SHARE

 

“ஆபரணங்கள் எல்லாம் உன்னிடம்

தோற்றுத்தான் போகின்றன,

ஜொலிப்பதை விட்டு விட்டு

உன்னை இரசித்துக் கொண்டே கிடப்பதால்!!”

 

 

 

“மித்ரா… இந்த நகை நல்லா இருக்கா பாரு…” உஷா அவள் கழுத்தில் ஒரு அட்டிகையை வைத்துப் பார்க்க, மித்ரா, தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ம்ம்… எனக்கு நல்லா இருக்குன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா எடுங்க சித்தி… எப்பவோ நடக்கப் போற கல்யாணத்துக்கு இப்போவே எடுக்கறீங்களே.. உங்களை எல்லாம்…” என்று சிரித்துக் கொண்டே திரும்ப, அப்பொழுது தான் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்த வசந்த், ஸ்வப்னா, மற்றும் லதாவைப் பார்த்தாள்.

ஓரிரு நிமிடம் ஸ்வப்னாவையே பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு பார்வையை திருப்பி, சந்தோஷைப் பார்த்தாள். அவனோ வசந்தைக் கண்ட உடன், எலியைக் கண்ட பூனையாக சிலுப்பிக் கொண்டு நின்றான்.

“இந்த ஊர்ல இவனுக்கு வேற கடையே கிடைக்கலையா? எங்க போனாலும், என் கண்ணுலயே பட்டு கடுப்பேத்தறான்…. நான் போய், ‘உனக்கு எல்லாம் எங்க கடையில நகை தரது இல்ல’ன்னு சொல்லிடவா?” என்று அலுத்துக் கொண்டான்.

“என்ன சந்தோஷ்? சின்னப் பிள்ளைத் தனமா பேசற… இந்தக்கடை பொதுவானது…. இதுல அவனை மட்டும் உள்ளே வரக் கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும். அதுவும் தவிர, அவன் அதுக்கு சண்டைப் போட்டா.. பெரியப்பா வந்து காரணம் கேட்டா என்ன சொல்லுவ? எதுக்கு இப்போ உனக்கு இவ்வளவு கோபம்?” அவனது சிலுப்பலைப் பார்த்த மித்ரா கேட்கவும்,

“என்னவோ அவனைப் பார்த்தாலே கடுப்பா வருது… அவன் உன்னைப் பார்க்கற பார்வையே சரி இல்ல… நேத்து இதையே தான் மனோவும் சொன்னான்… எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு…” வந்த பதிலில், மித்ராவிற்கு கவலை பிறந்தது.

சட்டென்று முகம் வாடிவிட, தலைகுனிந்தவள், “வேண்டாம் சந்தோஷ்… அவன் மேல எதுக்கு தேவை இல்லாத கோபம்? எனக்கு ஒண்ணும் இல்ல… நீ கவலைப்படாதே… நான் ஜாக்கிரதையா இருக்கேன்” என்று மெல்லிய குரலில் சொன்னவள், உடனே முகத்தை மாற்றிக் கொண்டு,

“நீ எங்களுக்கு சேல்ஸ்மேன் வேலை பார்க்கத் தானே வந்த… அதை செய்… பெரிய மனுஷன் மாதிரி பேசாதே…” என்று சிரித்துக் கொண்டே கூறியவள், உஷாவுடன் சேர்ந்து கடையை ரெண்டாக்கிக் கொண்டிருந்தாள். உற்சாகத்துடன் நகைகளை எடுக்கும் அவளைப் பார்த்த வசந்த், மனதிற்குள் குமைந்தான்.

வாயையும் திறக்க முடியாமல், அவன் ஒப்புக்கு நின்றுக் கொண்டிருக்க, லதாவும், ஸ்வப்னாவுமே நகைகளை எடுத்து முடித்தனர். அப்பொழுது திரும்பிய லதா, வைர நகைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த மித்ராவைப் பார்த்து, “இவளும் இங்க வந்திருக்காளா? இவ ஏண்டா உன்னையே சுத்தி சுத்தி வரா… கூட இருக்கற லேடியைப் பார்த்தா அவங்க அம்மா போல இருக்கு… இரு, நான் போய் அவளைப் பத்தி அவங்க அம்மாக்கிட்ட சொல்லிட்டு வரேன்… அவ முழுசா கெட்டுப் போறதுக்கு முன்ன அவங்க வீட்ல கண்டிச்சு வைப்பாங்க இல்ல…” வசந்திடம் கூறியவர், நகரப் போக, வசந்திற்கு எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

தன் நாக்கையே சபித்துக் கொண்டவன், “நாம வந்த வேலைய மட்டும் பார்க்கலாம்மா… நமக்கு எதுக்கு மத்தவங்க வம்பு?” அசட்டைப் போல கூறியவனைப் பார்த்தவர்,

“ம்ம்… சரி விடு… என்னவோ போ… நேத்தும் கோவிலுக்கு போனா அங்க வந்து நிக்கறா… இன்னிக்கு கடைக்கு வந்திருக்கா? இன்னமும் அவ கண்ணு உன் மேல இருக்கா என்ன?” என்று அவனிடம் கேட்டவர், அவனே எதிர்ப்பார்க்காத நேரம், மித்ரா அருகில் சென்றார்.

“ஹையோ” என்று மனதில் நினைத்தவன், மித்ராவை லதா தவறாக எடுக்கக் காரணமான அந்தச் சம்பவம், அவன் கண் முன் நிழலாடியது.

இறுதியாண்டு என்பதால், கல்லூரி ஆண்டு விழாவிற்கு வந்திருந்த லதாவை ஓரிடத்தில் அமர்த்தி இருந்த வசந்த், திருட்டுத் தனமாக மித்ராவிற்கு அவரை அறிமுகம் செய்து வைக்க, மித்ரா அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள். வசந்தின் பார்வை அவளையே சுற்றிக் கொண்டிருக்க, லதா எதுவோ பேசிக் கொண்டிருக்கவும், அதை காதில் வாங்காத வசந்த்தின் கவனம் மொத்தமும் மித்ராவின் மீதே படிந்திருந்தது.

அப்பொழுது மித்ரா, எதுவோ ஜாடை பேசிக் கொண்டிருக்க, வசந்த் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த லதாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கியது.

“வசந்த்…” லதா அதட்ட, தூக்கிவாரிப் போட்டு, வசந்த் அவரைப் பார்க்க, அவனை தனியாக இழுத்துச் சென்றவர், “என்ன நடக்குதுடா? அவ உனக்கு ஜாடை காட்டறா… நீ அவளையே பார்த்துட்டு இருக்க? என்ன நடக்குது?” அவர் கோபமாகக் கேட்கவும், ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்ட வசந்த்,

“இவ்வளவு தானா?” என்று இழுக்க,

“என்ன ‘இவ்வளவு தானா’? அவ உன்னைப் பார்த்து சிரிக்கிறா… நீ அவளையே பார்த்துட்டு இருக்க… என்னடா லவ்வா?” அவர் சற்றும் கோபம் குறையாமல் கேட்கவும்,

“ஹையோ அம்மா… அவ கொஞ்சம் ஒரு மாதிரி… பெரிய வீட்டுப் பொண்ணும்மா… அவளுக்கு கூட சுத்த நாலு பிரெண்ட்ஸ் வேணும்… அதுவும் பாய் பிரெண்ட்டா இருந்தா? அவ என்னைப் பார்த்தும் சிரிப்பா… பாலாஜியைப் பார்த்தும் சிரிப்பா… அவளுக்கு பாய்ஸ் கூட பேசறதுன்னா ரொம்ப பிடிக்கும்… அவ ‘இது உங்க அம்மாவா’ன்னு கேட்டா… அதுக்குத் தான் நான் ‘ஆமா’ன்னு சொன்னேன்… வேற ஒண்ணும் இல்லம்மா…” என்றவன், அத்தாட்சிக்காக,

“அதோ பாருங்கம்மா… அவ இப்போ பாலாஜி கூட பேசிட்டே போறா பாருங்க…” என்று காட்டவும், மகனின் வாய் சொல்லே வேதமாக, மித்ராவைப் பற்றிய தவறான விதை அவர் மனதில் விழுந்து, அன்றே அவள் மீது வெறுப்பை விருட்சமாக வளர்த்தார்.

“பார்த்துடா… அவ சிரிச்சு பேசறான்னு நீயும் பேசி வைக்காதே… அப்பறம் உன் வாழ்க்கையும் சிக்கி சின்னாபின்னம் ஆகப் போகுது… இந்த மாதிரி பொண்ணுங்க இருக்காங்கன்னு தான்டா, நான் உன்னை பொண்ணுங்க கூட பேசக் கூடாதுன்னு சொன்னேன்…” லதா சொல்லவும், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, ‘சரி சரி’ என்று வசந்த் தலையசைத்துக் கொண்டிருக்க, லதா அவனைப் பார்த்துவிட்டு, தன்னுடைய இடத்தில் அமர்ந்தார்.

பழைய நினைவுகளில் இருந்து விலகிய வசந்த், தன்னையே நொந்துக் கொண்டு, சுதாரித்து அவர்கள் அருகில் செல்லும் முன், லதா மித்ராவைப் பிடித்துத் திருப்பி, “இங்க என்ன செய்யற?” என்று கேட்டும் வைத்தார்.  

“மேடம் நீங்களா? என்னோட கல்யாணத்துக்கு நகை எடுக்க வந்திருக்கேன் மேடம்… அதோட நான் தனியாவும் வரல… எங்க வீட்லயும் வந்திருக்காங்க…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, சந்தோஷின் பார்வையோ, அவள் மீதே பதிந்திருந்தது.

“ஓ… ஆமா, இப்போ எப்படி இருக்க… நான் சொன்னபடி ஒழுங்கா இருக்கியா? இல்லன்னா இப்போவே உங்க அம்மாக்கிட்ட உன்னைப்பத்தி சொல்லிட்டுப் போறேன்” மிரட்டல் தொனியில் அவர் கேட்கவும்,

ஒரு நொடி வசந்தை வெறுப்புடன் பார்த்தவள், அடுத்த நொடி, “இல்ல மேடம்… அதுக்கு தேவை இருக்காது. நீங்க எனக்கு அட்வைஸ் பண்ணினதுல இருந்து திருந்திட்டேன் மேடம்… இப்போ நான் ரொம்ப அடக்கமா இருக்கேன்…” புன்னகையுடன் அவள் சொல்லவும், அதைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்த், தன்னையே நொந்துக் கொண்டான்.   

பேசி முடித்தவளின் பார்வை, ஒரு வினாடி, அவன் மீது குற்றம் சாட்டியும், அடுத்த நொடி, வலியுடனும் பதிய, அவளது பார்வையின் குற்றச்சாட்டைத் தாங்க முடியாத வசந்த், தனது பார்வையை திருப்பிக் கொண்டான்.

ஒரு பெருமூச்சுடன், “நான் வரேன் மேடம்…” என்று விடைப்பெற்றவள்,

“அண்ணா… அந்த நெக்லஸ காட்டுங்க… சித்தி… இது ஓகே வா பாருங்க…” என்று கடை சிப்பந்தியிடமும், உஷாவிடமும் காட்டியவள், அதை எடுத்து, தன் மீது வைத்து அழகு பார்க்க,

“மிது… இந்த செட்டைப் பாரேன்… எனக்கு ரொம்ப பிடிச்சது… நான் உனக்காக இதை ஆர்டர் செய்யறேன்… மனோவுக்கும் ரொம்ப பிடிச்சதாம்…” என்று ரோகிணி சிவப்பும் பச்சையும், முத்தும் பதித்த, ஒரு பெரிய ஆரத்தை தூக்கிக் கொண்டு வர,

“அண்ணா வந்திருக்காங்களா அண்ணி?” சுற்றி பார்வையை சுழற்றிக் கொண்டே அவள் கேட்கவும், ரோகிணி, செல்போனை அசைத்துக் காட்ட, அதைப் பார்த்து புன்னகைத்தவள்,

“டெக்னாலஜி ஹாஸ் டெவலப்ட் வெரி மச்…” என்று இழுத்து ராகம் பாட, ரோகிணி, அவள் தலையை செல்லமாக கலைத்துச் சிரித்தாள்.

“மித்ரா… இந்த வளையல் அண்ணிக்கு நல்லா இருக்கா பாரு… நாத்தனாரா, நீ அவளுக்கு பூ முடிக்கணும் இல்ல…” உஷா ஒரு வளையலை எடுத்துப் பார்த்துக் கொண்டே சொல்லவும், 

“அண்ணி… நீங்களே பாருங்க அண்ணி… உங்களுக்கு எந்த டிசைன் பிடிச்சிருக்கு? நான் எடுத்துக் கொடுக்கறேன்… அதுக்கு நான் தான் பில் பணம் கட்டுவேன்… இங்க முதலாளி சார் வாங்கிக்கலைனா நாம வேற கடைக்கு போகலாம்…” என்று சந்தோஷைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்டு, ஒரு பெட்டியை முன்னே வைக்க, ரோகிணி அவளை சந்தேகமாகப் பார்த்து,

“நீ உன்னோட பேங்க் அக்கௌன்ட்ல இருந்து பணம் எடுத்தியா?” ரோகிணியின் குரலில் இருந்த கோபத்தில், புன்னகைத்தவள், 

“இல்ல அண்ணி… நான் என்னோட அக்கௌன்ட் பணத்துல இருந்து எடுக்கல… அதுலேர்ந்து நீங்க எல்லாம் சொன்னா மாதிரி நான் தொடவே இல்ல அண்ணி..” என்று சமாதானம் கூறி,

“பாட்டிக்கும் வீட்டுக்கும் தெரிய வேண்டாம் அண்ணி… நான் யூ.எஸ்.ல பார்ட்டைமா ஒரு கம்பெனிக்கு பிளான்ட் டிசைனரா வேலைக்குப் போயிட்டு இருந்தேன்… சும்மா ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்கு… அதுலயே தானே நான் இன்டெர்ன்ஷிப் செய்தேன்… இப்போவும் அதே கம்பெனில தான் நல்ல சம்பளத்துல வேலை பார்க்க கூப்பிட்டு இருக்காங்க அண்ணி…

அங்க வேலை செய்ததுக்கு கொடுத்த பணத்துல தான் சேர்த்து வச்சேன்… நீங்க அனுப்பினது எல்லாம் செலவுக்கு சரியா போச்சு…” என்றவள், மேலும்,

“ப்ளீஸ் பாட்டிக்கு தெரிஞ்சா, அவங்களுக்கு கஷ்டமா இருக்கும் அண்ணி… செலவுக்கு அனுப்பினது போதாம போயிடுச்சோன்னு வருத்தப்படுவாங்க…” என்று உஷாவிற்கு கேட்காத குரலில் கெஞ்சியவள், ரோகிணி முறைக்கவும்,

“இப்படி முறைச்சீங்கன்னா, அப்பறம் என் மருமகனுக்கு ஒண்ணும் வாங்கித் தர மாட்டேன் அண்ணி… ஆமா சொல்லிட்டேன்… அவனுக்கு இருக்கற ஒரே அத்தை நான் தான்…” என்று சிரித்தவள், ரோகிணி கன்னத்தைக் கிள்ளவும், “வாங்க…” என்று அழைத்துக் கொண்டு, வளையல் பெட்டியை அவளிடம் தள்ள, அவள் பேசியதையெல்லாம் கேட்ட லதாவின் பார்வை, வசந்தின் மீது அர்த்தத்துடன் பதிய, “ஹையோ…” என்று மனதினில், தலையில் அடித்துக் கொண்டான்.

ஒருவழியாக நகைக் கடையில் பில் போட்டுக் கொண்டு, லதா நகர, அப்பொழுதும் மித்ரா எதையோ பார்த்துக் கொண்டிருக்கவும், “ஏண்டா நகைக் கடையவே வாங்கப் போறாளா என்ன? இப்படி எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கா? ரொம்ப செலவாளி போல!…” அவர் கேட்கவும்,

“இந்தக் கடையே அவங்களோடது தான்மா… அப்படி இருக்கும்போது அவ ஏன் கடைய வாங்கப் போறா?” என்று வசந்த் பதில் சொல்லவும், லதா வாயைப் பிளந்தார்.

“இது மட்டும் இல்ல… நீங்க ஒரு பொட்டிக்ல புடவை எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தீங்களே… அதுவும்… அதோ அங்க இருக்காங்களே அவங்களுது தான்…” என்று உஷாவைக் காட்டி, அவர்கள் குடும்பத் தொழில்களைப் பற்றி அவன் சொல்லிக் கொண்டே வரவும், லதாவிற்கு மயக்கமே வரும் போல் இருந்தது.

“டேய்… அவ இவ்வளவு வசதியானவன்னு சொல்றியே… ஆனா நான் அன்னிக்கு அட்வைஸ் பண்ணும்போது அவ கொஞ்சம் கூட திமிரா பேசவே இல்லையேடா…” லதாவின் பார்வை, மொபைலில் யாருடனோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஸ்வப்னாவின் மீது படிய,

“நீங்க தானே செலக்ட் பண்ணினீங்க… அனுபவிங்க…” என்று கூறிவிட்டு, மித்ராவைப் பார்த்துவிட்டுச் சென்றான்.

இரவில், கலகலப்புடன், கடையில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த நகைகளை பாட்டியிடம் காட்டியவள், “ஆனா…. கல்யாணத்தும் போது, எனக்கு புது டிசைன் வேணும் பாட்டி… அதை நானே டசைன் செய்து கொடுக்கறேன்…” என்றவளை, அந்தப் பெரியவர் மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருக்க,

“பதில் சொல்லுங்க பாட்டி…”

“உனக்கு இல்லாததாடா… என்ன டிசைன் வேணுமோ கேளு… நான் ஆசாரிகிட்ட கொடுத்து செய்யச் சொல்றேன்…” அவளது பெரியப்பா சொல்லவும்,

“தேங்க்ஸ் பெரியப்பா…. இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் முடிச்சிட்டு தூங்கறேன்…” என்றபடி, தனது அறைக்குள் நுழைந்து தாழ் போட்டுக் கொண்டு, வந்தனாவுடன் வீடியோ காலில் பேசத் துவங்கினாள்.

மறுநாள் கல்லூரிக்கு கிளம்பியவளைப் பிடித்து நிறுத்திய சந்தோஷ், என்ன நினைத்தானோ, “உன் மனசுல ஏதாவது ஆசை இருந்தா சொல்லுடா… மனசுலையே வச்சு மருகாதே…” என்று கேட்கவும், அவனை ஆழ்ந்து பார்த்தவள், “ம்ம்..” என்று கண்ணில் நீர்த் திரையிட அவள் தலையசைக்க,

“ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ்ல தான் படிச்சோம்… ஆனா, உன்னை இன்னும் கொஞ்சம் பிரெண்ட்லியா பேச வச்சிருக்கணுமோ? நீ பேசவே மாட்டேங்கறன்னு உன்னை சும்மா விட்டது தப்போ?” மனக்கிலேசத்துடன் பேசியவனை சகஜமாக்க,

“ஹே… இப்படி சென்ட்டி போட்டு பேசிட்டே போனேன்னு வை.. அப்பறம் உன்னை ‘அண்ணா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவேன்… ஆமா சொல்லிட்டேன்..” என்று மிரட்டியவளை கை எடுத்து கும்பிட்டவன்,

“என்னை அப்படி மட்டும் கூப்பிடாதே… என் செல்ல தங்கை இல்ல… நான் உன்னை விட ரெண்டே வருஷம் தான் பெரியவன்… அப்படி மட்டும் கூப்பிடவே கூப்பிடாதே…” என்று ஜகா வாங்கியவன், அவள் சிரிக்கவும், அவள் கன்னத்தைத் தட்டி விட்டு, தன்னுடைய நகைக் கடைக்குச் சென்றான்.

சில சமயங்கள் நீ உண்மையிலேயே அழகா

என்று யோசிக்கும் போதுதான்,

உன்னை அதிகமாக காதலித்து விடுகிறேன்

 

 

அன்று கல்லூரிக்குள் நுழையும் போதே, எதிரில் வந்த வசந்த், “ஹே கேர்ள்…” என்று கூப்பிட, மித்ரா, குழப்பத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

அவளைப் பார்த்து ‘வா’ என்று கையசைத்தவன், மித்ரா விழிக்கவும், “சீனியருக்கு குட் மார்னிங் சொல்லிட்டுப் போறது…” என்று இழுக்க,

“முடியாது…” அவள் திரும்பி நடக்க,

“இப்போ சொல்லிட்டு போகலைன்னா… போகலைன்னா…” என்று அவன் இழுக்கவும், அவனது மொபைலின் “ஸ்வப்னா காலிங்” என்ற சத்தத்தில், மித்ரா அவனை முறைக்க, “ஐயோ…” என்று தலையில் அடித்துக் கொண்ட வசந்த், அவசரமாக அதை எடுக்க, கடும் கோபத்துடன் மித்ரா அவனை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

“ச்சே… இந்தப் பிசாசு இப்போ எதுக்கு போன் பண்ணுது… இன்னைக்கு என்னை டிரைவர் வேலை பார்க்க எங்கே கூப்பிடுதோ?” புலம்பியபடி போனை எடுத்தவனை, ராஜேஷ் வியப்புடன் பார்த்தான்.

போனை கட் செய்து பாக்கெட்டில் போட்டவன், அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஷ், பாபு, ரவியைப் பார்த்து தலை கோத, “என்னையே தலையால தண்ணி குடிக்க வைக்கிறா மச்சி… ‘நல்லா இருக்கா’ன்னு கேட்பா… ‘இருக்கு’ன்னு சொன்னா, ‘எனக்கு பிடிக்கலை’ன்னு தள்ளி வச்சிடறா மச்சி…” என்று புலம்பியவனைப் பார்த்து அனைவரும் சிரிக்க, பாலாஜி, கண்டும் காணாமல் விலகி நடந்தான்.

“பாலாஜி…” வசந்த் அழைக்கவும், திரும்பிக் கூடப் பார்க்காமல், வகுப்பை நோக்கி நடந்தவனை, வசந்த் பின் தொடர்ந்தான்.

“ஹே… உன் பொண்ணு செம அழகா இருந்தா… என் கூடவே கூட்டிட்டு போயிடாலாம் போல இருக்கு…” மித்ரா சத்தமாக பேசிக் கொண்டிருக்க,

“ஹே உனக்கும் கல்யாணமாமே… அப்போ உன்னை மாதிரியே, முயல் குட்டி மாதிரி பாப்பா வரும்.. அப்பறம் எதுக்கு நீ அவளோட பாப்பாவைக் கேட்கற…” சமயம் தெரியாமல் பேசிய நித்யாவை அனிதா அடக்க,

“விடு அனி… அவ எப்பவும் அப்படித் தானே பேசுவா…” என்று புன்னகையுடன் கூறிய மித்ரா,

“அது வர வரை எனக்கு போர் அடிக்குமே நித்யா…” என்று சமாதானம் கூறிவிட்டு,

“ஹே கைஸ்… நாம எல்லாரும் கட் அடிச்சிட்டு சினிமாக்கு போகலாமா?” என்று வகுப்பின் முன்னால் சென்று நின்று கேட்க,

“எந்த படத்துக்கு?” அனைவரும் கோரஸ் பாட,

“இப்போ புதுசா என்ன படம் ரிலீஸ் ஆகி இருக்கு? அந்த படத்துக்கே போகலாம்…” என்று மித்ரா சொல்லவும்,

“நான் வரல மித்ரா… இதுக்கும் மேல வீட்ல பெர்மிஷன் கேட்க முடியாது…” தயக்கத்துடன் அனிதா சொல்லவும்,

“நாம கட் அடிக்க போறோம் அனி… என் வாழ்நாள் ஆசை அது… சோ நாம கட் அடிச்சிட்டு போறோம்… நீ காலேஜ்ல இருந்து வீட்டுக்கு எந்த நேரத்துக்கு போவியோ, சரியா அந்த நேரத்திற்கு நீ வீட்டுக்குப் போயிடலாம்…” என்று அவள் வாக்கு கொடுக்கவும், சிறிது பயத்துடன் அனிதா தலையசைக்க, இரண்டு சாக்லேட்களைப் பிரித்து மித்ரா வாயில் போட்டுக் கொண்டு, “டன்” என்று விரலை உயர்த்தினாள்.   

“மித்ரா… யூ.எஸ். எப்படி இருந்தது… உனக்கு பிடிச்சு இருந்ததா?” வகுப்புத் தோழி ஒருத்தி கேட்கவும்,

“ரொம்ப பிடிச்சு இருந்தது… நான் எவ்வளவு சாக்லேட் தின்னாலும், என்னை ஏன் சாப்பிடறன்னு கண்டிக்க ஆள் இல்ல, நிறைய ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்… என்னை சாப்பிட்டியா சாப்பிடலயான்னு யாரும் கேட்க  மாட்டாங்க…. எனக்கு புடிச்ச டிரஸ்ஸ போட்டுக்கிட்டேன்… நான், என்னோட லைப்ன்னு நல்லா போயிட்டு இருந்தது… எந்த தொல்லையும் இல்ல… அதுனால… நான் திரும்ப அங்கேயே போகப் போறேன்…” என்று மித்ரா சொல்லிக் கொண்டிருக்க, வசந்த், மெல்ல, தனது இடத்தில் வந்து அமர்ந்தான்.

“சூப்பர்டி… நல்லா பேச கத்துக்கிட்ட… என்னமா பேசற…” என்று பெண்கள் அனைவரும் குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிந்தனர்.

“மித்ரா… நாம எல்லாம் இப்போவாவது காலேஜூக்கு ஒழுங்கா வரலாம்னு தான், நாம திரும்ப வரதே… அதையும் நீ கட் அடிக்கப் போறோம்ன்னு கெடுக்கப் போறியா?” என்று பாலாஜி கிண்டல் செய்யவும்,

“சும்மா த்ரில்லுக்கு….” என்று கண் சிமிட்டியவள், அனைவரும் வந்து அமரவும், அனிதாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

கல்லூரியின் முதல்வரும், மற்ற பேராசிரியர்களும், அவர்களது ஜூனியர் மாணவர்களும் அங்கு வந்து குழும, பழைய மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய பேராசிரியர் ‘வேலை’ குழப்பமாக பார்த்தனர்.  

“நீங்க எல்லாம் பி.ஜி. படிச்சபோது கிடைச்ச எக்ஸ்பீரியன்ஸ், அப்பறம் சில பேர் வேலைக்கு போயிருக்கீங்க… அதுல உங்களுக்கு கிடைச்ச அனுபவம், அங்க நீங்க புதுசா கத்துக்கிட்டது…. இதையெல்லாம் இங்க உள்ளவங்களோட ஷேர் பண்ணிக்கப் போறீங்கன்னு சொன்னேன் இல்லையா… அதெல்லாம் கேட்க தான் நம்ம டிபார்ட்மெண்ட்டே இங்க வந்து இருக்காங்க. இது ஜஸ்ட் ஜாலிக்காக மட்டும் இல்லாம, கொஞ்சம் உபயோகமாவும் இருக்கலாம் இல்லையா?” அவர் நயமாகக் கேட்கவும், அனைவரும் அதற்குத் தயாராகத் தொடங்கினர்.

ஒவ்வொருவரும், தங்கள் அனுபவங்களை சொல்லிக் கொண்டே வர, மித்ராவின் முறை வந்ததும், “இவளுக்குத் தான் கூட்டத்தைப் பார்த்தா பேசவே வராதே… குரலும் முதல் பெஞ்ச் தவிர கேட்கவே கேட்காது…” என்று பாபு அவளை கிண்டல் செய்ய, வசந்த் அவனது தலையை மித்ராவை நோக்கி திருப்ப, பாபு ‘ஆ’ என்று வாய்ப் பிளந்தான்.

போர்டில் வரைந்துக் கொண்டிருந்தவள், நேராக திரும்பி நின்று பேசத் தொடங்க, அந்த துறையின் பேராசிரியர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி…. அதோடு அவள் அதை சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்லவும், வசந்த் அசந்து போய், கண்ணிமைக்காமல் அமர்ந்திருந்தான்.

அவள் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷத்தைப் பார்த்த ராஜேஷ், “உன் ஆளு கலக்கிடுச்சு மச்சி… என்னம்மா புரிய வைக்கிறா? மக்கடிச்சு பாஸ் பண்ணலைன்னு நிரூபிச்சிட்டா இல்ல…” என்று மேடையில் நின்று, பலரின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த மித்ராவைப் பார்த்து ராஜேஷ் வியக்கவும், முதல் முறையாக அவனுடைய ‘உன் ஆள்’ என்ற சொல் தித்திக்கும் போல் இருந்தது வசந்திற்கு.

கிறுக்குத்தனம் என்றாலும் செய்யப் பிடிக்கிறது

வீட்டிற்கு வரும் திருமணப் பத்திரிகைகளில்

மணமகன் என் பெயராய்

மணமகள் உன் பெயராய்

ஆனால், தானும் புதிதாக ஒன்றைப் பற்றி விளக்கிச் சொல்லும் பொழுது தனக்குக் கிடைக்காத கர கோஷம் அவளுக்கு கிடைத்ததில், வசந்தின் இயற்கை குணமான சுயநலம் தலை தூக்க, “உன்னை எப்படி தலை குனிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்டி என் ராசாத்தி…” என்று சூளுரைத்துக் கொண்டான்.

அதே போல மறுநாள் அவர்கள் காலேஜ் உள்ளே வந்து விட்டு சினிமாவிற்கு போவதற்காக வெளியில் செல்ல நினைக்கையில், “மித்ரா… சொன்னதைக் கேளு… நாமளே நம்மளோட பழைய காலேஜ் நாட்களை திரும்ப கொஞ்சம் வாழ்ந்து பார்க்கலாம்ன்னு வந்திருக்கோம்… இங்போ போய் கட் அடிக்கறது, சுவரு ஏறி குதிக்கிறது எல்லாம் நல்லா இல்ல மித்ரா… நம்மளைப் பத்தி இப்போ இங்கே உள்ளவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க… நீ ஏன் இப்படி மாறிப் போன… ப்ளீஸ் மித்ரா… வேண்டாம்…” பாலாஜி கெஞ்சிக் கொண்டிருக்க,

“ஜஸ்ட் என்னை ப்ரீயா விடு பாலாஜி… இங்க பக்கத்துல இருக்கற தியேட்டர் தான்… ஒரு ரெண்டு மணி நேரத்துல வந்துடறேன்…. எனக்கு இந்த மாதிரி சுவர் குதிச்சு படத்துக்கு போகணும்னு ரொம்ப நாளா ஆசை பாலாஜி… ப்ளீஸ் விடேன்…” பதிலுக்கு அவளும் கெஞ்சிக் கொண்டே, அவர்கள் அறையின் அருகில் இருந்த சுவற்றிற்கருகே செல்லவும்,

“உன்னோட பல வருஷ ஆசைகளை எல்லாம் இப்போ தான் நிறைவேத்திக்கப் போறியா சங்கமித்ரா… நீ இப்படிச் செய்யறதால, இனிமே வரப்போற வருஷங்கள்ல எந்த பசங்களும், உங்களுக்கு இப்போ கிடைச்சிருக்கற இந்த மாதிரி ஒரு அபூர்வமான வாய்ப்பை வாழ்கையில நினைச்சே பார்க்க முடியாத படி செய்யப் போற அப்படித் தானே…” பின்னால் இருந்து கேட்ட குரலில், அதிர்ந்து திரும்பியவள், அங்கு நின்றிருந்த ‘வேல்’ சாரைப் பார்த்து தலை குனிந்தாள்.

மற்றவர்கள், ‘இது எங்களுக்கு பழக்கம்’ என்பது போல நிற்க, “நீ இப்படி செய்வன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல சங்கமித்ரா… முன்ன எல்லாம் கிளாஸ்ல நீ இருக்கற இடம் தெரியாது… ஆனா இப்போ?” வேல் கேட்கவும், அவளது தலை மேலும் குனிய,

“பின் விளைவுகளைப் பத்தி யோசிக்காம எப்படி ஈசியா முடிவெடுக்கற? நீங்க எல்லாம் பெஸ்ட் ஸ்டுடென்ட் அப்படிங்கறதுனால தானே நாங்க உங்களோட இந்த ஆசைக்கு தடை சொல்லாம காலேஜ்ல பேசி அனுமதி வாங்கித் தந்தோம்…. உங்களைப் பார்த்து மத்த பசங்களும், ‘இப்போ நல்ல பேர் எடுத்தா, நமக்கும் இப்படி ஒரு சான்ஸ் பின்னாடி கிடைக்கு’ம்னு யோசிச்சு செயல் படத் தொடங்கி இருக்காங்க… நீ இப்போ எல்லாத்தையும் கெடுக்கப் போறியா?” வேல் பேசப் பேச, மித்ராவிற்கு அவமானமாய் இருக்க,

“சாரி சார்… சும்மா விளையாட்டுக்கு செய்துட்டேன்…” என்று அவள் வருத்தம் தெரிவிக்க,

“இனி இப்படி எல்லாம் செய்யாதே மித்ரா.. நீ நீயா இரு…” என்று கூறியவர், “தேங்க்ஸ் வசந்த்…” என்று கூறிவிட்டு செல்லவும், பாலாஜி அவனைப் பார்த்து முறைக்க, மித்ரா அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல், அருகில் இருந்த ரெஸ்ட்ரூமிற்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் வெளியில் வரும்வரை காத்திருந்த வசந்த், அவள் அவனைக் கடக்கும் வேளையில்,  “காலையில உள்ள வரும்போது… கிளாஸ் கட் அடிக்கிற வேலை எல்லாம் வேண்டாம்… நேத்து நீ கிளம்பும்போது, மதியம், நாம எல்லாரும் சினிமா போகலாம்ன்னு சொன்னேனே கேட்டியா? அது என்ன நீ மட்டும் போறது… நான் சொன்னதைத் தான் நீ செய்யணும்… செய்யவும் முடியும்…” என்றவன்,

“இப்போ கிளாஸ்க்குப் போ…” என்று அவளைப் பிடித்து தள்ள,

“டேய்…” என்று பாலாஜி உறுமவும்,

“நீ சவுண்ட் விடாதே பாலாஜி.. உன்னோட பெஸ்ட் பிரெண்ட்ட உள்ளே கூட்டிட்டு போ…” வசந்த் நக்கலாகச் சொல்லவும், மித்ரா வேகமாக அறைக்குள் சென்றாள்.

“உன் புத்திய காட்டிட்டியே… நீ எல்லாம்…” பாலாஜி வெறுப்பை உமிழ,

“நானும் உன்னோட பெஸ்ட் பிரெண்ட் தாண்டா…. அது உனக்கு ஏன் நியாபகத்துல இல்ல?” என்று வசந்த் வருத்தமாகக் கேட்க,

“நீ போற போக்கைப் பார்த்தா… உன்னை நான் எதிரியா தான் பார்ப்பேன்னு நினைக்கிறேன்…” என்ற பாலாஜி, தானும் அறைக்குள் நுழைய, மித்ராவிற்கு நேரெதிராக இருந்த சுவற்றில் சாய்ந்த வசந்த், தனது கைக் குட்டையை எடுத்து கண்களை ஒற்றிக் கொண்டிருந்த மித்ராவைப் பார்த்து, தனது நினைவுகளை பின்னோக்கி, கடந்த கால நிகழ்வுகளுக்கு சென்றான்.   

 

மௌனங்கள் தொடரும்………..

 

 

2 COMMENTS

  1. Nalla irrukku Ramya. Vasanth over suyanala vadhiyo? Paavam Mithu. Vasanth nalla antha sopna kitta sikkittu seiki adikattumnu thonnudhu. Happy New Year Ramya.

LEAVE A REPLY