SHARE
ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
​இளமை தூக்கதில் இரண்டு ஏக்கங்கள்

விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்து தான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

 

“மித்ரா…” வசந்த் அழைக்கவும், குரல் வந்த திசையில் திரும்பியவள், “நீயா?” என்று கேட்டு, “ச்சே.. எங்கப் போனாலும் நிம்மதியே இல்ல…” என்று முகத்தைத் திருப்ப,

“இப்போ என்னைப் பார்க்கப் போறியா இல்லையா?” என்று அவளை நெருங்கி,  “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று அவளது முகத்தைத் திருப்பிக் கத்தவும்,

அவனது கையை மெல்ல விலக்கியவள், “எனக்கு அறிவில்லைன்னு தான் உனக்கே தெரியுமே… திரும்ப திரும்ப ஏன் வந்து கேட்கற வசந்த்… நீ கேட்டா மட்டும் புதுசா அறிவு ஊறிடப் போகுதா என்ன? அனாவசியமா உன்னோட நேரத்தை வேஸ்ட் பண்ணிடாதே…” உதட்டை சுழித்து, ஏளனமாக அவள் பேசவும், வசந்தின் கோபம் எகிறிக் கொண்டே இருந்தது.

“போதும்…. ரொம்பப் பேசாத…..  காலேஜூக்கு என்ன மாதிரி டிரஸ் போட்டுட்டு வந்திருக்க?  சுடிதார் எல்லாம் கொண்டே வரலயா? இந்த ஊர்ல வந்தும், ஸ்கர்ட்டும்… கழுத்துல பாசி மணி ஊசி மணி எல்லாம் மாட்டிட்டு… தலைய விரிச்சுப் போட்டுட்டு… தலையில போடற பேன்ட்ட கையில மாட்டிக்கிட்டு வந்திருக்க… ஒழுங்கா வர முடியாதா? கண்டவன் எல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறான்…” அவளிடம் பொரிந்தவனை,  பாலாஜி வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அனிதா, மிரட்சியுடன் மித்ராவைப் பார்த்தாள்.

“எனக்கு பிடிச்சிருக்கு… போட்டுட்டு இருக்கேன்… நல்லா தானே இருக்கு? ஏன் நான் இதெல்லாம் போட்டா உனக்குப் பிடிக்கலையா?” ‘நான்’ என்ற வார்த்தையில் அவள் அழுத்தம் கொடுக்க, அந்த அழுத்தம் அவன் கோபத்தை மேலும் கிளறியது.

“இல்ல… எரிச்சலா இருக்கு…”  ஒற்றைச் சொல்லாக வந்து விழுந்த அவன் வார்த்தைக்கு, தோளைக் குலுக்கியவள்,

“இல்லன்னா போ… எரிச்சலா இருந்தா தண்ணிய குடி… வை ஷுட் ஐ பாதர்” என்றபடியே நகரப் போனவளை இழுத்துப் பிடித்தவன்,

“ஓவரா பேசற சமி… பேசாம வீட்டுக்கு கிளம்பு… நாளைக்காவது ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வா…” என்றவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு, எந்த எதிர்ப்பும் காட்டாமல் நின்றவளின் நிலையை உணர்ந்த பாலாஜி,

“வசந்த்… என்னடா செய்துட்டு இருக்க? ஏண்டா அவ வந்ததுல இருந்து காயற? அவளை விடு.. இது காலேஜ்…”  என்று பாலாஜி வசந்தைக் கடியவும், தன்னிலை பெற்றவள், அவனிடம் இருந்து திமிறி விலகி,

“என் இஷ்டம்… நான் இந்த டிரஸ் தான் போடுவேன்…. அதைக் கேட்க நீ யாரு? நீ ஏன்  என்னை கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்க? உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு… என் விஷயத்துல தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்ல…” என்று கோபமாக கூறிவிட்டு,

“வா அனிதா… பேச வந்துட்டான்…” என்று சத்தமாக முணுமுணுத்துக் கொண்டு, அவனை கடந்து செல்ல, வசந்த் கோபத்தின் உச்சியில் நின்றிருந்தான்.

“டேய்… வசந்த்… என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் செய்யற? நீ அவளை ரொம்ப விரட்டற வசந்த்.. அவ என்னவோ உன்னை பார்த்தாலே எதிரிய பார்க்கற மாதிரி கயறா… என்ன தான் நடக்குது?” பாலாஜி அவனைப் பிடித்து கேட்கவும்,

“என்னை விட்டுட்டு அவ கூட வந்து மில்க் ஷேக் குடிச்ச இல்ல.. அவளையே போய் கேளு… நல்லா குளுகுளுன்னு பதில் சொல்லுவா” என்றுவிட்டு, வசந்த் வேகமாக வகுப்பிற்குச் சென்றான்.

தன்னுடைய வகுப்புத் தோழிகளிடம் சிரித்துப் பேசிக்கொண்டு, அளவளாவிக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததும் அவனது கோபம் பல மடங்கு பெருகுவதாய் இருக்க, அவன் அருகே வந்த ராஜேஷ்,  நிலைமை புரியாமல், “ஏண்டா மச்சி… கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் தான் இருக்கு… அதுக்கு வாங்க வேண்டியது எல்லாம் வாங்கணுமே… நீ உன் ஆளு கூட ஷாப்பிங் போகலையா?” என்று அவனது கோபத்தில் எண்ணையை ஊற்றினான்.

எத்தனை நண்பிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும், மித்ராவின் காதில், ராஜேஷ் கேட்டது விழ, அதை விட, “ஆமா… நான் கூடப் போனாலும் அவளுக்கு பிடிச்சது தான் எடுப்பா… நானும் அவளுக்கு பிடிச்ச ஜிங்குசா கலர் தான் போடணும்… இதுக்கு நான் எதுக்கு… நீயே எடுத்திருன்னு சொல்லிட்டேன்… என்னை பார்த்தா எல்லாருக்கும் எப்படி இருக்குன்னு தெரியல… பேசாம கல்யாணத்துக்கு பதிலா வேற ஒண்ணுக்கு ஏற்பாடு செய்யலாம்…. நிம்மதியா இருக்கும்…”  என்று படபடவென பொரிந்தவனின் பதிலில், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினாள்.

மேலும் அவனது கோபத்தை கிளற, அனைவருக்கும் சாக்லேட் கொடுத்துக்கொண்டு வந்தவள், வசந்திற்கு பிடிக்கவே பிடிக்காத டார்க் சாக்லேட்டுகள் அடங்கிய கவரை நீட்டவும், “என்னது இது?” என்று வசந்த் பல்லைக் கடிக்க,

“உனக்கு ரொம்…ம்…ம்…ப பிடிச்ச டார்க் சாக்லேட் வசந்த்…” என்று மித்ரா இழுக்கவும், அவளை முறைத்தவன், அவள் கையைப் பற்றி, அதிலேயே அந்த கவரை வைக்க, “வேண்டாமா….” மேலும் இழுத்தவளை முறைக்க,

“உனக்கு இப்பெல்லாம் வைட் மில்க் சாக்லேட் தான் பிடிக்கும் இல்ல… நான் மறந்துட்டேன் பாரு… ஆனா, எனக்கு டார்க் சாக்லேட் ரொம்ப பிடிச்சிருக்கு… கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு…” என்று அவனை வெறுப்பேற்றிவிட்டு, நகரப் போக, வசந்த் அவளை வழி மறிக்க முயல, அதற்கு முடியாமல், அந்த அறையினுள் அவர்களது பேராசிரியர் வேல் நுழைந்தார்.

“ஹாய் பிரெண்ட்ஸ் எப்படி இருக்கீங்க?” அவர் தொடங்கவும்,

“சார்… நாங்க எல்லாம் உங்க ஸ்டுடென்ட்ஸ்…” பாபு கத்த,

“அது எல்லாம் என் கிட்ட படிக்கும்போது… இப்போ நீங்க எல்லாம் என்னோட பிரெண்ட்ஸ்… சொல்லுங்க, எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் ரொம்ப நல்லா இருக்கேன்… ஆனா உங்களை எல்லாம் கொஞ்சம் மிஸ் பண்ணிருக்கேன்…” என்று புன்னகையுடனே சொன்னார்.

“நன்றி சார்… அப்போ வாங்க நாம சினிமாக்கு போயிட்டு அப்படியே சைட் அடிச்சிட்டு வரலாம்…” இப்பொழுது ரவி கத்தவும்,

“நீ இன்னும் அடங்கவே இல்லையாடா…” பாலாஜி சத்தம் போடவும்,

“விடு பாலாஜி… இந்த ஆட்டமெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தானே…” என்று அவனிடம் கூறியவர், “போகலாம் ரவி…. ஆனா, என் வைஃப் கிட்ட பெர்மிஷன் வாங்கிக் கொடு… அப்படியே பூரிக் கட்டையால ரெண்டு அடி கொடுத்தாலும் வாங்கிக்கோ… அடி வாங்கி வாங்கி… என் தோள் எல்லாம் மரத்து போச்சு…” என்று போலியான வருத்தத்துடன் சொல்லவும்,

“சார் உங்க சங்கத்துல நம்ம சிங்கம் @  SGயும் (selfish Goose) சேரப் போறான்… எல்லாரும் ஜோரா கைத் தட்டுங்கோ…” என்று ராஜேஷ் கத்தவும், மாணவர்கள் மொத்தமும் கைத் தட்ட, வசந்த் மித்ராவைப் பார்க்க, அதே நேரம் வேலும் அவளைப் பார்த்தார்.

இது போலவே, வகுப்புகள் என்ற பெயரில், அங்கு அரட்டை கச்சேரி தொடங்கி, அவர்களின் இரண்டு வருடம் எப்படிச் சென்றது,  அவர்கள் அந்தத் துறையில் புதியதாக அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ள சொல்லிவிட்டு, பேராசிரியர்கள் விடைப்பெற்றனர்.

மதியம் வகுப்புகள் முடிந்து, அனைவரும் கிளம்பவும், “அனி… நீ வா… நான் உன்னை கொண்டு போய் வீட்ல விடறேன்… அப்படியே குட்டியையும் நான் பார்க்கணும் இல்ல…” என்று மித்ரா சொல்லிக் கொண்டே கிளம்ப,

“மித்ரா… எங்க அப்பாவே வரேன்னு சொல்லி இருக்கார்… நீ அப்பறமா வீட்டுக்கு வா மித்ரா… அதோ அப்பா வந்தாச்சு… நான் வரேன்… நாளைக்கு தான் நித்யா வருவா போல… காலையில வீட்டுக்கு போன் செய்தா” என்றபடி அவள் ஓடிச் செல்ல, போகும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றாள் மித்ரா.

“என்ன மித்ரா… நீ தனியா தான் போகணுமா?  இல்ல சந்தோஷ் வருவானா?” பாலாஜி வந்து நிற்கவும்,

“ம்ம்… ஆமா பாலாஜி… தனியா தான் போகணும்… அண்ணாவ நான் வர வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்…” என்று கூறியவள், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தாள்.

“என்னாச்சு வீட்டுக்கு போக மனசு வரலையா?”

“இல்ல கொஞ்சம் நேரம் இங்க இருக்காலம்ன்னு தோணிச்சு… நீ போகலையா?”

“இல்ல… உன் கூட பேசலாம்ன்னு தான் வந்தேன்.. காலையில இருந்து சரியா பேச முடியலையே…. எப்படி இருந்தது யூ.எஸ்?”

“எனக்கு எல்லாம் நல்லா தான் இருந்தது. உனக்கு எப்படி இருக்கு ஜாப் எல்லாம்? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?” அவள் பேசத் தொடங்கிய வேளயில், அவளது அலைபேசி இசைத்தது.

“ஒரு நிமிஷம்..” என்று அவனிடம் மன்னிப்பு வேண்டியவள், போனை எடுத்துக் கொண்டு தனியே சென்றாள்.

“ஹலோ… சொல்லு வந்தனா… என்ன இந்த நேரத்துல?”

…….

“ஏன் வந்தனா? ஏதாவது போட்டு குழப்பிட்டு இருக்கியா? எனக்கு ஒண்ணும் இல்லம்மா… நீ கவலைப்படாம தூங்கு…”

—-

“ம்ம்… பார்த்தேன்… பதினஞ்சாம் தேதி கல்யாணமாம்…”

“அதே பொண்ணு தான்…”

“இல்ல… நான் ஒண்ணும் ஃபீல் பண்ணல… உனக்கு சந்தேகமா இருந்தா… நான் வேணா போய் அவனுக்கு வாழ்த்து சொல்லிட்டு வரவா? அதை போட்டோ பிடிச்சு போடவா?”

“சரி சரி… போய் தூங்கு… நான் இப்போ வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றபடி போனை அணைத்தவள், அதில் ஒளிர்ந்த ரிமைண்டரைப் பார்த்து,

“இதை எப்படி மறந்தேன்…. ச்சே… எனக்கு லூசு தான் பிடிச்சிருக்கு…” என்று தன்னையே திட்டிக் கொண்டு,

“கொஞ்சம் இதைப் பிடி பாலாஜி..” என்று தன்னுடைய செல்போனை அவனிடம் கொடுத்து விட்டு, அவசரமாக அவள் மாத்திரையை முழுங்க,

“ஹே… நீ என்ன வெறும் வயித்துல மாத்திரை போடற.. அது என்ன மாத்திரை?” பாலாஜி கேட்கவும்,

“கிளாஸ் நடக்கும் போது, வசந்த் வேண்டாம்ன்னு கொடுத்த ப்ளாக் சாக்லேட் இருந்ததா… அதை நிறைய சாப்பிட்டேன்… வயிறு ஃபுல்லா இருக்கு…” என்றவள், அவனைப் பார்த்து கண் சிமிட்டி,

“இது ஜஸ்ட் வைட்டமின் டேப்லட்…” என்ற பதிலையும் கூறி, தண்ணீரை குடித்தாள்.

“ஆனாலும் நீ இன்னிக்கு அவனை ரொம்ப சீண்டற.. ஆமா, அவனுக்கு இந்த சாக்லேட் பிடிக்காதுன்னு உனக்கு எப்படித் தெரியும்?” பாலாஜி கண்டு பிடித்துக் கேட்டதில், அவள் சிறிது துணுக்குற்று

பின் சமாளிப்பு புன்னகை ஒன்றை உதிர்த்து, “இரு பாலாஜி… இதோ ஒரு நிமிஷத்துல வந்துடறேன்… தலை ரொம்ப வலிக்குது… முகத்தைக் கழுவினா கொஞ்சம் நல்லா இருக்கும்…” என்றபடியே, அங்கிருந்து நழுவியவள், வசமாக சிக்கப் போவதை அறியாமல்,  பெருமூச்சொன்றை வெளியிட்டு, ரெஸ்ட்ரூமினுள் ஓடினாள்.

அதே நேரம் மீண்டும் அவள் வைத்த ரீமைண்டரே அவளுக்கு அபாய மணியாக ஒலிக்க, அதை எடுத்து அணைத்த பாலாஜி, அதில் ஒளிர்ந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான்.

வசந்தின் தோளில் சாய்ந்தபடி மித்ராவும், மித்ராவை ஒரு கையால் அணைத்தபடி வசந்தும், மறுகையால் செல்ஃபி புகைப்படம் எடுத்தான் போலும்… கன்னத்தோடு கன்னம் இழைந்து, முகம் முழுவதும் புன்னகையை பூசிக் கொண்டு, இருவர் முகத்திலும் காதல் பொங்க எடுத்த புகைப்படம்… அவளது செல்போன் திரையில் இருவரும் சிரித்துக் கொண்டிருக்க, வேகமாக அந்த செல்போன் லாக்கைத் திறந்து, போட்டோ கேலரியில் இருந்த புகைப்படங்களைப் பார்த்தான். இருவருக்குள்ளும் இருக்கும் நெருக்கம்… பாலாஜி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வசந்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தொடர்ந்தது… அந்த தொடர்ச்சியின் நடுவில்???

முகத்தை துடைத்துக் கொண்டே வந்த மித்ரா, “பாலாஜி… என்ன பார்த்துட்டு இருக்க?” என்று அவன் அருகில் அமர,  திகைப்புடனே  பாலாஜி, அவளையும்  செல்போனையும் மாறி மாறிப் பார்க்க, அதில் தெரிந்த புகைப்படத்தைக் கண்ட மித்ரா அதிர்ந்து, அவனிடம் இருந்து செல்போனை பறித்தாள்.

காலம் கிழித்துப் போட்ட

எனது டைரியின்

கவிதைப்  பக்கங்களால்

எஞ்சியுள்ளதும் கண்ணீரில்

நமத்து போகின்றன …

“உன்னை யாரு என் செல்போன் உள்ள எல்லாம் திறந்து பார்க்கச் சொன்னது?” படபடப்பாக, உண்மை வெளியில் தெரிந்ததில், வியர்த்து விறுவிறுத்து அவள் கேட்கவும்,

“மித்ரா… என்ன இது?” திகைப்புடன் அவன் வாய் திறக்கவும்,

“கொஞ்சம் கூட…” அவள் பேசி முடிப்பதற்குள், “மித்ரா… என்ன இது? உண்மைய சொல்லப் போறியா இல்லையா? என்ன நடந்தது? என்ன நினைச்சுட்டு இருக்க? நீயா இப்படி நடிக்கிற?” என்று பாலாஜி அவளை அதட்டினான்.

ஒரு வெற்றுப் புன்னகையை அவனுக்குத் தந்து, “இதுக்கு என் கிட்ட விடை இல்லையே பாலாஜி… நீ என்னன்னு எத்தனை தரவ கேட்டாலும்… எனக்குமே தெரியல… நிஜமா… ‘நீயா இப்படி’ன்னு கேட்ட பாரு? இதைக் கேட்டும் என் உயிர் போகலையேன்னு இருக்கு பாலாஜி”  சொல்லி முடிப்பதற்குள், அவள் கண்களில் சரம் கோர்க்கத் தொடங்கிய கண்ணீரை உள்ளிழுக்கப் போராடி, அதில் வெற்றியும் கண்டவள், பாலாஜியைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

“மித்ரா… போதும் நடிச்சது… உண்மைய சொல்லு மித்ரா….” பாலாஜி அவளைப் பிடித்து உலுக்கவும், மீண்டும் அவள் புன்னகைக்க முயல,

“இப்போ நீ உண்மைய சொல்லல… இனிமே நீ என் கூட பேசாதே…” பாலாஜி சொல்லவும், மித்ரா நடந்த அனைத்தையும் சொல்லிக் கொண்டே வர, அவள் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள், “மித்ரா…” பாலாஜி அதிர, கண்ணீருடன் அவனைப் பார்த்தவளின் கண்களிலோ, மரணவலியின் சாயல்…..

“ஹையோ… இவ மனசுல இத்தனை கஷ்டத்தையும் வச்சிக்கிட்டு தான் சிரிச்சு பேசிட்டு இருக்காளா? இப்போ என்ன செய்யறது?” பாலாஜி மனதுக்குள் வருந்தி, யோசிக்கத் தொடங்க,

“ரொம்ப எதுவும் யோசிக்காத பஜ்ஜி… காலையில சொன்னா மாதிரி பழைய கதை… முடிஞ்சு போன கதை..” விரக்தியுடன் அவள் சொல்லவும்,

“அதுக்காக உன் வாழ்க்கை மித்ரா… உன்னால அவனை விட்டு வேறொரு வாழ்க்கைய நினைக்க முடியுமா? இல்ல அவனை இப்படியே விட முடியுமா? காலையில என்ன நக்கல் செய்யறான்… அவனை மறக்க முடியாம தானே உன்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளை கிட்ட அப்படி பேசின… நீ உன் வாழ்க்கைய பாழாக்கிக்கிட்டு அவன் நினைப்புல இருப்ப… அவன் சந்தோஷமா கல்யாணம் செய்துப்பானா…. அப்படி எல்லாம் விட முடியாது.. அவனைப் போய் சட்டைய பிடிச்சு கேட்கறேன்…” பாலாஜி எழப் போக, அவன் கைப் பிடித்து தடுத்தவள்,

“என்னன்னு கேட்ப பாலாஜி…. என்னைத்தான் அவன் பார்த்ததே இல்லையே… நான் எங்க இருக்கேன்னே தெரியாம தானே ரெண்டு வருஷம் இருந்தான்? அப்பறம் நீ என்னன்னு கேட்ப… மேலும் என்னை கொச்சை படுத்தி ஏதாவது சொல்லிட்டா… நான்… நான்… அதுவும் இல்லாம எனக்கு சுத்தமா அவன் மேல எனக்கு எந்த ஒரு விருப்பும் இல்ல.. எல்லாமே செத்துப்போச்சு… எப்போ அவன் வேறொரு பெண்ணை…” அவள் திக்கத் தொடங்க,

“லூசா நீ?”  பாலாஜி கத்தினான்.

“லூசு தான்… என்ன செய்ய சொல்ற? அறிவு கெட்டுப் போன லூசு… அதுக்கு போய் அவன்கிட்ட சண்டை போடணுமா? என்னன்னு போடுவ? அவனுக்கு அந்தப் பெண்ணை தான் பிடிச்சிருக்கு… அதான் கல்யாணம் செய்துக்கறான்.. இதுல நான் போய் இடையில என்னத்த சொல்ல… எப்பவும் போல இப்பவும் ஏமாத்தி இருக்கான்… அவனை நம்பினது என்னோட தப்பு தானே… அதுக்கான தண்டனையா இது இருக்கட்டும் விடு…”

“தண்டனையா? யாருக்கு எதுக்கு தண்டனை…” கடுப்புடன் அவன் கேட்கவும்,

“அதுக்காக…. என்னோட சுயமரியாதையை விட்டுட்டு கெஞ்ச சொல்றியா?” அவள் கேட்ட கேள்விகளின் நியாயம் புரிந்தாலும்,

“அவன் செய்தது தப்பு தானே மித்ரா… நம்ப வச்சு கழுத்தை அறுத்து இருக்கான்… அப்படிப்பட்டவனுக்கு தண்டனை தர வேண்டாமா?” மனம் ஆறாமல் அவன் கேட்க,

“ஒண்ணும் வேண்டாம்… நீ அவன் கிட்ட இதைப் பத்தி எதுவுமே பேச மாட்டேன், கேட்க மாட்டேன்… ஏன் உனக்கு தெரிஞ்ச மாதிரி கூட காட்டிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு பாலாஜி… ப்ளீஸ்… எனக்கு பிரெண்டா நீ இதை செய்தே ஆகணும்…” கண்ணீருடன் அவள் கையை நீட்டவும், தனது உயிர்த் தோழியின் கண்ணீர் தாளாமல், அவளுக்கு வாக்கு கொடுத்தான்.

“தேங்க்ஸ் பாலாஜி… நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்… நாளைக்கு பார்க்கலாம்…” என்று விடைப்பெற்றவள், “இதைப் போய் நீ அவன் கிட்ட கேட்டேன்னா… நீ என்னை அசிங்கப்படுத்தறதுக்கு சமம்…” என்று, காரை நோக்கிச் செல்ல, அவளது காரின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் வசந்த்.

அவனைப் பார்த்தவள், “இவன் தொல்லை பெருந்தொல்லையா இல்ல இருக்கு…” என்று புலம்பியபடியே, அவனை கண்டும் காணாமல், வேகமாக காரில் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமரப் போக, அவளுடன் காரில் ஏறியவன், “சமி… நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்று தொடங்கினான்.

மித்ரா காருக்குச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பாலாஜி, அங்கு வசந்த் அவளிடம் எதுவோ பேசுவதைப் பார்த்தவன், அவளிடம் விரைந்தான். வசந்த் அவளது காரில் ஏறுவதைப் பார்த்த பாலாஜி, மேலும் வேகமாக அவர்கள் அருகே விரைந்து, வசந்த் கதவை மூடுவதற்கு முன், அவனைப் பிடித்து இழுத்தான்.

பாலாஜியின் கோபத்தைக் கண்டு பதைத்த மித்ரா, நிலைமையை சமாளிக்க, “பாலாஜி… நீ எதுல போகப் போற… உன் பைக்கை காணும்… இன்னும் அதே பைக்க தான் வச்சிருக்கியா? இல்ல மாத்திட்டியா?” என்று அவசரமாகக் கேட்கவும்,

“நீ வாய மூடு…” பாலாஜி அவளிடம் உறுமி, “நீ எதுக்கு இப்போ காருல ஏறி அவளை வம்பு செய்யற?” வசந்திடம் கேட்கவும்,

“பாலாஜி… நான் அவகூட கொஞ்சம் பேசணும்… நீ என் பைக்கை எடுத்துட்டு வீட்டுக்கு வாயேன்…” வசந்த், தனது சாவியை நீட்டிக் கொண்டே, அவனுக்கான பதிலை மறைமுகமாக சொல்ல,

“ஹஹஹா… பாலாஜி.. உலக அதிசயமா இல்ல இருக்கு?” ஏளனமாக வியந்த மித்ராவின் புன்னகையைப் பார்த்த பாலாஜி முறைக்கவும்,

“பாலாஜி… எனக்கு அவன்கிட்ட பேச எதுவுமே இல்ல… காரை விட்டு இறங்கச் சொல்லு… இல்ல… இப்போ நான் காரை இங்கயே விட்டுட்டு வீட்டுக்கு நடந்தே போவேன்… நான் சொன்னா அதை செய்வேன்…” மித்ரா அழுத்தமாகச் சொல்லவும், அதே நேரம் சந்தோஷ் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்துக் கொண்டிருந்தான்.

பாலாஜியும், வசந்தும் அவர்கள் காரில் இருப்பதைப் பார்த்தவன், வேகமாக மித்ரா அருகே வர, அவனை அங்கு சற்றும் எதிர்ப்பாராத வசந்த் திகைத்து காரில் இருந்து இறங்க, பாலாஜியோ சிநேகமாக சந்தோஷைப் பார்த்து புன்னகைக்க,

“சந்தோஷ்… நீ வரேன்னு சொல்லவே இல்லையே… எனக்குத் துணையா வசந்தும் பாலாஜியும் வரேன்னு சண்டை போட்டுட்டு இருந்தாங்க… நல்லவேளை நீயே வந்துட்ட… அநாவசியாமா புது மாப்பிள்ளைக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்… இல்ல சந்தோஷ்… இல்ல பாலாஜி…” என்று ‘புது மாப்பிள்ளை’யில் அழுத்தம் கொடுத்தவள், ஏமாற்றத்துடன் நின்றிருந்த வசந்தைப் பார்த்து விட்டு,

“பை பாலாஜி… பை வசந்த்…” என்று முகம் முழுவதும் இழுத்து வைத்த புன்னகையுடன், அவர்களிடம் இருந்து விடைப்பெற்று, “சந்தோஷ் நீயே காரை ஓட்டேன்… என்னால இப்போ ஓட்ட முடியாது… எனக்கு தூக்கம் வருது…” என்று அவன் கையில் காரைக் கொடுத்துவிட்டு, அவன் அதற்கு மேல் பேச முடியாத படி, கண்களை மூடி சாய்ந்திருந்தவள், நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள்.

 

அவளது கார், கேட்டை விட்டு மறையும் வரை பார்த்திருந்த பாலாஜி, வெறுப்புடன் வசந்தைப் பார்த்து, திரும்பி நடக்கத் தொடங்க, “பாலாஜி…” என்று வசந்த் அழைத்தான்.

“என்ன?” ஒற்றைச் சொல்லாக, கோபத்துடன் வந்த பதிலில், வசந்த் திகைத்து நிற்க, “என்னன்னு கேட்டேன்… பேச முடிஞ்சா பேசு… இல்ல என்னை ஆள விடு… உன் பொய்க் கதைய கேட்க எல்லாம் எனக்கு நேரமில்ல…” என்று பாலாஜி அவனிடம் கடுமையாகக் கேட்கவும்,

“இவன் ஏன் இப்படி பேசறான்? ஒருவேளை எல்லா விஷயத்தையும் சமி சொல்லி இருப்பாளோ? ஹையோ…” மனம் பதை பதைக்க, பயத்துடன் அவன் பாலாஜியை ஏறிட, பாலாஜி அவனை கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் என்ன செய்தேன்னு இப்படி முறைக்கிற?” தன்னை சமாளித்துக் கொண்டு அவன் கேட்கவும்,

“ஒண்ணுமே இல்ல… நீ தான் என்னை கூப்பிட்ட… இப்போ நின்னு நீயே யோசிச்சிட்டு இருக்க.. என்ன சொல்லணுமோ சொல்லு… எனக்கு வேலை இருக்கு… இல்ல ஒண்ணும் இல்லன்னா என்னை விடு..” கடுப்புடன் பேசிய பாலாஜியைப் பார்த்தவன்,

“சமி ஏதாவது சொன்னாளா?” தயக்கமாக கேட்கவும்,

“சமியா? யாரு அது? அப்படி ஒருத்திய எனக்குத் தெரியாதே… ஆமா, அவ என்ன சொல்லணும்?” பிடிகொடுக்காமல் அவன் பதில் கேள்வி கேட்க,

“மித்ரா தான்…” மேலும் தயக்கத்துடன் அவன் இழுத்தான்.

“ஓ… அவளை நீ அப்படித் தான் கூப்பிடுவியோ? ஆனா, அது எப்போ இருந்து?” பாலாஜி வார்த்தையை கடித்துத் துப்பினான்.

“இல்ல… இப்போ தான்… என்னவோ கூப்பிடணும் போல இருக்கு…” வசந்த் முணுமுணுக்க,

அவனை எரிச்சலாக பார்த்தவன், “ஆமா சொன்னா… நீயும் அவளும் பக்கத்து பக்கத்துல தான் இருந்தீங்களாம்…. நான் உன்னை கேட்டதுக்கு நீ என்ன சொன்ன?” பாலாஜி கேட்கவும், வசந்த் மனதில் நிம்மதி பரவி, தலைகுனிந்தபடி, மூச்சை வெளியிட்டான். அவனது அந்த செய்கை பாலாஜியை மேலும் கடுப்பேற்றியது.

“முன்னப்பின்ன தெரியாத நம்ம ஊர் பிரெண்ட் ஒருத்தர் கிட்ட, நமக்குத் தெரிஞ்ச ஒருத்தரை பார்த்துக்கோங்கன்னு சொன்னா கூட, வெளிநாட்டுல இருக்கும்போது ரொம்ப உதவியா இருப்பாங்க. ஆனா நீ? நான் ‘அவ அங்க தான் படிக்கிறா. நீ அவளைப் போய் பார்த்துக்கோ… ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டு செய்’ அப்படின்னு சொன்னேன் இல்ல…”

“ம்ம்…”

“நீ என்ன சொன்ன?” பாலாஜி கேட்கவும், அமைதியே உருவாக நின்றவனை சட்டையை பிடித்து இழுத்தவன், “அவளை பார்க்கவே இல்லன்னு சாதிச்ச இல்ல.. எப்படிடா உன்னால இப்படி இருக்க முடியுது? கூட படிச்ச பொண்ணுன்னு ஒரு பாசம்… கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம அப்படி சொன்னியேடா…” பாலாஜி, வெளியே தெறிக்கப்பார்த்த பல வார்த்தைகளை முழுங்கினான்.

“சமி வேற என்ன சொன்னா?” என்று வசந்த் மெல்ல இழுக்க,

“வேற என்ன சொன்னா? இல்ல என்ன சொல்லணும்ன்னு நீதான் சொல்லேன்?” பாலாஜியின் கேள்விக்கு அமைதியாக அவன் நிற்க,

“என்னத்த சொல்ல… எப்பவும் போல அவ உன்னை தாங்கி தான் பேசினா… ‘அவனுக்கு என்ன கஷ்டமோ ஏதோ’ன்னு சொல்றா… எப்படிடா… எப்படிடா உன்னால முடியுது? இப்போ என்ன வேண்டி கிடக்கு சமியும், அவளை கண்டிக்கிறதும்… ஆமா நீ யாரு அவளை கண்டிக்க? அது என்ன சமி… யாரோ ஒருத்திய அப்படி தான் கூப்பிடுவியா என்ன? உனக்கு சம்மந்தமே இல்லாத பொண்ணு தானே அவ!!.. போடா உன் வேலையைப் பார்த்துட்டு…” மித்ராவிற்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல், மாற்றிச் சொல்லிவிட்டு,அவனை காய்ச்சி எடுக்க, வசந்த், திகைத்து நின்றான்.

“நான் எப்போ இருந்து அவளை சமின்னு நினைக்கிறேன்?” யோசனை அவ்வாறு செல்ல, நகர நினைத்த பாலாஜி, நின்று அவனை உலுக்கி,

“அவ இப்போ திரும்ப யூ.எஸ். போறா… ஆனா, மே மூணாம் தேதி அவளுக்கு கல்யாணமாம்…..”

“மே மூணா!!!” அதிர்ச்சியாக அவன் கேட்கவும்,

“ஆமா அதே தான்… அன்னிக்கு உன்னோட பர்த்டே தானே… அன்னிக்கே தான்… ஆனா, இப்போ போயிட்டு திரும்பி கல்யாணத்துக்கு வருவாளாம்… கல்யாணத்துக்காக இப்போவே சிலதெல்லாம் வாங்க போகணும்னு சொல்லிட்டு இருந்தா…” என்று அசால்ட்டாக ஒரு குண்டை வீசி விட்டு பாலாஜி நகர, தன்னுடைய பைக்கில் சாய்ந்த வசந்த், தலையில் கைவைத்து அமர்ந்தான்.

அதே நேரம்… ‘ஸ்வப்னா காலிங்…’ என்று அவனது மொபைல் குரல் கொடுக்க, உடனே அதை எடுத்துப் பேசத் தொடங்கினான்.

மௌனங்கள் தொடரும்…

 

 

LEAVE A REPLY