SHARE

அன்று காலை ப்ரியாவின் அலுவலகத்தில் நடந்த வன்முறைத் தாக்குதலில் கிடைத்த சில தடயங்கள் அவனுக்கு உபயோகமாக இருக்கவும், அதை வைத்து சில முடிச்சுக்களை அவிழ்க்க அவன் முயன்று, அதன் பயனாக கிடைத்த ஆதாரங்களின் வழியே அவன் குற்றவாளிகளை பிடிக்க முயன்றுக் கொண்டிருந்தான்.  

இரவும் கவிழ்ந்து, எப்பொழுதும் வழக்கமாக வரும் நேரம் தாண்டி விடவும், சூர்யா கவலையுடன் ப்ரியாவிற்கு அழைத்து அது எடுக்கப்படாமல் போகவும், சலித்துப் போய் ராமிற்கு அழைத்தான்.

சூர்யாவின் பதட்டமான குரலைக் கேட்டவன், “சூர்யா… அவ சாயந்திரமே கிளம்பிட்டாளே… இன்னமுமா வரல…” ராமும் பதட்டமாகக் கேட்கவும், சூர்யாவிற்கு மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ராம்… எங்க போறன்னு சொல்லிட்டு போனாளா?” சூர்யா கேட்கவும்,

“இல்ல சூர்யா… நேரா வீட்டுக்குத் தான் போறேன்னு சொன்னா…” என்ற ராம்…

“நீங்க கவலைப்படாம இருங்க சூர்யா. நான் அவ போற வழியில எல்லாம் தேடிட்டு வரேன். எதுக்கும் தேவ் கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன்…” மனதினில் பயம் சூழ, காலையில் நடந்ததற்கும், இப்பொழுது நடந்ததற்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ என்ற சந்தேகத்தில் சொன்னவன், உடனே சூர்யாவின் அழைப்பை துண்டித்துவிட்டு, தேவ்விற்கு தொடர்பு கொண்டான்.

“என்ன? இன்னும் ப்ரியா வரலையா? அவ அப்போவே அவங்க வீட்டுக்கிட்ட வந்துட்டாளே…” என்று சொன்ன தேவ்,

“இருங்க ஒரு நிமிஷம்…” என்றவன், அவளது வண்டியை ட்ராக் செய்ய, அது அவள் மாலை விழுந்த இடத்திலேயே இருப்பது தெரிந்தது.

“ஓ… மை காட்… இதை எப்படி கவனிக்காம விட்டேன்” தேவ் பதறி, 

“ராம்… நீங்க அவ வீட்டுக்கிட்ட இருக்கற அந்த கால்வாய்கிட்ட வாங்க… நானும் உடனே வரேன்…” என்று சொல்லவும்,

“தேவ்… அவளுக்கு ஏதாவது பிரச்சனையா?” ராம் கேட்க,

“ம்ம். பயமா இருக்கு ராம். நான் உடனே வரேன்…” என்ற தேவ், ராம் ஏதோ சத்தமிடுவதை உணரும் நிலையில் கூட இல்லாமல், ப்ரியாவுக்கு ஆபத்து என்று மனம் அடித்துக் கொள்வதை தாள முடியாமல், அவசரமாக போனை அனைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.

வண்டியை எடுத்த தேவ்வின் கண்கள் கலங்க, “தேவா.. ஹெல்ப் மீ….” ப்ரியாவின் ஓலமும் அவன் காதுகளில் விழ, இதயம் நெஞ்சுக் குழியில் வந்து துடித்தது. நெஞ்சம் தடதடக்க அவன் அந்த இடத்தை அடைந்த போது, ராம் கடுங்கோபத்துடன் நின்றிருந்தான்.

“சார்… உங்களுக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா? உங்களை லவ் பண்ணின பாவத்துக்கு அவளை தொலைச்சிட்டீங்க. இனிமே நீங்க நிம்மதியா இருக்கலாம். உங்களை யாரும் துரத்த மாட்டாங்க…” ராம் தேவ்வின் மீது பாய, அவனது எந்த ஒரு சத்தத்தையும் கண்டுக்கொள்ளாத தேவ், கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்த இடத்தை அலசத் தொடங்கினான்.

“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்… நீங்க என்ன செய்யறீங்க?” அவனைப் பிடித்து ராம் கேட்க,

“இந்த இடத்தோட தான் அவளோட ட்ராக்கிங் ஸ்டாப் ஆகி இருக்கு. அவ வீடு வரை திரும்பிட்டாளேன்னு நானும் கொஞ்சம் கேர்லஸ்சா விட்டுட்டேன். என்னோட ப்ரியாவை நானே தவற விட்டுட்டேன்..” தேவ் மனம் நொந்து சொல்ல, ராம் அவனை வெறித்தான்.

“கேர்லஸ்ஸா விட்டீங்களா?” ராம் பாயவும்,

“ஹையோ… அதுக்குள்ள உங்க ஆபீஸ்க்கு வந்த ஆளுங்க வீடியோல ஒரு க்ளூ கிடைக்கிற மாதிரி இருக்குன்னு விஷால் அவன் ரூமுக்கு கூப்பிட்டான். அதுல என்னோட கவனம் போயிடுச்சு… இல்லன்னா அவளை நானே தொலைப்பேனா? அவளை நான் பெர்சனலா வாட்ச் பண்ணிட்டு தானே இருந்தேன்…” தலையில் அடித்துக் கொண்ட தேவ், கண்ணீருடன் ராமின் கைகளைப் பற்ற, ராம் திகைத்து நின்றான்.

“தேவ்…” ராம் திகைக்க,

“நான் இதோ ரெண்டு நிமிஷம் தானே அவ வீடுன்னு கொஞ்சம் கவனம் சிதறிட்டேன் ராம்… அவ இங்க கீழ விழுந்தான்னு நினைக்கிறேன்…” என்றவன், தனது கையில் இருந்த டார்ச் வெளிச்சத்தில், அவளது வண்டி கிடந்த குழியைக் கண்டுபிடித்து, அந்த இருட்டிலும், முட்செடிகளுக்கு நடுவில் இறங்க, தேவ்வின் தவிப்பைக் கண்ட ராமும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினான்.

அவசரமாக வண்டியை நிமிர்த்திய தேவ், “இங்கப் பாரு… நான் சொன்னேன் இல்ல… அவ இங்க விழுந்த சத்தமும், யாரோ அவளை வீட்ல கொண்டு விடறேன்னு சொன்ன சத்தமும் கேட்டுச்சு… குரல் ரொம்ப மென்மையா தான் இருந்துச்சு” ராமிடம் படபடப்பாகச் சொன்னவன், அவளது வண்டியை மேலே ஏற்ற, ராம் அவனுக்கு உதவினான்.

அவளது வண்டியில் இருந்த சேற்றை தனது கையாலேயே துடைத்தவன், “இந்த ப்ரியாவுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல… எங்க போனா? இந்த ஏரியால அவ்வளவு பாதுகாப்பு குறைவாவா இருக்கும்.? அதுவும் சாயந்திரம் ஆறு மணிக்கு? அவளுக்கு… இல்ல… அவ சேஃப்பா தான் இருப்பா…” தேவ் பேசிக் கொண்டே போக, அந்த குரலில் இருந்த வலியை நன்கு உணர்ந்த ராம் செய்வதறியாது நின்றான். தனது தோழியைக் காணாது தவிப்பு ஒருபுறம், தேவ்வின் தவிப்பு ஒருபுறம்.. இரண்டிலும் சிக்கித் தவிக்க,

“இந்த வண்டிய அவங்க வீட்டு வாசல்ல கொண்டு போய் நிறுத்திடலாம் ராம். அவங்க அம்மா முகத்துல நான் எப்படி முழிப்பேன்? அவங்க பெண்ணை பத்திரமா பாத்துப்பேன்னு நான் எப்படி இனிமே அவங்களுக்கு உறுதி கொடுக்க முடியும்? அவங்க வீட்ல ரொம்ப பயந்திருப்பாங்க இல்ல? எனக்கே இப்படி இருக்கும் போது… அவளோட அம்மாவும் அண்ணனும் ரொம்ப நடுங்கி இருப்பாங்க…

இந்த லூசு ஹான்ட் பேக்கையும் வண்டி உள்ளே வச்சிட்டு போய்.. என்னை கதி கலங்க வைக்கிறாளே.. அவங்க அம்மா நேத்தே அவகிட்ட கவலையா தான் பேசினாங்க..  இப்போ அவளைக் காணோம்ன்னு சொன்னா எப்படி தாங்கிப்பாங்க” தேவ் புலம்பிக் கொண்டே ப்ரியாவின் வண்டியை தள்ளிக் கொண்டு செல்ல, அவனை என்ன செய்வதென்று புரியாத ராம் அவனுடன் நடந்தான்.

“நீ கவலைப்படாதே ராம். ஓரளவு சில க்ளூஸ் கிடைச்சிருக்கு. எப்படியும் நாளைக்குள்ள நான் ப்ரியாவை கண்டு பிடிச்சிடுவேன். அவளுக்கு எந்த ஒரு துன்பமும் வர விடமாட்டேன். என் உயிருள்ள வரை என் ப்ரியாவை நான் பத்திரமா பார்த்துப்பேன்” ராமிற்கு ஆறுதல் சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டு வந்தவன், ப்ரியாவின் வீட்டை நெருங்கும் போது, அவர்களை எப்படி சந்திப்பது என்று தயங்க, தூரத்தில் இருந்தே ராமையும், தேவ்வையும் பார்த்துக் கொண்டிருந்த சூர்யா வெளியில் ஓடி வந்தான்.

“ராம்… ப்ரியா எங்க? அவ வண்டிக்கு என்ன ஆச்சு? ஹெட்லைட் எல்லாம் உடைஞ்சு இருக்கே. அவளுக்கு ஏதாவது ஆக்ஸிடென்ட்டா?” சூர்யாவின் கேள்விக்கு,

“இல்ல… அவளுக்கு ஒண்ணும் ஆபத்து வராது சூர்யா.. அவ நல்லா தான் இருப்பா…” தேவ் முந்திக் கொண்டு பதில் சொல்ல, அவனை யார் என்பது போல பார்த்த சூர்யா, அடையாளம் கண்டுகொண்டு,

“ஹே… நீ தான அந்த தேவ்.. நீ தான அன்னைக்கு அவளை மிரட்டிட்டு போன? இப்போ அவளோட வண்டியைத் தள்ளிட்டு வர? அவளுக்கு என்ன ஆச்சு? அவளை என்ன செய்த?” என்று கோபமாகக் கேட்க,

“நான் ஒண்ணும் செய்யல சூர்யா… கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க… வீடுக்குள்ள போய் பேசலாம்.. ப்ளீஸ்…” தேவ் கெஞ்ச, சூர்யாவின் கரங்கள் நடுங்கியது.

“அவளுக்கு ஏதாவதுன்னா இப்போவே சொல்லிடுங்க… எங்க அம்மா அதெல்லாம் தாங்க மாட்டாங்க… இங்கயே பேசிடலாம்..” கண்களில் கண்ணீர் வழிய சூர்யா கேட்க, தேவ்வின் கண்களும் கலங்கத் தொடங்கியது.

அதை மறைத்துக் கொண்டவன், “ஒண்ணும் ஆகாது சூர்யா… என்னை நம்புங்க… நான் அவளுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்…” தேவ் சொல்ல,

“சூர்யா… நாம வீடுக்குள்ள போய் பேசலாம்… அவளுக்கு ஒண்ணும் ஆகாது…” இப்பொழுது ராமும் வாயைத் திறந்து சொல்ல, சூர்யா அவர்களை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே வீட்டினுள் திரும்பி நடந்தான்.

வீட்டின் உள்ளே சென்றதுமே தேவ் ப்ரியாவின் அறைக்குள் நுழைய முயல, “சார்… நீங்க எதுக்கு இங்க மறுபடியும் வந்திருக்கீங்க… ப்ரியா வீட்ல இல்ல.. அவ இல்லாத நேரத்துல நாங்களே அவ ரூமுக்கு அனாவசியமா போக மாட்டோம்… நீங்க பாட்டுக்கு உள்ள நுழையறீங்க?” சாவித்திரி கண்டிக்க, அவருக்கு பதில் சொல்லாமல், உள்ள நுழைந்த தேவ்வைப் பார்த்த சாவித்திரி,

“ராம்… என்ன ராம் இது? இவரு என்ன அவகிட்ட வம்புக்குன்னே வராரா?” சாவித்திரி ராமை அதட்ட,

ராம் தலைகுனியவும், “இப்போவாவது சொல்லு ராம்… ப்ரியா எங்க? அவளுக்கு என்ன ஆச்சு?” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சூர்யா கேட்க ராம் பதில் பேச முடியாமல் நின்றான்.

ப்ரியாவின் அறையில், அவளது புகைப்படத்தின் அருகே சென்று, அவளது முகத்தை வருடி,

“என் மேல உனக்கு கோபமா ப்ரியா? உன்னைக் காணும்ன உடனே என் உயிரே என்னை விட்டு போனது போல இருக்குடா.. நானே உனக்கு இப்படி ஒரு ஆபத்தை தேடி வச்சிட்டேனே. உனக்கும் எதுவும் ஆகாது ப்ரியா… நான் ஆக விடமாட்டேன். என்கிட்டே வந்திரு… நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்ல ப்ரியா…. ப்ளீஸ்.. தைரியமா இரு… நாளைக்கு காலையிலக்குள்ள நீ எங்க இருந்தாலும் நான் உன்னை கூட்டிட்டு வந்துடறேன்… உன் அவசர புத்தியை காட்டாதே ப்ரியா… ப்ளீஸ்… நான் வந்துடறேன்டா.. உன்னை அப்பறம் என்னை விட்டு நீங்க விட மாட்டேன்.. பத்திரமா பார்த்துக்கிறேன்…” அவனது புலம்பல்களின் சத்தம் சாவித்ரியை எட்ட, தான் கேட்டதை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் அவன் அருகே வந்தார்.

“தேவ்… ப்ரியா எங்க?” கண்களில் உயிரைத் தேக்கி வைத்த தாயிடம்  பதில் கூற முடியாமல் தேம்பியவன்,

“அவளை… அவளை யாரோ கடத்திட்டு போயிட்டாங்க…” என்று சொல்லி முடிக்க, அதை கேட்டு முடிக்கத் தான் சாவித்திரி நினைவோடு அல்லாமல் மயங்கிச் சரிய, ராம் அவரை கீழே விழாது தாங்கிப் பிடித்தான்.

“அம்மா… அம்மா.. ப்ரியாவுக்கு ஒண்ணும் இல்ல…” அவரது மயக்கம் தெளிவித்து, எழுப்பி அமர வைத்தவருக்கு தைரியம் கூறிய ஆண்களிடம்,

“என் பொண்ணு எனக்கு பத்திரமா வேணும்… அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. அவ உங்க மேல உயிரையே வச்சிருக்கா. அவளோட நம்பிக்கையை பொய் ஆக்கி.. எங்களையும் ஏமாற வச்சிடாதீங்க. அவ எங்களுக்கு பத்திரமா வேணும்…” சாவித்திரி தேவ்வை நோக்கி கையெடுத்து கும்பிட, அவரது கையைப் பற்றிக் கொண்டு அவர் முன்பு மண்டியிட்டவன், அவரது கையில் தனது தலையை வைத்து,

“நான் ப்ரியாவை பத்திரமா… எந்த ஒரு சிறு கீறல் கூட இல்லாம உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் ஆன்ட்டி. அது என்னோட பொறுப்பு… அது மட்டும் இல்ல… அவ என்னோட உயிரும் கூட ஆன்ட்டி… அவ இல்லாம எனக்கு எதுவுமே இல்ல. இந்த ரெண்டு நாள்ல அதை நான் பலமுறை தெள்ளத்தெளிவா உணர்ந்துட்டேன்…” சொன்னவனின் கண்ணீர் சாவித்ரியின் கைகளில் பட்டுத் தெறிக்க, சாவித்திரியும் கண்ணீரில் கரைய,

“நான் உங்ககிட்ட அவளை பத்திரமா ஒப்படைக்கிறேன்… அவளை நீங்க எனக்குத் திரும்பத் தருவீங்களா? என்னோட மனைவியா என்னோட சரிபாதியா எனக்கு அவ வேணும்..” தேவ் கேட்க, அந்த நேரத்தில் அவனிடம் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் சூர்யாவும், சாவித்திரியும் திகைத்து நிற்க, தேவ் கலங்கிய தனது கண்களைத் துடைத்துக் கொண்டு, ப்ரியாவின் அறையை நோக்கிச் சென்றான்.

ஒருசில நிமிடங்கள் நெஞ்சில் தோன்றிய அச்சத்தையும், படபடப்பையும் விரட்டி அடித்தவன், முகத்தை துடைத்துக் கொண்டு, அவளது மேஜை மீது இருந்த ஒரு டைரியை திறந்துப் பார்க்க, அதில் அவள் முன் தினம் பதிவேற்றம் செய்வதற்காக எழுதி வைத்த கட்டுரை கண்ணில் பட, அந்த டைரியை எடுத்துக் கொண்டு ராமின் அருகே சென்றவன், அவனைப் படிக்கச் சொல்லி நீட்டினான்.

அதை முழுவதும் படித்த ராம், “சிவப்பு கலர் காரு… அந்த கார்ல கழுகு வரைஞ்சு இருக்கும்ன்னு போட்டு இருக்கா… அதோட நம்பர் கூட இருக்கு..” ஆர்வமாக ராம் சொல்ல, தேவ் யோசனையுடன் அவனைப் பார்த்தான்.

“ஹ்ம்ம்… கார் நம்பர் ட்ரெஸ் பண்ணியாச்சு ராம்.. அது ஒரு ட்ராவல்ஸ் வண்டி…” என்று கூறிய தேவ், ஏதோ தோன்ற,

“இல்ல ராம்.. எனக்கு வேற சில சந்தேகங்கள் இருக்கு.. நேத்து அந்தக் காரை நான் பார்த்தேன்… ஆனா… சரி விடுங்க… நான் அதைப் பார்த்துக்கறேன்… அவனுங்க ப்ரியாவை கடத்தி என்னை டைவேர்ட் பண்ணப் பார்க்கறாங்க.. அப்போ எனக்கும் ப்ரியாவுக்கும் இருக்கற சம்பந்தம் அவனுங்களுக்கு தெரிஞ்சு தான் இருக்கு” கோபமாகச் சொன்னவன்,

“என்னடா உங்க ஆபீசை மட்டும் உடைச்சு எரிஞ்சு இருக்கானுங்களே… ப்ரியா இதுல இருக்கறது தெரியல போலன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்… ரெண்டே நாளுல இவனுங்க இவ்வளவு இதா வெளிய வருவானுங்கன்னு நான் எதிர்ப்பார்க்கள.. இனி அவனுங்களை விட நான் பலமடங்கு வேகமா யோசிக்கணும்…” என்றவன், முகத்தை துடைத்துக் கொண்டு, டைனிங் டேபிளின் மீது இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தன்னை சமன் செய்துக் கொண்டான்.

சாவித்திரி கண்ணீருடன் அமர்ந்திருக்க, சூர்யா கோபமாக நின்றுக் கொண்டிருக்க, சூர்யாவைப் பார்த்தவன், “சூர்யா… இனிமே நீங்க ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க வேண்டாம். இந்த வீட்டைப் பூட்டிட்டு இப்போவே என் கூட கிளம்புங்க.. இங்க இருக்கறது உங்களுக்கும் ஆபத்தா முடியலாம். ப்ரியா வர வரைக்கும் எங்க வீட்ல இருங்க” தேவ் சொல்ல, சாவித்திரி, சூர்யா இருவரும் புரியாமல் பார்த்தனர்.

“அப்போ எங்க பொண்ணுக்கு ஏதோ பெரிய ஆபத்து அப்படித் தானே…” அவனது சட்டையைப் பிடித்து சாவித்திரி கேட்க, தலையைக் குனிந்தவன் அமைதியாக இருக்கவும்,

“சொல்லுங்க தேவ்… ப்ரியாவுக்கு என்ன ஆச்சு?” சாவித்திரி உலுக்கவும், 

“ம்… அந்த பொண்ணுங்களை கடத்தி விக்கற கும்பல் தான் ப்ரியாவையும் கடத்தி இருக்கணும்..” தேவ் சொல்லி முடிப்பதற்குள்

“அப்போ என் பெண்ணை உயிரோட திரும்ப நான் பார்க்க முடியாதுன்னு சொல்லு..” சாவித்திரி ‘ஓ’ என்று கதற,

“இல்லைங்க ஆன்ட்டி… அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது நீங்க ப்ளீஸ் அழாம இருங்க ஆன்ட்டி… நான் அவளை எப்படியும் காப்பாத்திடுவேன். அவளுக்கு ஒரு ஆபத்தும் வராது. அவ ரொம்ப தைரியமானவ…” அவரை சமாதானம் செய்ய முயன்றவன்,

“எதுக்கும் நீங்க இங்க இருக்க வேண்டாம்… எங்க வீட்டுக்கு போயிடுங்க… நான் எங்க அம்மா கிட்ட சொல்லிடறேன்…” தேவ் சொல்ல, சாவித்திரி தயக்கத்துடன் அவனைப் பார்த்தார்.

“எங்க வீட்ல அப்பா அம்மா சித்தி சித்தப்பான்னு பெரிய குடும்பமே இருக்கோம்… அதனால தயங்க ஒண்ணும் இல்லைங்க…” என்று தேவ் ஆறுதல் கூறி, தனது அன்னைக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, பார்வதி சிறிதும் யோசிக்காமல்,

“அவங்களை வரச் சொல்லு தேவ்… இப்போ உன் பிரெண்டா வந்து இருக்கட்டும்… சமயம் பார்த்து அவங்களை வீட்ல அறிமுகப்படுத்தலாம்… அவங்ககிட்ட போனைக் கொடு… நான் அவங்களை நம்ம வீட்டுக்கு முறையா கூப்பிடறேன்…” என்று சொல்ல, சாவித்திரியின் கைக்கு போன் இடம் மாறியது.

பார்வதியே அவர்களை அழைக்கவும், சிறிது தயக்கம் விலகி, சாவித்திரி அவனுடன் கிளம்ப தயாரானார்.

“ராம்… நீங்க?” தேவ் இழுக்க,

“என் பிரெண்ட் ரூம்ல நான் தங்கிக்கறேன் தேவ்.. கவலைப்படாதீங்க. அதை விட நான் உங்க கூட ப்ரியாவைத் தேட உதவி செய்யறேன்…” என்று ராம் கூறவும், தலையசைத்து ஏற்றுக் கொண்ட தேவ், சாவித்ரியையும் சூர்யாவையும் தங்கள் வீட்டில் விட்டு விட்டு, ப்ரியாவைத் தேடி கிளம்பினர். 

சூர்யாவும் உடன் கிளம்பவும், “நீங்க இங்க இருங்க சூர்யா… நானும் ராமும் போயிட்டு வரோம்…” தேவ் தடுத்துவிட, சூர்யா வேறு வழியின்றி அங்கேயே தங்கினான்.

நேராக அலுவலகம் சென்ற தேவ், விஷாலிடம் விஷயத்தைக் கூற, அவனும் தன் பங்கிற்கு, “சந்தோஷமா தேவ்… நான் அவளை இழுக்காதேன்னு அப்போவே சொன்னேன்… நீ கேட்டா தானே… இப்போ அவளை எங்கன்னு போய் தேடறது?” என்று கோபமாகச் சொல்ல,

“நான் என்னடா வேணுண்டா செய்தேன்… அவளை எனக்கு எவ்வளவு பிடிக்கும்ன்னு உனக்கு தான் தெரியுமே…” தேவ் தன்னையே நொந்தவனாக சொல்ல, விஷால் மனம் ஆறாமல் நின்றான்.

சில நிமிட மௌனத்திற்குப் பிறகு, “விஷால்… நேத்து ப்ரியா பார்த்தது அந்த கழுகு மீனை கொத்திட்டு போற மாதிரி படம் போட்டு இருக்கற சிவப்பு கலர் காரைத் தான்… அந்தக் காரை நான் நேத்து பார்த்தேன் விஷால்… ஆனா… அந்த கார் நம்ம விஜயன் சார்து…” தேவ் யோசனையுடன் சொல்ல, அதைக் கேட்ட விஷாலும் குழம்பிப் போனான்.

“என்ன சொல்ற? விஜயன் வந்து ரொம்ப நல்ல மனிதராச்சே.. ஒருவேளை அதே மாதிரி வேற காரா இருக்கும். அவர் அப்படி எல்லாம் செய்வாரா என்ன? வாய்ப்பே இல்ல… அவ போற வேகத்துல சரியா கவனிச்சு இருக்க மாட்டா… இல்ல அவருக்கே தெரியாம நடக்கற விஷயமா கூட இருக்கலாம்” விஷாலும் யோசனையுடன் சொல்ல, இருவருமே குழம்பி நின்றனர்.

“இல்ல தேவ்… அவ ஒரு விஷயத்தை நல்லா தெரியாம சொல்ல மாட்டா… அதும் இந்த விஷயத்துல… வாய்ப்பே இல்ல. அதனால கண்டிப்பா அந்தப் படம் போட்ட காரா தான் இருக்கணும்… இல்லன்னா… நேத்து அவ அப்டேட் பண்ணின நியூஸ் பார்த்து எதுக்கு வந்து ஆபீசை அடிச்சு நொறுக்கணும்?” ராம் இடையில் கேட்க, ராம் சொல்வதும் இருவருக்கும் சரியாகப் பட்டது.

“ஆனாலும் விஜயன் சார்…” விஷால் இழுக்க,

“அவருக்கே தெரியாம அவரோட காரை யூஸ் பண்ணிருக்கலாம்… இல்லன்னா… அந்த படம் பிடிச்சுப் போய் அதே போல வேற யாராவது போட்டு இருக்காலமே..” ராம் யோசனையுடன் கேட்க, மூவரும் சிறிது நேரம் யோசனையில் ஆழந்தனர்.  

“என்னவோ நெருடலாவே இருக்கு விஷால்…” தேவ் தனது கணினியை இயக்கி இரண்டு நாட்களாக சிசி டிவி மூலம் பெறப்பட்ட ஆதாரங்களை மீண்டும் பார்வையிட்டான்.

“இதுல இருக்கறவங்க யாரோட அசைவையாவது நீங்க உணர்ந்து இருக்கீங்களா ராம்?” தேவ் கேட்க , ராம் விஷால் இருவரும் மீண்டும் ப்ரியா பதிவு செய்த செய்திகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.  

“ப்ரியா உறுதியா சொல்லி தான் இருக்கா…” விஷால் இழுக்க

“விஷால்… உனக்கு நான் நேத்து ஒரு கார் நம்பர் கொடுத்தேனே.. அது விஜயன் சாரோட டிராவல்ஸ்து தானான்னு செக் பண்ணிட்டயா?” தேவ்வின் கேள்விக்கு

“சொல்ல மறந்துட்டேன் பாரு… அது அவரோடது தான். போட்டோஸ் இந்த ஃபைல்ல தான் வச்சிருக்கேன்…” என்று விஷால் ஒரு பேப்பரை எடுத்துக் கொடுக்க, அவனை முறைத்துக் கொண்டே,

“அதைச் சொல்லாம என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்க விஷால்?” தேவ் கடிந்து கொண்டான்.

“என்ன தேவ்… இவங்க ஆபீஸ்ல ஏதாவது தடயம் கிடைக்குதான்னு நீ பார்க்க சொன்ன இல்ல… அதைத் தான் பார்த்துட்டு சாயந்திரம் வந்தேன்… வந்த நேரம் நீ எங்கயோ அவசரமா கிளம்பிப் போயிட்ட… சரின்னு அதை பைல் பண்ணிட்டு… அங்க கிடைச்ச ஒரு சிகரட் துண்டை எடுத்து ஃபாரன்சிக்ல கொடுத்துட்டு வந்தேன்…” விஷால் விளக்கம் சொல்லிவிட்டு,

“அந்த சிகரட் செம ப்ராண்ட் தேவ்… ரொம்ப காஸ்ட்லி.. பணக்காரங்க மட்டுமே அதை யூஸ் பண்ண முடியும். அப்போ, நாம தேடிட்டு இருக்கறதும் ரொம்ப பெரிய பணக்கார புள்ளியா தான் இருக்கணும் தேவ்…” விஷால் தனது யூகத்தை சொல்ல,

“என்ன ப்ராண்ட்?” என்று கேட்ட தேவ், விஷால் சொன்ன பதிலைக் கேட்டு அசந்து போனான்.

“அப்போ நிஜமாவே பெரிய ஆள் தான்” சொன்ன தேவ், அந்த வண்டியின் போட்டோவைப் பார்த்து அதிர்ந்து நிமிர்ந்தான்.

“இது.. இந்த காரை தான் நான் நேத்து பார்த்தேன் விஷால். நான் அவர்கிட்ட பேசினேன். ஆனா.. அவர் எப்படி?” யோசனையுடன் இழுத்தவன்,

“அந்த காஸ்ட்லி சிகரட் ஒருவேளை அவரோடதோ?” தேவ் சந்தேகத்துடன், தனது கணினியில் விஜயன் பங்கேற்ற நிகழ்ச்சியின் காணொளியை தேடித் பார்த்தான்.

“ரொம்ப சாந்தமா தானே இருக்கார்.. இவர் எப்படி இதுல இன்வால்வ் ஆக முடியும்?” தேவ் அந்த காணொளியை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க, அவருக்கு பின்னால் இருந்த ஒருவனின் அசைவு தேவின் கவனத்தை ஈர்த்தது.

“விஷால்… இந்த வீடியோவைப் பாரு…” தேவ் பரபரக்க, விஷாலும் அவனது அருகே வந்து அமர்ந்தான்.

“இவனோட அசைவையும்… இவன் நிக்கற ஸ்டைலும்… இங்கப் பாரு… இந்த வீடியோல… முகமூடி போட்டுட்டு இருக்கற ஒருத்தன்… அதே போல நிக்கறான்…” இரண்டு வீடியோக்களை ஓத்திட்டு பார்த்து தேவ் விளக்கம் சொல்ல, அவர்களின் சந்தேகம் மேலும் வலுத்தது.  

“அப்போ நாம விஜயனோட நடவடிக்கைகளை கண்கானிக்கலாமா? அவரோட ப்ராபெர்டீஸ் எங்க எங்க இருக்குன்னு ஒரு லிஸ்ட் வேணும்… அதுல ஏதாவது சந்தேகப்படறா மாதிரி இருக்கான்னு வாட்ச் பண்ணணும்.” என்று சொன்னவன் அவற்றையும் இணையத்தளம் மூலம் எடுத்தான்.

அதை மேலும் ஆராய்ந்தவன், “விஜயனுக்கு சொந்தமான பாபுலர் அசெட்ஸ் இதெல்லாம் தான்… இதுல இந்த ரெண்டு இடங்களும் தான் கொஞ்சம் அவுட்டர்ல இருக்கு… ஒருவேளை இங்க தான் தப்பு நடக்குதோ? இந்த இடங்கள்ல இருக்கற காட்டன் மில்லோட ப்ரொடக்க்ஷன் ஸ்டாப் பண்ணி ரொம்ப நாளாச்சு…” யோசனையுடன் சொல்லிக் கொண்டே வந்தவன், அதுவரை அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராமை நோக்கித் திரும்பினான்.  

“ராம்… ப்ளீஸ் இப்போ எங்களுக்கு உங்க ஹெல்ப் வேணும். இந்த ஏரியால ஒரு சின்ன ஏரி இருக்கு இல்ல… அந்த ஏரிய போட்டோ எடுக்கற மாதிரி நீங்க அந்த இடத்தை கொஞ்சம் வாட்ச் பண்ணுங்க… எந்த ஒரு சந்தேகப்படும் படியான நடமாட்டம் இருந்தாலும் எங்களுக்கு தகவல் சொல்லுங்க.. நாங்க அங்க தான் பக்கத்துல இருப்போம்… நான் உடனே எங்க சீஃப் கிட்ட பேசிட்டு வரேன்…” என்றவன், அவனது செல்லை எடுத்துக் கொண்டு நகர்ந்து செல்ல, ராம் விஷாலைப் பார்த்தான்.

“நான் சொன்னது உண்மை தானே.. தேவ் அவ மேல உயிரையே வச்சிருக்கான்.. ப்ரியா பத்திரமா வந்திடுவா… பயப்படாதீங்க ராம்…” என்ற விஷாலை நோக்கியவன்,

“காதலை நிரூபிக்க நல்ல நேரத்தைப் பார்க்கறீங்க ரெண்டு பேரும்… எனக்கு வந்த கோபத்துக்கு தேவ்வை தொங்க விட்டு இருப்பேன். அவரே அழவும் கொஞ்சம் ஒருமாதிரி ஆகிடுச்சு…” ராம் கடுப்புடன் சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்த விஷால், அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்கினான்.

மறுநாள் விடிந்தும் விடியாத வேளையில், ராம் தேவ் சொன்ன ஏரியின் அருகே சென்று போட்டோ எடுப்பது போல அந்த இடத்தைக் கண்காணிக்கத் துவங்கினான்.

சிறிது நேரம் வரை எந்த ஒரு ஆள் நடமாட்டமும் இல்லாது இருந்தது. மூன்று மணி நேரம் வரை அங்கிருந்த ராம், “இங்க எதுவுமே இல்ல தேவ்… யாருமே இல்லாத மாதிரி தான் இருக்கு…” காதில் மாட்டி இருந்த ப்ளூடூத் வழியாக தேவிற்கு அழைத்துச் சொல்லவும்,

“ஓ.. அப்போ அந்த இன்னொரு பாக்ட்ரியைப் பார்ப்போம் ராம்… நீங்க கிளம்பி வந்திடுங்க…” ஏமாற்றமாக உணர்ந்த தேவ் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.

தனது காமெராவை பையில் வைத்துக் கொண்டு கிளம்பிய ராம், பாக்ட்ரியின் கதவு திறக்கப்படவும், சட்டென்று நிற்க, அதில் இருந்து நான்கு நபர்கள் வெளியில் வருவதைப் பார்த்து அதிர்ந்து, உடனே தேவ்விற்கு கால் செய்து கூறினான்.

“நீங்க அங்கேயே இருங்க… நான் இப்போவே வரேன்…” என்ற தேவ், உடனே தங்களது குழுவிற்கு தகவலைத் தெரிவித்துவிட்டு, அந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

தேவ்விற்கும், விஷாலிற்கும் அந்த பாக்ட்ரியின் உள்ளே செல்வது வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. “ராம் எங்க காணோம்? இங்க தானே நிக்கச் சொன்னேன்.. ஸ்டன்ட் பண்றேன்னு உள்ள ஓடிப் போயிட்டானோ?” என்று தேவ் நினைத்துக் கொண்டே அந்த பாக்ட்ரியின் உள்ளே செல்ல, நடுவழியில் ராம் மயங்கி இருப்பதைப் பார்த்த தேவ் அதிர்ந்து, அவனிடம் விரைய, “விடுங்கடா… விடுங்க… ஹெல்ப்… ஹெல்ப்…” ப்ரியாவின் குரல் அவர்களின் காதுகளை எட்டியது.

தங்கள் குழுவில் இருந்த ஒருவரை அழைத்து, சத்தம் போடாமல் ராமை அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவ உதவி செய்யச் சொல்லி விட்டு, தேவ் உள்ளே செல்ல, அவனைப் பின் தொடர்ந்து விஷால் உள்ளே நுழைந்தான்.

ப்ரியாவை இருவர் பிடித்துக் கொண்டிருக்க, ஒருவன் அவளை புகைப்படம் எடுப்பதைப் பார்த்த தேவ், கோபத்தில் உடல் இறுக, அவன் மீது பாய காத்திருந்த நேரம், வாயிலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, அங்கிருந்த பஞ்சு மூட்டைகளின் பின்னால் இருவரும் ஒளிந்தனர்.

“அய்யா வராங்க… அவர் வந்து உனக்கு ரேட் பிக்ஸ் பண்ணுவார்… எனக்குத் தெரிஞ்சு நீ நல்ல விலைக்கு போவ.. அவரு உன்னை கவனிப்பார் பாரு…” நக்கலாக ஒருவன் எச்சரிக்க, வழக்கமாக உடுத்தும் வேஷ்டியும், ஜிப்பாவையும் விடுத்து பேன்ட் சட்டையில் வந்த விஜயனை கண்டுகொண்ட தேவ் திகைத்து நிற்க, அவனை மேலும் திகைக்க வைத்தது அவரது அடுத்த செயல்.

“தேவ்..” விஷால் அதிர்ச்சியுடன் கூவ, வாய் மீது விரல் வைத்து அவனை அமைதியாக இருக்கச் சொன்னவன், அங்கு நடப்பதை கவனித்தான். நேராக ப்ரியாவிடம் சென்ற விஜயன், ப்ரியாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறையத் தொடங்க, தேவ்வின் பொறுமை எல்லையைக் கடந்துக் கொண்டிருந்தது. விஜயன் அடித்த அடியில், ப்ரியாவின் கன்னங்கள் வீங்கி, உதடு கிழிந்து ரத்தம் கசியத் தொடங்க, தேவ் ‘போகலாம்’ என்பது போல விஷாலிடம் கண்ணைக் காட்டினான்.

‘பொறு’ என்பது போல கை காட்டிய விஷால், தனது செல்லை எடுத்து அங்கு நடப்பதை படம் பிடிக்கத் தொடங்கினான்.

“உன் கையில பேப்பரும், கம்ப்யூட்டரும் கிடைச்சிட்டா… என்ன வேணா எழுதுவியா? இப்போ என்னைப் பத்தின உண்மையை நான் சொல்றேன் கேளு… ஆனா… அதை எழுத நீ உயிரோட இருக்க மாட்டியேம்மா..” போலியாக உச்சுக் கொட்டியவன்,

“ஆமா… நான் சின்ன பொண்ணுங்களை கடத்தி வெளிநாட்டுல விக்கறவன் தான்… அது தான் என்னோட மெயின் தொழில்… சமூக சேவைன்னு சொல்லறது எல்லாம் சும்மா… வெளிய நான் போட்டு இருக்கற முகமூடி. நான் விஜயன் இல்லடி… என்னோட உண்மையான பேர் தெரியுமா? விஜயபாண்டி… கஞ்சா கடத்தல், ஆள் கடத்தல்ன்னு ஒரு காலத்துல நார்த் சென்னையையே கலக்கினவன்டி…” உண்மையை கூறிக்கொண்டே ப்ரியாவை மீண்டும் அடிக்க, முன்தினம் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த சோர்வும், அவன் அடித்ததின் வலியும் சேர்ந்து ப்ரியா சுருண்டு விழ, அவளை இருவர் தாங்கிப் பிடித்தனர்.

“என்னவோ என்னோட காரைப் பார்த்தியாமே. அதோட அந்த கார்ல நான் இருந்ததை நீ கவனிச்சிட்டன்னு பசங்க சொல்றாங்க… அப்படியா?” விஜயன் கேட்க, ப்ரியா கண்களைத் திறக்க முடியாமல் திறக்க,

“அதோட விட்டயா நீ? அந்த சிபிஐ ஆபிசர் கிட்ட போட்டுக் கொடுத்த.. அவனை எப்படி பஜ்ஜி தின்ன வச்சேன் பார்த்தியா? உனக்கு எச்சரிக்கை செய்யத் தான் உங்க ஆபீசை உடைச்சேன்… அதுக்கும் நீ அடங்கல. இனிமேலும் உன்னை விட்டு வச்சா நீ என் முகத்திரையை கிழிச்சிடுவ. அந்த முகத்திரையால இத்தனை நாளைக்கு நான் போலீஸ் அப்பறம் சிபிஐ ரெண்டு பேருக்கும் ஆட்டம் காட்டிட்டு இருந்தேன்.

வேற வேற கார்ல போய் கடத்திக்கிட்டு இருந்தேன்… என்னோட கெட்ட நேரம், நீ என்னோட காரை அடையாளம் கண்டுக்கிட்ட.. அதை நீ காட்டினதுல இருந்தே அவனுங்க இந்தப் பக்கமே சுத்திக்கிட்டு இருக்கானுங்க… இந்தப் பொண்ணுங்களை பிடிக்கிறது இருக்கே அப்படியே மீன் பிடிக்கிற மாதிரி த்ரில்லா இருக்கும்…” சொல்லிக் கொண்டே வந்தவன், ப்ரியா முறைக்க முயலவும்,  

“முறைக்காதே… கண்ணையும் நோண்டிடுவேன்…” அவளை எச்சரிக்கை செய்தவன், “என்னோட முகமூடியை காப்பாத்த தான் உன்னை தூக்கிட்டு வந்தேன். இப்போ உன்னையும் ஒரு கை பார்த்துட்டு மும்பைல விக்கப் போறேன். அதுக்கு ரேட் பேசத் தான் இப்போ போட்டோ எடுக்கறோம். நல்லா போஸ் கொடும்மா…” அவன் சொல்லச் சொல்ல, தேவ் அவர் மீது பாய்ந்தான்.

தேவ் பாயவும், அதிர்ச்சியுடன் விஜயன் திரும்ப, “நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்… சின்னப் பொண்ணுங்களையும், அப்பாவி பொண்ணுங்களையும் கடத்தி விக்கறதுக்கு நீ தெருவுல பிச்சை எடுக்கலாம்…” சொல்லிக் கொண்டே, அவனது கழுத்து வளைவில் தன்னுடைய துப்பாக்கியால் ஒரு அடி அடிக்க, விஜயன் சுருண்டு அமர, அவனது ஆட்கள் தேவ்வின் மீது பாய, விஷால் தனது ப்ளூடூத்தில் அழைக்கவும், வெளியில் ஒளிந்துக் கொண்டிருந்த அவர்களது குழுவைச் சேர்ந்த மற்றவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர்.

“நல்லவன் வேஷத்துல நீ நடத்தின நாடகம் இனிமேலும் செல்லாது.” ப்ரியாவை அடித்தது போலவே பளார் பளார் என்று அறைந்தவன்,

“இவரை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போங்க…” பிடித்து தள்ளியபடி தேவ் சொல்லவும், விஷால் விஜயனை இழுத்துக் கொண்டு செல்ல,

“சர்ச்…” என்று அவன் உத்தரவிடவும்,

“தேவ்… அந்த ரூம்…” ப்ரியா காட்டிய திசையில் இருந்த அறையைத் திறந்தவர்கள், அங்கிருந்த சிறு பெண்களைப் பார்த்து திகைத்தனர். திடீரென்று உள்ளே நுழைந்த மனிதர்களைப் பார்த்து அவர்கள் அனைவரும் பயத்துடன் அலற,

“நாங்க சிபிஐ… உங்களை காப்பாத்த தான் வந்திருகோம்…” தனது அடையாள அட்டையைக் காட்டி விஷால் சொல்லவும், அவர்கள் அழுது கொண்டே வெளியில் வர,

“விஷால்… இவங்களுக்கு எல்லாம் மொதல்ல மெடிக்கல் ஹெல்ப் வேணுமான்னு பார்க்கச் சொல்லுங்க. அப்பறம் நம்ம ஜீப்லயே ஆபீஸ்க்கு கூட்டிட்டு போய் கம்ப்ளைண்ட் எழுதி வாங்கிட்டு அவங்க பேரென்ட்ஸ்க்கு தகவல் சொல்லி, அவங்க கிட்ட ஒப்படைக்க சொல்லு…” தேவ் பேசிக் கொண்டிருக்க,

“சரிடா… ப்ரியாவைப் பார்த்துக்கோ… ரொம்ப முடியாம இருக்கா..” விஷால் அங்கிருந்த சிறுமிகளை கூடிக் கொண்டு நகர, நிற்க முடியாமல் தொய்ந்து கீழே சரிந்த ப்ரியாவை ஒரே தாவலில் தாங்கிப் பிடித்த தேவ், அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் இருந்த இறுக்கத்தை அந்த நேரத்திலும் உணர்ந்த ப்ரியா, அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, அவளது முகத்தை தனது தடதடக்கும் நெஞ்சத்தின் மேல் அழுத்திக் கொண்டவன், அவளைத் தன்னுள்ளேயே கலந்து விடுபவனைப் போல இறுக்கிக் கொண்டான்.

“தேவ்..” வறண்டிருந்த தொண்டையின் எச்சிலை கூட்டி விழுங்கி அவள் அழைக்க, எதுவுமே பேசாமல், அவளது முகத்தை இரு கைகளிலும் தாங்கியவன், அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது இந்த செயல்களை எதிர்ப்பார்க்காத ப்ரியா தடுமாறி நிற்க, அவளது நெற்றியில் விழுந்திருந்த முடிகளை ஒதுக்கியவன், முகம் எங்கும் வேகத்துடன் இதழ்களைப் பதிக்க, அவ்வளவு வலியிலும் ப்ரியா, தான் காண்பது கனவா இல்லை நினைவா என்பது போல விழித்துக் கொண்டு நின்றாள்.

அவனை ஆச்சரியத்துடன் பார்த்த கண்களிலும் இதழ்களைப் பதித்தவன், “உன்னை இத்தனை நேரம் விட்டு வைச்சதே என் தப்பு தாண்டா… போதும் வா வெளிய போகலாம்…” என்று கூறியபடி, அவளை இழுக்க, அவளது கால்களோ பலமிழந்து துவண்டது.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா? என்னை மன்னிச்சிடு ப்ரியா…” என்று கூறிக் கொண்டே, அவளை கைகளில் ஏந்திக் கொண்டு, அவன் வந்திருந்த காரை நோக்கிச் சென்றான்.

காரின் அருகே அவளை தன் மீது சாய்த்தபடி நிற்க வைத்து, கார் கதவைத் திறந்து, முன் சீட்டில் அமர வைத்து, அவளருகே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன், டாஷ்போர்ட்டில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து, அவளது இதழ்களில் வழிந்த உதிரத்தைத் துடைத்து விட, இன்னமும் நம்ப முடியாமல், ப்ரியாவிற்கு மயக்கம் வரும் போல் இருந்தது.

உதட்டை துடைத்துவிட்டு, க்ளுகோஸ் கலந்த தண்ணீர் பாட்டிலை நீட்டியவன், அதை அவள் ஒரே மூச்சாக குடித்து முடித்ததும், மீண்டும் அவளை கட்டி அணைத்து அவளது நெற்றியில் இதழ் பதித்து விலகியவன், காரில் இருந்து கீழே இறங்க, “இந்த தேவ்வுக்கு என்ன ஆச்சு? என்ன இப்படி எல்லாம் பண்றான்… இருந்தாலும் ஒரு வார்த்தை ஐ லவ் யூன்னு வருதா பாரேன்..” ப்ரியா குறைப்பட்டுக் கொண்டே விஷாலுடன் பேசிக் கொண்டிருந்த தேவ்வைப் பார்க்க, விஷாலோ ப்ரியாவை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“இவரு எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்காரு. நான் என்ன கோமாளி மாதிரியா இருக்கேன்… ஒருவேளை என் முகம் எல்லாம் வீங்கி போச்சோ?” நினைத்துக் கொண்ட ப்ரியா, காரின் கண்ணாடியில் தன்னை சரி பார்க்க, அவளை சுட்டிக் காட்டிய விஷால்,

“நீ அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போ தேவ். நான் இவங்களை நம்ம கஸ்டடியில எடுத்துக்கறேன்… இன்னைக்கே நாம இவங்களை கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணிடலாம்…” என்று சொல்லவும்,

“ப்ரியாவோட கம்ப்ளைண்ட் இதுல ரொம்ப முக்கியம் விஷால். அதை முதல்ல வாங்கணும். அதை விட… எனக்கு என்னவோ இந்த இடத்தை சோதனை போட்டா இன்னும் நிறைய பேர் சிக்குவாங்கன்னு தோணுது..” தேவ் சொன்னதும், ப்ரியாவை காரிலேயே ஓய்வெடுக்கும் படி சொல்லிவிட்டு, தேவ் குழுவினர் அந்த இடத்தை சோதனை போட்டு, விஜயனுடன் தொடர்புடைய நபர்களின் விபரங்களை ஆதாரங்களுடன் கைப்பற்றினர். இதற்கு மேல் எப்படியும் தப்பிக்க முடியாது என்பது போல வலுவான கேசில் விஜயன் சிறைக்குச் செல்ல, சிறுமிகள் மருத்துவ சோதனைக்குப் பிறகு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

சோர்வில் ப்ரியா உறங்கி இருப்பாள்… அவளை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு, சாவித்திரி சூர்யாவிடம் ஒப்படைத்து, தங்கள் திருமணம் குறித்து வீட்டில் பேச வேண்டும், என்ற எண்ணத்துடன் தேவ் காரின் அருகே வர, அவனது நினைப்புக்கு எதிர்பதமாக, ப்ரியா காரில் அமர்ந்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, அவளை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தான்.

“ஆல் தி பெஸ்ட் ப்ரியா.. கங்க்ராட்ஸ்…” அவர்கள் அருகே வந்த விஷால் வாழ்த்து தெரிவிக்க,

“எதுக்கு?” ப்ரியா புரியாமல் கேட்க,   

“இப்போ எங்க ஆபீஸ்க்கு போய் உன்னோட வாக்குமூலத்தை பதிவு செய்யனும்.. அதுக்குத் தான்…” விஷாலை முறைத்துக் கொண்டே தேவ் சொல்ல,

“அதுக்கு எதுக்கு வாழ்த்துக்கள்..” ப்ரியா முணுமுணுக்க,

“இல்ல… நான் உன்கிட்ட கொடுத்த அசைன்மென்ட்ட நல்லபடியா முடிச்சிட்ட இல்ல.. அதுக்கு தான் போதுமா… ஆபீஸ்க்கு போயிட்டு வீட்டுக்கு போகலாம்…” விஷாலை முறைத்துக் கொண்டே தேவ் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்ப, 

“போடா ராஜா… போ… உங்க சாயம் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளுக்க போகுது..” விஷால் கிண்டல் செய்ய, தேவ் சிரிப்பை அடக்கிக் கொண்டு வண்டியை செலுத்தினான்.

ப்ரியா நகர்ந்து அவனது தோளில் சாய்ந்து, “நான் செத்துப் போயிடுவேன்னு கொஞ்சம் பயந்துட்டேன்.. இருந்தாலும் நீங்க வருவீங்கன்னு நம்பிக்கை இருந்தது…” அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்து அவள் சொல்லவும்,  அவளது தலையை வருடிக் கொடுத்தவன், அவளது தோளைச் சுற்றி கைப் போட்டு, தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

“தேவா… ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகி இருந்தா..” மெல்ல ப்ரியா கேட்க,

“உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டா ப்ரியா… ஆகி இருந்தா… நான்… நான்.. எனக்குத் தெரியல…” அவளை மேலும் தன்னுடன் நெருக்கியவனின் இதயம் வேகமாக அடிக்க, ப்ரியா அவனது தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.  

நேராக அவளை தனது அலுவலகம் அழைத்துச் சென்று, வாக்குமூலம் பெற்று, அதை பதிவு செய்ய,

“எனக்கு உங்க சிஸ்டம் வேணும் தேவா… ஒரு ரெண்டு நிமிஷம்…” என்றவள், அவன் இடம் கொடுக்கவும், அதில் அமர்ந்து அவள் கடத்தப்பட்ட செய்தியை ஒரு முன்னூட்டமாக பதிவு செய்து, அதற்கான காரணம் யாரென்னும் முகத்திரையை கிழித்துவிட்டு, அவரைப் பற்றிய தகவல்கள் சிறிது இடைவேளைக்குப் பிறகு என்று அறிவித்து விட்டு கணினியை அனைக்க,

“அம்மாவுக்கும் சூரியாவுக்கும் நீ கிடைச்சுட்டேன்னு தகவல் சொல்லிட்டேன் ப்ரியா.. ராம் ஹாஸ்பிடல்ல இருக்கான்..” தகவலைச் சொன்னவன், “உனக்கு பயம் இல்லையா?” என்று கேட்க,

“ச்சே… ச்சே… அதெல்லாம் ஒண்ணும் இல்ல… எப்படியும் நீங்க வருவீங்கன்னு நம்பிக்கை இருந்தது. என்னை தூண்டில போட்டு அவங்களைப் பிடிக்கலாம்ன்னு தானே ப்ளான் பண்ணினீங்க… அது தான் சரியாய் நடந்து முடிஞ்சிருச்சே…” என்று நக்கல் செய்ய, தான் இத்தனை நேரம் பட்ட மனவலியை அவள் கேலி செய்யவும் கோபத்துடன்,

“வா… போகலாம்… நீ எல்லாம் என்கூட சண்டை போடத் தான் லாயக்கு.” கோபமாக கூறியபடி அவன் முன்னே நடக்க, அவனுக்கு பழிப்பு காட்டியபடி, ப்ரியா அவனைப் பின் தொடர்ந்தாள்.

கார் தங்கள் வீட்டிற்குச் செல்லாமல் வேறு எங்கோ செல்வதை உணர்ந்த ப்ரியா, “நான் எங்க வீட்டுக்குப் போகணும்… என்னைப் பார்க்கணும்ன்னு அவங்க துடிப்பாங்க. என்னால போன் கூட பேச முடியல…” கடுப்புடன் சொல்ல, அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் காரைத் தங்கள் வீட்டின் முன்பு கொண்டு நிறுத்திய தேவ், அவளது பக்கம் வந்து கதவைத் திறக்க, கீழே இறங்கியவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

“ப்ரியா… இது தான் நம்ம வீடு..” தேவ் அவளுக்கு காட்டவும், அவளது தாய் தமையனுடன் அவனது மொத்த குடும்பமே அவளுக்காக வாயிலில் காத்திருந்தது.

தேவ் அருகே வந்து நின்றவுடன் பார்வதி அவளது கன்னத்தை பிடித்து கொஞ்ச, ‘யார்’ என்று புரியாத குழப்பத்துடன் ப்ரியா தேவ்வை திரும்பிப் பார்க்க, “இவங்க தான் எங்க அம்மா…” அறிமுகப்படுத்தியபடி, அவர்கள் காலில் விழுந்து பணியும் படி கண்களைக் காட்ட, அவனது கண்கள் சொல்லும் மொழிக்கு கட்டுப்பட்டவள் போல், அங்கு நின்றிருந்த பெரியவர்களின் காலில் ப்ரியா பணிந்து நிமிர, அவர்களுடன் புன்னகையும், கண்ணீரும் சேர்ந்த கலவையான உணர்வுகளுடன், சாவித்திரியும் சூர்யாவும் நிற்பதைக் கண்டவள்,

“அம்மா…” என்று அவர்களிடம் ஓடினாள்.

“எங்கடா தங்கம் போன? நீ காணும்ன உடனே எங்களுக்கு எப்படி இருந்தது தெரியுமா? எங்களை விட மாப்பிள்ளை தான் தவிச்சு போயிட்டார்… எங்களைப் போல உட்கார்ந்து அழவும் முடியாம உன்னை கண்டுபிடிச்சே தீருவேன்னு விடாப்பிடியா கிளம்பிப் போனார் தெரியுமா? ரொம்ப தங்கமான மாப்பிள்ளை…” சாவித்திரி பாராட்ட,

“மாப்பிள்ளையா?” ப்ரியா திகைக்க,

“நானே தான் பிஜிலி அது… வேற யாருக்கு உன் கையை பிடிக்க தைரியம் வரும்… எ…ன்….ன்…னைத் தவிர” தேவ் கிண்டல் செய்ய, இன்னமும் நடப்பதை நம்ப முடியாமல் ப்ரியா பேந்த விழித்துக் கொண்டு நின்றாள்.

“உள்ள வாம்மா ப்ரியா. குளிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு ஏதாவது சாப்பிட்டுக்கிட்டு பேசலாம்…” தேவ்வின் தந்தை அழைக்க,

“அப்பா…” தேவ் திரு திருக்கவும்,

“உன்னை தனியா கவனிக்கிறேன் திருடா.. ரெண்டு மூணு நாளைக்கு முன்னால யாரோ நல்லவன் மாதிரி இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னான்… இதுக்காகத் தானா?” என்று கிண்டலடிக்க,

“ஹையோ… இங்க நின்னா… என்னோட மானமே போயிடும் போல இருக்கே… நீ உள்ள வா பிஜிலி…” கைப் பிடித்து அழைத்துச் சென்ற தேவ், அவளைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று நிறுத்தினான்.

“தேவ்.. என்ன இது?” ப்ரியா பதற, அவளை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே அவள் அருகே நெருங்கியவனைக் கண்டு நெஞ்சம் துடிக்க ப்ரியா பின்னால் நகர்ந்து சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு நிற்க, அவளின் இருப்பக்கத்திலும் கையை ஊன்றி நின்றவன், அவளது மூக்கின் மீது தன்னுடைய மூக்கை உரசி,

“உன்னோட டிட்பிட் நியூஸ்க்கு ஒரு விறுவிறுப்பான நியூஸ் தரவா..” என்று அவளது காது மடலில் முகத்தை உரசிக் கொண்டே கேட்க,

“ஹ்ம்ம்… என்ன?” அவனது நெருக்கம் தந்த தவிப்பில், உள்ளே சென்று விட்ட குரலில் கேட்ட ப்ரியாவின் இதழ்களில் பட்டும்படாமலும் மெல்ல தனது முத்திரையைப் பதித்தவன்,

“சிபிஐ ஆபிசர் தேவேந்தருக்கும், கொட்டும் முரசு பத்திரிக்கையின் ரிப்போர்டர் ப்ரியம்பதாவிற்கும் விரைவில் டும்… டும்… டும்..” செய்தி போல சொன்னவனின் மார்பில் சாய்ந்தவள்,

“இதுல என்ன டிட் பிட் நியூஸ் இருக்கு? அது தான் உங்க வீட்ல ஆரத்தி எடுத்து என்னை உள்ள கூப்பிட்டுட்டாங்க… எங்க அம்மா மாப்பிள்ளைன்னே உறுதி செய்துட்டாங்க… ஆனாலும் ஒரே நைட்ல இதெல்லாம் ரொம்ப அதிகம்..” என்று சிணுங்கியவளின் இதழ்களை வருடிக் கொடுக்க, விருப்பத்துடன் அவனிடம் சரண் புகுந்தவளிடம்,

“ஐ லவ் யூ பிஜிலி…” எனவும், அவன் எதற்காக பிஜிலி என்று செல்லப் பெயர் சூட்டி இருக்கிறான் என்று புரிந்தவள், “உங்களுக்கு இந்த கொழுப்பு மட்டும் ஆகாது. இருங்க எங்க அத்தைகிட்டயே சொல்றேன்…” என்று நகர, அவளின் கைப் பிடித்து இழுத்தவன், அருகில் இருந்த அலமாரியில் ப்ரியாவிற்கென்று முன்பே வாங்கி வைத்திருந்த மோதிரத்தை அணிவித்து, அவளது விரல்களில் இதழ்களைப் பதித்து, அவளை வெளியில் கூட்டிச் செல்ல,

“என்ன தேவ் எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்?” தேவ்வின் தந்தையின் கேள்விக்கு,

“இன்னைக்கேன்னா கூட எங்களுக்கு ஓகே தான்…” அவளைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே தேவ் சொல்ல, ப்ரியா நாணத்துடன் அவன் பின்னால் ஒளிய,

“ஹையோ அம்மா… இது நம்ம ப்ரியாவே இல்ல… வேற யாரோ…” சூர்யா அலற,

அவனை முறைத்து “ஒரு நாளுல உனக்கு கொழுப்பு ஏறிப் போச்சு சூர்யா…” என்றபடி அவனது புஜத்தில் அடித்தவளைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.

மீண்டும் நாணம் வந்து ஒட்டிக் கொள்ள முகம் சிவந்து நின்றவளை தேவ் தன் தோளோடு அணைத்துக் கொள்ள, அந்த தீண்டலில் இருந்த எல்லையில்லா காதலில் ப்ரியா அவன் மார்பில் சாய, அவர்களைப் பெற்றவர்கள் வாழ்த்து தெரிவிக்க, இருவரும் இனிமையான பாதையில் காதலாகி கசிந்துருகி, இதே ஒற்றுமை அவர்களின் வாழ்வில் தொடர என்றுமே இறைவன் துணை இருக்கட்டும்..

 

22 COMMENTS

 1. hi mam orea episode la story la twist ellam kodudhu mudichitinga dev veetla accept panna matanga fight panna vendiyadhu irukum nu nenaichen but accept pannitanga nice ending.

 2. அருமையான கதை ரம்யா .
  ஆனால் இப்படி எக்ஸ்பிரஸ் பாஸ்ட்ல கதை முடிஞ்சிடுச்சே …
  தேவோட தடாலடி ரொமான்ஸ் சூப்பர்.
  அடுத்த ரொமான்ஸ் கதைக்காக ரொம்ப ஆவலுடன் வெயிட்டிங்

 3. Superb ma,.

  Innum KVS padikka start pannalai ma,.. konjam methuvaavae update kudunga ma, heeeee, naan ippo konjam busy ma. Seekkiram vanthurraen.

 4. Hei Ramya dear, romba, rombavae azhagana, arputhamana oru story intha ”KAATHALAAGI” novel pa
  I liked and loved Priya, Dev, Ram and Surya also pa
  I missed them very much pa
  hei Ramya, konjam heavy work pa, so I am unable to read this lovely and excellent story dear
  waiting for your next lovely story except KVS, asap Ramya dear

 5. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள். இன்று தான் கண்டுபிடித்தேன். வந்து பார்த்தால் இனிய ஆச்சிரியம் ( காதலாகி ). அழகான இனிமையான கதை .

LEAVE A REPLY