SHARE

அது ஏனோ
உன்னைப் பற்றிய சிந்தனைகள்
எதுவாயினும்
ஏதோ ஒரு துளிர்ப்பு
உள்ளுக்குள்
காதலாகி நிற்கும் தருணம்
கோபத்தின் சிறு சாயத்தில்
வெளிறியும் போகிறது !!

 

ஷிவானி புகழுக்காக காத்திருக்க, நேரம் நகர்ந்துக் கொண்டிருந்ததே தவிர, புகழ் வந்த பாடு தான் இல்லாமல் இருந்தது. மணி எட்டை நெருங்க, ஷிவானியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வாடத் துவங்கியது.

ஷிவானிக்கே தெரியாமல், சமையல் அறைக்குச் சென்று வேலை செய்வதைப் போல மல்லிகாவும் பலமுறை புகழுக்கு அழைத்திருக்க, அவரும் தோல்வியையே தழுவி அமைதியாக ஹாலில் வந்து அமர, உற்சாகமாக கடிகாரம் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஷிவானியின் கண்கள் ஏமாற்றத்தில் கலங்கவே செய்தது.

அதை மல்லிகாவிற்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டவள், டைனிங் டேபிளின் மேல் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகி, தன்னை சமன் படுத்திக்கொள்ள முனைந்துக் கொண்டிருக்க, பழைய காலத்து கடிகாரம் ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது.

அதை வெறித்தவள், மல்லிகாவின் முகத்தைப் பார்க்க, அவரது கண்களும் கலங்கி இருப்பதைப் பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன், “அத்தை… மணி ஒன்பதாகுது சாப்பிட வாங்க… நாம சாப்பிட்டுட்டு தூங்க போகலாம்…” என்று அவள் சொல்லவும்,

அவள் அருகில் வேகமாக வந்தவர், “அவன் வரட்டும் சிவா… என்ன ஏதுன்னு கேட்டுட்டு சாப்பிடலாம்…” என்று பிடிவாதமாக அமர்ந்திருக்க,

“என்ன அத்தை இப்படி சின்னப் பிள்ளையாட்டம் அடம் பிடிச்சிட்டு இருக்கீங்க? அவர் தான் புது பிசினஸ் விஷயமா அந்த இடத்தோட ஓனரை பார்க்கப் போறதா சொல்லீட்டுத் தான போனார்… அங்க லேட் ஆகி இருக்கும் அத்தை…” என்று அவருக்கு சமாதானம் சொல்வதைப் போல தனக்கும் சொல்லிக் கொண்டவள், அவருக்கு தோசை சுடச் செல்ல, மல்லிகா அவள் அருகில் வந்து நின்றார்.

“அவன் வேலைன்னு போனா எல்லாத்தையும் மறந்துடுவான் சிவா… இவனை என்ன பண்றதுன்னே புரியல… எப்படி திருத்தறதுன்னே புரியல…” என்று கவலையாக அவர் சொல்ல,

“அவர் என்ன தப்பு அத்தை செய்யறார்… அவரைத் திருத்த? அவர் யாருக்காக அத்தை உழைக்கிறார்? நமக்காக தானே… அவருக்கு மட்டும் என்னை வெளிய கூட்டிட்டு போகணும்… என் கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா என்ன? பாவம் அத்தை அவரு…” என்று புகழுக்குப் பரிந்து பேச, அவளது மனமோ,

“ஆசையா அப்படி ஒண்ணு இருக்கா என்ன?” என்று மனசாட்சி குரல் கொடுக்க, அதனை தட்டி அடக்கியவள், அவர்களுக்கு இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கினாள்.

“நீயும் சாப்பிடு ஷிவானி…” என்று அவளையும் அவர் உண்ண அழைக்க, எதுவும் மறுத்துச் சொல்லாமல், அவருடன் அமர்ந்து ஏதோ பெயருக்கு உண்டுவிட்டு சமையலறையை ஒதுக்கி வைத்து, புகழின் வரவுக்காக காத்திருந்தாள்.

மணி பத்தை கடக்கும் வேளையில், ஹாலில் லைட் எரிவதைப் பார்த்த புகழ், கதவைத் தட்ட, ஷிவானி எழுந்து சென்று கதவைத் திறக்கவும், அவளைப் பார்த்தவன் அதிர்ந்து நின்றான்.

மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து அணிந்து கொண்ட புடவையில், அழகாக அலங்கரித்துக் கொண்டு, நின்றிருந்தவளின் கண்களில் மட்டும் எந்த மகிழ்ச்சியும் இன்றி இருப்பதைப் பார்த்தவன், தன்னையே நொந்து கொண்டான்.

“சாரி… சாரி சிவா… நாம கோவிலுக்கு போகலாம்ன்னு சொன்னதையே மறந்துட்டேன்… அந்த கடை ஓனர் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…  அக்ரிமெண்ட் சைன் பண்ணிட்டு அப்படியே அவரு எங்களை எல்லாம் ஹோட்டலுக்கு கட்டாயப்படுத்தி கூப்பிட்டு போயிட்டார்… எங்களால தட்டவும் முடியல… அது தான்…” என்று அவன் இழுக்க, ‘ஓ..’ என்று புகழுக்கு பதில் சொன்னவள்,

“சரி உள்ள வாங்க… மழை தூரிட்டு இருக்கு… அப்பறம் சளி பிடிச்சுக்கப் போகுது…” என்று சொல்லி, அங்கிருந்து நகர்ந்து வழி விட, அவளைப் பார்த்து கொண்டே உள்ளே வந்த புகழ், தனது பையை வைத்துவிட்டு, அவளது கன்னத்தை தொட வருவதற்குள்,  

“உன்னை எல்லாம் எதுலடா சேர்க்கறது? அந்த சின்னப் பொண்ணை நம்ப வச்சு இப்படி காக்க வச்சு என்னடா செய்யப் போற? ஒண்ணு உன்னால முடியலைன்னா முடியாதுன்னு சொல்லி இருக்கணும்… எதுக்குடா அவளை நம்ப வச்சு கழுத்தை அறுக்கற?” என்று மல்லிகா சத்தமிடவும், புகழ் அமைதியாக தலைகுனிந்து நிற்க, ஷிவானிக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.      

“அத்தை… அது தான் அவர் காரணம் சொல்றாரே… பாவம் அத்தை…” புகழின் முகத்தைப் பார்த்த ஷிவானி புகழுக்கு பரிந்து கொண்டு வரவும்,

“நீ இப்போ பேசாம இருக்கப் போறியா இல்லையா?” என்று அவளை அதட்டி விட்டு,

“சரி உனக்கு வேலை இருக்கு… எல்லாத்தையும் நான் ஒத்துக்கறேன்… உன்னோட போன் என்ன ஆச்சு? அதுல அவளுக்கு ஒரு தகவல் சொல்லி இருக்கலாம் இல்ல… இவளோ நேரம் அந்த பொண்ணும் உனக்காக காத்திருந்து இருக்க மாட்ட இல்ல… உனக்கு எப்பவுமே வேலையைத் தவிர எதுவுமே தோணவே தோணாதா?” என்று அவர் மேலும் கடிய,

“என்ன செய்யறது அப்படி இருந்தே பழக்கம் ஆகிடுச்சு…” என்று ஒரு மாதிரிக் குரலில், ஷிவானியின் வருத்தம் நிறைந்த முகம் ஒரு புறமும், தன் மனைவியின் முன் தனது தாய் திட்டிய வேதனை மறுபுறம் தாக்க, புகழ் அப்படிச் சொல்லவும், மல்லிகாவின் வாய் அடைத்துக் கொள்ள, கண்கள் தனது பணியைச் செய்யத் துவங்கியது.

“இனிமே உன்னை மாத்திக்கோ…” என்றவர், வேறெதுவும் பேசாமல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்துச் செல்ல, அவரது நடையில் தெரிந்த தளர்ச்சி ஷிவானியை வருத்த, புகழைப் பார்த்து முறைத்துவிட்டு அறைக்குச் சென்றாள்.

தான் சொன்ன பிறகே, தன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளின் வீரியம் புரிய, புகழ் மல்லிகாவைத் தொடர்ந்து ஓட, படுக்கையில் படுத்திருந்த மல்லிகாவின் முதுகு குலுங்குவதைப் பார்த்தவன், தன்னையே நொந்து கொண்டான்.

“அம்மா… அழாதீங்கம்மா… நான் தப்பா நினைச்சு சொல்லலைம்மா… நான் தொழில் ஆரம்பிச்ச நாள்ல இருந்தே இப்படி தானே இருக்கேன்… அதைத் தான் நான் சொன்னேன்ம்மா… நீங்க ஏன் வேற எதுவோ தப்பா நினைச்சிட்டு இப்படி அழுதுட்டு இருகீங்க?” என்று புகழ் சமாதானம் செய்யவும்,

“என்னை கொஞ்சம் தனியா விடு…” என்று அழுத்தம் திருத்தமாக மல்லிகா சொல்லவும், புகழ் அமைதியாக அவர் அருகிலேயே அமர்ந்திருந்தான்.

“இன்னும் நீ போகலையா?” மல்லிகாவின் கேள்விக்கு,

“அம்மா… ப்ளீஸ்.. என்னைப் பாருங்க..” புகழ் கெஞ்ச, மல்லிகா திரும்பியும் பாராமல் படுத்திருக்க,

“ஷிவாவை அப்படி பார்த்த உடனே என்னை நானே நொந்துட்டு இருந்தேன்ம்மா… அப்போ நீங்க திட்டவும் தெரியாம பேசிட்டேன்… நான் உங்களை குறை சொல்லலைம்மா… அதை மட்டும் நம்புங்க போதும்…” என்று கூறிவிட்டு, அவருக்கு போர்வையை எடுத்து போர்த்திவிட்டு,  அறையை விட்டு வெளியேற, மல்லிகாவிற்கு தனது கணவருடன் சண்டையிட்ட காட்சிகள் மனதில் படமாக ஓடியது.

புகழின் தந்தை மது அருந்திவிட்டு, குதிரை வாலில் பணத்தைக் கட்டி அந்த மாத சம்பளம் மொத்தத்தையும் இழந்து விட்டு வந்து நின்றதையும்,   கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த புகழின் பரீட்சைக்கு வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு போய் மீண்டும் தோற்றதை கண்டு பிடித்து கேட்டதற்கு சண்டை பெரிதானதும், என்றும் பேசாத மல்லிகா அன்று சிறிது அதிகம் பேசி சண்டையிட, அந்த கோபத்தில் மேலும் குடித்துவிட்டு, அவர் சாலையை கடக்க முயன்ற போது, பக்கவாட்டில் வந்த லாரியை கவனிக்காமல் இறங்கி நடந்து, அதன் சக்கரத்திற்கே அவர் பலியானதும், அதன் பின்பு, அவர் வாங்கிய கடன் தொகை அவர்களை பயமுறுத்த, புகழ் செய்வதறியாது விழித்துக் கொண்டு நின்றதும், பின்பு உழைப்பை நம்பி களம் இறங்கியதையும் நினைவில் கொண்டு வந்தவர், அந்த எண்ணங்களில் இருந்து விடுபட போராடி, அந்த இரவைக் கழிக்கத் தொடங்கி இருந்தார்.

அதே நேரம், அறைக்குள் உடையை மாற்றிக் கொண்டு ஷிவானி படுத்திருக்க, அவளைப் பார்த்துக் கொண்டே சுத்தமாகி, உடையை மாற்றிக் கொண்டு வந்த புகழ், அவள் அருகில் நெருங்கி அமர்ந்து, அவளது தலையை எடுத்து மடியில் வைத்துக் கொள்ள, ‘என்ன?’ என்பது போல ஷிவானி பார்க்க,

“என் மேல கோபமா?” என்று புகழ் கேட்க, அவள் ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைக்கவும்,

“அம்மா என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க…” என்று சொல்லிக் கொண்டே அவளது தலையை மீண்டும் தலையணையில் கிடத்தி அவள் அருகில் படுத்துக் கொண்டவன், வேறெதுவம் பேசாமல், சிறிது நேரத்திலேயே உறங்கத் துவங்க, அவன் கொஞ்சுவான், மேலும்  அவன் வராததுக்கு தனது வேலையைப் பற்றி ஏதாவது சொல்லி சமாதானம் செய்வான் என்று எதிர்ப்பார்த்த ஷிவானிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

“இன்னைக்கு பொழுதுக்கு நிறைய பன்னு வாங்கியாச்சு…. போதும்… இதுக்கும் மேல வாங்கினா பேக்கரி தான் வைக்கணும்… கண்ணை மூடித் தூங்கு…” என்று தனது  வருத்தத்தை  கூட கேலியாக எடுத்துக்கொண்டவள், உறங்கத் முயற்சித்தாள்.

தூக்கம் தான் வர மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. என்ன தான் புகழின் வேலையைக் காரணம் காட்டி மனம் சமாதானம் அடைய நினைத்தாலும், அந்த நாளின் ஏமாற்றம் அவளை சுருலவே செய்திருந்தது.

ஒருவேளை, ‘அம்மா அப்பாவுக்காகத் தான் எல்லாமுமா? காலையில எப்பவும் இல்லாத வழக்கமா கூப்பிட்டு கொஞ்சினதும், அவங்க இருக்கும் போது, கோவிலுக்குப் போகலாம்ன்னு சொன்னதும்?’ என்று அதிலேயே மனம் சுழன்றுக் கொண்டிருக்க,

“ச்சே… ச்சே… இருக்காது… அப்பறம் மதியம் சாப்பிட வந்த போது எதுக்கு புடவை கட்டுன்னு சொன்னாங்க?” என்று சமாதானம் அடைந்தவள், அவனது மார்பில் தனது தலையை வைத்துக் கொள்ள, அவள் ஸ்பரிசம் பட்டதும் கண் விழித்தவன், ஷிவானியைப் பார்க்க,

“ரொம்ப வேலையாப்பா? படுத்ததும் தூங்கிட்டீங்க?” என்று கேட்கவும், என்ன சொல்வதென்று புரியாமல் புகழ் அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பின் அழுத்தம் அதிகமாக, ஷிவானி அவன் முகம் பார்க்க, “அம்மா என் மேல ரொம்ப கோபமா இருக்காங்க வணி… நான் ரொம்ப தப்பா பேசிட்டேன் இல்ல… உன்னை காக்க வச்சுட்டு மறந்த எரிச்சல் வேற… எல்லாம் சேர்ந்து தான்…” புகழ் விளக்கம் சொல்லவும், ஷிவானி அவனது கன்னத்தில் இதழ் பதித்து, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, கண்களை மூட, அவளது செயல்களில் புகழ் எல்லையில்லாத மகிழ்ச்சி கொண்டான்.

தன்னை இந்த அளவு புரிந்து நேசிக்கும் மனைவி கிடைத்த சந்தோஷத்தில் புகழும் கண்களை மூடி உறங்க, இந்தப் புரிதல் எதுவரை சாத்தியம் என்று தான் அவனுக்கு புரியாமல் போனது..

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்த புகழ், மல்லிகாவின் அறைக்குச் செல்ல, மல்லிகா நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, சத்தம் எழுப்பாமல் ஹாலில் வந்து அமர்ந்தான். அதே நேரம் ஷிவானியும் உறங்கிக் கொண்டிருக்க, சிறிது நேரம் அமர்ந்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இட்லியை ஊற்றி வைத்து விட்டு, பாலைக் காய்ச்சி காபியைக் கலந்துக் கொண்டு வந்து மீண்டும் டிவியைப் பார்க்கத் துவங்க, அடித்துப் பிடித்துக் கொண்டு ஷிவானி வேகமாக வெளியில் வந்தாள்.

“என்ன செய்துட்டு இருக்கீங்க? நீங்க எப்போ எழுந்தீங்க?” என்று ஷிவானி படபடப்பாகக் கேட்க,

“நான் எழுந்து ரொம்ப நேரம் ஆச்சு?” என்று பதில் சொன்னவன், சமையல் அறையை நோக்கிச் செல்ல,

“இருங்க… நான் போய் காபி போட்டுக் கொண்டு வரேன்…” என்று ஷிவானி வேகமாக அவனைத் தாண்டிக் கொண்டுச் செல்ல, புகழ் அவளது கையைப் பிடித்து நிறுத்தினான்.

“மெதுவா போ.. புடவை தடுக்கி விழுந்து வைக்காதே…” என்று சொன்னவன், அவள் சமையலறை இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து விழித்துக் கொண்டிருக்கும் போதே, அவளை கவனியாமல், அவளுக்கு காபி கலந்தவன், அவளது இதழ்களில் மெல்ல தனது முத்திரையைப் பதித்து, காபியை அவளது கையில் கொடுக்க, ஷிவானி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி நின்றுக் கொண்டிருந்தாள்.

தேங்காயை எடுத்து திருவிக் கொண்டே அவளைப் பார்த்தவன், அவள் விழித்துக் கொண்டு ரசிப்பதைப் பார்த்துக் கொண்டே, சட்னியையும் அரைத்து முடிக்க, ஷிவானி காபியை கையில் வைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டு,

“காபியைப் குடி… நான் குளிச்சிட்டு வரேன்…” என்று அவளது கழுத்தில் இதழ் பதித்து சந்தோஷமாக அங்கிருந்து நகர,

“என்னாச்சு இவருக்கு?” என்று ஷிவானி நினைத்துக் கொண்டு நிற்க, ‘காபி குடிச்சியா?’ என்று புகழின் குரல் கேட்கவும், அதை ஒரே மடக்கில் குடித்து முடித்தவள், மீதி வேலையை தொடங்க நினைக்க, அப்பொழுது தான் மல்லிகாவைக் காணாதது அவளுக்கு மனதில் உரைத்தது.

”இன்னும் எழுந்துக்காம அத்தை என்ன பண்ணறாங்க? நேத்து ரொம்ப நேரம் முழிச்சு இருந்தது உடம்புக்கு சரி இல்லையா?” என்று யோசித்துக் கொண்டே, அவரது அறைக்குச் செல்ல, அப்பொழுது தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மல்லிகா திரும்பிப் படுக்க, ஷிவானி அருகில் சென்று அவரது நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்துப் பார்க்க, மல்லிகா அதைக் கூட உணராமல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

“ஜுரம் இல்ல… நைட் ரொம்ப நேரம் கழிச்சு தூங்கி இருப்பாங்க போல…” என்று நினைத்துக் கொண்டவள், வெளியில் வரும் போது புகழ் தயாராகி வர, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, சமையல் அறைக்குள் சென்றவள், அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட எடுத்து வைக்க, புகழ் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சிவா… இன்னைக்கு என் கூட கடைக்கு வர்ரியா?” என்று புகழ் கேட்க,

“இல்ல… நான் வரல… அத்தை இன்னும் எழவே இல்ல… ஜுரம் இல்ல… ஆனா… அவங்க இப்போ இருக்கற மனநிலையில நான் தனியா விட்டுட்டு எங்கயும் வரல…” என்று பட்டென்று அவள் சொல்லவும், புகழுக்கு ஒரு மாதிரி ஆனது.

“நான் நேத்து வாய் தவறி…” அவன் இழுக்கும் போதே,

“என்ன வாய் தவறி? எப்படி அந்த வார்த்தை வரும்? சரி நேத்து நீங்களும் ரொம்ப ஃபீல் பண்றீங்களேன்னு தான் நானும் ஏதும் பேசாம இருந்துட்டேன்… இப்போவும் அதையே பாடாதீங்க… மனசுல இருக்கறது தான் எரிச்சலா இருக்கும் போது வரும்… அத்தையே உங்களை ரொம்ப உழைக்க வச்சுட்டோம்ன்னு மனசுல நொந்துட்டு இருக்காங்க.. நீங்க இப்படி பேசினா என்ன ஆகும்?” என்று படபடவென்று பொரிந்துத் தள்ளவும், புகழுக்கு என்னவோ போல் ஆகியது.

அவன் உண்ண அமரவும், இட்லிப் பொடியை எடுக்க ஷிவானி சமையலறைக்குச் செல்லவும், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவள், வேக வேகமாக புகழ் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவது தெரிய, அதிர்ந்து “இனியன்…”  என்று அவள் அழைக்க, அவளது குரல் காற்றோடு தான் கரைய வேண்டி இருந்தது.

“என்ன சிவா.. இப்படி கோபமா பேசி அவரை சாப்பிட விடாம செய்துட்டியே…” தன்னையே நொந்துக் கொண்டு, புகழுக்கு போன் செய்ய, அது எடுக்கப்படாமல் போய் கொண்டிருந்தது.

என்ன செய்வதென்று புரியாமல் அவள் அமர்ந்திருக்க, மல்லிகா வெளியில் எழுந்து வந்தார். ஷிவானி சோகமாக அமர்ந்திருப்பதைப் பார்க்கவும், “என்னம்மா… என்னாச்சு?” என்று மல்லிகா பதற,

“அத்தை உங்களுக்கு ஒண்ணும் இல்லையே…” என்று பதிலுக்கு ஷிவானி பதற,

“எனக்கு ஒண்ணும் இல்லம்மா… ரொம்ப நேரம் பழசை எல்லாம் நினைச்சிட்டு தூக்கமே வரல… அது தான் அசந்துட்டேன் போல இருக்கு.. எங்க புகழ் வேலைக்கு கிளம்பிப் போயிட்டானா?” என்று கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்தவருக்கு காபியை எடுத்துக் கொண்டு வந்தவள்,

“ஹ்ம்ம் சீக்கிரமாவே எழுந்துட்டார் போல அத்தை… காபி போட்டு, இட்லி ஊத்தி வச்சிருந்தார்…” என்று சொன்னவள், தானும் அவனிடம் சண்டை போட்டதைச் சொல்ல, மல்லிகா அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்.

“என்ன ஷிவானி? அவனுக்கு கோபம்  நான் திட்டினது இல்ல… உன் முன்னால திட்டினது தான்… அவனும் மனுஷன் தானேம்மா… மிஷின் மாதிரி ஓடிக்கிட்டு இருக்கான்… அப்போ அப்போ சலிப்புல ஒண்ணு ரெண்டு வார்த்தை நம்மளையும் மீறி வர்ரது தான்… நானும் ராத்திரி அவன்ட பேசாம அவன படுத்திட்டேன் போல….. இப்பவும் அவன் சாப்பிடாம போயிட்டானே…” என்று அவர் தாயாய் வருந்த,

“போன் கூட எடுக்க மாட்டேங்கிறார் அத்தை…” என்று தொண்டையடைக்க ஷிவானி சொல்ல,

“ஹ்ம்ம்… டீ ஏதாவது குடிச்சிப்பான்… நீ வந்து சாப்பிடு…” என்று அவளை அழைக்க, மனம் வராமல் ஷிவானி அமர்ந்திருக்க, பதினோரு மணியளவில் வீட்டின் உள்ளே நுழைந்த புகழைப் பார்த்த இரு பெண்களும் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு திகைத்து நின்றனர்.

9 COMMENTS

 1. அது ஏனோ
  உன்னைப் பற்றிய சிந்தனைகள்
  எதுவாயினும்
  ஏதோ ஒரு துளிர்ப்பு
  உள்ளுக்குள்
  காதலாகி நிற்கும் தருணம்
  கோபத்தின் சிறு சாயத்தில்
  வெளிறியும் போகிறது !!

  nice update

LEAVE A REPLY