SHARE
“என்ன தேவ்? இந்த நேரத்துல எங்க கிளம்ப தயாரா இருக்க?” என்று கேட்டுக் கொண்டே ஒரு டம்ப்ளரில் பாலை எடுத்துக் கொண்டு பார்வதி வர, அப்பொழுது தான், ‘தான் எங்கே கிளம்பினோம்?’ என்றே புரியாமல் யோசித்தவன், சட்டென்று நின்று, தனது தாயைப் பார்க்காமல், தனது முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“என்ன தேவ்? என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” அவர் கேட்க,
“இல்லம்மா… ஒண்ணும் இல்ல… கொஞ்சம் வேலை இருக்கு… வெளிய போயிட்டு வர்ரேன்…” என்று சமாளித்தவன், அவரது கையில் இருந்த பாலைப் பார்த்து,
“எனக்கு பசிக்கலம்மா… நான் வெளிய போயிட்டு வரேன்…” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறினான்.
வெளியில் சென்று வண்டியின் அருகே நின்றவன், அப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த ப்ரியாவின் குரலில் தன்னை மறந்து நின்றான்.
“இப்போ சொல்லு… இப்போ எதுக்கு அழுத?” என்று சாவித்திரி பேச்சைத் தொடங்கவும்,
“ஒண்ணுமே இல்லம்மா…” வாயில் எதையோ வைத்துக் கொண்டு சொல்வதைக் கேட்டவனுக்கு சிரிப்பு வந்தது.
“மதியம் அந்த வெட்டு வெட்டிட்டு ராத்திரி எப்படி அதுக்குள்ள பசிக்கும்?” தனக்குள் அவளை கேலி செய்தவன்,
“அடிப்பாவி… இப்போவும் நல்லா சாப்பிடறா போல இருக்கே…” என்று நினைத்துக் கொண்டு, அவள் பேசுவதை கேட்கத் தொடங்கினான்.
“உண்மையை சொல்லு ப்ரியா… எதுக்கு நீ அப்படி அழுத? சும்மான்னு சொல்லாதே… நீ சாதாரணமா அழறவ கிடையாதுன்னு எங்களுக்குத் தெரியும்…” சூர்யாவின் கண்டிப்பான குரலில்,
“அது… நான்… தேவ் சொன்னதைக் கேட்டு மொத்தமா வேலையில மூழ்கி போய் உங்களை எல்லாம் மறந்துட்டேன்னு கொஞ்சம் கில்ட்டியா போயிடுச்சு சூர்யா… வேற ஒண்ணும் இல்ல. அவரோட ஒரு வார்த்தை என்னை இப்படியா பண்ணும்ன்னு ஒரு மாதிரிப் போச்சு. அது தான் எனக்கேத் தெரியாம அழுகை வந்துடுச்சு…” என்று உண்மையைக் கூறியவள், உணவை உண்ணத் துவங்க, தேவ்வின் இதழ்களோ சிரிப்பை தத்தெடுத்து, பின்பு அதிர்ச்சியை பூசிக் கொண்டது.
“என்னது? என்னைப் பத்தி அவங்க வீட்ல எல்லாம் தெரியுமா? எப்படி? அவ சொல்றதைப் பார்த்தா… என்னை லவ் பண்றது போல இல்ல சொல்லி இருக்கா? அவளுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா?” தேவ் நினைத்துக் கொண்டிருக்க,  
அதே நேரம் அவனது செல்போன் இசைக்கவும், வேகமாக அதை உயிர்ப்பித்தவன், “ஹலோ விஷால்… என்ன செய்யற?” என்று உற்சாகமாகக் கேட்க,
“என்ன தேவ்… குரல்ல ஒரே சந்தோஷ காத்து அடிக்குது.” விஷால் கிண்டல் செய்யவும்,
“ஒண்ணும் இல்ல விஷால். ப்ரியாவோட மைக்ரோபோன்ஸ் எல்லாம் ஒழுங்கா வொர்க் பண்ணுதான்னு டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…” தேவ்வின் பதிலிலேயே விஷால் சிரித்துக் கொண்டு,
“சரி அதை விடு. நீ நல்லா டெஸ்ட் பண்ணு. ஆனாலும் அவ வீட்டுல இருக்கும்போது டெஸ்ட் பண்றது ரொம்ப ஓவர் தேவ். அவளுக்கு ப்ரைவசியே இருக்காது.” என்று நக்கலடித்தவன்,
“இப்போ நீ கீழ்பாக்கம் பக்கம் கொஞ்சம் வா… நானும் அங்க தான் இருக்கேன்.. இங்க ஏதோ தப்பு நடக்கறதா நம்ம ஆளு வந்து சொன்னான்… தேவைன்னா நாம போலீசை கூப்பிட்டுக்கலாம்.” என்று விஷால் சொல்லவும்,
“இதோ வந்துட்டேன்…” அவன் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான்.
அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவர்கள், எந்தத் துப்பும் கிடைக்காமல், அவர்களுக்குத் தகவல் சொன்னவனைப் பிடித்துக் கேட்க,
“இங்க தான் சார் இத்தனை நேரம் இருந்தாங்க.. நீங்க வர்ரதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் முன்ன தான், அவங்க வாங்கி குடிச்சிட்டு இருந்த சரக்கை எல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு, அறக்க பறக்க கிளம்பி போனாங்க… நிஜமாவே அந்த சரக்கு கடையில தான் இருந்தாங்க சார்… நீங்க வர்ரதை யாருக்காவது சொன்னீங்களா?” தகவல் சொன்னவன் கேட்கவும், விஷாலும் தேவ்வும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஏன் விஷால்? ஒருவேளை நீ பேசறதை நம்ம ஆபீஸ்ல யாராவது கேட்டு இருப்பாங்களோ?” தேவ் சந்தேகத்துடன் கேட்க,
“இல்ல தேவ்… நான் இவன் சொன்னதைக் கேட்டு நேரா இங்க வந்துட்டு தான் உனக்கு போன் செய்தேன். நான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போற வழியில தானே இவன் எனக்கு கால் செய்தான்.” விஷால் தேவ்வின் பார்வை புரிந்து சொல்லவும், தேவ் அந்த இடத்தை சுற்றி பார்வையை ஓட்டினான்.
“நீ எந்த இடத்துல இருந்து பேசின விஷால்?” தேவ் கேட்க,
“அதோ அந்த இடத்துல இருந்து தான் பேசினேன்…” விஷால் சொல்வதைக் கேட்டவன், அங்கு நின்றுக் கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்து, யோசனையுடன் விஷாலுக்கு கண்ணைக் காட்டி,
“அவனுங்க இங்க இருந்து தப்பிச்சிட்டானுங்க போல… சரி… நாம கிளம்பலாம் விஷால். செக் போஸ்ட் போட சொல்லலாம்” என்று விஷாலிடம் கூறியவன்,
“நீங்க இன்னும் வேற ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க. நாங்க கிளம்பறோம்.” என்று அங்கிருந்து நகர்ந்து வண்டியை எடுக்க, தேவ்வைத் தொடர்ந்து விஷாலும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
சிறிது தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திய தேவ், விஷாலும் அவன் அருகில் வந்து நிறுத்தவும், “விஷால்… ரெண்டு விஷயம் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கு…” என்று திடீரென்று சொல்லவும்,
“ஹ்ம்ம்… நீ யோசனையோட பார்க்கும் போதே நானும் யோசிச்சேன் தேவ்… ஒருவேளை நமக்கு தகவல் சொல்றது போல சொல்லிட்டு, நாம வரத் தகவல அவங்களுக்கும் சொல்லி இருப்பானோ?” விஷால் யோசனையுடன் கேட்க,
“அது மட்டும் இல்ல விஷால்.. நீ என்கிட்டே சொன்ன விஷயத்தை எவனாவது கேட்டு இருக்கலாம். அதைக் கேட்டுக் கூட அவங்க தப்பிச்சுப் போக சான்ஸ் அதிகம் இருக்கு. நீ பேசின இடத்துக்கு பின்னால நிறைய வண்டிகள் நின்னுட்டு இருந்தது. அதை எடுக்க வந்தவனோ, இல்ல வச்சிட்டு போறவனோ கேட்டு இருக்கலாம்.” என்ற தேவ்,
“நீ அப்படி பப்ளிக்ல நின்னு… அதுவும் பார்கிங் கிட்ட நின்னு சொல்லி இருக்கக் கூடாது.. எனக்கு மெசேஜ் செய்திருக்கலாம். உன் குரல் ஏற்கனவே ரொம்ப சவுண்டா இருக்கும். இதுல நீ வேற என்னை கிண்டல் செய்துட்டு பேசத் தொடங்கின. அப்போ போறவன் வர்ரவனுக்கு எல்லாம் உன் குரல் கேட்டுத் தான் இருக்கும்.” என்று குறையாக முடிக்க, விஷால் தலை குனிந்து நின்றான்.
“எனக்கு எல்லாத்தையும் விட என்னோட ட்யூட்டி ரொம்ப முக்கியம் விஷால்..” என்று சொன்னவன், “அது ப்ரியாவா இருந்தாலும் கூட” என்று அழுத்தமாகச் சொல்ல, விஷால் அவனைப் பார்த்து முறைத்தான்.
“எதுக்கு முறைக்கிற?” தேவ்வின் கேள்விக்கு,
“அவளை இதுல நீ இழுத்து விட்டு இருக்கங்கறது உன் மனசுல நினைவிருக்கட்டும்… அவ ஏதாவது ஆபத்துல மாட்டினா… உன்னை நான் சும்மா விட மாட்டேன்…” என்று விஷால் கோபமாகச் சொல்ல, தேவ் புன்னகையுடன் தனது சிறிய அளவிலான ட்ரான்ஸ்மிட்டரை தட்டிக் காட்ட, விஷால் தலையில் அடித்துக் கொண்டு வண்டியை எடுக்க, அதை வைத்து தினமும் அவளது குரலைக் கேட்கும், அவளை விட்டு தள்ளி இருந்தே பாதுக்காப்பு அளிக்கும் சந்தோஷத்தில் தேவ் வண்டியை எடுத்துச் சென்றான்.
மறுநாள் காலை பத்திரிக்கை அலுவலகம் மிகவும் பரபரப்பாக காட்சியளித்தது.. ப்ரியா உள்ளே நுழையும் போதே அங்கிருந்தவர்கள் அவளைப் பார்த்த பார்வையில் குழம்பியவள், நேராக தனது இடத்திற்குச் சென்று அமர்ந்தாள்.
“ப்ரியா… நீ வந்த உடனே விஸ் உன்னை வந்து பார்க்கச் சொன்னாரு” அவளுடன் பணிபுரியும் தோழி வந்து சொல்லவும்,  
“என்ன தாம்ஸ்? என்ன எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு இருக்காங்க?” இயல்பாக ப்ரியா கேட்க,
“நீ என்கிட்டே கேட்டதுக்கு பதில் சொல்லத் தான் உன்னை விஸ் கூப்பிடறார். உள்ள போய் பாரு…” என்று பட்டும்படாமலும் பதில் சொல்லியவள், தனது இடத்தில் அமர்ந்து வேலையைத் தொடங்கவும், தோளைக் குலுக்கிக் கொண்ட ப்ரியா, விஸ்வகோபியை பார்க்க அவரது அறைக்குச் சென்றாள்.
அந்த அறையில் அவர் இருந்த கோலமும், அவரது டேபிளில் இருந்த பேப்பர்கள் தரையில் சிதறிக் கிடந்ததையும், அதை ஆபீஸ்பாய் எடுத்து வைத்துக் கொண்டிருப்பதையும் பார்த்தவள், பதறி அவரின் அருகே செல்ல, விஸ்வகோபியோ, தலையில் கை வைத்துக் கொண்டிருந்தார்.
“விஸ்… என்னாச்சு? ஏன் இப்படி எல்லாம் ஆகி இருக்கு?” பதட்டமாக அவள் கேட்க,
“ஹ்ம்ம்… யாருன்னே தெரியல ப்ரியா. முகமூடி போட்டுக்கிட்டு நாலு பேர் வந்தாங்க. வந்தவங்க… நீ போட்ட நியூசை சுட்டிக்காட்டி, இதை மொதல்ல எடுத்துட்டு, இனிமே இந்த மாதிரி நியூஸ் போடறதை எல்லாம் நிறுத்தனும்னு கத்தினாங்க… நான் முடியாதுன்னு சொன்னதுக்குத் தான் இந்த ரணகளம்… என் சட்டையை பிடிச்சு ஒருத்தன் அப்படியே என்னைத் தூக்கிட்டான். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள நீ டெலீட் செய்யலைன்னா நாளைக்கு இந்தப் பேப்பர்கள் எல்லாம் சிதறி இருக்கற மாதிரி என் கையும் காலும் சிதறிடும்ன்னு மிரட்டிட்டு போயிருக்காங்க…” விஸ்வகோபி சொல்லவும், முதலில் அதிர்ச்சியாக காட்சியளிதவள், பின்பு மெல்ல புன்னகை புரிந்தாள்.  
“சார்… உங்களுக்கு அவங்க எப்படி இருந்தாங்கன்னு சொல்ல முடியுமா? முகமூடி போட்டு இருந்தாங்க சரி… அவங்க பிசிக் எப்படி இருந்தது? அவங்க நம்ம தமிழ் ஆளுங்களா இல்ல வேற மாநிலத்து ஆளுங்களா?” படபடவென்று ப்ரியா கேள்வி கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்த விஸ்வகோபி, அவள் கேட்கும் கேள்விகள் எதற்காக என்று புரிந்து,   
“அவங்க ஹிந்தில தான் பேசிட்டு இருந்தாங்க ப்ரியா. அதுல இன்னும் ஒரு விஷயம். அவங்க கண்டிப்பா நீ போடற நியூசை எல்லாம் படிக்கறாங்க… அதும் சுடச் சுட.. நீ வேணா இப்போ ஒரு நியூஸ் போட்டுப்பாரு… உடனே அவங்க கிட்ட இருந்து ஏதாவது ஒரு ரியாக்ஷன் வரும்…” என்று விஸ்வகோபியும் படபடப்பாகச் சொல்ல, ப்ரியா அவரின் எதிரில் இருந்த சேரில் அமர்ந்தாள்.
“விஸ்… என்ன இது? நேத்து நைட் போட்டு இன்னைக்கு காலையில வந்து மிரட்டி இருக்காங்க… அப்படி ஒண்ணும் நான் பெருசா போட்டுடலையே… அவங்களைப் பற்றின… இதுவரை அவங்க கடத்தி காணாம போன பொண்ணுங்களைப் பத்தி வரை தானே போட்டு இருக்கேன்.” ப்ரியா சந்தேகமாக இழுக்க, அவளது கண்களில் மின்னிக் கொண்டிருந்த ஆர்வம் புரிந்த விஸ்வகோபி,
“வேண்டாம் ப்ரியா… இந்த நியூசை இத்தோட நிறுத்திடலாம். எம்.டி. யும் அது தான் சொல்றாங்க. ஆபீசை உடைச்சா கூட பரவால்ல… உனக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாதுன்னு சொல்றார். நீ வேற எந்த டாப்பிக்கையாவது எடுத்து நியூஸ் போடு..” என்று வேதனையாக அவர் சொல்ல, ப்ரியா எழுந்து நின்றாள்.
“சாரி விஸ்… நீங்க சொன்னது போல இதை எல்லாம் அவ்வளவு சாதாரணமா விட முடியாது… நேத்து நைட்… அதை நான் போடும்போதே மணி ஒன்பதரைக்கு மேல இருக்கும்… அப்படி அது போட்டு ஒரு நாள்… இருபத்தி நாலு மணி நேரம் கூட ஆகலை… அவங்க இங்க வந்து நிக்கறாங்கன்னா… விஸ்… உங்களுக்கு புரியல… அவங்க ரொம்ப பயங்கரமானவங்க… இதை இப்படியே விடலாமா? நான் கண்டிப்பா எழுதத் தான் போறேன்…” அவள் விடாப்பிடியாக சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த அவளது எம்.டி. சகாயராஜ்,
“அப்போ அதை நீ நம்ம சைட்ல போட முடியாது ப்ரியா. எனக்கு பத்திரிக்கை ரேட்டிங்கை விட, உங்களோட உயிர் மேல அக்கறை அதிகம் இருக்கு…” என்று சற்று காட்டமாகவே சொல்லவும், ப்ரியா சகாயராஜை வெறித்துப் பார்த்தாள்.
“ஹ்ம்ம்… சொல்லறதை செய். போய் நேத்து போட்டது எல்லாத்தையும் தூக்கிட்டு வேற வேலையைப் பாரு. இன்னைக்கு புரசைவாக்கத்துல ஒரு மகளிர் சங்கம், மகளிர் தினத்தை ஒட்டி நிறைய சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்காங்க…அங்க போய் கவர் பண்ணு…” என்று சொல்லவும்,
“நான் ஒருவாரம் லீவ் சார்…” என்று ப்ரியா அறிவிக்க, அங்கிருந்த மற்ற இருவருமே அதிர்ந்தனர்.
“என்ன சொல்ற?” சகாயராஜ் கேட்க,
“எனக்கு இந்த கேஸை பத்தி படிக்கும்போதே அப்படியே பத்திக்கிட்டு வருது. இந்த சின்னப் பொண்ணுங்களை மீட்க முடியுதோ என்னவோ. ஆனா… என்னோட நியூஸ் வெளிய வந்து, இனிமே பொண்ணுங்களுக்கு பாதுக்காப்பு அதிகமா தான் இருக்கனும். அந்த ஆளுங்களோட முகத்திரையை கிழிக்காம நான் விட மாட்டேன். நான் இதை முடிச்சிட்டு ஒரு பெரிய ரிப்போர்ட்டாவே தரேன். அதை நீங்க போடறதுன்னா போடுங்க.. இல்லையா… நான் பார்த்துக்கறேன்.” என்றவள், அவர்கள் இருவரும் அசந்து நிற்கும் வேலையிலேயே வெளியில் செல்ல,
அவளது மொபைலில் இருந்த மைக்ரோபோன் வாயிலாக கேட்டுக் கொண்டிருந்த தேவ்விற்கு சந்தோஷம் பொங்கி வழிந்தது.

15 COMMENTS

  1. hi mam nice update but priyaku endha aabadhum vara kudadhunu dev kita sollidunga ok va…ava pesuradha ketu sirichitu avala kottai vittuta poraru

  2. Wow … very nice update . Kathai romba interesting ah poguthu . Hero , heroine rendu perumey kaadhalai vida kadamaiyai thaan perisa nineikkuraanga . I love it .
    Keep rocking lovelies 👍👍👍.
    Super Ramya .

LEAVE A REPLY