SHARE

சின்ன சின்ன தருணங்கள்
எல்லாம்
நீ உடன் இருந்தால்
இன்னும் அழகாய் இருக்கும் என்ற
எதிர்பார்ப்பிற்கான காரணம்
நீ எனக்கானவள்  என்பதே

அவர்கள் இருவரின் பார்வையையும் கண்டு கொண்டவன், கையைக் கழுவிக் கொண்டு, டைனிங் டேபிளின் அருகே வர, ஷிவானி மேலும் திகைத்த பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “என்னை விட்டுட்டு இட்லி சாப்பிடறியா?” என்று கேட்க, அப்பொழுது தான் மல்லிகாவின் கெஞ்சலுக்கும் சமாதானத்துக்கும் பணிந்து சாப்பிட அமர்ந்தவள்,

“நான் இன்னும் சாப்பிடவே இல்ல… அத்தையும் தான்…” என்று அழுத்தமாகச் சொல்ல,

“சரி உங்க அத்தையை உட்காரச் சொல்லு… சேர்ந்து சாப்பிடலாம்…” என்று மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே புகழ் சொல்ல, மல்லிகா காது கேளாதவர் போல நகர்ந்து சென்றார்.

“அம்மா… ப்ளீஸ்… சாப்பிட வாங்க…” புகழ் பாவம் போலக் கெஞ்சவும், அவரும் தட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து அமர, ஷிவானி மல்லிகாவையும் புகழையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க,

“இவ என்னை காலையில திட்டிட்டா… என்னன்னு தான் கொஞ்சம் கேளுங்களேன்” என்று புகழ் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, மல்லிகாவின் இதழ்களில் மெல்லிய கீற்றுப் புன்னகை உதயமானது.

“சரி அந்த சிரிப்போட அப்படியே சாப்பிடுங்க… உங்க செல்ல மருமகள் வந்த உடனே என்னை மறந்துட்டீங்க” என்று அவன் மல்லிகாவை சமாதானம் செய்ய, ஷிவானி இட்லியை கையில் வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்க,

“சிவா… அதோட ரேடியஸ் என்னன்னு அளந்து முடிச்சிட்டியா?” என்று புகழ் கிண்டலாகக் கேட்கவும்,

அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல், “ஹ்ம்ம்… சாப்பிட தான் யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றவள் வேகமாக அந்த இட்லியை திணித்துக் கொள்ள, அது அவளது தொண்டையில் சென்று சிக்கிக் கொண்டது.

அதை விழுங்க முடியாமல் அவள் திணறவும், அவளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தவன், “நான் என்ன அந்த இட்லியை பிடுங்கிக்கவா போறேன்…? எதுக்கு இவ்வளவு அவசரம்?” என்று கேட்க, அதுக்கும் ஏதும் பதில் இல்லாமல் அமைதியாக அந்த இடம் இருக்கவும்,

“நாம வெளிய போகலாமா?” என்று புகழ் கேட்க, மல்லிகாவின் அந்த சிறு கீற்றுப் புன்னகையும் மறைந்தது.

“அய்யா சாமி… வேண்டாம்… நீங்க வேலை பிசியில மறந்துடுவீங்க… நான் இங்க ரெடி ஆகி ஏமாந்து உட்கார்ந்து இருக்கணும்… நம்மால தினமும் இந்தக் கதை ஆகாதும்மா…” என்று ஷிவானி பட்டென்று சொல்லவும், புகழின் முகம் ஒரு நிமிடம் வாடியது.

அதைக் கண்டும் காணாமல் ஷிவானி அமைதியாக இருக்க, “இப்போவே உன்னை கூட்டிட்டு போறேன் வர்ரியா?” பரிதாபமாக அவன் மீண்டும் கேட்கவும், ‘ஹான்…’ என்று ஷிவானி நம்ப முடியாத பார்வைப் பார்க்க,

“வா இப்போவே சாப்பிட்டு வெளியே கிளம்பலாம்…. மதியம் வெளிய சாப்பிட்டு வீட்டுக்கு வரலாம்…” என்று அவன் சொல்லவும், இன்னமும் நம்ப முடியாமல் ஷிவானி பார்க்க,

“கையோட கூட்டிட்டு போறேன்…” அழுத்தமாக அவன் சொல்வதைக் கேட்ட ஷிவானிக்கு குதூகலம் தொற்றிக் கொண்டது.

“அம்மா… நீங்களும் கிளம்புங்க… நம்ம புது கடையைப் பார்த்துட்டு அப்படியே சாப்பிட்டு வரலாம்…” என்று அவரையும் அழைக்கவும், ஷிவானி ஆர்வமாக அவரைப் பார்க்க, மல்லிகாவோ தயக்கமாக புகழைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“அம்மா… அது நம்ம கடைம்மா… நீங்க பார்க்கணும் இல்ல… விக்ரமும் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னான்..” என்று சொல்லவும்,

“சரிடா.. ஆனா… சாப்பாட்டுக்கு நீ அவ கூட போயிட்டு வாயேன்… நான் எதுக்கு? விக்ரமை திரும்பக் கொண்டு வந்து விடச் சொல்லிக்கறேன்…” என்று அவர் தயங்க,

“நீங்க வரலைன்னா நானும் போகலை அத்தை… வீட்டுக்கு வந்து ஒரு ரசம் சாதம் சாப்பிட்டுக்கலாம்…” என்று அவள் சொல்லவும்,

“சரிம்மா… நான் வரேன்… இப்போ நீ இதைச் சாப்பிடு… நீயும் சாப்பிடுடா…” என்ற மல்லிகா, எங்கே ஷிவானி அவனுடன் செல்லாமல் இருந்து விடுவாளோ என்ற நினைவிலேயே அவர்களுடன் வரச் சம்மதித்தார்.

அதற்கு பிறகு மூவருமே வேகமாக உண்டு முடித்து கிளம்ப, ஷிவானிக்கு மீண்டும் யோசனை வந்தது. “நான் எந்த டிரஸ்சைப் போட்டுக்கறது?” என்று அவள் புகழிடம் கேட்க,

“சுடிதார்லையே வா… அது தானே உனக்கு கம்ஃபர்டபிலா இருக்கும்?” அவன் பதில் கேள்வி கேட்க, அடுத்த சில நிமிடங்களில் கிளம்பி வந்தவள், சந்தோஷமாக அவனுடன் கிளம்பினாள்.

“என்ன இன்னைக்கு இந்த நேரத்துல கூப்பிட்டுட்டு போறீங்க? இந்த நேரம் எல்லாம் உங்களுக்கு வேலை இருக்குமே…” என்று ஷிவானி கேட்க, அவளுக்கு புன்னகையாலேயே பதில் சொன்னவன், காரை கடையின் முன் நிறுத்தினான்.

அங்கு விக்ரமும் முத்துவும் நின்றிருக்க, “என்ன விக்ரம்… ரவியும் ஜோசப்பும் எங்க?” என்று மல்லிகா கேட்டுக் கொண்டே வர,

“அவங்க வருவாங்கம்மா… ஊர்ல இருந்து வந்த உடனே சிஸ்டரைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க… அது தான் புகழ், அதை ஒரு சாக்கா வச்சிக்கிட்டு சிவாவை கூட்டிட்டு வர ஓடி வந்துட்டான்…” என்று விக்ரம் கிண்டல் செய்யவும்,

“அஹான்ன்…” என்று ஷிவானி ராகம் பாட, முத்துவும் விக்ரமும் சிரிக்கத் தொடங்க, புகழ் அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்றே புரியாமல் நின்றுக் கொண்டிருக்க,

“என்னடா இப்படி சிரிக்கறீங்க?” என்று கேட்டுக் கொண்டே மற்ற இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“இல்ல புகழ் சிஸ்டரை கூட்டிட்டு வந்த கதையைச் சொன்னா… சிஸ்டர் ‘அஹான்’னு கேட்கறாங்க… அது தான் எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியல…” என்று விக்ரமை முந்திக் கொண்டு முத்து சொல்லவும், தன்னை அனைவரும் சேர்ந்து ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று புரிந்த புகழ் ஷிவானியைப் பார்க்க,

“நான் அப்படியான்னு தான் கேட்டேன் இனியன்… இவங்க தான் உங்களை வச்சு காமெடி பண்ணிட்டு இருக்காங்க… கொஞ்சம் என்னன்னு கேளுங்க…” என்று ஷிவானி அப்பிராணியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும்,                        

“அடிப்பாவி…” என்று மல்லிகாவும் முணுமுணுக்க,

“என்னை வச்சு நீ காமெடி பண்ணிட்டு அவங்களைச் சொல்றியா? உன்னை விசாரிக்கிற விதத்துல விசாரிக்கிறேன்… அப்போ தான் நீ ஒழுங்கா பதில் சொல்லுவ…” என்று ஷிவானியின் காதுகளில் மட்டும் விழும் அளவிற்கு சொல்லிவிட்டு, அவள் மீண்டும் ‘ஹான்…’ என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மல்லிகாவின் கையைப் பிடித்து புகழ் உள்ளே அழைத்துச் செல்ல, ஷிவானி அவனைப் பின் தொடர்ந்தாள்.

“சிவா… இவங்க தான் என்னோட மீதி பிரெண்ட்ஸ்… நம்ம கல்யாணத்துக்கு இவங்களால வர முடியல… ஜோசப்போட தங்கைக்கு நம்ம கல்யாணதப்ப தான் கல்யாணம்… யாருமே போகாம இருந்தா எப்படின்னு தான் ரவி அங்க போயிருந்தான்..” என்று ஒரே விளக்கத்தில் இருவரையும் அறிமுகப்படுத்திய புகழைப் பார்த்து இருவரும் புன்னகைக்க, ஷிவானி அவர்களைப் பார்த்து கரம் குவித்தாள்.

“ஹையோ சிஸ்டர்… நீங்க அமைதி எல்லாம் இல்லன்னு இவங்க வந்த உடனேயே நான் சொல்லிட்டேன்…” விக்ரம் ஷிவானியை வம்பு வளர்க்க,

“அதான பார்த்தேன்.. என்னோட புகழ் பாட ஆள் இல்லையேன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தேன்… குட் ஜாப் விக்ரம் அண்ணா…” என்று ஷிவானி திரும்ப அவனையே கலாய்க்க, அவனைப் பார்த்து புகழ் சிரிக்கத் தொடங்கினான்.

“போதும்… ஒருத்தன் சிக்கக் கூடாதே…” என்ற விக்ரம், ஷிவானியைப் பார்த்து முறைக்க,

“அவன் விட்டா பேசிட்டே இருப்பான்மா… நாம உள்ள போகலாம்..” மல்லிகா சொல்லவும், அதைக் கேட்ட ஷிவானி சிரித்துக் கொண்டே உள்ளேச் செல்ல, கேலியும் கிண்டலுமாக அந்த கடையை சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தனர்.

“சிவா… இதுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம்ன்னு சொல்லுங்க… அப்பறம் வேற என்ன டெகரேஷன் செய்யலாம்ன்னும் சொல்லுங்க… இப்போ வீட்டையும் ரூமையும் நீங்க ரொம்ப அழகா மாத்தி இருக்கீங்கன்னு புகழ் சொன்னான்… அதுக்காக தான் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னோம்… உங்க சஜஷன் சொல்லுங்க…” என்று முத்து கேட்கவும், ஷிவானி புகழைப் பார்க்க, புகழின் கண்களில் தெரிந்த சிரிப்பில் அவனைப் பார்த்து முறைத்தாலும்,

“நம்மளையும் நம்பி ஒரு கஸ்டமர் வந்து இருக்காங்க… விடாதே சிவா… உன் திறமையை அவுத்து விடு…” என்று அவளது உள் மனது சொல்ல, புகழைப் பார்த்து அப்படியே இளிப்பாக மாற்றியவள்,

“உங்க பட்ஜெட் எவ்வளவுன்னு சொல்லுங்க…” என்ற கேள்வியை முன் வைத்தாள்.

“பட்ஜெட் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம் சிஸ்டர்… நீங்க சொல்லுங்க.. என்ன என்ன செய்யலாம்?” என்று முத்து கேட்கவும்,

“இங்க என்ன கடை வைக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்று ஷிவானி கேட்கவும், அனைவரும் புகழை கேள்வியாகப் பார்க்க,

“அன்னைக்கு கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ்… கம்ப்யூட்டர்ஸ், மொபைல் ஷோரூம்ன்னு சொன்னேனே…” வேகமாக புகழ் சொல்ல,

“ஹ்ம்ம்… ஆமா… மறந்துட்டேன்…” என்று சமாளித்தவள்,

‘கடை கடைன்னு தானே சொன்னார்? எப்போவாவது என்ன கடைன்னு சொல்லி இருக்காரா?’ என்று யோசித்து,  

“என்ன கடைன்னு சொல்லி இருப்பார்… நீ தான் தூங்கி இருப்ப…” என்று தன்னையே திட்டிக் கொண்டவள், தனக்கு பிடித்த கலர், மாடல் என்று நெட்டில் தேடி அவர்களுக்கு காட்ட, புகழின் மனது பெருமிதத்தில் துள்ளியது.

அவளது எண்ணங்களும், அவள் நெட்டில் இருந்து பல மாடல்களைக் காட்டி கூறிய விதமும் அனைவருக்கும் பிடித்துப் போக, அனைவரும் ஒரு மனதாக அந்த கடையை வடிவமைக்கும் விதத்தை தேர்வு செய்ய, ஷிவானி தன்னைத் தானே மனதினில் பாராட்டிக் கொண்டாள்.

“இதுக்குத் தான் கேங்ல ஒரு பொண்ணு வேணுங்கறது… ஒரு பொண்ணைப் பார்த்து கடைக்கு வேலைக்கு வைக்கலாம்ன்னு சொன்னா… சாமியாரு வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு…” என்று விக்ரம் சொல்லவும்,

“சாமியாரா?” ஷிவானி கேள்வி கேட்க,

“என்னை அப்படித் தான் இவங்க கிண்டல் பண்ணுவாங்க…” புகழ் சொல்லவும், ‘ஓ’ என்று கேட்டுக் கொண்டவள், ‘சாமியாரா? யாரு இவரா சாமியார்? சரியான போலிச் சாமியார்’’ என்று மனதினில் நொடித்துக் கொண்டு, ‘போலி சாமியார்…’ என்று புகழை செல்லமாக கடிந்துக் கொண்டிருக்க,

“எங்க ஷிவானி நல்லா செலக்ட் பண்ணுவா… அவ ரொம்ப சுட்டிப் பொண்ணு…” என்று அதுவரை அமைதியாக அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகா ஷிவானியை பாராட்ட, ஷிவானிக்கு சிறிது கூச்சமாகவும் இருந்தது.

இது போல நெட்டில் தேடி, அவர்களுக்கு பிடித்ததாக ஒரு அமைப்பை தேர்ந்தெடுப்பதென்பது அனைவருக்கும் எளிதான விஷயம் தான்… அதுவும் கம்ப்யூட்டர் துறையிலேயே தனது வேலையை அமைத்துக் கொண்டிருக்கும் புகழுக்கு அது ஒரு தூசு போல. ஆனாலும் ஏதோ காரணத்திற்காக தன்னை அழைத்துக் கொண்டு வந்து இவர்கள் தேர்வு செய்யச் சொன்னது ஷிவானிக்கு யோசனையைக் கொடுக்க, அமைதியாகவே இருந்தாள்.

“சரி புகழ்… நீ லஞ்ச்சுக்கு வெளிய போகணும்னு சொன்னியே… போயிட்டு மதியம் அந்த ஆடிட்டர் ஆபீஸ்க்கு போயிட்டு வந்திரு… நான் மீதி வேலை எல்லாம் பார்த்துக்கறேன்…” என்று விக்ரம் நாசுக்காக புகழுக்கு அடுத்த வேலைகளை நினைவுப்படுத்தவும், ஷிவானிக்கு எதுவோ புரிவது போல இருந்தது.

“ஹ்ம்ம் கிளம்பறேன்டா… அந்த மன்னார் தெருவுல கூப்பிட்டு இருந்தாங்களே… காலையிலேயே போகல… மதியமாவது போகணும் விக்ரம்… சிஸ்டம் ஏதோ எரிஞ்சு போச்சுன்னு சொன்னார்…” என்று புகழ் தீவிரமான யோசனையுடன் சொல்ல,

“அந்த சிஸ்டம்ல எரிய வேற இடம் இருந்ததாக்கும்… அதுவே ஹைதர் காலத்து கம்ப்யூட்டர்… அதுல வயரே பாதி டேப் ஒட்டித் தான் இருக்கும்… அந்த கம்ப்யூட்டர்ல இன்னும் என்ன தாண்டா பேலன்ஸ் இருக்கு… இன்னைக்கு முடிவா ஒரு லேப்டாப் வாங்கச் சொல்லு… இல்ல அதை இன்னைக்கு சரி பண்ணி கொடுத்துட்டு வந்திரு… எப்படியும் இன்னும் ஒரு பத்து நாள்ல அந்த டேப் ஒட்டாத தம்மாத்துண்டு இடம் எரியும்… அதை சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு… நம்ம கடையில வந்து லேப்டாப் வாங்கச் சொல்லு…” என்று விக்ரம் கிண்டலடித்துக் கொண்டிருக்கவும்,

“நான் அப்போவே போயிட்டு வந்திருப்பேன்…” என்று புகழ் ஏதோ சொல்லத் தொடங்க,

“டேய் இப்படி இவங்களை நிக்க வச்சிட்டு பேசிட்டே இருக்கப் போறியா? வா… சிஸ்டரை நம்ம ஆபீஸ்க்கு கூட்டிட்டு போய் காட்டிட்டு அப்படியே சாப்பிடக் கிளம்புங்க…” என்று விக்ரம் சொல்லவும், ஷிவானியின் யோசனை பெரிதானது.

“ஹ்ம்ம்… நாங்க சாப்பிட போற விஷயத்தை விக்ரம் அண்ணாகிட்ட இவர் ஏற்கனவே சொல்லிட்டாரா? ஆனா… எதுவோ இடிக்குதே…” என்று ஷிவானி யோசிக்க, அந்த கடையை விட்டு, தங்களது A-Z சர்வீஸ் நடக்கும் அலுவலகத்திற்குச் சென்றனர்.

அங்கு புகழின் பை டேபிளின் மீது இருக்க, அன்று அலுவலகம் வந்து அவன் எந்த ஒரு வேலையையும் பார்த்த சுவடுகள் இன்றி இருப்பதைப் பார்த்தவள், அதற்கு மேல் யோசிக்கத் தோன்றாமல், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“ஹ்ம்ம்… இப்போவும் இவங்க கிட்ட வீட்ல நடந்த விஷயத்தைச் சொல்லி, இவங்க திரும்ப வீட்டுக்கு அனுப்பித் தான் வந்து எங்களை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்காரா? இவருக்கு இதெல்லாம் சுயமாவே தோணாதா? எத்தனை நாளைக்கு இப்படி மத்தவங்க சொல்ற திசையிலேயே நடப்பார்? அவருக்குன்னு சுயமான ஆசையே ஒண்ணும் கிடையாதா?” என்று மனதினில் வருத்தத்துடன் நொந்துக்கொண்டே வந்தவள்,

“அப்போ… என்னைக் கொஞ்சறது எல்லாம்…” என்று நினைக்கும் போதே அவளது மனம் குலுங்கி நிற்க,

“அதெல்லாம் அப்படி இருக்காது… அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கு… அவர் என் மேல அன்பு வச்சிருக்கார்… அந்த அன்பால தான் என்னை நெருங்கறது கொஞ்சறது எல்லாமே…” என்று சமாதானம் சொல்லிக் கொண்டே வந்தவள், புகழ் அவளது கையை அழுத்தவும், தனது யோசனையில் இருந்து விடுபட்டு, அவனது முகத்தைப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு சிவா… சாப்பிட கிளம்பலாமா?” என்று புகழ் கேட்கவும்,

“ஹ்ம்ம் போகலாம்… எனக்கும் தூக்கம் வருது… வீட்டுக்குப் போய் தூக்கம் போடணும்…” என்று அவள் படபடவென்றுச் சொல்ல,

“உனக்கு நம்ம கடை பிடிச்சிருக்கா? எனக்கும், உன்கிட்ட இதெல்லாம் காட்டணும்னு ஆசை தான்… நீ வர மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன செய்யறதுன்னு ஒரு தயக்கம் தான்…” என்று சொல்லவும், அவளது மனதினில் தொக்கி நின்ற கேள்விகளுக்கு பதில் புகழின் வாயிலாகவே வருவதை நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“காலையில மனசு ஒரு மாதிரி இருந்தது சிவா… அதுல நீயும் திட்டவும், சாப்பிடாம வந்துட்டேனா… வழக்கம் போல இல்லன்னு விக்ரம் துருவித் துருவிக் கேட்டான். நான் நேத்து நடந்ததைச் சொன்னேன்… விக்ரமுக்கு செம கோபம் வந்திருச்சு…

‘அவர்கிட்ட வைஃப் கூட வெளிய போற பிளான் இருக்கு… நான் கிளம்பறேன்னு சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தானே… பாவம் சிஸ்டர்ன்னு’ விக்ரம் திட்டி… அவ சொல்றதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டு சத்தம் போட்டு என்னை வீட்டுக்கு கிளப்பி விட்டான்…

நேத்தும் எங்கயுமே கூட்டிட்டு போகலையா… நான் தான் யோசிச்சு… வெளிய கூட்டிட்டு போனா மாதிரியும் இருக்கும்… கடையை காட்டினா போலையும் இருக்கும்ன்னு… அப்படியே உனக்கு கடையையும் காட்டிட்டு, இன்டீரியர் எப்படி பண்ணலாம்ன்னு உன் ஐடியாவையும் கேட்டுட்டு, அப்படியே சாப்பிட போகலாம்ன்னு பிளான் பண்ணி, அவன்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பினேன்..” என்று புகழ் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க, ஷிவானியின் முகம் சிறிது இயல்புக்குத் திரும்பியது.

“சரி இனியன்… என்னால இதுக்கும் மேல தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது… சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாம்…” என்று ஷிவானி சொல்லவும், புகழ் காரை எடுக்க, ஷிவானி அனைவரிடமும் விடைப்பெற்று அங்கிருந்து கிளம்ப, மல்லிகாவும் அமைதியாகவே காரிற்குள் ஏறினார்.

மதிய உணவை ஹோட்டலுக்குச் சென்று உண்டு விட்டு, அவர்களை வீட்டின் வாயிலிலேயே விட்டவன், “நிறைய வேலை இருக்கு… நான் வர எப்படியும் ராத்திரி ரொம்ப நேரமாகிடும்… அதனால ரெண்டு பேருமே தூங்குங்க…” என்று சொல்லிவிட்டு. அவன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுவிட, உள்ளே நுழைந்த ஷிவானிக்கு என்னவோ போல் இருந்தது.

“அத்தை நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க… நான் அங்க அப்பா அம்மாவைப் பார்த்துட்டு வரேன்…” என்று அவள் சொல்லவும் தான், நினைவு வந்தவராக,

“சாரி ஷிவானி… நேத்தே  உன் அம்மா உன்னை அனுப்பச் சொன்னாங்க… இந்தப் பயல் செய்த வேலையில நான் அதை சொல்லவே மறந்துட்டேன் பாரு..” என்று மல்லிகா சொல்லவும்,

“பரவால்ல அத்தை… நீங்க சொல்லி இருந்தாலும் நான் போயிருப்பேனாங்கறது சந்தேகம் தான்… இப்போ போயிட்டு வரேன் அத்தை..” என்று சொல்லிவிட்டு, வேகமாக ஷிவானி, தனது அன்னையைக் காணச் சென்றாள்.

9 COMMENTS

 1. சின்ன சின்ன தருணங்கள்
  எல்லாம்
  நீ உடன் இருந்தால்
  இன்னும் அழகாய் இருக்கும் என்ற
  எதிர்பார்ப்பிற்கான காரணம்
  நீ எனக்கானவள் என்பதே nice lines

 2. Mam..im new to your blog..im eager to read your completed novels..i even registered too..but i cant get my password to log in..please help me mam.

LEAVE A REPLY