SHARE
“எதுக்கு இப்போ தலையில கை வச்சுட்டு உட்கார்ந்து இருக்க? நிறைய வேலை இருக்கு வா…” ராம் அழைக்கவும்,
“ராம்… அவங்க சாப்பிட்டு பில்லுக்கு பைசா கொடுக்காம போறாங்க ராம். போய் அவங்களைப் பிடி. என்கிட்டே அவ்வளவு பைசா எல்லாம் இல்ல.” என்று சொன்ன ப்ரியாவை மேலும் கீழும் பார்த்து,
“உன் கையில இருக்கற ஸ்வீட் பாக்ஸ் என்ன விலை?” என்று ராம் கேட்கவும்,
“அது ஒரு கிலோ ஐநூறு ருபாய் சொன்னாங்க…” அவள் சொன்ன பதிலைக் கேட்டவன்,
“அவங்க சாப்பிட்டதும் அவ்வளவு தான் பில்லு வந்திருக்கு. எப்படி பணத்தை சரி பண்ணினார் பார்த்தியா உன் ஆளு? அங்க நிக்கறார் தேவ்… ஒழுங்கா மரியாதையா பணத்தை கட்டிட்டு வா… நான் வெளிய போய் பீடா சாப்பிட்டு முடிக்கறேன்…” என்றபடி அவன் வெளியில் செல்ல, காலை உதைத்துக் கொண்ட ப்ரியா, பணத்தை செலுத்திவிட்டு வெளியில் வந்தாள்.
வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்த பீடாவுடன் ராம் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, “அடப்பாவி… அவன் செய்ததைப் பார்த்து நீ சிரிக்கறையா? நீ எல்லாம் ஒரு பிரெண்ட்…” அவனைத் திட்டியவள்,
“ரொம்ப அக்கறையா ஸ்வீட் எல்லாம் வாங்கித் தராரேன்னு பார்த்தேன். இப்படி மீல்ஸ்க்கு பில்லை கட்ட விட்டுட்டு போயிட்டாரே என் தேவன். அவர் வாங்கித் தந்த ஸ்வீட்டை விட அவங்க சாப்பிட்டது நூறு ரூபாய் அதிகம் தெரியுமா?” அவள் புலம்பிக் கொண்டே ராமின் அருகே வர, அவளைப் பார்த்தவன் மேலும் சிரிக்கத் தொடங்கினான்.
“உன் ஆளுக்கு வாங்கித் தர்ரதுக்கு இப்படி சலிச்சுக்கறையே ப்ரியா.. அதுவும் சாப்பாட்டுக்கு போய் காசு பணம் கணக்குப் பார்க்கலாமா?” என்று கேட்டுக் கொண்டே வண்டியை எடுக்க,
“பைசா இருந்தா கொடுத்துட்டு போறேன்… இப்போவே கார்ட்ல போட்டு இருக்கேன். அம்மா பார்த்தாங்கன்னா நான் தொலைஞ்சேன். நூறு கேள்வி கேட்பாங்க… நீயே கட்டுன்னு சொல்லிட்டு போயிருந்தா கூட பரவால்ல ராம்… ஆனாலும் இப்படி செய்திருக்கக் கூடாது…” என்று அவள் மேலும் புலம்ப, ராம் சிரிப்புடன் வண்டியை ஓட்ட, இருவரும் அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
அவளை அலுவலக வாயிலில் இறக்கி விட்டு “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ உள்ள போய் எங்க இருந்து தொடங்கனும்.. எந்த ஏரியாவுக்கு போனா அது போல ஆட்களை பார்க்கலாம்ன்னு யோசி… அந்த கேசை ஸ்டடி பண்ணு…” என்று அவளுக்கு ஒரு யோசனையை சொல்லிவிட்டு, அவன் கிளம்ப எத்தனிக்க,
“வெயிட் வெயிட்…” அவள் கூவிய கூவலில் நின்ற ராம், அவளைக் கேள்வியாகப் பார்க்க,
“ஹோட்டலுக்கு போற வரை நீ இந்த கேசை பத்தி எதுவுமே எழுதக் கூடாதுன்னு சொல்லிட்டு இருந்த… இப்போ உனக்கு யாரு மந்திரிச்சு விட்டாங்க. உன்னோட அறிவுக் கண்ணைத் திறக்க, அந்த ஹோட்டல்ல என்ன போதி மரமா இருக்கு? ஹோட்டல்ல தேவாவைப் பார்த்த உடனே இப்படி அந்தர் பல்ட்டி அடிச்சு பேசறியே என்ன விஷயம்?” அவள் சந்தேகமாகக் கேட்கவும், ராம் அவளையே பார்த்துக் கொண்டு, தனது திரு திருப்பை அவளுக்கு தெரியாமல் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்க,
“சொல்லு ராம்…” அவள் மேலும் வற்புறுத்த,
“நான் சாப்பாடை சாப்பிட்டுக்கிட்டே உன்னோட முடிவைப் பத்தி யோசிச்சேனா… அப்போ சரி இந்த புள்ளையும் ஏதோ உபயோகமா செய்துட்டு போகட்டுமேன்னு தோணிச்சு… அது தான் சொன்னேன்…” என்று சமாளிக்க, ப்ரியா ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.
“ஹையோ யமகாதகி… உண்மையை சொல்லாம விட மாட்டா போல இருக்கே…” என்று மனதினில் நினைத்துக் கொண்டவன், அவள் இன்னமும் முறைப்பதை பார்த்து,
“ஹ்ம்ம்… தேவ் தான் உனக்கு ஃபுல் பாதுக்காப்பு தரேன்னு வாக்கு கொடுத்தார். அதனால சரி… உனக்கும் ஏதோ மூளைக்கு வேலை கொடுத்தா மாதிரி இருக்கும்ன்னு தான் நானும் இப்போ சரின்னு சொல்றேன். ஏதோ உன் கூட வந்து… என் பொன்னான கையாள போட்டோ எடுக்கலாம்ன்னு பார்த்துட்டு இருக்கேன்… வேண்டாம்னா போ…” என்று அலட்டிக் கொண்டவன்,     
“சரி நான் இன்னைக்கு என்னோட வேலைகளை கொஞ்சம் முடிச்சு வைக்கிறேன் அப்போ தான் நாளைக்கு உன் கூட வர முடியும். இப்போ போய் நான் சொன்ன வேலையைச் செய்…” என்று அதிகாரமாக கூறிவிட்டு செல்ல, மீண்டும் செய்தித் தாள்களில் வந்த செய்திகளை மிகுந்த கவனத்துடன் படிக்கத் தொடங்கினாள்.
வீட்டிற்கு சென்றும், தனது கணினியை உயிர்ப்பித்து, வேறு பல ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும் வந்த செய்திகளை படித்து, அதற்கான இடங்களை குறித்து வைத்தாள்.
அதை குறித்த கட்டுரையையும் தொகுத்த அவளே அதை பதிவேற்றம் செய்ய விஸ்வகோபால் அதிகாரம் வழங்கி இருக்கவும், அதை செய்து முடித்தவள், அன்றைய வேலையின் பளு காரணமாக உறங்குவதற்காக படுத்துக்கொள்ளவும்,
“ப்ரியா…” என்று சூர்யா அழைத்தான்.
“என்ன சூர்யா?” என்று கேட்டுக் கொண்டே அவள் வெளியில் வர,
“இன்னும் நாம சாப்பிடவே இல்ல…” அவன் பரிதாபமாகச் சொல்லவும், ப்ரியா திகைப்புடன் அவர்களைப் பார்த்தாள்.
“இன்னும் சாப்பிடலையா சூர்யா? மணி பத்தாகுது…” அவள் இன்னமும் திகைப்பு மீளாமல் கேட்க,
“இல்ல ப்ரியா… நீ ஏதோ மும்முரமா வேலை செய்துட்டு இருந்தன்னு நாங்களும் டிஸ்டர்ப் பண்ணல. நீ வர வரை வெயிட் பண்ணலாம்ன்னு…” என்று அவன் இழுக்கவும், ‘உர்ர்’ என்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சாவித்திரியைப் பார்த்தவள், அவரது அருகில் சென்று அமர்ந்தாள்.
“அம்மா… சாரிம்மா… ஒரு முக்கியமான விஷயத்தை எழுதிட்டு இருந்தேன்… அதுக்கு டீடைல்ஸ் எல்லாம் படிக்கணும்னு உட்கார்ந்ததுல நான் சாப்பிடணும்ன்னே மறந்து போயிட்டேன்…” அவள் பாவமாக சொல்லவும், சாவித்திரி அவளது முகத்தைப் பார்த்தார்.
“நீ உன் வேலையைச் செய்… அதை வேண்டாம்ன்னு சொல்லல… சாப்பிட்டோமா… இல்லையான்னு கூட தெரியாம அப்படி என்ன வேலை?” என்று அவர் கடுகடுக்க தன் தவறை உணர்ந்தவள், தலை குனிந்தாள்.
“இனிமே இப்படி நடக்காதும்மா… ப்ளீஸ்… எனக்கு பசியே தெரியலம்மா… அதான்” என்றவள், அவரின் கையை பற்றிக் கொண்டு, தான் செய்த தவறு மனதை அறுக்க, கண்ணீருடன் சொல்லவும், அவளது கண்ணீரைக் கண்ட சாவித்திரி பதறினார்.
“என்ன ப்ரியா? எதுக்குடி அழற? அந்த விஸ்வகோபி உன்னை ஏதாவது சொல்லிட்டாரா?” சாவித்திரி பதட்டத்துடன் கேட்க, சூர்யா வேகமாக அவள் அருகில் வந்தான்.
“ஒண்ணும் இல்லம்மா… என்னவோ அழணும்னு தோணிச்சு அழறேன்…” என்றவள், கண்களைத் துடைத்துக் கொண்டு
“இது என்னோட வேலைக்கே ஒரு நல்ல சவாலான விஷயம்மா. இதை நான் செய்து முடிச்சா. எனக்கு நல்ல பேர் கிடைக்கும். ஆபீஸ்லையும்…. தேவாகிட்டயும்…” என்று அவள் சொல்லி நிறுத்த, இருவருமே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.    
“என்ன சொல்ற? தேவ்வா? அவர் உன்கிட்ட பேசினாரா?” சூர்யா பதட்டத்துடன் கேட்க,
“ஹ்ம்ம்… ஆமா… பேசினார்… அதும் இல்லாம… இந்த கேஸ் அவருக்கும் ரொம்ப முக்கியம்… எனக்கும் ரொம்ப முக்கியம்… அவர் சொல்லிட்டா நான் செய்வேன்… என்ன வேணா” திடமாகவும், அழுத்தமாகவும் சொன்னவளின் உறுதியை நினைத்து சாவித்திரி கவலை கொள்ள, சூர்யாவும் அதே கவலையுடன் சாவித்திரியைப் பார்க்க, அவளது பாதுகாப்பிற்காக ஹேன்ட் பேக்கில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கரின் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்த தேவ்வின் மனது இறக்கை இல்லாமலே பறந்துக் கொண்டிருந்தது.
“நான் சொன்னேன்ங்கறதுக்காக சாப்பிட கூட மறந்து வேலையை செய்யறாளா?” அவன் நினைக்கும் பொழுதே மனதில் எழுந்த ஆர்வம், அவளை உடனே பார்க்கத் தூண்டியது என்னவோ உண்மை…
உணவை உண்டு கொண்டே அதைக் கேட்டுக் கொண்டிருந்தவின் கை அப்படியே தொங்க, “பேட்டா… என்ன ஆச்சு?” என்று அவனது தாய் பார்வதி கேட்க,
“ஒண்ணும் இல்லம்மா… என்னவோ வயிறு வலிக்குது…” என்று பொய் கூறி, பாதி உணவிலேயே எழுந்துக் கொண்டவன் கையைக் கழுவிக் கொண்டு, தனது அறைக்குச் செல்ல, பார்வதி அவனை சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தார்,
அவன் எதுவும் பேசாமல், காதில் மாட்டிக் கொண்டிருக்கும் ஹெட்செட்டை திடீரென்று நன்றாக பொருத்திக் கொள்வதில் இருந்து பார்வதி அவனது முகத்தை ஆராய்ந்துக் கொண்டு தான் இருந்தார்.
அவனது முக மாறுதல்கள், ஒவ்வொன்றையும் குறித்துக் கொண்டே வந்தவர், அவன் இறுதியாக முகம் மலர்ந்ததையும், பின்பு முகம் சுருங்கி உணவைக் கூட உண்ணாமல் எழுந்து சென்றதையும் கவனித்தவர், யோசனையோடே, மீதி வேலைகளை முடித்துக் கொண்டு, அவனை காணச் செல்ல, அங்கு தேவோ வெளியில் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான்.

13 COMMENTS

  1. HMmm priyaku antha abathum vara kudathunu namma dev panra paathukapulm palama iruke
    Papom mothal la vara kadhal la rendu perum sernthu ena panranganu……
    As usual kalakl ud da

LEAVE A REPLY