SHARE

மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அந்த வீட்டின் உள்ளே இருந்த கூடத்தில், அந்த வீட்டின் உறுப்பினர்கள் மொத்த பேரும் குழுமி இருந்தனர். வாண்டுகள் முதல், பெரியவர்கள் வரை அங்கே அமர்ந்து, இறைவனை வேண்டி பஜனை செய்துக் கொண்டிருந்தனர்.

பஜனை முடியவும், “பெரியப்பா… இன்னும் அண்ணா எழுந்துக்கள…. தூங்கிட்டு இருக்கான்…” ஒரு வாண்டு அந்த இடத்தில் இருந்த பெரியவரிடம் சொல்லவும், அவர் தனது மனைவியைப் பார்க்க, அவரோ, அந்த சிறுவனை, ‘சுப்’ என்று ஹிந்தியில் அதட்டிவிட்டு,

“அவன் நேத்து வேலையா எங்கயோ போயிட்டு ரொம்ப லேட்டா தான் வந்தான்… ரொம்ப டயர்ட்டா இருந்தான்… அதனால தான் காலையில எழுப்பல… இன்னைக்கு ஒரு நாள் தானே” அந்த அம்மாள் சொல்லவும், அந்த பெரியவர் சலித்துக் கொண்டார்.

“தினமும் அவனுக்கு இதே வேலையா போச்சு… காலையில என்ன ஆனாலும் பஜன் செய்ய வரணும்ன்னு சொல்லி இருக்கேன் இல்ல…” என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும் போதே, சூடான டீ வரவும், சிறிது நேரம் பேச்சு தடைப்பட்ட அந்த நேரத்தில், அவர்களது வாக்கு வாதத்திற்கு காரணமாய் இருந்த அந்த நபர், எழுந்து வெளியில் வந்து நின்று, தூக்க கலக்கத்தில் விழித்துக் கொண்டு நின்றான்.

“உன்னால சீக்கிரம் எழுந்துக்க முடியாதா? அப்படி என்ன வேலை?” அந்த பெரியவர் முகேஷ் கேட்க, முழித்துக் கொண்டிருந்த இளைஞன் அவர் அருகில் வந்து காலில் பணிந்து எழுந்தான்.

“அப்பா… நான் ஒரு வேலையா போயிட்டு வந்தேன்… ஒருத்தரை அரெஸ்ட் பண்ண வேண்டிய வேலை இருந்தது… அது முடிச்சிட்டு வரவே நேரம் சரியா இருந்தது… ரொம்ப டயர்ட்டா இருந்ததுப்பா… எனக்கும் சேர்த்து நீங்க வேண்டிக்கோங்களேன்..” அவன் சொல்வதைக் கேட்டவர், பதில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக அமர, அந்த அமைதியை பயன்படுத்திக் கொண்டவன் தனது தாயைத் தேடிச் சென்றான்.

“அம்மா… எனக்கும் டீ… இன்னும் ஒரு நாள் இப்படியே தூங்கினா போதும் போல இருக்கு” கூறிக் கொண்டே அவன் கப்பை எடுக்க வர,

“மொதல்ல போய் குளி… இல்ல சோட்டு அப்பாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவான்… அப்பறம் என்னால காப்பாத்த முடியாது…” அவனது அன்னை கைவிரிக்க,

“ப்ளீஸ்ம்மா… நான் நைட் கூட ஒண்ணுமே சாப்பிடவே இல்ல…” அவன் கெஞ்சிக் கேட்க, தனது மகனைப் பார்த்த பார்வதி, மனம் கேளாமல், அவனுக்கு டீயைக் கொடுக்க,

“தேங்க்ஸ்ம்மா…” என்று அதை பெற்றுக் கொண்டவன், வேகமாக அதை குடித்து முடித்தான்.

“பெரியப்பா… அண்ணா இன்னும் குளிக்கவே இல்ல… குளிக்காம டீ குடிக்கறாங்க…. சோட்டுவின் குரலில், ‘அவனை என்ன செய்யறேன் பாரு…’ என்று அண்ணன் விரட்ட, தம்பி அவன் கைக்கு சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.  

தேவேந்தர்… ஆறடி உயரம்… உயரத்திற்கு ஏற்ற தோற்றம்… வடமாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது அவனது தோற்றமே காட்டிக் கொடுக்கும்… பிறந்து வளர்ந்தது அனைத்தும் சென்னை தான் என்றாலும், பணியின் காரணமாக வடமாநிலங்களில் சுற்றி விட்டு, தற்பொழுது சென்னையில் குடியேறி இருப்பவன்.

சிபிஐ அதிகாரியாக பணியாற்றும் ஒரு துடிப்பான இளைஞன்… கூட்டுக் குடும்பமாக வசிக்கும் அவர்களின் வீட்டில் மொத்தம் பதினைந்து பேர்… அவனுடைய தந்தையும், அவரது சகோதரர்கள் என்று அவர்களது குடும்பம் மொத்தமும் சென்னையில் துணி வியாபாரம் செய்துக் கொண்டிருகின்றனர். குஜராத் மாநிலத்தில் முதலில் பணியில் சேர்ந்தவன், இப்பொழுது சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறான்.

அவர்கள் குடும்பம் மிகவும் கட்டுகோப்பான குடும்பம்… காலையில் எழுந்து குளித்து முடித்து, பஜனை செய்த பின்பே காலை டீயைப் பருகுவர்… பின்பு அவரவர் பணிக்குச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள்.. இரவு உணவை அனைவரும் சேர்ந்தே உண்ணும் பழக்கம் உடையவர்கள்.

பணியின் நிமித்தம் ஊர் ஊராக சுற்றிய காரணத்தால் இந்த பழக்கம் மொத்தத்தையும் மூட்டையாக கட்டி பரணில் போட்ட நம் தேவ்விற்கு மீண்டும் அதை தொடர கடினமாக இருக்கவும், தனது பணியை காரணம் காட்டி, அதிகாலையில் எழுவதிலும், இரவு உணவிற்கு வருவதில் இருந்தும் தப்பித்துக் கொண்டிருக்கிறான்.

“இன்னைக்காவது சீக்கிரம் வருவியா தேவ்? நைட் அப்பா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணுமாம். சீக்கிரம் வர்ரியா?” ஆவலாக அவன் முகம் பார்த்த அன்னையின் முகத்தில் இருந்து எதைப் படித்தானோ?

“அப்படி என்னம்மா முக்கியமான விஷயம்?” என்று கேட்கவும், அவனது தாய் சுற்றி வளைத்து,

“ஏன் அப்பா உன்கிட்ட எதுவும் பேசக் கூடாதா என்ன?” என்று கேட்க,

“பேசலாம்… நான் வர நேரத்துக்கு அப்பாவை முழிச்சு இருக்க சொல்லுங்க.. அப்போ பேசலாம்..” தேவும் விடாப்பிடியாக நிற்கவும், வேறு வழி இன்றி,

“உனக்கு வயசாகிட்டே போகுதில்ல… நிறைய இடங்கள்ல இருந்து நல்ல வரன் எல்லாம் வருது.. அதைப் பத்தி பேசத் தான் எல்லாரும் முடிவெடுத்து இருக்காங்க…” தேவின் தாய் பார்வதி சொல்லவும், தேவ்வின் மனதில் மின்னலாக ஒரு பெண்ணின் புன்னகை முகம் ஓடி மறைந்தது.

தலையை குலுக்கிக் கொண்டவன், “இப்போ எனக்கு என்ன வயசாகிடுச்சு? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா… நான் இப்போ தானே இங்க ட்யூட்டியில சேர்ந்திருக்கேன்… எனக்கு சென்னை செட் ஆகவே இல்ல..” என்று சொன்னவன், நக்கலாக பார்த்த அவனது தாயிடம் இருந்து தப்பிக்க,

“இன்னைக்கு பிரஸ் மீட் இருக்கு… நேரா எனக்கு ஆபீஸ் கிளம்பத் தான் நேரம் சரியா இருக்கும். சோட்டுவையும், டிம்பிளையும் நீங்களே கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வாங்க… யாரை நம்பியும் அனுப்ப வேண்டாம்…” எச்சரிக்கை செய்து விட்டு, தனது அறைக்குள் சென்று, அலுவலகம் செல்லத் தயாரானான்.

“உனக்கு இப்பவே முப்பது வயசாகுது. இன்னும் என்ன சின்னப் பிள்ளைன்னு நினைப்பா? இப்படி கல்யாணத்தை தள்ளிப் போட்டுக்கிட்டே போனா எப்படி தேவ்?” என்று கேட்டுக் கொண்டே அவனது பின்னோடு, அவனது அறைக்குள் சென்ற பார்வதி, அவனது அறை இருந்த கோலத்தைப் பார்த்து மயங்கி விழாத குறையாக நின்றார்.

“என்ன தேவ் இது? இப்படியா ரூமை வச்சிருப்ப? அங்க அங்க உன்னோட துணியைப் போடாதேன்னு சொல்லி இருக்கேன் இல்ல… அப்பா பார்த்தா திட்டுவாங்க தேவ்…” சொல்லிக் கொண்டே அவர் அடுக்கி வைக்க, தேவ் சிரித்துக் கொண்டே, அவரது காலில் பணிந்து,

“இன்னைக்கு எல்லாம் நல்லா போகணும்னு சொல்லுங்கம்மா…” என்று கேட்டுக் கொண்டு நிற்க, அவர் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்கவும், சந்தோஷத்துடன் கிளம்பிச் சென்றான்.

கொட்டும்முரசு பத்திரிக்கை அலுவலகம்…

“சார்… அந்த கோவில் சிலை திருட்டு பத்தின நியூஸ் கேட்டு இருந்தேனே… எழுதிட்டு எடிட்டர் கிட்ட சீக்கிரம் கொடுங்க.. ஈவினிங் இஷ்யூவுக்கு அனுப்பணும்… அப்பறம் ஆன்லைன்லையும் அப்டேட் பண்ண டைம் ஆச்சு…” என்று ஒரு குரல் அதட்டிக் கொண்டிருக்க,

“இதோ… இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் சார்… ப்ரியா இன்னும் வரவே இல்ல… அவங்க வந்தாங்கன்னா… நேத்திக்கு அந்த நகைக் கடைக்காரர் கொலை வழக்கோட நியூஸ் கிடைக்கும்…” என்று ஒருவரும் பேசிக் கொண்டிருக்க, ப்ரியா உள்ளே நுழைந்தாள்.

“ஹலோ மக்களே… எல்லாரும் நலமா இருக்கீங்களா? இன்னைக்கு என்ன விசேஷம்?” சாவதானமாக கேட்டுக் கொண்டே அமர்ந்தவள், தன்னுடைய கணினியை உயிர்ப்பித்துக் கொண்டே,

“இன்னைக்கு அனுப்ப வேண்டிய நியூஸ் எல்லாம் நான் நைட்டே முடிச்சு மெயில்ல அனுப்பிட்டேன் சார்… நீங்க பார்த்து ஓகே செய்தீங்கன்னா… அப்படியே நம்ம சைட்ல நியூஸ் அப்டேட் பண்ணிடுவேன்…” என்று சொல்லிக் கொண்டே பிரிண்டரின் அருகே சென்று, ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு வந்தவள், சீனியர் எடிட்டர் விஸ்வகோபாலிடம் கொடுக்க, அதுவரை அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர், அதனை வாங்கிக் கொண்டு,

“டைம் ஆகப் போகுது. பிரஸ் மீட்டுக்கு போகணுமே ப்ரியா… எங்க ராம் இன்னும் காணோம்?” என்று அவர் கேட்க,

“அவன் என்னிக்கு சார் கரெக்ட்டான நேரத்துக்கு வந்திருக்கான்… இப்போ எந்த குளத்துலயாவது, இல்ல குட்டையிலயாவது, நம்ம மன்த்லி மேகசின்க்கு போட்டோ எடுத்துட்டு இருப்பான்.. அவனுக்காக எல்லாம் வெயிட் பண்ண முடியாது சார்… எனக்கு முதல் ரோல இடம் வேணும்… அப்போ தான் நறுக்குன்னு நாலு கேள்வி அவங்கள கேட்க முடியும்…” அவள் சொல்லிக் கொண்டிருக்க,

“ஆமா… அப்போ தான் அந்த தேவ்வை வெறுப்பேத்த முடியும்ன்னு சொல்லு…” என்றபடி ராம் வந்து நிற்க, ப்ரியா அவனை அந்த நேரம் எதிர்ப்பார்க்காமல் திகைத்து விழித்து நின்றாள்.

“சார்… இந்தாங்க இந்த மாசத்துக்கான அட்டைப்பட போட்டோஸ்… இதுல எது நல்லா இருக்கோ செலக்ட் பண்ணிக்கோங்க…” என்று ஒரு கவரை நீட்டியவன், ப்ரியாவை முறைத்துக் கொண்டே,

“நான் இங்க தான் டெவலபிங் ரூம்ல இருந்தேன்… நான் வந்து ஒரு மணி நேரம் ஆகுது…” என்று சொன்னவன், தனது கேமரா பையை எடுத்துக் கொண்டான்.

“சரி சார்… இன்னைக்கு எனக்கு ஆரம்பமே சரி இல்ல… காலையில அம்மாகிட்ட திட்டு… இங்க ராம் என்னை முறைக்கிறான்… நான் என்ன செய்யறது சொல்லுங்க… அங்க அந்த தேவ் என்னை என்ன செய்யப் போறாரோ?” என்று சலித்துக் கொண்டவள், தனது பையையும், ரெக்கார்டரையும் எடுத்துக் கொண்டு, அப்பாவியாக நின்றவளைப் பார்த்துக் கொண்டே நகர்ந்த ராம்,

“இவகிட்ட அவன் மாட்டிக்கிட்டு முழிக்கறான். என்னவோ இவளை அவன் கொடுமை படுத்தறா மாதிரி இந்த பயப்புள்ள விடற பில்ட்அப்பைப் பாரு…” புலம்பிக் கொண்டே கீழே சென்றான்.

“நான் போயிட்டு லஞ்ச்சுக்கு அப்புறம் வரேன் சார்… வந்து இன்னைக்கு சுடச் சுட நியூசைத் தரேன்…” ப்ரியாவும் விடைப்பெற்றுக் கிளம்ப, கீழே அவளுக்காக காத்திருந்த ராம், அவனது பைக்கின் அருகே அவள் வந்ததும், தனது பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றுவிட,

“போயேன்… உண்மையச் சொன்னா கோபம் வருதோ?” என்று சிலிர்த்துக் கொண்டவள், தனது ஸ்கூட்டியை உயிர்ப்பித்து, பிரஸ்மீட் நடக்கும் இடத்திற்கு சென்றாள்.

அந்த அலுவலகத்தின் வாயிலிலேயே ராம் அவளுக்காக காத்திருக்க, “இப்போ எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க? போய் இந்த இடத்தையும் விதம் விதமா போட்டோ எடுக்க வேண்டியது தானே…” அவன் தனியே விட்டுவிட்டு வந்த கோபத்தில் அவள் பொரிந்துத் தள்ள,

“தேவோட போட்டோ வேணும்ன்னா எப்பவும் போல நேரடியா கேளு… இப்படி சுத்தி வளைச்சு பேசறது எல்லாம் உன்னோட வழக்கம் இல்ல…” என்று சொன்னவன்

ப்ரியா முழித்து, “அப்படி எல்லாம் இல்ல ராம்..” திக்கித் திணற,

“உள்ள போகலாம் வா… முதல் ரோல சேர் வேணுமா வேண்டாமா?” என்று கேட்கவும், நொடியும் தாமதிக்காது ப்ரியா உள்ளே சென்றாள்.

அவள் விருப்பப்பட்டது போல முதல் ரோவில் அவளுக்கான இடம் கிடைக்க, “ப்ரியா… நீங்களே தான் இன்னைக்கும் வ்ந்திருகீங்களா? ரொம்ப சூப்பர்… நல்ல நல்ல கேள்வியா எழுதிட்டு வந்திருக்கீங்களா?” என்று அங்கு வந்திருந்த வேறு ஒரு பத்திரிக்கை நண்பர் கேட்கவும்,

‘நம்மள போட்டுப் பார்க்கறதையே எல்லாம் பொழப்பா வச்சிட்டு சுத்தறாங்க… ஏற்கனவே அவன் என்னை எதிரியைப் பார்க்கறது போல பார்ப்பான்.. இதுல யோசிச்சு எழுதிட்டு வந்தேன்… அவனே என்னை போட்டு தள்ளிடுவான்…’ மனதினில் புலம்பிக் கொண்டே வெளியில்,

“நான் எதுவும் எழுதிட்டு எல்லாம் வரதில்லைங்க… எல்லாம் அவரைப் பார்த்தா தானா…. தானா…” என்று அவள் திக்கிக் கொண்டிருக்கும் போதே, தேவ் அவளை கடந்து சென்றான்.

“ஹையோ ராம்… நான் சொன்னதை எல்லாம் கேட்டு இருக்கப் போறார்… என்னோட எந்த ஒரு கேள்விக்கும் அவன் கிட்ட இருந்து பதில் வாங்க முடியாது… ஜம்பமா ஆபீஸ்ல சொல்லிட்டு வேற வந்துட்டேன்… இன்னைக்கு நான் காலி” என்று அவள் புலம்ப,

“உன் வாய் தான் உனக்கு மூலதனம், உன் வாய் தான் உனக்கு எதிரியும் கூட… பேசாம உட்காரு… பார்ப்போம்…” என்று ராம் சொல்லவும் ப்ரியாவும் தேவ்வை அப்பாவியாக பார்த்துக் கொண்டு, அமைதியாக அமர்ந்தாள்.

அந்த மீட்டிங் தொடங்கும் நேரம் வந்தது… தேவ்வைப் பார்த்த மற்ற பத்திரிக்கையாளர்கள் வாழ்த்து தெரிவிக்க, அதனை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவன், மறந்தும் ப்ரியாவின் பக்கம் பார்வையைத் திருப்பாமல் இருந்தான்.

“கொழுப்பைப் பாரு… உனக்கு இருக்குடி கச்சேரி…” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவள், அவன் பேசப் போவதை குறிப்பெடுக்க தயாரானாள்.

அந்த கொலையைப் பற்றியும், தான் துப்பு துலக்கியதைப் பற்றியும் அவன் ஒரு முன்னோட்டமாக சொல்லி முடிக்க, ப்ரியாவோ வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது பார்வை அவனைத் துளைக்க, அவளது பார்வையை சிறிது நேரம் அசட்டை செய்து கொண்டிருந்த தேவ், அவள் உதட்டைக் கடித்து நாக்கை துருத்தவும், பிறர் அறியாமல் அவளைப் பார்த்து முறைத்து பத்திரம் காட்ட, அவளோ, அவனது அந்த செயலைக் கண்டு குதூகலத்துடன் கையை கன்னத்துக்கு கொடுத்து அவனைப் பார்க்க வாகாக அமர்ந்துக் கொண்டாள்.

“தேவ்… அவ ஆரம்பிச்சிட்டா… இனிமே நீ மாட்டின. ஒழுங்கா அப்போவே அவளைப் பார்த்து ஸ்மைல் பண்ணி இருக்கலாம்..” அவளது கண்களை நேரில் சந்திக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே மனதினில் புலம்பிக் கொண்டிருந்தவன், ஒருவழியாக தன்னை சமன் செய்து கொண்டு, பத்திரிக்கை அன்பர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

வெகுநேரமாகியும் ப்ரியா எதுவும் கேட்காமல் அமர்ந்திருக்கவும், அவளது செயலில் ஆச்சரியமடைந்தவன் அவளை கேள்வியாகப் பார்க்க,  கேள்விகள் முடிந்து அந்த இடம் அமைதியான நேரம்,

“சார்… எனக்கு ஒரு டவுட்…” ப்ரியா வாய் திறக்க,

“அதானே… வாயாடி மோகினி பேசாம இருக்காளேன்னு பார்த்தேன்…” மனதினில் செல்லமாக சலித்துக் கொண்டவன், ‘எஸ்..’ என்று அமர்த்தலாக கேட்க,

“அந்த நகைக் கடைக்காரர்… அந்த டைம்ல தான் அங்க வருவாருன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் நீங்க சொல்றதை வச்சுப் பார்க்கும் போது இத்தனை நாள் வராதவர், நேத்து வந்தது எப்படி? அது உங்களுக்கு தெரிஞ்சது எப்படி?” ப்ரியம்பதா கேட்கவும்,

“இதுக்கு இவ வாயையே திறக்காம லுக்கு விட்டுட்டு இருந்திருக்கலாம்…” என்று மனதினில் நினைத்தவன்,

“ஒரு உளவாளி மூலமா….” என்று பதிலளிக்க,

“உளவாளியா? அவர் ஏன் முன்னமே வந்து உங்ககிட்ட அவரு இருக்கற இடத்தைச் சொல்லல?” மேலும் அவள் கேள்விகளை அடுக்க, தேவ் சிறிது எரிச்சலாகத் தொடங்கினான்.

“எப்போ செய்தி கிடைக்குதோ அப்போ தான் எங்களாலையும் பிடிக்க முடியும்?” என்று அவன் பதில் சொல்லவும்,

“சரி… அப்போ அந்த உளவாளி பேரையோ, இல்ல அந்த நபர் தான் உங்ககிட்ட சொன்னாங்கங்கறதை நீங்க ஏன் நேத்தே சொல்லல…” அவள் நக்கலாகத் தொடர, தேவின் எரிச்சல் அதிகமாகத் தொடங்கியது.

“அது தான் இன்னைக்கு சொல்றோம் இல்ல…” பதில் கேள்வி சுள்ளென்று வந்து விழ,

“லாஸ்ட் கேள்வி… இந்த நகைக் கடைக்காரரை பிடிச்சே தான் ஆகணும்னு உங்களுக்கு மேலிடத்துல இருந்து பிரஷர் வந்ததுன்னு நான் கேள்விப்பட்டேன்… அதனால தான் இந்த கைது நாடகம்ன்னு நாங்க நினைக்கிறோம்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே, அவன் அருகே இருந்த தண்ணீர் க்ளாசை அவன் காலி செய்து முடித்தான்.

“அப்படி உங்களுக்கு தகவல் வந்திருந்தா… எனக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாமே… ஒருவேளை நீங்க தான் எனக்கு அந்த லெட்டரை டைப் செய்தே கொடுத்தவங்களோ?” அவன் எடக்காக கேட்க, அசராமல் ப்ரியா அவனை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டிருக்க,

‘சார்… இதெல்லாம் அநியாயம்… இப்படி எல்லாம் எங்க மேலேயே பழி சொல்லக் கூடாது…’

‘அவங்க கேட்கறதும் நியாயம் தான சார்… ரெண்டு வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டு இருந்த கேஸ்.. திடீர்னு இப்போ முடிஞ்சிருக்குன்னா… அப்போ என்ன சார் அர்த்தம்? கண் துடைப்புன்னு தானே அர்த்தம்…’ என்று பலவாறு குரல்கள் எழும்ப, அதே நேரம் ப்ரியா அவனை பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.

“சதிகாரி…” மனதினில் அவளைத் திட்டியவன்,

“இந்த கேசுக்கு தேவையான ஆதாரங்கள் எல்லாம் கோர்ட்ல சப்மிட் செய்யும் போது நாங்க உண்மையா கண்டு பிடிச்சோமா… இல்ல… போலியான டிராமாவான்னு உங்களுக்கே தெரியும்… அப்பறம் இதுக்கும் மேல வேற கேள்விகள் இருந்தா கேளுங்க… நான் அடுத்த ஒரு கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண போகணும்… வேற ஒரு மீட்டிங் இருக்கு” தேவ் நிமிர்வாகச் சொல்ல,

“நோ குவெஸ்டின்ஸ்…” என்று ப்ரியா அமரவும், தேவின் பார்வை அவள் மீது ஒரு மாதிரி படிந்து மீள, அந்த பார்வையைக் கண்ட ராம்,

‘என்ன ஒரு மாதிரிப் பார்க்கறாரு? என்ன விஷயம்?” என்று யோசிக்கத் தொடங்க, ப்ரியாவோ, அவனிடம் வெளியில் சென்று பேசப் போகும் உற்சாகத்துடன், ராமை தனியே விட்டு வெளியில் ஓடினாள்.

13 COMMENTS

 1. Hei Ramya chellam, story superb aga irukku
  last story- “UNNARUGE NAAN IRUPPEN”=yai vida intha story
  diferent aga=vum superb aga=vum irukku paa
  Chottu, nee baiyya/anna-vai ippidi maatti vidalaamaa?
  baiyya paavam thana
  hei, enna paa ithu, ullae question mela question,
  veliya love=ah?
  nadakkattum, nadakkattum
  waiting for your next lovely ud Ramya dear

LEAVE A REPLY