SHARE

“ப்ரியா… கொஞ்சம் நில்லு..” என்று ராம் அழைத்துக் கொண்டிருக்க, அதற்கு முன்பே வெளியில் ஓடியிருந்த ப்ரியம்பதா, தேவின் காருக்கு அருகே நின்றிருந்த தனது ஸ்கூட்டியை நெருங்கினாள்.

அவளது வரவுக்காகவே காரின் மீது சாய்ந்து நின்றுக் கொண்டிருந்த தேவ்வை ப்ரியா பார்க்க, அவனோ நக்கலான புன்னகையுடன் ப்ரியம்பதாவைப் பார்த்துவிட்டு, அவளது வண்டியைப் பார்க்க, அப்பொழுது தான் தனது ஸ்கூட்டியைப் பார்த்த ப்ரியா விழிக்கத் தொடங்கினாள்.  

“ஹேவ் எ நைஸ் ஜர்னி…” கிண்டலாகக் கூறியவனின் நக்கல் வழிந்தோடிய குரலை உணரும் முன்பே, தேவ்வின் கார் கிளம்ப,

“யூ… யூ… இடியட்… உங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னா… அதுக்கு நீங்க தான் வெட்கப்படணும்… கேள்வி கேட்டேன்னு என்னோட வண்டியை எதுக்கு இப்படி செய்தீங்க? நான் எப்படி போறது?” என்று அவள் கத்திக் கொண்டிருக்க, அவளது குரல் உள்ளே கேட்காமல் போனாலும், அவளது முகத்தில் இருந்த செம்மையும், மூக்கு விடைத்து விரிந்த விதமும், அவளது உதடுகளின் அசைவையும் பார்த்தவன், அவளுக்கு கையசைத்துவிட்டு, காரை திருப்பிக் கொண்டு செல்ல, தனது ஸ்காட்டியை எட்டி உதைத்தவள், தலையில் கை வைத்துக் கொண்டு, அதன் மீதே அமர, மெதுவாக ராம் அவளின் அருகே வந்து சேர்ந்தான்.

அவனைப் பார்த்தது தான் தாமதம், “பார்த்தியா ராம்… நீ என்னை விட்டுட்டு வந்ததுனால என்ன எல்லாம் நடந்ததுன்னு பார்த்தியா? எல்லாம் உன்னால தான்… நீ என்னை கூட்டிட்டு வந்திருந்தன்னா…” அவள் பொரிந்துக் கொண்டிருக்கும் போதே,

“வந்திருந்தா… என்னோட வண்டி பஞ்சர் ஆகி இருக்கும்… நல்லவேளை நான் பிழைச்சேன்டா சாமி…” என்று நிம்மதி பெருமூச்சை விட்டுக் கொண்ட ராமை பார்த்த ப்ரியாவின் முகம் மேலும் கோபத் தணலை கக்கியது.

“நீ எல்லாம் ஒரு பிரெண்ட்டு… உன்னை நம்பி என்னை உன்கூட அனுப்பற அந்த விஸ்சை சொல்லணும்… இன்னைக்கு போய் அவருக்கு வைக்கிறேன் கச்சேரியை…” அவளது கோபத்தைக் கண்டு கொள்ளாத ராம்,

“ஆமா… நான் எப்போ உன்னை என் பிரெண்ட்டுன்னு சொன்னேன்… நான் உன்கூட காய்விட்டே ஒரு ரெண்டு மணி நேரத்திற்கும் மேல ஆகுதே… இல்ல இன்னும் மேல இருக்குமா?” அவன் யோசிக்க, அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்பது போல ப்ரியா சுற்றிலும் தேடிக் கொண்டிருக்க,

“ராம்… எஸ்கேப்…” என்றவன், பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து செல்ல, ஸ்கூட்டியை தள்ள முடியாமல், இரு ஆண்களையும் திட்டிக் கொண்டே, அந்த வளாகத்தை விட்டு வெளியில் சென்ற ப்ரியாவின் அருகில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது.

“ஹையோ…” அவள் அலற, அதில் இருந்து எட்டிப்பார்த்த தேவ்,

“என்ன கொட்டும்முரசு ரிப்போர்ட்டர் மேடம்… உங்க வண்டி பஞ்சரா?” நக்கலாக குசலம் விசாரிக்க,

“இல்ல தேவ் சார்… சும்மா ஒரு சின்ன வேண்டுதல்… பதில் சொல்ல முடியாத அளவு இன்னைக்கு நான் உங்களை கேள்வி கேட்டுட்டேன்னா… இப்படி நடுரோடுல வண்டியைத் தள்ளிட்டு போறேன்னு நேர்ந்துக்கிட்டேன்… அதான் தள்ளிட்டு போறேன்” அசராமல் ப்ரியாவும் பதிலுக்கு நக்கல் செய்யவும், தேவ் அவளை முறைத்துப் பார்த்தான்.

“என்ன உனக்கு பெரிய இவன்னு நினைப்போ? சும்மா நாலு கேள்வி கேட்டுட்டா… நாங்க வாயடைச்சு போயிடுவோமா? எங்களை மாதிரி களத்துல இறங்கி வேலை செய்யணும்… வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி… ஒரு ரெக்கார்டரும், பேனாவும் கிடைச்சா என்ன வேணா எழுதிருவீங்களா? நீங்க கேட்கற கேள்விக்கு நாங்க மட்டும் ஒழுங்கா பதில் சொல்லணும். மீறி ஏதாவது பதில் சொன்னா.. எழுத்துச் சுதந்திரம் அது இதுன்னு உங்க இஷ்டத்துக்கு எழுதி தள்ளிட வேண்டியது.

உங்களை எல்லாம் என்ன செய்யறது? ஏன் அந்த சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? இந்த கேசை பிடிக்க எங்க டீம் எவ்வளவு பாடுபட்டதுன்னு எங்களுக்குத் தான் தெரியும்…

ரொம்ப ஈஸியா என்ன ஆதாரம் இருக்குன்னு நீங்க கேட்ட உடனே நாங்க தூக்கி கொடுத்திடுவோம்ன்னு பேராசை. அதை நீங்க பக்கம் பக்கமா எழுதி பணம் சம்பாதிப்பீங்க. அதைப் பார்த்து குற்றவாளி தப்பிப்பான். நாங்க தலையில துணியைப் போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கணும். உங்களுக்கு மட்டும் தான் எழுத்து சுதந்திரமா? எங்களுக்கு எப்போ என்ன கொடுக்கணும்னு முடிவெடுக்கற சுதந்திரம் இல்லையா?” என்று அவளிடம் கத்திக்கொண்டே, காரில் இருந்து இறங்கியவன், அவனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று கத்திக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த ராம், அவர்கள் அருகில் ஓடி வந்தான்.

“ஹையோ தேவ் சார்… நீங்க செய்தது தான் ரொம்ப கரெக்ட்… அந்த நகைக்கடைக்காரன் ஒரு குடும்பத்தையே அவனோட பெண் ஆசைக்காக சிதைச்சு இருக்கான்… அவன் தப்பிக்கவே கூடாது… ஏதோ சின்ன பொண்ணு தெரியாம உங்ககிட்ட பேசிட்டா சார்… ப்ளீஸ் மன்னிச்சு விட்ருங்க…” ராம் கெஞ்சிக் கொண்டிருக்க, மன்னிப்பு கேட்க வேண்டியவளோ, இதழில் நெளிந்த புன்னகையை மறைக்க போராடிக் கொண்டிருந்தபடி, தேவ்வையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க தான் பேசறீங்க…. ரிப்போர்ட்டர் மேடம் ஒண்ணுமே சொல்லலையே…” தேவ் ராமிடம் கேட்க,

“நான் தப்பு செய்யாத போது… நான் எதுக்கு ராம் மன்னிப்பு கேட்கணும்? இங்கப் பாரு ராம்… நான் செய்தது நம்மோட பத்திரிக்கை தர்மம்… அவர் செய்தது அவரோட சிபிஐ தர்மம்… இதுல யாரும் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்ல…” பெருந்தன்மையாக அவள் சொல்வதைக் கேட்ட தேவ்வின் கோபம் எல்லையைக் கடக்க, அவளது ஸ்கூட்டியை எட்டி உதைத்தவன், வேகமாக காருக்குள் ஏறி சீறிக் கொண்டு கிளம்ப, ராம் இயலாமையுடன் ப்ரியாவைப் பார்த்தான்.

தேவ் அவ்வாறு போவதை எண்ணி பதைபதைத்த ராம் ப்ரியாவைப் பார்க்க, அவளோ, “ரொம்ப ஹேன்ட்சம் இல்ல ராம்…” அவன் திட்டிவிட்டு சென்றதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ப்ரியா கேட்ட கேள்வியில் ராம் தலையில் அடித்துக் கொள்ள,

“அவரோட வேலையைப் பத்தி குறை சொன்னதும் என்ன கோபம் வருது பாரேன்… ஹி இஸ் எ நைஸ் பெர்சன் ராம்… ரொம்ப நேர்மையானவரும் கூட… அதனால தான் அவரு வேலைக்குச் சேர்ந்த இந்த நாலு வருஷத்துல… பத்து இடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கார்…” கண்களில் காதல் மின்ன சொல்லிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன்,

“காதல் முத்திப் போச்சு… உங்க அண்ணாகிட்ட பேச வேண்டியது தான்…” என்று சொல்லவும், திகைப்புடன் அவனைப் பார்த்தவள், உச்சு கொட்டினாள்.

“இப்போ உச்சு கொட்டுவது ஏனோ?” நாடக பாணியில் அவன் கேட்க,

“இல்ல ராம்… நீ ரொம்ப லேட்டு… காலையிலேயே இதைப் பத்தித் தெரிஞ்சு அம்மாவும் அண்ணனும்…. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஓவரா காச்சி எடுத்துட்டாங்க…” என்று சோகமாக சொல்ல,

“ஹஹ்ஹா…” ராம் சிரிக்க,

“ஓவரா சிரிக்காதே.. நீ என்னவோ புதுசா போட்டுக் கொடுக்க சான்ஸ் கிடைச்சா மாதிரி துள்ளிட்டு இருந்தியா… அது உனக்கு எப்பவும் கிடைக்காது. நானே சொல்லிடுவேன்..” என்று நக்கல் அடித்தவள், முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,  

“இதுகெல்லாத்துக்கும் மொதல்ல அந்த தேவ்க்கு என்னைப் பிடிக்கணுமே ராம்… அப்பறம் தானே நான் மத்தவங்களை சரி கட்ட முடியும்… சரி நீ ஆபீஸ்க்குப் போ… நான் பஞ்சர் ஒட்டிக்கிட்டு வரேன்…” என்று அவள் சொன்னதைக் கேட்டவன்,

“உனக்கு என்ன பெரிய ஜான்சி ராணின்னு நினைப்பா? வா… பக்கத்துல இருக்கற பஞ்சர் கடையில ஒட்டிக்கிட்டு நாம கிளம்பலாம்… ஆனாலும் நீ அவரை ரொம்ப தான் பேசற ப்ரியா… அவருக்கு அப்பறம் எப்படி உன்னைப் பிடிக்கும்?” என்று கேட்டுக் கொண்டே, அருகில் இருந்த ஒரு கடைக்கு அவளது வண்டியை உருட்டிக் கொண்டு சென்றான்.

“ராம்… நீ ரொம்ப நல்லவன்…. எப்படி முன்னாடியே போய் எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருக்கப் பாரேன்… நண்பன்டா..” என்று அவனை பாராட்டியவள், அவன் முறைப்பதைப் பொருட்படுத்தாமல், தனது செல்போனில் பாட்டை கேட்கத் தொடங்க, அவளைப் பற்றி தெரிந்த ராம், தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

பஞ்சரை ஒட்டிக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தவர்கள், அன்றைய வேலையை முடித்து, “சார்… நான் ஆன்லைன்லையும் நியூசை அப்டேட் செய்துட்டேன்… நான் கிளம்பறேன்… மீதி ஏதாவது டிட்பிட் நியூஸ் கிடைச்சா… நான் வீட்ல போய் போடறேன்..” என்று சொல்லிவிட்டு ப்ரியா வீட்டிற்குக் கிளம்ப,

“சரிம்மா… டிட்பிட்ல ஏதாவது சுவாரஸ்யமான நியூஸ் கிடைச்சா போடும்மா… நாளைக்குப் பார்க்கலாம்… நாளைக்கு நாம ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணணும் ப்ரியா… எம்.டி. பத்து மணிக்கு பேசலாம்ன்னு சொல்லி இருக்கார்… எங்கயும் போகாம சீக்கிரம் வந்திடு…” விஸ்வகோபி விடைக் கொடுக்க,

“வரேன் சார்… கண்டிப்பா அந்த டைம் இங்க இருப்பேன்” என்றவள், வீட்டிற்குக் கிளம்பினாள்.

வீட்டிற்குச் செல்லும் சாலையில் அவளது விழிகள் ஏதாவது சுவாரசியமான செய்திகள் கிடைக்குமா என்று ஆராய்ந்துக் கொண்டிருக்க, ஒரு சாலையின் ஓரத்தில் தேவின் கார் நிற்பது அவளது கண்களில் பட்டது.

“நம்மாளோட கார் இங்க நிக்குதே… எங்க இருப்பார்?” யோசனையோடு சுற்றி பார்வையை ஓட்டியவள் தேவ் எங்கோ வேகமாக செல்வதைக் கண்டு,

“இந்த நேரத்துல இவரு எங்க போறார்? அதுவும் தலையில கேப் எல்லாம் போட்டுக்கிட்டு… ஒருவேளை இதுக்குப் பேரு தான் மாறுவேஷமோ?” கிண்டலாக நினைத்துக் கொண்டு நிற்க, தேவ் ஒரு சாராய கடையின் உள்ளே நுழைந்தான்.

அவன் நுழைந்த கடையைப் பார்த்தவள் அதிர்ச்சியுடன், “அச்சோ… பார்க்க நல்ல டீசென்டா இருக்காறேன்னு பார்த்தா இப்படி சரக்கு வாங்க போறாரே…” என்று நினைத்தவளின் நினைப்பு சரியே என்பது போல சிறிது நேரத்தில் வெளியில் வந்த தேவ் ஒரு மாதிரி நடப்பது போல் இருக்கவும், ஏமாற்றமும் கோபமும் ஒருங்கே எழ,

“இன்னைக்கு டிட்பிட்க்கு நல்ல செய்தி ஒண்ணு கிடைச்சு இருக்கு…. என்ன நம்ம ஆளைப் பத்தி நாமளே தப்பா எழுத வேண்டி இருக்கு.” சிறிது மனம் வருந்தியவள்,

“ஹ்ம்ம்… வீட்டுக்கு போன உடனே போட்டுட வேண்டியது தான்…” நினைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவள், முதல் வேலையாக, அவள் வேலை செய்யும் பத்திரிக்கையின் சார்பில் ஆன்லைனில் வெளியிடும் துணுக்குச் செய்தியில், அதை பதிவேற்றம் செய்தாள்.

“இப்படி போடறது தப்பு தான்.. ஆனாலும் இதைப் பார்த்து அவர் குடிக்கிறதையே விட்டுடணும்… நமக்கு இந்த குடிக்கிற வேலை எல்லாம் சரிப்பட்டு வராது… கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி குடிச்சிட்டு வந்தா என்ன செய்யறது? இப்போவே அதை திருத்தியாகணும்…” என்று சொல்லிக் கொண்டவள், சாவித்திரியைத் தேடிச் சென்றாள்.

‘உம்ம்…’ என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சாவித்ரியைப் பார்த்தவள், அவரது இந்த முகபாவம் எதற்கு என்று புரிந்து சமாதானம் செய்வதற்காக அவர் அருகே சென்று அமர்ந்து,

“அம்மா… என் மேல என்னம்மா கோபம்? எனக்கு பிடிச்சவரைப் பத்தி உங்ககிட்ட சொன்னேன்… உங்ககிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்லப் போறேன்ம்மா? என்னைக்காவது நான் எதையாவது உங்ககிட்ட இருந்து மறைச்சு இருக்கேனா? காலேஜ்ல சைட் அடிச்சதுல இருந்து, கட் அடிச்சது வரை எல்லாமே தானே சொல்லி இருக்கேன்… அது போல இதையும் சொன்னேன்ம்மா… எல்லாத்தையும் சொல்ற நான் இதை சொல்லாம விட்டு, வேற யாராவது அவர் கூட என்னைப் பார்த்தேன்னு உன்கிட்ட வந்து சொன்னாங்கன்னா உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். அதை தவிர்க்கணும்ன்னு தான்” ப்ரியா அவரிடம் சொல்லிக் கொண்டே வர, சாவித்திரி இன்னமும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

“எனக்கு தேவ்வை பிடிக்கும்ன்னு என் பிரெண்ட்சுக்கு எல்லாம் தெரியும் போது, என்னை பெத்து கஷ்டப்பட்டு வளர்த்து என் மேல உயிரையே வச்சிருக்கற உங்களுக்கு சொல்றதுல என்ன தப்புன்னு தான்மா சொன்னேன்… என் மனசையும் புரிஞ்சிக்கோங்கம்மா… தேவ் ரொம்ப நல்லவன்…” ப்ரியா சொல்லிக் கொண்டே போக, சாவித்திரி அவளை முறைத்தார்.

“என்னம்மா..” ப்ரியா புரியாமல் கேட்க,

“அவனும் உன்னை விரும்பி இருந்தா நீ சொல்றதை எல்லாம் நான் ஒத்துக்கறேன்… அவனே உன்னைத் திரும்பிப் பார்க்காத போது, அவனைத் துரத்தியாவது அவன் உன்னை காதலிக்கணுமா? உனக்கு வெட்கமா இல்ல? உனக்கு என்னடி குறைச்சல்? மேட்ரிமோனில போட்டா அவனை விட நல்ல மாப்பிள்ளை எல்லாம் கிடைக்கும்… எதுக்குடி இப்படி செய்யற?” என்று சாவித்திரி கேட்கவும், சில நொடிகள் மௌனமாக இருந்தவள்,

“அவரை முதல் முதல்ல நான் ஒரு சண்டையில சந்திச்ச போது, அவர் அந்த சூழ்நிலையை கையாண்ட விதம்… நான் கேட்ட கேள்வி எல்லாத்தையும் நியாபகம் வச்சிட்டு அடுத்த நாள் சொன்ன பதில்.. நான் அப்படியே அசந்து போயிட்டேன்ம்மா.. யாருக்கும் அசராம அவர் பேசின விதம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்ததும்மா.. அப்படியே அவரைப் பார்க்கப் பார்க்க, அவரைப் பத்தி கேட்கக் கேட்க, என் மனசு அவர்கிட்ட போக ஆரம்பிசிடுச்சும்மா.

ஆனா.. என் மேல அவருக்கு எந்த ஈர்ப்பும் இல்லன்னு தெரிஞ்ச போது, நானும் மொதல்ல யோசிச்சேன் தான்ம்மா… ஆனா… மனசு கேட்க மாட்டேங்குது… ரொம்ப நேர்மையானவர்மா… குற்றவாளிங்க தப்பிக்க கூடாதுன்னு அவருக்கு ஒரு வெறியே இருக்கும்மா… அதுவும் தவிர… என்கிட்டே எப்பவும் ஏட்டிக்கு போட்டியா அவர் பேசறதுன்னு எனக்கு அவர்கிட்ட எல்லாமே பிடிச்சிருக்கு.. நான் என்ன செய்ய?” பரிதாபமாக கேட்ட மகளைப் பார்த்த சாவித்திரி செய்வதறியாது திகைத்து,

“உன்னைப் பத்தி யோசிக்காதவனை நினைச்சு நீ காலம் பூரா இப்படியே இருக்கப் போறியா ப்ரியா?” என கேட்கவும்,  

“இல்லம்மா… அவருக்கும் என்னை பிடிச்சிருக்கும்மா… அதை அவர் சீக்கிரமே ஒத்துக்குவார்…” நம்பிக்கையாக ப்ரியா சொல்வதை கேட்டு, ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்ட சாவித்திரி,

“இதுவரை உன்னோட இஷ்டத்துக்கு எல்லாம் செய்தாச்சு… இப்போவும் எனக்கு முழு சம்மதம் இல்லைன்னாலும், இதுவரை உங்க இஷ்டத்துக்கு மறுப்பு சொன்னது இல்ல..” என்று விட்டுக் கொடுக்கவும், ப்ரியா அவரது கழுத்தை கட்டிக்கொள்ள,

“ஆனா ஒரு கண்டிஷன்…” என்று சாவித்திரி நிறுத்தினார்.

“என்னம்மா?” ப்ரியா சிறிது பயத்துடன் பார்க்க,

“கல்யாணத்துக்கு சம்பந்தம் பேச அவங்க தான் மொதல்ல வரணும்… அந்தப் பையன் வந்து என்கிட்டே மொதல்ல பேசணும்… அப்பறம் தான் நான் என்னோட முழு சம்மதத்தை தருவேன்…” சாவித்திரி சொன்னதைக் கேட்ட ப்ரியா அமைதியாக எழுந்து, தனது அறைக்குள் சென்றாள்.

14 COMMENTS

 1. Hayyo Priya, Arrack shop=kku poravan ellam kudikaaran illamma
  ithai nee eppo purunchukka pora?
  ithukku vera thaniyaga Dev=kitta unakku irukku Priya
  ha ha
  very nice ud Ramya chellam
  waiting for next ud paa

 2. Sry dr late a tha padikka mudinjuthu sema ud …. dev um sari priyaum sari yettiku pottiya irukanga pawam ram appavi ha ha ha priya aniyayathuku nallavala irukale chutti vaalu lv kuda ammata epdilm solra ha ha semma kalaklm ud dear

LEAVE A REPLY