SHARE
மௌனம் – 1

சிறகு விரிக்க காற்று தடையில்லை
மனம் போலே ஒரு பயணம்
சகியே உனக்கு,
வெறும் பாதை மட்டுமில்லை
பரவிக் கிடக்கும்
வானமும் உனக்கே வசப்படும்!!
இறகை விரிக்க ஆயத்தமாகு
வானம் மட்டுமல்ல வசந்தமும்
உன்னோடு தான்
வாழும் பூமியும் உன்னோடுதான்!!


‘வெல்கம் டு சென்னை ஏர்போர்ட்’ என்ற எழுத்துக்களைப் பார்த்த மித்ராவிற்கு உதட்டினில் லேசான புன்னகை அரும்பியது. மனதிலும் ஒரு மெல்லிய சாரல்… அதே புன்னகையுடன் இமிக்ரேஷன் நோக்கிச் சென்றவளுக்கு, உற்சாகம் ஊற்றெடுப்பதாய்…

ஏர்போர்ட்டில் தன்னுடைய பெட்டிகளை எல்லாம் எடுத்து அடுக்கிக்கொண்டு, அதைத் தள்ளிக் கொண்டே, வெளியில் வந்தவளை எதிர்கொண்டது, அவளது அண்ணனான, மனோரஞ்சன்.

“ஹாய் மனோ அண்ணா…” என்று கூவியவளை திகைப்புடன் பார்த்துக் கொண்டு அவன் நிற்க, அவனை நெருங்கி, “என்ன மனோண்ணா… அப்படி பார்க்கறீங்க?” உற்சாகத்துடன் கேட்டவளை, கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“மனோண்ணா…” மீண்டும் உலுக்கியவளை,

“மித்ரா… எப்படி இருக்க?” ஒருவழியாக வாய்த் திறந்தவனைப் பார்த்து,

“என்ன அண்ணா? ருக்குபாய் உங்களையும் அதிகமா பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களா?” கண்களை விரித்து, குறும்புடன் கேட்டவளைப் பார்த்து, மீண்டும் திகைத்தான்.

“நீ ரொம்ப மாறிட்ட மித்ரா…” முதல் சொல்லாக நலம் விசாரணையை கூட ஒத்தி வைத்து, அவளுடைய மாற்றத்தை கண்டு, மெல்ல அவன் முணுமுணுக்க,

“நானா மாறினேன்… இல்லையே அண்ணா… போகும்போது இருந்த அதே கண்ணு, அதே மூக்கு தானேண்ணா இருக்கு…” என்று சொல்லிக் கொண்டே சூயிங்கம்மை மெல்லத் துவங்கியவளைப் பார்த்தவன்,

“இல்ல இது வேற மாதிரி மாற்றம்… சரி ரொம்ப நேரம் இங்கயே நின்னு பேசிட்டு இருக்க வேண்டாம்… வா போகலாம்… வீட்ல பாட்டி உன்னைப் பார்க்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…” என்றபடி, அவளுடைய பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்தவனை பின் தொடர்ந்தவள்,

“பாட்டி எப்படி இருக்காங்க அண்ணா?” என்று மெல்லிய குரலில் கேட்கவும், அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“ரொம்ப நல்லா இருக்காங்க… உன்னை ரொம்ப மிஸ் பண்ணிட்டாங்க… நீ வரேன்னு சொன்ன உடனே அவங்கள கையில பிடிக்க முடியல” என்றவன், சிறிது தயக்கத்துடன், “மித்ரா…” என்று இழுக்க, கேள்வியுடன் பார்த்தவளிடம், எப்படிச் சொல்வது என்று அவன் தயங்கி நிற்க,

“ஃபீல் ஃப்ரீண்ணா…” அவள் ஊக்கினாள்.

“ஜீன்ஸ் ஓகே தான்… ஆனா மேல டீ-ஷர்ட் போட்டு இருக்காம… இப்போ தான் குர்தி வருதே… அது போட்டு இருந்தா உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் இல்ல… அது தான் சொல்ல வந்தேன்… நான் வேற இதெல்லாம் உன்கிட்ட சொன்னது இல்லையா….” அவன் இழுக்கவும்,

“இப்போவாவது சொன்னீங்களே… தேங்க்ஸ்ண்ணா…” என்று பட்டென்று சொல்லிவிட்டு, “கார் எங்கண்ணா…” என்று அவன் திகைத்து நிற்பதை பொருட்படுத்தாமல், படபடவென கேட்கவும்,

“உன்னைப் பார்த்ததுல மறந்தே போயிட்டேன் பாரு… இரு திவாக்கு போன் பண்றேன்…” என்றவன், தனது செல்போனை எடுத்தான்.

 

சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள், “திவா இப்போ வந்திருவான்…” என்று அவன் கூறவும், “ஓகே…” என்றபடியே, தனது செல்போனை இயக்கினாள்.

தன்னுடைய பழைய சிம்மை அதில் புகுத்தியவள், “மனோண்ணா சிம் ஆக்டிவ் ஆகிருக்கும் இல்ல…” என்று கேட்டு, அவன் தலையசைத்தவுடன், தனது தோழியான வந்தனாவிற்கு அழைத்தாள்.

“நான் வந்துட்டேன் வந்தனா… ஹ்ம்ம்… ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல… இப்போ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்… உன்கிட்ட அப்பறம் பேசறேன்..” என்றபடி போனை வைத்தவள், திவாகர் காருடன் வரவும்,

“ட்ரன்க் ஓபன் பண்ணுங்க திவாண்ணா…” என்று குரல் கொடுக்க, அவனும், மனோ அவளைப் பார்த்தது போலவே பார்க்க….. ஒரு சிறு சிரிப்புடன், “நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. இந்தப் பார்வை பார்க்கறீங்க?” குறும்புடன் கேட்க, “மித்ரா..” என்று அவனும் இழுத்தான்.

“ஹாஹஹா… அண்ணா.. வீட்டுக்கு போகலாம் வாங்க… இப்போ தான் மனோ அண்ணா நீங்க கேட்க நினைக்கிறத ஒரு வழியா கேட்டு முடிச்சாங்க… இப்போ நீங்க தயங்கறீங்களா? எங்க திவாண்ணா இப்படி தயங்கி நான் பார்த்ததே இல்லையே… எல்லாமே தடாலடி தானே..” என்றபடியே தனது பெட்டிகளை அடுக்கியவள், காரில் ஏறி அமர்ந்தாள்.

“உனக்கு ரொம்ப வாயாகி போச்சு…” திவாகர் சொல்லவும்,

“ம்ம்… ஆமா… முன்னெல்லாம் நாலு வார்த்தை பேச காசு கேட்ப…  யூ.எஸ். செய்த மாயமா?  இப்போ இப்படி பேசற!…” என்று மனோ பின் பாட்டுப் பாடவும்…

“ஆமாண்ணா… ரெண்டரை வருஷம் தனியா இருந்து நிறைய கத்துக்கிட்டேன்… இப்போ அங்கேயே நல்ல வேலையும் கிடைச்சிருக்குண்ணா… சோ.. நான் இப்படி இல்லேன்னா சரியா வருமா?” என்று அவள் பேசிக் கொண்டே போகவும், “என்னது??…” என்று இருவரும் அதிர்ச்சியுடன் கோரஸ் பாடினர்.

“என்னாச்சு…?” இருவரின் திகைப்பிலும் அவள் புரியாமல் கேட்க,

“ஹ்ம்ம்… இல்ல…. வேலைக்குப் போகப் போறியா? இங்க உனக்காக, பாட்டி சிமெண்ட் தயாரிக்கிற பாக்டரி ஸ்டார்ட் பண்ணனும்னு ஒரு முடிவுல இருக்காங்க… அதுவும் இல்லாமா…”திவா பேசிக் கொண்டே செல்லவும், மனோ கண் காட்ட,  பாதியில் நிறுத்தி, “நீ என்னடான்னா?” திவா இழுக்கவும்,

அதை கவனிக்காமல், “ஆமா… அதை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்.. அதெல்லாம் பாட்டிய சமாளிச்சு நான் மறுபடியும் கிளம்பிடுவேன் அண்ணா… இன்னும் ரெண்டு வருஷம்… அப்பறம் வந்து… அந்த பாக்டரியோ என்னவோ எல்லாம் பார்த்துக்கலாம்…” தோள் குலுக்கலுடன், அசால்ட்டாக கூறியவளைப் பார்த்த மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீ யூ.எஸ். போய் என்ன கத்துக்கிட்டயோ என்னவோ மித்ரா… ஆனா, நல்லா பேச கத்துட்டு இருக்க… அப்பறம் மித்ரா… அங்க ஒழுங்கா சாப்பிடலையா?  உடம்பு கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கு…” அக்கறையுடன் திவாகர் கேட்கவும், மனோ அவள் தலையை வருடிக் கொடுத்தான்.

“திவா அண்ணாவாவது எப்பவாவது இப்படி பேசுவாங்க… ஆனா மனோண்ணா… நீங்க இப்படி எல்லாம் செய்யறது, பேசறது… ரொம்ப புதுசா இருக்கு… நான் இல்லாத இந்த இரண்டு வருஷத்துல வீட்ல ஏதாவது அதிசயம் நடந்துச்சா என்ன?” புன்னகையுடன் அவள் கேட்கவும்,

“உனக்கு கொழுப்பும் ஏறி தான் போச்சு… நீயே வேற சமைச்சு சாப்டியே… அப்போ குறைஞ்சு தானே இருக்கணும்!!” என்று மனோ கிண்டல் செய்ய, தனது அண்ணன்களின் அந்தப் பேச்சை ரசித்து, பதிலுக்கு பதில் பேசிக்கொண்டு, அந்த புதிய அனுபவத்தை ரசித்துக் கொண்டு வந்தாள், மித்ரா என்று எல்லோராலும் அழைக்கப்படும் சங்கமித்ரா.

சங்கமித்ரா, ருக்மணி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் ருக்மணி அம்மையாரின் பேத்தி… ருக்மணி பாட்டிக்கு மூன்று மகன்கள்.. அவரது முதல் மகனுக்கு இரண்டு மகன்களும் (மனோ, சந்தோஷ்), இரண்டாவது மகனுக்கு சங்கமித்ராவும், மூன்றாவது மகனுக்கு திவாகரும் பிறந்தனர்.

சங்கமித்ராவின் தந்தை வேதமூர்த்தி, திருமணம் வேண்டாம் என்று தள்ளிக்கொண்டே வந்ததில், சங்கமித்ரா அந்த வீட்டின் கடைக்குட்டி ஒற்றைப் பேத்தியாகிப் போனாள். மித்ராவை பிரசவிக்கும் போது ஏற்பட்ட சிக்கலில், அவளது தாய் ஜானகி, இவ்வுலகை விட்டு பிரிய, சங்கமித்ராவின் பதிமூன்றாம் வயதில், மாரடைப்பில், அவளது தந்தையும் இவ்வுலகை விட்டு பிரிய, மித்ராவின் பொறுப்பு ருக்மணியிடமே முழுவதுமாகச் சென்றது.

ருக்மணி பாட்டி, தனது கணவரின் மறைவுக்கு பிறகு, அந்த காலத்திலேயே தனித்து நின்று, அவரது தொழில்களை எல்லாம் எடுத்து நடத்தி, அதை விரிவு படுத்தி வெற்றியும் கண்டவர்… அது போலவே தங்கள் இல்லத்தின் மருமகள்களுக்கு இருக்கும் தனித் திறமைகளை கருத்தில் கொண்டு, அவரவருக்குத் தகுந்தாற் போன்ற தொழிலையும் அமைத்துக் கொடுத்தவர். அவரைப் பொறுத்த வரையில், பெண்கள் வீட்டில் மட்டுமே சுழலும் கைப் பாவைகள் அல்ல…

தனது மருமகள்களை வழி நடத்துவதிலும் சரி, அரவணைப்பதிலும் சரி, கண்டிப்பதிலும் சரி.. அவருக்கு நிகர் அவரே தான். தங்கள் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் மாமியார் கிடைத்த மருமகள்கள், அவரை மரியாதையுடனே பார்த்தனர். அதே வழியில், தனது தந்தைகளுக்கு உதவி செய்து, தங்களுக்கு விருப்பமான தொழில் தொடங்கவும் பயிற்சி பெற்று வந்தனர் பேரன்மார்கள். அனைவருமே, மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.

அந்த வழியில், மித்ராவையும் கட்டாயப்படுத்தியே டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுப்பி வைத்தார் ருக்மணி. படிப்பில் கெட்டியான மித்ராவும், தயக்கத்துடனே படிக்கச் சென்றவள், இதோ படித்து முடித்து, நாடு திரும்பியும் விட்டாள்.

அந்த பிரமாண்டமான வீட்டினுள்ளே நுழைந்த கார், வீட்டின் வாயிலில் சென்று நிற்கவும், ஹால் சோபாவில் அமர்ந்திருந்த ருக்மணிப் பாட்டி, தனது வயதையும் மீறி, எழுந்து ஓடி வருவதைப் பார்த்தவள், கண் கலங்க, “பாட்டி…” என்று அவரிடம் ஓடிச் சென்றாள்.

“ராஜாத்தி… மித்ராம்மா… எப்படிடா இருக்க?” என்று வாஞ்சையாக அவளது முகத்தைத் வருடிக் கொடுக்க,

“நான் நல்லா இருக்கேன் பாட்டி…. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே அவருடன் சிறிது தூரம் உள்ளே சென்றவள், “இருங்க பாட்டி… என்னோட பெட்டியை எல்லாம் எடுத்துட்டு வரேன்…”, அவர் பதில் கூறும் முன்னர், வெளியில் ஓடிச் சென்றாள்.

“நீ போய் பாட்டி கிட்ட பேசிட்டு இரு… நாங்க எடுத்துட்டு வரோம்…” திவாகர் சொல்ல,

“பரவால்ல திவாண்ணா… நானே எடுத்துக்கறேன்… நீங்களும் உள்ள வாங்க…” என்றவள், தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு, தனது அறையில் வைத்து விட்டு வந்து சேர்ந்தாள்.

அவளது செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, “என்ன மித்ரா… அது தான் திவாவும் மனோவும் எடுத்து வைக்கிறாங்க இல்ல… நீ எதுக்கு ஓடிப் போற?” என்று கேட்கவும்,

“சும்மா தான் பாட்டி…” என்றவள், “என்ன சித்தி… அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று புருவத்தை மேலேற்றிக் கேட்க,

“எப்படி இருக்க மித்ரா?” என்று அவளது சித்தியான உஷா கேட்கவும்,

தன்னை சுற்றிக் காண்பித்து, “எப்படி இருக்கேன்னு நீங்களே சொல்லுங்களேன்…” என்றபடி பாட்டியின் அருகில் அமர்ந்தாள். பதிலுக்கு பதில் பேசும் இந்த மித்ரா அனைவருக்குமே புதியதாகத் தெரிய, அனைவரும் அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அவர்களைப் பார்த்து ஒருபுறம் சிரிப்பு பொங்கினாலும், அதை மறைத்துக் கொண்டு, “சந்தோஷ் எங்க மனோண்ணா? அப்பறம் அண்ணி எங்க? அப்பறம் பெரியப்பா, சித்தப்பா?” அவள் அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டிருக்க,

“சந்தோஷ் நல்லா தூங்கிட்டு இருக்கான் மித்ரா… அண்ணி மாசமா இருக்கால்ல… அதுனால அவளை எழுப்பல… நீ வந்த உடனே எழுப்பச் சொல்லி நூறு முறை சொல்லிட்டு படுத்தா… ஆனா அசந்து தூங்கறவள எழுப்ப மனசு வரல… எழுந்த உடனே மனோக்கு திட்டு இருக்கு….” சிரிப்புடன் சொல்லிக் கொண்டே கையில் காபியுடன் வந்த அவளது பெரியம்மா விஜயலக்ஷ்மியைப் பார்த்து புன்னகைத்தவள், அவர் பின்னோடு வந்த தனது பெரியப்பா ஞானமூர்த்தியையும், சித்தப்பா விநாயகமூர்த்தியையும் பார்த்து “ஹாய்…” என்று கையசைத்தாள்.

அனைவரின் நலம் விசாரிப்பிற்கு பிறகு, விஜயலக்ஷ்மி கொடுத்த காபியையும் குடித்துவிட்டு, அமைதியாக வீட்டைச் சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க,

“நீ நல்லபடியா படிச்சு திரும்பி வந்திருக்க இல்ல மித்ரா… அதனால இன்னைக்கு கோவில்ல உனக்காக வேண்டிக்கிட்டு அபிஷேகத்துக்கும், அன்னதானத்துக்கும் கொடுத்திருக்கு… போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பி வா… பத்து மணிக்கு போனா போதும்…” ருக்மணி பாட்டி சொல்லவும்,

“அதெல்லாம் வேண்டாம் பாட்டி… நான் பிளைட்ல நல்லா தூங்கிட்டு தான் வந்தேன்…. அப்பறம் தூங்கிக்கறேன். உங்களுக்கு எல்லாம் என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு பாருங்க…” என்றவள், வேகமாக அறைக்குள் நுழைய, அவள் பின்னோடு உஷாவும் உள்ளே நுழைந்தார்.

“என்ன டிரஸ் போட்டுட்டு வந்திருக்க? ஒழுங்கா சுடிதார் போட்டுட்டு வந்திருக்கலாம் இல்ல…” கண்டிக்கும் குரலில் கேட்ட உஷாவை பார்த்து அவள் புன்னகைக்கவும்,

“சிரிக்காதே… கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்று அவர் மேலும் பொரிய, அதை டீலில் விட்ட மித்ரா, “சும்மா..” என்றபடியே, தனது பெட்டியை இழுத்துக் கொண்டு வெளியில் செல்ல நகர,

“சொல்லிட்டே இருக்கேன்.. நீ சும்மான்னுட்டு போற… டிரஸ்ஸ மாத்து மித்ரா…” உஷா அவளை பின் தொடர்ந்தார்.

“ப்ளீஸ் சித்தி… லெட் மீ லிவ் மை லைஃப்… இது டீசென்ட்டா தானே இருக்கு… எங்கயும் ஆபாசமா தெரியலையே… மேல ஜாக்கெட் போட்டு தானே வந்திருக்கேன். சுடிதார் குர்தாவைப் போட்டுக்கிட்டா மட்டும் டீசென்ட்ன்னு யாரு சொன்னா? ம்ம்…” கேட்டபடியே முன்னே சென்றவளை ஆயாசமாகப் பார்த்தார், உஷா.

“சித்தி… இது உங்களுக்காக நானே வொர்க் பண்ணின சாரீ…. பெரியம்மா… உங்களுக்காகவும் செய்திருக்கேன்…” என்று பெட்டியைத் திறந்து, இரண்டு புடவைகளை இருவரிடமும் நீட்டியவள்,

“உஷா சித்தி… நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே போட்டு இருக்கேன் இல்ல… இதைக் கத்துக்கச் சொல்லி எப்படி விரட்டுவீங்க? அது மட்டுமா சொல்லுவீங்க…?” என்று இழுத்தவள், அதோடு நிறுத்தி,

“ஆனா, எனக்கு அங்க பொழுது போக இதெல்லாம் ரொம்ப யூஸ் ஆச்சு சித்தி…” என்றவளின் குரலில் இருந்த வெறுமையில், உஷாவும், ருக்மணிப் பாட்டியும் அவளை இயலாமையுடன் பார்த்தனர். உஷாவின் பார்வை, ஏக்கத்துடன் தனது மாமியாரின் மீது படிய,

“அவ அப்படி விரட்டி விரட்டிச் சொல்லிக் கொடுத்ததுனால தானே இப்போ நீ இவ்வளவு அழகா போட்டு இருக்க… என்ன அழகா இருக்கு…” என்று முதலில், அந்தப் புடவையை வருடி ஸ்லாகித்த ருக்மணி,

“அவ அப்படி விரட்டினதுனால பாரு, உனக்கு ஒரு கலை கை வந்து இருக்கு…” என்று மேலும் சேர்த்துக் கொண்டு,

“அவ உன்னை ‘அப்படி இரு இப்படி இரு’ன்னு சொன்னதுனால, அவளுக்கு உன் மேல பாசம் இல்லைன்னு அர்த்தமா மித்ரா? அவளுக்கு திவாவை விட உன்னைத் தான் பிடிக்கும்…” ருக்மணி தன் மருமகளைத் தாங்கிப் பேச,

“மப்ச்… திட்டினா பாசம்ன்னு அர்த்தமா பாட்டி?” பெரிதாக வியந்தவளைப் பார்த்த ருக்மணி,

“மித்ரா… என்ன வாய் ரொம்ப நீண்டுட்டு இருக்கு? எங்கே, ரொம்ப பாசம் காட்டினா… நீ, உன் மேல இருக்கற பரிதாபத்துலதான் காட்டறாங்கன்னு சுயபச்சாதாபத்துல குன்றிட கூடாதுன்னுதான், அவ உன்னை கண்டிச்சா… நான் தான் கொஞ்சம் கண்டிக்க சொன்னேன்… உன் அம்மா மாதிரி… அவளும் உன்னை தான் பெத்த பொண்ணாவே தான் பார்த்தா” உஷாவின் கண்டிப்புக்கு, சிறிது கோபத்துடன், ருக்மணி விளக்கம் சொல்ல,

“ஆனா, அம்மாவோட தலைக்கோதலும், மடியும், கிடைக்க வேண்டிய நேரத்துல கிடைக்கலையே பாட்டி… அதுவும் இருந்திருந்தா…” என்று கண்ணீர் குரலில் கூறியவள், இரண்டே நொடிகளில், நிமிர்ந்து அனைவரையும் பார்த்து புன்னகைக்க, அவர்கள் முகத்தில் அதிர்ச்சி அப்பிக் கிடப்பதைப் பார்த்து, கண்களை சிமிட்டினாள்.

“முன்ன கிடைக்கலேன்னா என்ன… இனி கிடைக்கும் தானே சித்தி..” என்று உஷாவிடம் கேட்டவள், அருகில், சோபாவில் அமர்ந்திருந்த ருக்மணி பாட்டியின் மடியில் சாய்ந்தாள்.

ருக்மணி பாட்டியின் அருகே அமர்ந்திருந்த அவளது பெரியப்பாவும், சித்தப்பாவும், அவளது தலைக்கோத,

“உங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க…” என்று, தனது பெட்டியில், அவர்களுக்கென வாங்கிக் குவித்த பொருட்களை கடை பரப்பினாள்.

அனைவரின் முகத்திலும் கவலை மட்டுமே எஞ்சி இருப்பதைப் பார்த்தவள், “ஒண்ணும் இல்ல சித்தி… தனியா இருந்தேனா… அப்போ அம்மாவ ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்… நீங்க கண்டிப்பீங்க தான்… அதனாலையோ என்னவோ  மனசுல நினைச்சதை எல்லாம் உங்கக்கிட்ட ஷேர் பண்ணிக்க கூட முடிஞ்சது இல்லையே சித்தி… சொன்னா திட்டுவீங்களோன்னு பயம் மட்டுமே இருந்தது… அந்த கோபத்தை இப்படி காட்டிட்டேன் போல…” தன்னிலை விளக்கம் சொன்னவள், அருகே அமர்ந்திருந்த உஷாவின் மடியில் கவிழ்ந்தாள்.

“ஹே அமுக்குணி… எப்படி இருக்க? தலை எல்லாம் விரிச்சு போட்டுக்கிட்டு….” என்று சந்தோஷ் தனது அறையில் இருந்து வந்து அவள் தலையைத் தட்டவும்,

“வலிக்குது தூங்கு மூஞ்சி.. ஒருவழியா மெதுவா எழுந்தியா? நான் கூட, உன்னை எழுப்ப, தார தப்பட்ட கிழியணுமோன்னு இல்ல நினைச்சேன்…” வாய்க்கு வாய் திரும்ப பேசிய அவளைப் பார்த்து சந்தோஷ் வியந்து நிற்க,

“டேய்… இப்போ உன் டர்ன்னா? போ… போய் பல் தேச்சிட்டு வா… இங்கயே உட்கார முடியலை…” அவனை கலாய்த்தவள், அவளது இந்த பதிலில் மேலும் ஆச்சரியத்துடன் நின்றவனை நெருங்கி, அவன் தலையைத் தட்டி விட்டு,

“அப்படியே குளிச்சிட்டு வா… நானும் போய் அதைச் செய்யறேன்… இல்ல இந்த வீடு தாங்காது… நம்மளைப் பெத்த பாவத்துக்கு அவங்களுக்கு இந்த தண்டனை வேண்டாமே…” என்றபடி தனது அறைக்குச் சென்றவள், “சித்தி…” என்று கத்தி அழைத்தாள்.

“முன்னெல்லாம் இந்த அமுக்குணி இருக்கற இடம் தெரியாது… இப்போ பாரு வீட்டையே ரெண்டாக்கறா…” சந்தோஷ் அருகில் இருந்த திவாவிடம் சொல்லவும்,

“அவ பேசாம வீட்டை சுத்தி சுத்தி வந்தாலும் நல்லா இருக்கு… இப்படி இருந்தாலும் நல்லா தான் இருக்கு… உஷா… அவ கூப்பிடறா பாரு போய் என்னனு கேளு…” என்று விநாயகம் சொல்லவும், உஷா மித்ராவின் அறைக்கு விரைந்தார்.

“சித்தி… எப்பவும் இந்த மாதிரி கோவிலுக்கு போறதுக்கு புது புடவை எடுத்து வச்சு இருப்பீங்களே… அது எங்க?” மித்ரா கேட்கவும்,

“நீ இன்னும் புடவை கட்டறதை மறக்கலையா?” என்று அவளுக்கு ஒரு கொட்டு வைத்தவர், “அதெல்லாம் என் பொண்ணுக்கு வாங்கி வைக்காம இருப்பேனா? இரு எடுத்துட்டு வரேன்…” என்று சொன்னவர், நகரவும், அவரது தோளைக் கட்டிக் கொண்டவள்,

“நான் எதுவுமே மறக்கலை சித்தி… நான் உங்க மித்ரா தான்… வாய வச்சிட்டு சும்மா இல்லாம எதுவோ பேசிட்டேன்… சாரி சித்தி… நீங்க உர்ர்ர்ன்னு இருந்தா நல்லாவே இல்ல… எப்பவும் போல என்னை விரட்டுங்க சித்தி…” என்று கெஞ்சவும், அவளது கன்னத்தை வருடியவர்,

“நீ என் மடிக்காக ஏங்குவேன்னு தெரியாம போச்சு மித்ரா… கிடைக்கிற கொஞ்ச நேரத்துல உன்னை நல்லபடியா வளர்க்கணுமேன்னு மட்டுமே மனசுல இருந்தது. இனி உனக்கு நான் இருக்கேன்டா…” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவளுக்கு வாங்கி வந்திருந்த சிவப்பு நிற புடவையை எடுத்து வந்துக் கொடுக்க, அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டவள், அவரது கன்னத்தில் இதழ் பதித்து விலக….

அவளது கையைப் பற்றிக் கொண்ட உஷா, “உன்னை நாங்க எல்லாருமே மிஸ் பண்ணிட்டோம் மித்ரா… இப்போ தான் வீடே வீடா இருக்கு” என்று கூறவும், அவரது கன்னத்தில் மீண்டும் இதழ் பதித்தவள், கோவிலுக்கு கிளம்பத் தயாரானாள்.

அதே நேரம், பழவந்தாங்கலில் இருந்த ஒரு வீட்டில், ‘கிருஷ்ணமூர்த்தி—லதா ஆகியோரின் மகன் வசந்திற்கும்… ரத்னவேலு—ராஜாத்தியின் மகள் ஸ்வப்னாவிற்கும் திருமணம் செய்வதாய் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முஹூர்த்தம், வருகிற பதினைந்தாம் தேதி, ஸ்ரீமஹாலில் நடக்கவிருக்கிறது என்பதை இரு வீட்டு ஒப்புதலுடன் நிச்சயிக்கப்படுகிறது.. சுபம்… சுபம்… சுபம்…’ என்று நிச்சயப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.

மௌனங்கள் தொடரும்….

10 COMMENTS

LEAVE A REPLY