SHARE

 

“அம்மா… என்ன சொல்றீங்க? நான் இந்த வேலையை விடறதா?”     ப்ரியா அதிர்ச்சியுடன் கேட்க,

“ஆமாடி… நீ வேலையை விடற வரை என்கிட்ட பேசாதே… இப்படித் தான் வம்பை விலை கொடுத்து வாங்கிட்டு வருவியா? எல்லாத்துலையும் அவசரம்… ஏதோ இவர் கொஞ்சம் நல்லவரா போனதுனால இதோட மிரட்டிட்டு போறார்… தப்பானவனா இருந்தா… இந்நேரம் உன் கதி??” சாவித்திரி நடுக்கத்துடன் கேட்க, ப்ரியாவின் கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் சிந்தியது.

“இப்போ எதுக்குடி அழுதுட்டு நிக்கற?” சாவித்திரி அவளை அதட்ட, வாயில் வரையே தாண்டி இருந்த தேவ்வின் காதுகளில் இவை விழ, அவனது நடையின் வேகம் மட்டுப்பட்டது.

‘ஹையோ.. இந்த ராட்சசி இல்லாத ப்ரெஸ் மீட்டா?’ அவனது மனம் அந்த ஒருவார்த்தையில் திடுக்கிட்டது.

‘ச்சே… என்னோட கோபம் அவளை இவ்வளவு பாதிக்குதே… தேவ்.. உன்னை என்ன செய்யறது? பாவம் அவ.. அழறா..’ சோபாவில் சாய்ந்து கண்ணீர் விட்டவளை அணைத்து ஆறுதல் சொல்ல அவனது மனம் தவித்தது. தனது கையை இறுக மூடிக் கொண்டு அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். 

“எனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியும் தானேம்மா…” ப்ரியா தேம்பிக் கொண்டே கேட்க,

“தெரியும்… ஆனா.. இனிமே வேண்டாம்…” சாவித்திரி திட்டவட்டமாகச் சொல்லிவிட, ப்ரியா செய்வதறியாது திகைத்து நின்றாள்.   

தனது தாயை சமாதானம் செய்யும் வழியை யோசித்தவள், கை எரிச்சல் நினைவு வர, முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு, “அம்மா… கையில சூடு பட்டுடுச்சும்மா… ரொம்ப எரியுது…” தொண்டையடைக்கச் சொல்லவும், அப்பொழுது தான் அவளது கையை கவனித்தவர்,

“பாரு.. நீ இழுத்து விட்டு இருக்கறதைப் பாரு…” கடிந்துக் கொண்டே அவளுக்கு மருந்தைப் போட, அதை வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவ் மிகவும் நொந்து போனான்.

“ச்சே.. என்ன மனுஷன்டா நீ? கை எப்படி இருக்குப் பாரு..” தன்னை நினைத்தே எரிச்சல் தோன்ற, தலையைக் கோதிக் கொண்டு, காரை எடுக்கும் நேரம், சூர்யாவின் வண்டி வீட்டின் உள்ளே நுழைந்தது.

சூர்யாவை பார்த்த தேவ், அதற்கு மேல் நிற்காமல் வண்டியை கிளப்பிக் கொண்டு செல்ல, “யார் நம்ம வீட்டுக்கு கார்ல வந்துட்டு போறாங்க?” என்று நினைத்துக் கொண்டே சூர்யா, தேவ்வைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய, தனது தங்கையின் கையில் மருந்தையும், அவளது கண்களில் கண்ணீரையும் பார்த்தவன்,

“என்னாச்சு? அவன் ஏதாவது ரௌடியா? நீ அவனைப் பத்தி நியூஸ் போட்டதுனால உன்னை வந்து தொல்லை பண்ணிட்டு போறானா? சொல்லு ப்ரியா… நாம போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்…” பதட்டமாகக் கேட்க, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

“ஒரு சிபிஐ ஆபிசரைப் பத்தி போலீஸ்கிட்டயே கம்ப்ளைன்ட் பண்ணுவியா? ஆனாலும் உனக்கு வீரம் ரொம்ப அதிகம் தான்…” அந்த நிலையிலும் அவனை கிண்டல் செய்யவும், சூர்யா புரியாமல் முழிக்க, வேகமாக சாவித்திரி அனைத்தையும் சொல்லி முடித்தார்.

“என்ன ப்ரியா இது? இப்படி முரடனா இருக்கறவனை உனக்கு எப்படி பிடிச்சது? அம்மா சொல்றது போல நீ வேலைக்குப் போக வேண்டாம்…” சூர்யாவும் திட்டவட்டமாகச் சொல்லி விடவும்,

“உனக்கு என்ன லூசு பிடிச்சிருக்கா? எனக்கு ஒண்ணும் இல்ல சூர்யா… அவர் நிஜமாவே ரொம்ப நல்லவர். அம்மா கால்ல எல்லாம் விழுந்து கும்பிட்டு சாரி கேட்டுட்டு போனார் தெரியுமா? அது அவங்க வழக்கமாம்…” என்று சொல்லிக் கொண்டிருந்தவள்,

“அம்மா… என்னை ஆசிர்வாதம் செய்ங்க…” என்று சாவித்திரியின் காலில் விழ, சாவித்திரி பதறி பின்னால் நகர்ந்தார்.

“அம்மா… இப்படி தள்ளி எல்லாம் போகக் கூடாது… என்னை ப்ளஸ் பண்ணும்..ம்..மா…” அவள் சொல்வதைக் கேட்டவர், சமையலறைக்கு வேகமாக நகர்ந்துவிட,

“நீ கூட எனக்கு பெரியவன் தானே…” ப்ரியா கேட்கும் பொழுதே அவள் செய்யப் போவது என்னவென்று புரிந்த சூர்யா…

“நான் டிரஸ் மாத்திட்டு வரேன்…” என்று அவனது அறைக்குள் புகுந்துக் கொள்ள, ப்ரியா சிரிப்பை அடக்கிக் கொண்டு தனது அறைக்குச் செல்ல, அதில் தெரிந்த தேவ்வின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்துப் போனாள்.

“ஹையோ… சிஸ்டமை அப்படியே வச்சிருக்கேனே… இதைப் பார்த்து இருப்பாரோ? பார்த்திருந்தா என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பார்?” என்று அவள் நினைத்துக் கொண்டு, இன்று அவன் தனக்கு மிக அருகில் நின்றதும், ஊதிக் காட்டியதும், அவன் மூச்சு காற்று தன் மேல் பட்டு சிலிர்க்க வைத்ததையும் நினைத்துக் கொண்டவள், மொத்தமாக தேவ்வின் நினைவுகளில் விருப்பமாக சிக்கிக் கொண்டாள்.     

சிறிது நேரத்திலேயே, “ப்ரியா… சாப்பிட வாம்மா… டைம் ஆச்சு…” சூர்யா அழைக்கவும், உணவு மேஜைக்கு சென்றவளை, மற்ற இருவரும் பிடித்துக் கொண்டனர்.

அவள் வேலைக்குச் செல்லக் கூடாது என்பதில் இருவருமே உறுதியாக இருக்க, “அது நாளைக்குக் கதை நாளைக்குப் பார்த்துக்கலாம்…” என்று மனதில் நினைத்துக் கொண்டவள், எதுவும் பேசாமல் உணவருந்திவிட்டு, தனது அறைக்குச் சென்று, தாழிட்டுக் கொண்டாள்.

“கொஞ்ச நாள்ம்மா… எல்லாம் சரியாய் போயிடும்… அவளோட பிடிவாதம் நமக்குத் தெரியாதா?” சூர்யா சாவித்திரிக்கு சமாதானம் சொல்ல, மகளின் பிடிவாதம் அறிந்தவர், நாளை என்ன பூதம் கிளம்பப் போகிறதோ என்று நினைத்துக் கொண்டு, வேலைகளை முடிக்கத் தொடங்கினார்.

ப்ரியாவின் வீட்டில் இருந்து கிளம்பியதும், வேறெங்கும் செல்லப் பிடிக்காமல், நேராக வீட்டிற்கு வந்த தேவ்வைப் பார்த்த அனைவருமே சந்தோஷ கடலில் மிதந்தனர். குறிப்பாக பார்வதி அவன் சீக்கிரம் வரவும், காலையில் தான் சொன்னதற்காகத் தான் சீக்கிரம் வந்திருக்கிறான் என்று மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்கத் தொடங்கினார்.

“தேவ்… சீக்கிரம் போய் டிரஸ்சை மாத்திட்டு வா…” பார்வதி சொல்லவும், சம்மதமாக தலையசைத்து, நேராக அறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் விழுந்தவனின் எண்ணம் முழுவதும் ப்ரியாவின் அழுத தோற்றத்திலேயே சுத்திக் கொண்டிருந்தது.

அதுவும் சாவித்திரி ‘வேலைக்குச் செல்லக் கூடாது’ என்று சொன்னதில் அவளது முகத்தில் தெரிந்த திகைப்பு, அவனை மிகவும் வாட்டியது. அவன் சென்னைக்கு மாற்றலாகி வந்த நாளில் இருந்தே, அறிமுகமாகி இருந்த ப்ரியாவின் துடுக்குத் தனம் அவனை எப்பொழுதும் ஈர்க்கும்.

‘நீ யாராக இருந்தால் எனக்கென்ன?’ என்ற அவளது தைரியமும், அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளிலும் இருக்கும் கொக்கிகளையும் அறிந்துக் கொண்டவன் தான் தேவ்.. அவளை சந்திக்கும் போதெல்லாம் எப்படியும் சண்டையில் தான் முடியும். அப்பொழுது அவளது முகத்தில் தோன்றும் கோபச் சிவப்பையும், கண்களின் மின்னலையும் பார்க்கவே ஒவ்வொரு பிரஸ் மீட்டையும் ஆவலாக எதிர்ப்பார்ப்பான்.

சென்னையில் மழை விடாமல் கொட்டிய நாட்களிலும் சரி, நேரம் காலம் பாராமல், எல்லா இடத்திற்கும் நேரில் சென்று அவள் சேகரித்து வெளியிட்ட விஷயங்களும் சரி, தனது ட்விட்டர் பக்கத்தில் நேரில் பார்க்கும் காட்சிகளைப் பற்றியும், அந்த ஏரியாவின் படத்துடன் அவள் வெளியிட்டு இருந்த புகைப்படங்களும், பல உறவினர்கள் தங்கள் உறவினர்கள் பற்றி உண்மையான செய்தியை அறிந்துக் கொள்ள உதவியதும் அவனை மகிழ்ச்சி கொள்ள வைத்தது.

“இது போன்ற பத்திரிக்கையாளர்கள் நம் நாட்டிற்குத் தேவை தான்… அப்போ தான் தப்பு நடக்கறதும் குறையும்” என்று முணுமுணுத்து,

“இனிமே எந்த நியூஸ் போடறதுக்கு முன்னையும் நல்லா யோசிச்சு தான் போடணும்னு நாளைக்கு அவகிட்ட போய் சொல்லிடலாம்… அவளும் கேட்டுகுவா… நல்ல பொண்ணு தான்.. ஸ்..வீ..ட்..” அவளது நினைவுகளுடன் எதிரில் இருந்த சுவற்றை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவன் நெருங்கிய பொழுது அவளது கண்கள் விரிந்ததும், அவளது அருகாமையும் நினைவு வர, உதட்டில் புன்னகை விரிய, கனவில் மிதந்துக் கொண்டிருந்தான்.

“தேவ்..” அந்தக் குரலில் கலைந்தவன், கதவின் அருகேவலே வடிவாக பார்வதி நிற்பதைப் பார்த்து, குழம்பிப் போனான்.

“என்னம்மா…” ஹிந்தியில் அவன் கேட்க,

“ஒண்ணும் இல்ல தேவ்… அப்பா உன் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசணும்னு சொன்னாரே… நாம பேச போகலாமா?” ஆவலாக அவர் கேட்க,

“இதை எப்படி மறந்தேன்?” என்று மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டவன்,

“ஒரு ரெண்டு நிமிஷம் இருங்க… நான் முகத்தை கழுவிட்டு வரேன்…” என்றவன், திரும்பி வரும் வரை பார்வதி அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார்.

அவரது ஆவல் புரிந்து, “வாங்க போகலாம்… நானும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்….” என்றவன், வெளியில் செல்ல, பார்வதி அவனைப் பின்தொடர்ந்தார்.

நேராக தனது சித்தப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த தந்தையை நெருங்கியவன், அவர் ஆரம்பிப்பதற்கு முன்பே, “எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேண்டாம்பா.. நான் சொல்லும் போது கல்யாணப் பேச்சை எடுங்க… அது போதும்… எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” வேகமாக சொல்லிவிட்டு, அவரது எந்த ஒரு வாக்குவாதத்தையும் கேட்கும் மனநிலையில் அல்லாமல், மீண்டும் அறைக்கே வந்து புகுந்துக் கொள்ள, அவனது தந்தையின் குரல் அவனது அறை வரையிலுமே எட்டியது.

“அவனுக்கு வயசாகிட்டு போகுது… இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னா எப்போ செய்துக்கப் போறான்? எல்லாம் நீ கொடுக்கற இடம்…” பார்வதியை சத்தமிட்டுக் கொண்டிருந்தவரின் குரலைக் கேட்டவனுக்கு, நெஞ்சில் ஏதோ சுமை ஏறியது போல இருந்தது.

“தேவ் சாப்பிட வா… எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க” அந்த வீட்டில் இருந்த மற்றொரு பெண்மணி அழைக்க, தேவ் அமைதியாக எழுந்து சென்று உணவுண்ண அமர, அனைவருமே அமைதியாக உண்டனர்.

“இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுக்கு, காதல் அப்படி இப்படின்னு ஏதாவது காரணம் இருக்கா?” அவனது தந்தை பேச்சை மீண்டும் தொடங்க,

“அப்படி எல்லாம் இல்ல….” என்று இழுத்தவன்,

“ஆனா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். எனக்கு டைம் வேணும்…” என்ற தேவ், அவசரமாக சாப்பிட்டு அறைக்கு வந்து மீண்டும் புகுந்துக் கொள்ள, குற்றவுணர்வு அவனைப் பிடித்து ஆட்டியது.

டிட்பிட் செய்திகளை சுவாரஸ்யமாக படிக்கும் அவனது நண்பன் போன் செய்து, ‘உனக்கு எப்போ இருந்து இந்தப் பழக்கம் தேவ்… சொல்லவே இல்ல…’ என்று கிண்டல் செய்யவும், அந்த தளத்திற்குச் சென்று பார்த்த தேவிற்கு கோபம் பொங்கியது. நேராக ப்ரியாவை பிடித்து உலுக்க வேண்டி அவளது வீட்டிற்கு சென்று நின்றான்.

யோசனை நீண்டுக் கொண்டே போக, சட்டென்று தேவின் மனதினில் மின்னல் வெட்டியது… ‘அவ சிஸ்டம் ஓபன் பண்ணும்போது அதுல என்னோட போட்டோ தானே இருந்தது…’ கண்களை மூடி, மனதை ஒருநிலைப் படுத்தியவன் மீண்டும் நன்றாக யோசிக்க, அது தான் தான் என்பதை அவன் உறுதி படுத்திக்கொண்டான்.   

“என்னோட போட்டோ இவளுக்கு எப்படி கிடைச்சது? அதை வச்சிட்டு இவ என்ன செய்யறா?” யோசிக்கும் போதே, அவனது இதழ்களில் புன்னகையும், ப்ரியாவின் நிழலாக கூடவே தொடரும் ராமின் நினைவும் வந்தது.

“ஹ்ம்ம்.. அதை மட்டும் எடுத்து வச்சு நீ என்ன செய்யப் போற? நிஜம் கூட சண்டை போட்டுட்டு, நிழல் கூட டூயட் பாடறியோ?” என்று மனதினில் பேசிக் கொண்டிருந்தவனுக்கு அவளது கைக் காயம் நினைவிற்கு வந்தது.

“ச்சே.. எப்படி சடனா யாருன்னே தெரியாதவங்க வீட்ல இப்படி எல்லாம் புகுந்து பண்ணிட்டு வந்திருக்கேன். அவளோட அம்மா என்னைப் பத்தி என்ன நினைச்சு இருப்பாங்க? அவ செய்தது தப்புனாலும், அவ கிட்ட கை நீட்ட எனக்கு இப்போ என்ன உரிமை இருக்கு?  

ரொம்ப முரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்… இதுல அவங்க அம்மா வேற வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களே… நிஜமாவே அவளை அனுப்ப மாட்டாங்களா? அவளை நான் எப்படி பார்க்கறது?” மனதினில் மருகி,

“நாளைக்கு நேரா ஆபீஸ்க்கே போய் பார்த்துட்டு வந்துட வேண்டியது தான்…” என்று முடிவு செய்துக் கொண்ட பிறகே, அவனால் சிறிது உறங்க முடிந்தது.

காலையில் எழுந்து வழக்கம் போல சாவித்திரி, கந்த சஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டே வீட்டு வேலைகளில் ஈடுபட, சூர்யா பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.

அன்று சூர்யாவின் கண்கள் பேப்பரில் பதிந்ததை விட, அடைத்திருந்த ப்ரியாவின் அறையின் கதவின் மீதே படிந்திருந்தது. சாவித்திரியும் தனது வழக்கமான பணிகளை செய்தாலும், எப்பொழுதும் ப்ரியாவின் அறையில் இருந்து கேட்கும் பாட்டுச் சத்தம் கேட்காமல் அவருக்கு என்னவோ போல் இருந்தது.

கண்களாலேயே அவனிடம் கதவைத் தட்டச் சொல்லி சாவித்திரி சொல்ல, “இல்ல… வேண்டாம்மா… தூங்கிட்டு இருக்காளா இருக்கும்… அவளால ரொம்ப நேரம் எல்லாம் அந்த ரூம்ல இருக்க முடியாது…” என்று ஆறுதல் சொல்லியவன், பேப்பரில் கவனத்தைப் பதிக்க முயல, அது அவனுக்கும் முடியாமல் போனது.

கடிகாரத்தின் முட்கள் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர, சூர்யா அலுவலகத்திற்கு தயாராகி வந்த பின்னரும் ப்ரியாவின் அறைக் கதவு திறக்கப்படாததை எண்ணி கவலையுற்றான்.

அதே நேரம் வெளியில் சார்ஜில் இருந்த அவளது செல்போன் சிணுங்க, அதில் தெரிந்த ‘விஸ்’ என்ற பெயரைப் பார்த்தவன், போனை அட்டெண்ட் செய்து

“அவ இன்னும் எழல சார்…” என்று தெரிவிக்கவும்,

“இன்னும் எழலையா?” என்று திகைத்தவர்,

“இத்தனை நேரம் ப்ரியா எழுந்துக்காம இருக்க மாட்டாளே… உடம்பு ஏதும் சரி இல்லையா?” கவலையாக விஸ்வ கோபால் கேட்க,

“இல்ல.. தெரியல… ரூம் பூட்டி இருக்கு.. வந்துடுவான்னு நினைக்கிறேன்..” சூர்யா சமாளிக்க,

“ஓ… அப்போ அவ எழுந்த உடனே கொஞ்சம் இந்த நியூஸ் பாஸ் பண்ணிடறீங்களா?” என்று கேட்டு விட்டு,

“இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருந்தோம் சூர்யா… அதை மதியம் வரை தள்ளி வச்சிருக்குன்னு சொல்லிடுங்க. பிரியாவை அவசரமா ஆபீஸ்க்கு வர வேண்டாம்… கொஞ்சம் வெளிய நியூஸ் வேலை இருந்தா பார்த்துட்டு வரச் சொல்லுங்க…” என்று சொல்லி போனை வைத்துவிட, அதற்கு அடுத்து, ராமின் அழைப்பு வந்தது.

விஸ்வகோபியிடம் சமாளித்த சூர்யாவினால் ராமிடம் சமாளிக்க முடியாமல், “அவ ரூமை விட்டு வெளிய வர மாட்டேங்கிறா ராம்…” அழாத குறையாக சொல்ல,

“ஹஹஹா… என்ன மேடம் ஸ்ட்ரைக்ல இருக்காங்களா என்ன? கதவை உடைச்சு பாருங்க சார். அவளாவது இத்தனை நேரம் தூங்கறதாவது…” ராமின் கிண்டலுக்கு,

“அவ நிஜமாவே தூங்கறாலோன்னு தயக்கமா இருக்கு…” சூர்யா இழுக்க,  

“என்ன சார் காமெடி செய்துக்கிட்டு இருக்கீங்க? வேணா… தேவ் வந்திருக்கான்னு சொல்லிப் பாருங்க.. உடனே கதவு திறக்கும்…” கிண்டலைத் தொடர்ந்த ராமிடம்,

“ஹையோ ராம்… இப்போ சண்டையே அவன் வந்துட்டு போனதுனால தான்… நல்லா யோசனை சொல்லற போ..” என்று சூர்யா புலம்புவதைக் கேட்ட ராம், சிரிக்கத் தொடங்கினான்.  

“ஓ… வீட்டுக்கு வந்துட்டாரா உங்க மாப்பிள்ளை.. அப்போ அவ ட்ரீம்ல தான் இருப்பா.. இப்போ கதவைத் தட்டினீங்க.. அப்பறம் அவளை பத்திரகாளியா தான் பார்ப்பீங்க.. ஆல் தி பெஸ்ட் சூர்யா…” என்று போனை வைத்துவிட, சூர்யாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“என்னம்மா இவ கதவைத் திறந்து விட மாட்டேங்கிறா…” சூர்யா இப்பொழுது அவரிடம் புலம்ப,

“நீ ஆபீஸ் கிளம்புடா… நான் அவளைப் பார்த்துக்கறேன்…” அவனை வழி அனுப்பிய சாவித்திரி, கதவைத் தட்ட, இரண்டு நிமிடங்கள் கழித்து கதவு திறந்தது. உள்ளிருந்த ப்ரியாவைப் பார்த்தவர் அதிர்ந்தே போனார்.

6 COMMENTS

 1. Hayyo Dev, unnalae than ippo Priya veliyae vara mudiyalai paaru
  neethan achu, unga pappa-vidam solli avalai marriage pannikka vendiyathuthanae pa Dev
  hei Priya, amma door-yai open panniya udanae enna athirchi kodathae?
  hei Ramya, superb novel paa
  I like Priya, Dev and others especially Ram
  waiting for your next lovely ud Ramya chellam

 2. Ha ha ayyo sema comedy intha priya nalla…
  Pawam dev oru police a kalangadikara
  Rendu perum sariyana Jodi tha papom enna pani vecha intha priya nu…. Valakam pola super ud bubbly….. 😊

LEAVE A REPLY