள் எல்லாம் வந்து இறங்கும் சிவா… அநேகமா நாளைக்கு வரும்ன்னு எதிர்பார்க்கிறேன். அதை எல்லாம் வாங்கி வைக்கணும் இல்ல… இப்போவே ரெஸ்ட் எடுக்க எனக்கு என்ன ஆச்சு சொல்லு?” என்று புகழ் பதில் கேள்வி கேட்க,

“இல்ல இனியன்… நீங்க ரொம்ப டல்லா இருக்கீங்க… உங்க முகமெல்லாம் சோர்ந்து இருக்கு… அதனால தான் சொல்றேன்…” என்று அவளும் பதிலுக்கு பதில் பேச, அவர்கள் இருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு, புகழ் கோபப் படக் கூடாதே என்று கவலையாக இருந்தது.

“சரி… இப்போ நான் ரெஸ்ட் எடுக்கறேன்… கடை வேலையை யாரு பார்ப்பா?” புகழ் கேட்க, ஷிவானி பதில் சொல்ல வாயைத் திறக்கும் முன்,

“மத்தவங்களால முடியாது… ஏன்னா அவங்களுமே ரொம்ப அலைஞ்சிட்டு இருக்காங்க…” என்று புகழ் சொல்லி முடிக்க,

“சரி… நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் போய் அதை எல்லாம் சரி பார்க்கறேன்.. நீங்க ஆர்டர் போட்டு இருக்கற லிஸ்ட் படி வந்திருக்கான்னு தானே பார்க்கணும்?” அவனுக்கு உதவும் எண்ணத்தில் சாதாரணமாக ஷிவானி கேட்கவும், புகழின் முகம் இறுகியது.

“கடையில எல்லாம் நீ போய் நிற்க வேண்டாம்.. எனக்கு ஒண்ணும் ஆகலன்னு நான் சொல்றேன் இல்ல…” என்று புகழின் குரல் சட்டென்று உயர்ந்து ஒலிக்க, ஷிவானிக்கு முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“சரி… என்னவோ செய்துக்கோங்க” என்று எழுந்து அறைக்குச் சென்றவள், ஒரு மூச்சு அழுது தீர்த்து, துணிகளை அடுக்கும் சாக்கில் அறையிலேயே தங்கிக் கொண்டாள்.

அதுவரை குறுக்கிடாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா, “என்னடா… உன் முகம் சோர்ந்து இருக்குன்னு தானே அவ கேட்டா… எதுக்கு இப்படி சத்தம் போட்ட?” என்று கேட்கவும்,

“கோபப்படலைம்மா.. அவ எதுக்கும்மா கடையில போய் நிக்கணும்? அதெல்லாம் சரிப்படாது..” என்று கூறியவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல், அறைக்கு எழுந்து செல்ல, பீரோவினுள் முகம் புதைத்துக் கொண்டு நின்றிருந்தவளை நெருங்கி, பின்னால் இருந்து அணைத்தவன், அவளது தோளில் முகம் பதித்தான்.

அவனது முகத்தை ஷிவானி தட்டிவிட, “கோபமா வணி… நான் எதுக்கு சொல்லறேன்னு புரிஞ்சிக்கோ… அங்க சாமான் எல்லாம் கொண்டு வர்ர ஆளுங்க யாரு எப்படின்னு தெரியாது? உன்னை தனியா அனுப்பிட்டு நான் இங்க நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு?” என்று அவன் மெதுவாக, அவளைத் திருப்பி அணைத்துக் கொண்டு கேட்க, அவனது கரத்தினுள் சரண் புகுந்தவள்,

“எதுக்கு அப்படி சத்தம் போட்டீங்க?” என்று சிணுங்க,

“சட்டுன்னு சவுண்ட் வந்திருச்சு… நான் உன்னை கோவிச்சுக்க எல்லாம் இல்லம்மா…” என்று புகழ் அவளை சமாதானம் செய்தான்.

“நான் உங்க நல்லதுக்கு தானே சொல்றேன்…” என்று அவள் திரும்பக் கேட்கவும்,

‘என் செல்லம் காட்சிப் பொருளா இருக்கறதை நான் விரும்பல… நீ எனக்கு மட்டுமே சொந்தம்… உன்னை வேறொருத்தன் பார்க்கக் கூட கூடாது’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், வாய்விட்டு சொல்லி இருந்தால், பின் வரும் பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாமோ?

புகழின் மனது நினைத்ததே தவிர, அது வாய் மொழியாக சொல்லாதது அவனது தவறா? அல்லது விதியின் செயலா?

“எனக்கு ஒண்ணும் இல்லம்மா…” புகழ் சமாதானம் சொல்ல,   

“சரி விடுங்க… ஏதோ வீட்ல சும்மா இருக்கறதுக்கு ஹெல்ப் பண்ணலாமேன்னு தான் கேட்டேன்…” என்று காரணம் சொன்னவள்,

“உங்க இஷ்டம்… எனக்கு வேலை இருக்கு…” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து செல்ல, புகழ் அவளது கோபத்தைக் கண்டு ரசிக்கத் தொடங்கினான்.     

ஷிவானி வெளியே வரவும், போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த மல்லிகா, சந்தோஷத்துடன் அவளைப் பார்த்து புன்னகைத்து, “சித்ரா உண்டாகி இருக்காளாம் சிவா… என் வேண்டுதல் வீண் போகல..” என்று சந்தோஷ செய்தியைச் சொல்லவும்,

“ஹை… சூப்பர் அத்தை… சித்ரா அண்ணி லைன்ல இருக்காங்களா?” என்று கேட்டவள், மல்லிகா போனை நீட்டவும், சந்தோஷமாகப் பேசத் துவங்கினாள்.

“சிவா.. எனக்கு ஒரு ஹெல்ப்… எனக்கு ரொம்ப தலை சுத்தலாவும், வாந்தியாவும் இருக்கு… கொஞ்சம் ஹெல்ப்புக்கு அம்மா இங்க வரட்டுமா?” என்று சித்ரா அவளிடம் அனுமதி வேண்டவும்,

“அண்ணி… நீங்க இங்க வந்திருங்க அண்ணி… இங்க நானும் அத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்து உங்களைப் பார்த்துக்கறோம்… இங்க பக்கத்துல நல்ல டாக்டர் இருக்காங்க…” என்று ஷிவானி சொல்லவும்,

“நாங்க முதல்ல அது தான் நினைச்சோம்… ரொம்ப நாள் கழிச்சு உண்டானதுனால டாக்டர் ட்ராவெல் செய்யக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க சிவா… அதனால தான் ரொம்ப பயமா இருக்கு… அதான் நான் அம்மாவைக் கூப்பிடறேன்…” என்று சித்ரா விளக்கம் சொல்லவும்,   

“ஓ… அதுவும் சரி தான் அண்ணி… நாம தானே ஜாக்கிரதையா இருக்கணும்… என்ன அண்ணி அனுமதின்னு எல்லாம் கேட்கறீங்க? நீங்க கூப்பிடுங்க அத்தை வருவாங்க… இங்க நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் அத்தை எனக்கு சொல்லிக் கொடுத்துட்டாங்க… நான் மேனேஜ் செய்துக்கறேன்… இப்போ நீங்க ரெஸ்ட்ல இருக்கணும் அண்ணி… அது தான் ரொம்ப முக்கியம்…” என்று ஷிவானி சொல்லவும், அதைக் கேட்டுக் கொண்டே வந்த புகழிடமும், மல்லிகா விஷயத்தைச் சொல்ல, புகழும் மகிழ்ந்து போனான்.  

“அக்கா… நிஜமாவா…” என்று கேட்டவன், ஷிவானியின் கையில் இருந்து போனைப் பிடுங்காத குறையாக பிடுங்கி பேசி விட்டு வந்தான்.

“அம்மா… நாளைக்கு காலையில நான் உங்களை அக்கா வீட்ல கொண்டு விட்டுட்டு வரேன்… உங்களுக்கு தேவையானதையும், மறக்காம, மாத்திரையையும் எடுத்து வச்சிக்கோங்க…” என்று புகழ் சொல்லவும்,

“நானும் உங்க கூட வந்துட்டு திரும்ப வரேன்… அண்ணியைப் பார்த்தது போல இருக்கும்…” என்ற ஷிவானி, என்ன எல்லாம் எடுத்துச் செல்வது என்று பட்டியலிடத் துவங்கினாள்.

“நாம கார் தான் எடுத்துட்டு போறோம்…” என்று புகழ் சொல்ல,

“நாம… கா……..ரை எடுத்துட்டு போறோம்… அண்ணிக்கு நிறைய பழம் எல்லாம் வாங்கிட்டு வரணும்… அப்பறம் பால்ல குங்குமப்பூ போட்டு குடிக்க அதையும் வாங்கணும்… இங்க எனக்கு தெரிஞ்ச ஒரு கடை இருக்கு… அங்க ரொம்ப சுத்தமா இருக்கும்ன்னு அம்மா சொல்லுவாங்க…” என்று அத்தனை நேரம் இருந்த பிணக்கம் மறந்து போய், பேசிக் கொண்டே சென்றவளைப் பார்த்த புகழ் சிரித்துவிட்டு,

“சரி… அஞ்சு நிமிஷத்துல கிளம்பு… நானே உன்னை கூட்டிட்டு போறேன்…” என்றவன், சேரில் அமர,

“இப்போவே நான் ரெடி தான்… சுடிதார்ல தானே இருக்கேன்… போகலாம்…” என்று உற்சாகத்துடன் சொல்லும் தனது மனையாளைப் பார்த்த புகழுக்கு அவளை கொஞ்ச வேண்டும் போல ஆவல் எழுந்தாலும், இது நேரமல்ல என்று தெளிந்து, அவளுடன் கிளம்பிச் சென்றான்.

பாதாம், பழங்கள், ஸ்வீட் என்று ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவள், மல்லிகாவிற்கு அனைத்தையும் எடுத்து பேக் செய்து கொடுத்து உதவினாள்.

அவளது துறுதுறுப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த புகழுக்கு பசி வயிற்றை கிள்ளத் துவங்கி இருந்தது. ஷிவானியோ அந்த நினைவே இல்லாமல், மல்லிகாவுடன் வளவளத்துக் கொண்டு அவருக்கு பையை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

மணி ஒன்பதரை ஆகி, புகழின் பசி மிஞ்சிக் கொண்டிருக்க, ‘தனக்குத் தானே உதவி…’ என்று நினைத்துக் கொண்டவன், அவனே கிட்செனில் என்ன இருக்கிறது என்று பார்க்கத் தொடங்கினான்.

தோசையோ, இட்லியோ செய்ய முடியாத அளவிற்கு மாவும் இல்லாமல் இருக்கவும்,

“இப்படி மாமியாரும் மருமகளும் சேர்ந்து என்னைப் பட்டினி போடறாங்களே.. என்னைப் பத்தி ரெண்டு பேருக்கும் நினைவு இருக்காப் பாரு…” என்று நினைத்துக் கொண்டவன், பொங்கல் செய்ய எண்ணி, அதை அடுப்பில் ஏற்றிவிட்டு, ஹாலில் வந்து அமர்ந்தான்.

மெதுவாக எடுத்து வைத்துவிட்டு வெளியில் வந்தவள், குக்கரின் சத்தத்தில் மணியைப் பார்த்து, “ஹையோ… அத்தை… மணி ஒன்பதரை..” என்று அலற,

“ஹ்ம்ம்… ஆமா.. சப்பாத்தி செய்யலாம்ன்னு நினைச்சிட்டு இருந்தேனே… குக்கர்ல இவன் என்ன வச்சிருக்கான்?” என்று மல்லிகா ஷிவானியிடம் கேள்வி கேட்க,

“அவளுக்கு என்ன தெரியும்? வச்சவன் நான்… எனக்குத் தானே அது என்னன்னு தெரியும்…” என்று கேட்ட புகழ்,

“உங்க ரெண்டு பேருக்கும் தான் என் நியாபகமே இல்லையே… அதான், நானே என் வயித்தை பார்த்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.. அது தான் பொங்கல் வச்சிட்டேன்…” அவன் சொல்லி முடிப்பதற்குள்,  

“இந்த நேரத்துலையா?” என்று ஷிவானி கேட்க,

“பின்ன மாவும் இல்ல.. என்ன செய்யப் போறீங்கன்னும் தெரியல… அது தான் நான் இதை செய்துட்டேன்…” என்றவன்,

“நாளைக்கு நேரத்துலையே கிளம்பனும்… சீக்கிரம் சாப்பிட்டு படுங்க… ஊறுகாய் தொட்டு சாப்பிட்டுக்கலாம்…” என்று சொல்லிவிட்டு, குக்கரை எடுத்து வந்து டேபிளில் வைக்க, ஷிவானி வேகமாக பரிமாறத் துவங்கினாள்.

மறுநாள் அதிகாலையிலேயே சித்ராவின் வீட்டிற்குக் கிளம்பியவர்கள், ஒரு மணி நேரத்தில் அவளது வீட்டை அடைந்தனர். சித்ராவைப் பார்த்த ஷிவானி, “சூப்பர் அண்ணி… குட்டிப் பாப்பா வரப் போகுதா?” என்று குதூகலிக்க,

“எங்க வீட்ல நீ வந்த நேரம் தான் சிவா… எல்லாமே சந்தோஷமா நடக்குது..” என்று ஷிவானிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த சித்ரா, எப்பொழுதும் முகத்தில் இருக்கும் இறுக்கம் சற்று குறைந்தார் போன்று, மனம் நிறைந்து புன்னகைத்துக் கொண்டிருந்த தனது தம்பியின் மீது பார்வையை பதித்தபடி கூற, புகழ் காதலுடன் ஷிவானியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணி…” என்று மறுத்தவள்,

“நிறைய பழம் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன்… சாப்பிடுங்க… அத்தைக்கு தான் நான் தனியா சமாளிப்பேனான்னு ரொம்ப கவலை… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அண்ணி… உங்க ஹெல்த்தை அத்தை பார்த்துக்குவாங்க… நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்று படபடவென்று பேச, புகழ், அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

“சரிங்க பாட்டி… நான் பத்திரமா இருக்கேன்…” என்று சித்ரா ஷிவானியை கிண்டல் செய்யவும்,

“என்னங்க என்னைப் போய் பாட்டின்னு சொல்றாங்க…” என்று ஷிவானி சிணுங்க,

“பின்ன.. நீ இப்படி அட்வைஸ் பண்ணினா அப்படித் தான் சொல்லுவாங்க…” என்று புகழும் காலை வாரிவிட, சித்ராவும் மல்லிகாவும் சிரிக்க, அந்த மகிழ்ச்சியுடனே மதிய உணவை முடித்துக் கொண்டு, புகழும் ஷிவானியும் தங்கள் வீட்டிற்குக் கிளம்பினர்.

அவனுடன் தனியே ஒரு மணி நேரமானாலும், அந்த பயணம் ஷிவானிக்கு இனிமையைக் கொடுத்தது. அவனுடனான தனிமையை ரசித்துக் கொண்டே வந்தவள், மெல்ல நகர்ந்து அவன் தோளில் சாய,

“வண்டி ஓட்டும் போது இப்படி சாஞ்சா நான் எப்படி வண்டியை ஓட்டறது?” என்று புகழ் கேட்க,

“ஹ்ம்ம்.. அப்போ கதையில எல்லாம் சொல்றது எப்படியாம்?” என்று அவள் முணுமுணுக்க, அதை காதில் வாங்கிய புகழ்,

“அதெல்லாம் கதையில தான் சரியா வரும்… இப்படி நீ படுத்தா… உன்னை நான் வேடிக்கைப் பார்த்துட்டு நான் எங்க வண்டியை ஓட்டறது?” என்று சொன்னவன், எதையோ நினைத்து மனதினில் சிரித்துக் கொள்ள, அவனது இதழோரம் சிரிப்பில் துடித்தது.

“என்ன? சிரிக்கிற மாதிரி இருக்கு?” அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி கேட்கவும்,

“ஒண்ணும் இல்ல… நான் சிரிக்கிற மாதிரி நீ கனவு கண்டிருப்ப…” என்று நக்கல் செய்தவன், அதற்கு மேல் மிகுந்த கவனத்துடன், காரைச் செலுத்துவதில் ஈடுப்பட்டான்.

“எனக்கு என்ன கனவு காண்ற வியாதியா?” என்று முதலில் நினைத்தவள், “ஒருவேளை இவர் எதுக்கு எடுத்தாலும் சிரிக்கிறதுனால அப்படித் தோணுதோ?” என்று நினைத்துக் கொண்டு கண்களை மூட, நன்றாக உறங்கியும் போனாள்.

இதழ்களை சிறு கீறல் அளவு பிளந்துக் கொண்டு அவள் உறங்கும் அழகை ரசித்துக் கொண்டு வந்தவன், வீடு வந்ததும், ஷெட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, மெல்ல அவளது கன்னத்தைத் தட்ட, ஷிவானி கண்களை திறந்துப் பார்த்தாள்.

“நீ உள்ளப் போ… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் கடைக்கு போயிட்டு வரேன்… ரெண்டு வீட்டுல சர்வீஸ்க்கு வேற கூப்பிட்டு இருக்காங்க… வர டைம் ஆகும்… நீ கதவைப் பூட்டிக்கோ… என்னோட சாவியை போட்டு திறந்துட்டு வந்துக்கறேன்…” என்று சொன்னவன், அவள் திகைத்து நிற்பதை கூட கவனிக்காமல், வீட்டைத் திறந்து, தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் செல்ல, முதல் முறையாக ஷிவானி பேச்சற்று நின்றிருந்தாள்.

எதுவும் செய்யத் தோன்றாமல் நின்றிருந்தவளுக்கு, அந்த வீட்டின் வெறுமை முகத்தில் அறையத் துவங்க, திக் திக் என்று நெஞ்சம் அடித்துக் கொள்ளத் துவங்கியது.

“சிவா… ஒண்ணும் இல்ல… பேசாம படுத்து தூங்கிடு…” என்று தனக்குத் தானே தேறுதலாக பேசிக் கொண்டவள், அறைக்குச் சென்று வேகமாக உடையை மாற்றிக் கொண்டு வந்தவள், சோபாவில் படுத்துக் கொண்டு, டிவியில் பாட்டை ஓட விட்டுக் கொண்டு, கண்களை மூடிப் படுத்தாள்.

படுத்தாலும் உறக்கம் வந்துவிடுமா என்ன? காரில் ஒரு மணி நேரம் நன்றாக உறங்கியவளுக்கு உறக்கமும் எட்டாக்கனியாக மாறிவிட, மனம் என்னும் குரங்கு தனது வேலையைச் செவ்வனே செய்யத் துவங்கியது.

“அம்மாவும் இல்ல… நான் தனியா என்ன செய்வேன்னு கொஞ்சமாவது இனியனுக்கு தோனிச்சான்னு பாரு… என்னவோ விட்டுட்டு போனா சரின்னு ஓடிப் போயிட்டார்…” என்ற முதல் புலம்பல் மனதினில் வந்து முகாமிடத் துவங்கியது.

“ஹ்ம்ம்… என்ன வேலையோ? உழைப்பு மனுஷனுக்கு முக்கியம் தான்… அதுக்குன்னு குடும்பம் குட்டி எல்லாத்தையும் இப்படியா கண்டுக்காம இருக்கறது?” என்று நினைத்துக் கொண்டவள், தன் தலையிலேயே தட்டிக் கொண்டு,

“அவரைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் இப்படி நினைச்சுருக்க கூடாது… சும்மா இருந்தா தான் என்ன என்னவோ தோணுது… பேசாமா நைட்க்கு என்ன டிபன் செய்யறதுன்னு பாரு…” என்று தனக்குள் என்று தனக்குள் அறிவுறுத்திக் கொண்டே, எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.

இப்பொழுது புகழின் நினைவு பின்னுக்குத் தள்ளப்பட்டு, மல்லிகாவின் பிரிவே அவளை மிகவும் வாட்டத் துவங்கியது. அவளுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டி, அவளுக்கு சரி சமமாக சினிமா, கேலி என்று எதையாவது பேசிக் கொண்டே அவளை அந்த வீட்டில் ஒருத்தி போல, பாங்காக அந்த குடும்பத்தில் ஒருத்தியாக பதிய வைத்தவர் இல்லாமல் ஷிவானிக்கு தான் என்னவோ போல் இருந்தது.

“அத்தை இருந்தா… இத்தனை நேரம் சமையல் முடிச்சு இருப்பாங்க…” என்று ஒவ்வொன்றுக்கும் மல்லிகாவின் நினைவே வர, ஷிவானிக்கு தன் மீதே ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது.

“இனியனை விட நான் அத்தை இல்லாதததை இவ்வளவு      ஃபீல் பண்றேன்னா… அப்போ இனியன் என்னை இந்த வீட்ல பதிய வைக்கிற அளவுக்கு என்னை நடத்தலையா? எல்லா பெண்களுக்கும் கணவன் தானே அந்த வீட்ல இருக்கறவங்களோட கம்ஃபர்ட் லெவலைக் கொடுக்கணும்… அது செய்தாரா? என்னைக்காவது அவங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசி இருக்காரா?” அவளது யோசனைகள் நீண்டுக் கொண்டே போக, மூளையில் தோன்றிய ஒரு விஷயம் அவளது மனதினில் சுள்ளென்றுசுட்டது.

“இனியன் தன்னிடம் என்றைக்காவது தனது குடும்பத்தைப் பற்றியும், தனது விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் சொல்லிருக்கிறானா? திருமணம் முடிந்த நாள் முதலே, அவளது பேச்சுக்கும் சில சமயம் பதில் வந்தாலும், பல சமயங்கள் வெறும் புன்னகையால் பதில் கூறியவன், கடை விஷயத்திற்கு கேட்டதோடு சரி… தன்னைப் போல, எதையுமே கூறியதில்லையே… அப்பொழுது அவனது மனதில் தான் எந்த இடம்?” என்ற கேள்வி அவளது மண்டையைக் குடையத் துவங்க, அதற்கான விடையை அறிய, அவள் புகழ் பேசிய அனைத்தையும் மீண்டும் மனதினில் ஓட்டிப் பார்க்க, ஷிவானிக்கு தலைவலி எடுக்கத் துவங்கியது.                  

எதையுமே சொல்லாமல்…. மொத்தமாக புகழ் அவளிடம் பேசியவைகளை கணக்கில் கொண்டால், ஷிவானி ஒரு நாளைக்கு பேசும் வார்த்தைகளை விட, அவன் பேசியது குறைவு என்பது உரைக்கவும், ஷிவானிக்கு அழுகை வந்தது.

அது போல வேண்டாத எண்ணங்கள் மனதை குடையத் துவங்க, தலை வலியின் தொல்லை வேறு பாடாய் படுத்த, சூடாக ஒரு காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தவள், டிவி சேனலை மாற்றி, அதில் ஏதோ படம் ஓடிக் கொண்டிருக்கவும், அதைப் பார்க்கத் தொடங்கினாள்.

இரவு உணவும், புகழ் வந்த பிறகு உண்ணலாம் என்று அவள் காத்திருக்க, வெகுநேரம் கழித்தே வீட்டிற்கு வந்தவன், “சிவா… பசிக்குது… டிபன் எடுத்து வை…” என்று கூறிவிட்டு, அறைக்குச் சென்று, சுத்தமாகி வந்தவன், அவள் எடுத்து வைத்திருந்த  தட்டில் அமர்ந்து, உணவுண்ணத் துவங்க, ஷிவானியின் பசியும் அவளை அமரும் படி கெஞ்சியது.

புகழ் ஒரு வார்த்தை அவள் சாப்பிட்டாளா? என்று விசாரிப்பான் என்று எதிர்ப்பார்த்து கொண்டு நிற்க, அவளைப் பற்றிய எந்த எண்ணமும் இன்றி புகழ் உண்டு கொண்டிருக்க, என்ன செய்வதென்று புரியாமல் ஷிவானி நின்றிருந்தாள்.

அவன் உண்டு முடித்து எழுந்து கொள்ளவும், தான் இப்பொழுது சாப்பிட அமர்ந்தால், அவன் கேட்பான் என்று நினைத்து, ஷிவானி சாப்பிட அமர, அவளைத் திரும்பிப் பார்த்தவன், எதுவும் பேசாமல், கையைக் கழுவிக் கொண்டு, அறைக்குச் செல்ல, உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது.

எதுவோ ஏமாற்றம் மனதினில் தோன்ற, அதுவும் உணவைப் போல தொண்டையில் சிக்க, அதை உணவுடன் சேர்ந்து தண்ணீருடன் விழுங்கியவள், வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்த பசிக்காக உண்டுவிட்டு, எழுந்து சமையல் அறையை ஒதுக்கி வைத்துவிட்டு படுக்கை அறைக்கு வர, புகழ் குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். 

4 COMMENTS

 1. உள்ளம் கொள்ளை போகுதடா..
  உன் அருகில் உன் சிரிப்பில்
  என்னை மறந்தேன் நானடா..
  தூறல் போலே காதல் தீண்ட
  நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
  பூவில் எல்லாம் வீசும் வாசம்
  என்னை நீ என்ன செய்தாய்..
  உள்ளம் கொள்ளை போகுதடா
  உன் அருகில் உன் சிரிப்பில்
  என்னை மறந்தேன் நானடா…

  super update ku thanks

 2. superb ud,pa.middle class life il nadapavattrai kannmunnae kativitirgal.ithil yaar sari yaar thapu endru pirika mutiyamal iruvarume avaravar paarvayil nallavargale.mounama pesuma?!

  with love
  geet.

LEAVE A REPLY